05
May
2017
இந்த வார்த்தையின் பொருள் என்ன? என்று கேட்டால் இதற்கு நேரிடையாக யாரும் உடனே பதில்கூற முடியாது. இது இடத்திற்கு இடம் பொருள் மாறுபடும். கேட்பவரைப் பொறுத்து கேட்கும் இடத்தைப் பொறுத்து, கேட்கின்ற தன்மையைப் பொறுத்து இதன் பொருள் இடம்பெறும்.
குறிப்பாக உனக்குக் காய்ச்சல் அடிக்கிறதா? என்று கேட்கும்போது தொட்டுப்பார் என்பார்கள், அதிகாரம் உள்ளவனிடம் மோதிப்பார்க்கும்போது அவனைத் தொட்டுப்பார் என்பார்கள். நாயையையோ செல்லப்பிராணிகளையோ கடிக்குமோ, முட்டுமோ என சந்தேகத்துடன் கேட்கும்போது ஒன்றும் செய்யாது தொட்டுப்பார் என்பார்கள், நீரோ, பொருட்களோ, உணவோ, சூடாக இருக்கிறதா? எனக் கேட்டால் தொட்டுப்பார் என்பார்கள். ஒரு பொருள் மென்மையாக இருக்கிறதா? திடமாக இருக்கிறதா? எனக்கேட்டாலும் தொட்டுப்பார் என்பார்கள் இப்படி எத்தனையோ தொட்டுப்பார் என்பதற்கு அதன் இடத்திற்கு ஏற்ப பொருள் மாறுபடும்.
இயேசு கிறிஸ்து உயிர்த்து பின் சீடர்களுக்குக் காட்சி அளித்தபோது அவருடைய சீடர்களே அவரை சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருந்தார்கள். சிலர் கனவா? இல்லை இது ஒரு மாயையா? இல்லை நமக்குத்தான் சித்தப்பிரமை பிடித்துவிட்டதா? அல்லது பேயாக, பூதமாக பூமியில் நடமாடுகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளுடன் ஊருக்குப் பயந்து உலகிற்கு ஒளிந்து அவர்கள் வாழ்ந்த வாழ்வு ஒரு குழப்பமான கூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருந்தது.
ஆயினும் இயேசுவிடம் அவரைப்பற்றி அவரிடம் நேரிடையாகக் கேட்க யாருக்கும் துணிச்சலில்லை. அந்த நேரத்தில் அவர் தோமையாரைப் பற்றிச் சொன்ன ஒரு வார்த்தைதான் தொட்டுப்பார் என்பது. இதுதான் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடைதந்தது. அவர்களின் சந்தேகத்திற்கு விடை தந்ததது. அவர் சொன்னதுபோல் மீண்டும் வந்துவிட்டார் என்பதன் அடையாளம் அது. பயத்தை விலக்கி துணிவுகொள் என்பதற்கு விடை அது.
வீழ்த்தியவர்களை வீழ்த்த விடை பெற்றுப் போனதுபோல் போனவர் மீண்டும் வந்து தோமையாருக்கு மட்டுமல்ல, துக்கத்திலும், மயக்கத்திலும், மமதையிலும் இருந்தவர்களைப் பார்த்து அவர் மீண்டும் வந்து உரைத்த வார்த்தைதான் அந்தத் தொட்டுப்பார் என்ற துணிவான வார்த்தை எதிர்த்தவர்களுக்கு அது துணிவான வார்த்தை ஆனால் உடனிருந்தவர்களுக்கு பணிவான வார்த்தை. ஏனென்றால் தொட்டுப்பார் என்பது தொடு என் வலி உனக்குப்புரியும், என்காயங்கள் உனக்குப்புரியும், என் உணர்வுகளும், உணர்ச்சிகளும் உனக்குப்புரியும் இன்னும் அதிகமாக ஒருவர் ஒருவரை நெருக்கமாகவும், உருக்கமாகவும் அன்பு செய்ய ஒருவர் ஒருவரைத் தொடும்போதுதான் அன்பின் பிரதிபலிப்பு அதிகமாகும்.
