31

May

2020

நனைந்த விழிகளோடு …

“கண்களுக்கு வலித்தால்
கண்ணீர் வடிக்கும்
இதயத்திற்கு வலித்தால்
என்ன செய்யும்…?”

நனைந்த விழிகளோடும், கனத்த இதயத்தோடும் நெஞ்சம் நிறைந்த சோகத்தோடு என் நாட்டினை நான் நினைக்கும்போது, எங்கும் என் மக்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இது உடம்பைக் குறைக்க, தொப்பையைக் கரைக்க அல்ல, தன் சொந்த உறவுகளைத் தேடி உடல் களைக்கிற அளவுக்கல்ல, உயிர் கரைகிற தூரம்வரை உடமையையும் உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாகப் போகிறார்கள்.

கொஞ்ச நாளாக நாம் காதுகளைக் கிழித்ததே ஒரு சத்தம் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு என்றார்கள். அப்படியென்றால் அதன் பொருள் என்ன? அனைவரையும் ஒன்று சேர்த்து இருப்பதையெல்லாம் பிடிங்கிக்கொண்டு அவனை ஏமாளியாக்கவா? ஒரே இனம் என்றால் நம் கண்முன்னே அவர்கள் ஏன் இப்படி கால்நடையாக நடந்து போகவேண்டும்? நாம் உதவியிருக்கலாமே? அவர்கள் என்ன அந்திவானக் காட்டுக்குள்ளும் அர்த்த ராத்திரியிலுமா நடந்து போகிறார்கள்? நம் கண்முன்னே தானே! அந்தக் கருமம் நடக்கிறது.

நாம் இந்துக்கள்! நாம் கிறிஸ்தவர்கள்! நாம் முகமதியர்கள் என்று மதத்தைக் காப்பாற்ற மார்தட்டியவர்கள் ஏன் மனிதத்தைக் காப்பாற்றவில்லை? நடந்து போகிறவர்கள் எல்லாம் நாத்தியவாதிகளா? இல்லையே! கடவுளே நீ இருந்தால் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். வருகின்ற தலைமுறைக்கு வரக்கூடாத ஒன்று அவர்கள் சொந்த நாட்டில் அகதியாய் அலைவது. இதைப்போன்ற ஒரு நரகம் ஏழு உலகத்திலும் கிடையாது.

நான்கூட அப்துல்கலாம் ஐயா அவசரப்பட்டு கண் மூடிவிட்டாரோ! எனப் பயந்தேன். இப்போது புரிகிறது 2020 இந்தியா வல்லரசாகும் என்று கனவு கண்டாரே. இப்போது காண்கினற் இந்தக் கண்ராவிகளைப் பார்க்காமலே கண் மூடிப்போனதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். எல்லோரையும் வீட்டுக்குள் போ என்று சொன்ன அரசுக்கு எல்லோரையும் வீடு வரை கொண்டு விடனும்னு தோணலையே! ஏனென்றால் இவர்களை எல்லாம் ஏமாளிகளாகவும், கோமாளிகளாகவும் வைத்துத்தானே இன்றைய அரசியல் ஆட்டமே நடக்கிறது.

இப்போது நடந்து போகிறவர்கள் எல்லாம் யார்? அந்த நகரத்தையும், அதன் நிறுவனங்களையும் உருவாக்கியவர்கள் தானே. நகரத்தைத் தூய்மைப் படுத்தியவர்கள் இன்று வெளியே துப்பப்பட்டிருக்கிறார்கள், துரத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களை எல்லாம் ஒரு நாள் உருவாக்கியவர்கள்தான். இன்று உருக்குலைந்து உயிர்போகும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பீகார் ரயில் நிலையத்தில் இறந்த தனது தாயை இரண்டு வயதுக்குழந்தை எழுப்புகிற காட்சி ஐயோ! இறைவா! இனியொரு முறை இப்படி ஒரு காட்சியைப் பார்க்க வேண்டியது இருந்தால் என் கண்களைக் குருடாக்கி விடு என்று கடவுளிடம் வேண்டுவதைத்தவிர எனக்கு வேறொன்றும் தெரியவில்லை.

இருக்கின்ற ஆட்சியாளர்கள் எல்லாம் அவர்களை ஏழையாக்கினார்கள். இடம் இல்லாதவர்களாக்கினார்கள். அவர்கள் இடம்பெயர்ந்து இப்போது எங்கே போகிறார்கள்.? எங்கேயாவது போய் வாழ்வதற்கா? இல்லையே செத்தாலும் சொந்த பந்தங்களோடு போய்ச் சாவோம் என்றுதானே? சுடுகாட்டுக்குச் செல்லும் பிணத்தினைக்கூட சொந்த பந்தங்கள் சுமந்து செல்லும். இந்த உயிரோடு போராடும் மனிதர்களுக்கு? இப்போது நம்மிடம் இருக்கின்ற வசதிகளுக்கு இரண்டே நாட்களில் ரயில் மூலமாக, பேருந்து மூலமாக அவரவர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் ஆனால் நாம் செய்யவில்லையே?

அரசு அவர்களை ஏழைகளாக்கியது நாம் ஒரு படி மேலே சென்று அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கினோம். பொருள் கொடுப்பது போல போட்டோ, உணவு கொடுப்பது போல போட்டோ. எதற்கு இது? புண்ணியவான்களே! உங்களையும் நடுத்தெருவில் நிப்பாட்டி ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையில் கொடுத்து பிச்சையெடுப்பது போல் போட்டோ எடுத்தால்தான் அந்த வலி உங்களுக்குப்புரியும்.

அதைவிடக் கொடுமை தப்பிப்பிழைத்து, தாய் – பிள்ளைகளோடு வரும் போது ஊருக்குள் இருக்கும் உத்தமர்கள்! அவர்களை ஊருக்குள் விடாமல் தடுக்கிறார்கள். எப்பா! ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகிற சாகா வரம் பெற்றவர்களே? அவர்களைச் சங்கடப்படுத்தாதீர்கள். ஆனால் ஒன்று உங்களோடு வாழ்வதைவிட அவர்களோடு சாவதேமேல்.

மனசு வலிக்குதுங்க மருந்தில்லாமல். இளகிய இதயத்தை இறைவன் கொடுத்ததால் என் கரங்களில் உள்ள பேனாக்கூட கண்ணீரை அதிகமாகச் சிந்திவிட்டது. கண்ணிருந்து இதை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் இதயம் திறந்து இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு கைகளைக் கூப்பி வேண்டுகிறேன் கண்ணீரோடு…..

ARCHIVES