28

Feb

2026

நல்ல கண்(ணு)…

நல்லவற்றைத் தேடிய, நல்லவற்றைப் பார்த்த, நல்ல பாதையில் நடந்த, நல்ல பாதை காட்டிய, நல்ல பயணத்தில் பாடமாகக் கடந்துவந்த நல்ல கண்(ணு) ஐயா… அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சில தினங்கள் இவரைப்பற்றிய பேச்சுத்தான் எங்கும் எதிரொலிக்கும். ஆனால் ஒலிகள் போல மெல்ல மெல்ல நம்மை கடந்தும் போய்விடும் என்பதுதான் மனசு வலிக்கிறது.

ஐயாவைப் பற்றி எழுத நினைத்தால் எனது பேனாக்கூட புனிதமாகிறது! பேச நினைத்தால் நாக்கு தூய்மையாகிறது! அப்படி வாழ்ந்த ஒரு அப்பழுக்கற்ற மனிதன் அவர். அரசியலில் தூய்மை, வாழ்க்கையில் நேர்மை, இல்லாமைக்கு உழைப்பாளி, இயலாமைக்குப் போராளி, ஆசைக்குப் புத்தன், அறிவுக்குச் சித்தன். எளிய ஒரு பல்கலைக்கழகம் இந்த நூற்றாண்டில் வாழ்ந்தது என்பதுதான் இவருடைய வரலாறு.

ஐயா வரலாற்றை எழுதும் அளவிற்கு என்னால் இயலாது. ஏனென்றால் இமயமலைக்கு முண்டாசு கட்ட ஆசைப்படுவது “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது” போன்றது. எனவேதான் பூகம்பம் ஒன்று வந்தது! அதில் என் வீடும் குலுங்கியது! என்று சொல்வது போல எண்ணற்ற அதிர்வுகளை இச்சமுதாயத்திற்குத் தந்தவரை எண்ணிப் பார்க்கும்போது எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஐயா அவர்கள் பாழ்பட்டுப் போன இச்சமூகம் பதராய் போய்விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் நடத்திய போராட்டங்கள், சிறைவாழ்க்கை, உண்ணாவிரதம், காவல்துறையின் அடக்குமுறைகள், வலிகள், பழிகள் அத்தனையும் கடந்து வாழ்ந்த ஒரு மனிதனின் கண்முன்னே இந்த அரசியல், சாக்கடையாகிக் கொண்டிருக்கிறது. சமூகமோ சிதலமடைந்த சிற்பமாக சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது. பாவம் இதைப் பார்ப்பதற்காகவா! ஐயா இவ்வளவு காலம் உயிரோடு இருந்தார்கள்?

ஐயா வாழ்ந்தது ஒரு வரலாறு! வருகின்ற தலைமுறை அதைக் கண்டு தன்னையும் அவர்போல் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லவர்களையும், நல்லவற்றையும் தேடித் தேடிப் பார்த்து, படித்து அவர்போல வாழ வேண்டும். ஆனால் இப்போதுள்ள கலாச்சாரம் நுகர்வுக் கலாச்சாரம். தனக்குத் தேவைப்படும்போது தேவையானதை எடுத்துப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவார்கள். அது தான் மனசு துயரப்படுகிறது.

ஐயாவைப் பற்றி இந்தச் சமூகம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் நமது கல்வித்துறை எப்படியாவது மாணவர்கள் மனதிலாவது பதியவைக்க வேண்டும் என்று பல்வேறு போட்டிகள் நடத்துவார்கள். மாணவர்கள் கடுமையாக அதனைப் பயிற்சி எடுப்பார்கள். எல்லாம் பரிசுக்கு மட்டுமே. இந்த நேர்மையாளரைப் பற்றிப் பேசிவிட்டு குறுக்கு வழியில் பரிசைப் பெற சில கோமாளிகள் கூட்டம் கோல்மால் பண்ணுவார்கள். நேர்மையாளரைப் பேசிவிட்டு குறுக்கு வழியில் பரிசுகள் பெறுவார்கள்.

பள்ளியிலும் பாடமாக வைத்து விடாதீர்கள். அதையும் பரிட்சைக்குப் பயன்படுத்திவிட்டு எழுத்துக்களைக் எடுத்துக் கடையில் போட்டு காசு வாங்கிவிடுவார்கள். ஏனென்றால் காந்தி, காமராசர், பாரதி, அம்பேத்கார் என்று எத்தனையோ பேர்களின் வாழ்க்கையைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு கண்ணயர்ந்து தூங்குகிறோம். ஆனால் காந்தி மட்டுமே இன்னும் நம் பாக்கெட்டில் சிரித்துக் கொண்டு இருக்கிறார். காரணம் அவர் பணத்தில் இருப்பதால் சிரிக்கிறார் பாடத்தில் இருந்தால் கிழித்திருப்போம் பிட் அடிப்பதற்கு.

ஐயா அவர்களுக்கு ஒரு அரசியல் கூட்டத்தில் ஒரு கோடி ரூபாயும், ஒரு காசும் கொடுத்தார்களாம். அதே மேடையில் அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். அவர் காலத்தில் அரசியல் என்பது நாம் கொடுப்பது! நம்மைக் கொடுப்பது! அதனை அவர்கள் கடைசிவரை கைவிடவில்லை. அதனால் இன்றைய அரசியல் அவரைக் கைவிட்டுவிட்டது. இன்றைய அரசியல் என்பது அபகரிப்பது. ஆன மட்டும் சுருட்டுவது, அசந்தவனிடம் புடுங்குவது என அசிங்கமான அரசியலால் சருகுகள் சத்தம் போட்டுக் கொண்டு இருப்பதை மாநாடு என்கிறார்கள். தலைவர்கள் காரை விட்டு காலை கீழே வைத்து விட்டால் ஊர்வலம் என்று தொண்டர்கள் ஊளையிடுவார்கள். இந்தச் சில்லறை மனிதர்கள் கட்டியிருக்கின்ற கல்லறைகள் தான் இன்றைய அரசியல்.