ஏனென்றால் ஏற்றத்தாழ்வு நிறைந்த யூதச் சமுதாயத்தில் சமத்துவத்தை விதைக்க வந்த ஒரு மாபெரும் போராளி இயேசு கிறிஸ்து. இயேசு சாந்தமான மனிதர் என்று சொல்லுவது முற்றிலும் உண்மையல்ல அவர் சமுதாயத்தில் புரையோடிப்போன சாதிக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு வெளிவந்த ஒரு போராளி அவர் வார்த்தைகளுக்கும் புதுமைகளுக்கும் மகுடம் சூட்டிய இம்மானிடம் அவர் செயலால் விதைத்த சீர்திருத்தங்களை கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் அவர் எங்கு சென்றாலும் யாரைக் குணமாக்கினாலும் தொட்டுக் குணமாக்கினார் பிறர் தம்மைத் தொடவும் அனுமதித்தார். அதுதான் அவர் சமரசத்திற்கும், சமாதானத்திற்கும் அவர் தொடங்கி வைத்த புதிய போராட்டம்.
இன்று திருமண வார்த்தைப்பாட்டில் கணவனும்; மனைவியும் எதற்காகக் கரங்களை இணைக்கிறார்கள்? இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்து சங்கமத்தில் கலக்கிறார்கள். துக்கவீட்டில் ஏன் போனவுடன் ஒருவர் ஒருவரை தொட்டுக்கொள்கிறார்கள். யாரும் உனக்கு இல்லையென்று வருந்தவேண்டாம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதற்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருப்பதன் அடையாளம் அது. இயேசுவின்மீது அவர் சமூதாயம் கூறிய மிகப்பெரிய குற்றச்சாட்டு எது? விபச்சாரப் பெண்கள்கூட அவரைத் தொடுகிறார்களே! பாவிகNளூடு ஒன்றாய் அமர்ந்து உணவு உண்கிறாரே என்று தன்நிலை இறங்கி வந்து தாழ்த்தப்பட்டவர்களோடு கரம் கோர்த்ததே அவர்மீது அம்புபாயும் அபாயத்திற்குக் கொண்டு வந்து தள்ளியது இயேசுவின் மரணம் ஒருவகையில் ஆணவக்கொலையாகவும் இருந்தது.
குஷ்டரோகிகளை கூட்டத்தின் நடுவே தொட்டுத் தூக்கினார். பிணத்தை பாடையில் தொட்டு எழுப்பினார். பெரும்பாடுள்ள பெண் யாருக்கும் தெரியாமல் தொட்டதைக்கூட பகிரங்கமாக எடுத்துச்சொன்னார். குஷ்டரோகி, பிணம், பெரும்பாடுள்ள பெண் இவற்றையெல்லாம் யோசித்துப் பாருங்கள் சமுதாயம் தீட்டு என்று ஒதுக்கியதைத் தீண்டினார் இதனால் பெரியோர்களைச் சீண்டினார் இதனால் அவரது மரணம் அரசியல் கொலையாகவும் இருந்தது.
சமுதாயத்தில் சமத்துவம் நிலவவேண்டுமென்றால் ஒருவர் ஒருவரை தீட்டு என ஓதுக்காமல் தொட்டுப்பழகினாலே போதும் சமத்துவம் தானாய் மலரும். நமது கலாச்சாரத்தில் ஒருவர் ஒருவரை வணங்கும் போது, ஒருவரை ஒருவர் கையெடுத்து கும்பிடும் நமது கலாசச்சாரத்தை கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதற்குள் ஒளிந்து இருப்பது அடுத்தவன் என்ன சாதியோ அவனை எப்படித் தொடுவது என்பதுதான். ஆனால் ஆங்கிலேயர்கள்; வந்தார்கள் யார் இருந்தால் என்ன உடனே கை குழுக்கிக் கொள்வார்கள் அதுதான் சமத்துவத்தின் ஆரம்பம்.
ஆகவே நம் உறவுகளை வளப்படுத்த பலப்படுத்த தொட்டுக்கொள்ளும் நம் உறவால் மனதைத் தொட்டு மறுமலர்ச்சி காண்போம்.
சமீபகாலமாக அனைவருக்கும் அன்னையாகவும் கிறிஸ்தவர்களுக்கு புனிதையாவும் விளங்கின்ற அன்னைத்தெரசாள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்வர்களையெல்லாம் தொட்டுத் தூக்கியதால்தானே இன்று அனைவரது மனசைத் தொட்ட மாமனிதை ஆனாள். அனைவரும் அன்னை தெரசாவாக மாறாவிட்டாலும் சாதாரண மனிதனாக வாழ, சமத்துவம் வளர தொட்டு உயர்வோம், தொட்டு வளர்வோம். பிறரையும் மனசையும் ‘தொட்டுப்பார்’ சமத்துவம் வளரும், சாமியாய் நீ உயர்வாய்.