அரசுப் பணியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். பேசத் தெரிந்தவனின் வார்த்தைகளில் அரசியல் இருக்கைக் கூடாது என்று சொன்னால் நாக்கைத்தான் அறுக்க வேண்டும். ஏனென்றால் ஒருவன் பத்து வார்த்தை பேசினால் அதில் ஐந்து வார்த்தை அவர்களை அறியாமலேயே அரசியலாகத்தான் இருக்கும். படித்தவர்கள் எந்த வேலையும் கிடைக்காமல் வெட்டியாய் இருந்தால் அரசியல் செய்யுங்கள் என்று சொல்வது அபத்தம். எல்லோரும் அரசியல்வாதிகள்தான் எல்லோருக்குள்ளும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே அரசியலைக் கட்சிக்காரனிடம் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்காதீர்கள். ஏனென்றால் இங்கு அரசியல் என்பது அடிமைகளைப் பிடிப்பது என்பதுதான்.

சிலர் இங்கு அரிதாரம் பூசும் நடிகர்களாக வந்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டி ஆண்மையை அறுக்கிறார்கள். சிலர் பணப்பெட்டிகளைக் கொண்டு வந்து படியேறிப் பணம் கொடுத்து அவன் உரிமையைப் பறிக்கிறார்கள். சிலர் சாதித்தலைவர்கள் என்ற போர்வையில் இந்தச் சாக்கடையில் இருந்து வந்து தன் சாதிக்காரர்களையெல்லாம் கட்சி என்ற பெயரில் சாக்கடை ஆக்குவதுதான் சாதனை என்கிறார்கள். இப்படி எத்தனையோ தூண்டில்கள்களை எடுத்துவந்து இந்த வாக்காளர்களுக்கு வாக்கரிசி போடுகிறார்கள். பணம் வாங்குவது பாவமல்ல! அவர்கள் கொடுப்பது கருப்புப் பணம்தான். அதை அமலாக்கத்துறைதான் புடுங்க வேண்டுமென்பது அல்ல. அவசியத்திலிருப்பவனும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நம்மால் நல்லவர்கள் தோற்கடிக்கப்படக் கூடாது. உங்களுக்குப் புரிந்தால் சரி.

ஒரு நீதியரசர்கள் நெஞ்சை நிமிர்த்தினார் இலவசம் எப்படிக் கொடுக்கலாம் என்றார்! ஐயா ஒரு நிமிடம்! உங்களுக்கு என்ன குறை? ஆனாலும் நீங்கள் வைத்திருக்கிற கார்! நீங்கள் வைத்திருக்கிற வீடு யாருடையது? பணியின் நிமித்தம் பெற்றுக் கொள்கிறேன் என்று பாசாங்கு செய்வதை விட்டு விட்டு அன்றாடங்காட்சிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆயிரத்தெட்டு கேள்விகளா? உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றால் அது ஆணவம்! உயாந்த இடத்திலிருந்தாலும் நானும் அங்கிருந்து வந்தவன் என்றால் அது தாழ்ச்சி.

ஒருமுறை ஆட்சியாளர் திரு. சகாயம் ஒரு ஊழலைத் தடுக்கச் சுடுகாட்டில் அமர்ந்த காட்சி தெரியும். காவல்துறை உயர் அதிகாரி திரு. கண்ணப்பன் எளிமையாக ரோட்டோரம் நின்று வருகின்ற லாரியில் வழிப்பறி செய்கின்ற காவல்துறையை கையும் களவுமாக பிடித்த காட்சியும் புரியும். இடைநில்லாக் கல்வி இடையில் நின்று விடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கே வராத பல மாணவர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று அழைத்து வந்த முதன்மைக் கல்வி அலுவலர் திரு. சிவக்குமார் அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இவர்களைப் போன்று எத்தனையோ பேரை எழுத வேண்டும் இடம் கொள்ளாது. இவர்களைப் போன்றோர் வாழும்வரை இன்னும் காமராசர், பெரியார், அண்ணா, பாரதி, நல்லக்கண்ணு ஐயா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பாதைகள் இருக்கிறது வழிகாட்டிகள் இருக்கிறார்கள். நாம்தான் நடக்காமல் இருக்கிறோம். நாம் முடவர்கள் அல்ல வாருங்கள் நடப்போம். பாதங்கள் புனிதமானது. வீண் விவாதங்களாலும், பிடிவாதங்களாலும், பேராசையாலும் பாதை மாறுவதைத் தடுப்போம்.

பாதங்கள் தூய்மையாக இருக்கும்வரை பயணங்கள் சுகமாக இருக்கும். இனிமேலும் நல்லவர்களின் படங்களைப் பாதுகாப்பதை விட நல்லவர்களின் பாதைகளை வாழ்ந்து காட்டுவோம்! வழிகாட்டுவோம்!

“நல்லவர்கள் இன்னும்
இருக்கிறார்கள்…
நமக்குத் தான்
தெரியவில்லை…
தேடுவோம்… துணையிருப்போம்..”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES