30
Jan
2021
இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே வார்த்தை ஊடகங்கள் தன் கடமையைச் செய்யவில்லை அது வஞ்சகம் செய்கிறது. அரசுக்கு அடிபணிந்து நடக்கிறது. உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குகிறது, என்று அங்கலாய்ப்பில் அலறுகிறோம் விரக்தியில் முணுமுணுக்கிறோம்.
காரணம் டெல்லியில் இன்று நடக்கின்ற போராட்டங்களை எத்தனை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எத்தனை பத்திரிக்கைகள் எழுதுகின்றன என்றெல்லாம் விமர்சிக்கின்றோம். இது சரியான விமர்சனமா? என்பதுதான் எனது கேள்வி.
ஒரு காலத்தில் உலகச் செய்திகளை ஊடகங்கள் வழியாகத்தான் நாம் கேட்டறிந்தோம். அதனைத் தவிர அறிவதற்கு நமக்கு வேறு வழியில்லை. அதனை அறிவதற்காக நாமே தின, வார, மாத இதழ்களை வாங்கினோம். அவர்கள் நம்மை நம்பியே இருந்தார்கள், நமது நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் நடந்தார்கள்.
இப்போது எத்தனைபேர் பத்திரிக்கை வாங்குகிறோம்? இல்லையே! அலைபேசி நம் கைக்கு வந்தபிறகு கடிகாரம், கேமரா, கடிதங்கள், வாழ்த்தட்டைகள், தந்திகள், பத்திரிக்கைகள் தேவையில்லையே! தபால் அலுவலகமே மூடப்பட்டுவிட்டதே! தந்திகள் நம்மைவிட்டு பறந்துவிட்டனவே…
பொங்கல் அட்டைகள் இல்லை, புகைப்படம் எடுப்பதில்லை. ஏனென்றால் எல்லாம் நமது கையில் இருக்கிறது. ஆகவே நம்மை நம்பியிருந்த ஊடகங்களை கைவிட்டு விட்டோம். நாமே நான்காவது தூணாக மாறிவிட்டோம். அவர்களுக்கு நம்மிடம் இருந்து வருகின்ற வருமானம் இல்லாததாலும் அரசின் தயவு தேவையென்பதாலும் அதனை மீறி நடப்பது கடினமாக இருக்கிறது. தன்னிறைவு பெற்ற ஊடகங்கள் மட்டுமே இன்றளவும் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொருவர் கையிலும் அலைபேசி இருக்கிறது. கையில்லாதவர்களைப் பார்க்க முடிகிறதேயொழிய கைபேசி இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியாது. இது உங்கள் சுய விருப்பத்திற்குப் பயன்படுத்த வாங்கப்பட்டதுதான் அதை. அதில் கொஞ்சம் பொதுநலத்திற்கும் பயன்படுத்துங்களேன்.
என்னைப் பொறுத்தமட்டில் வலிமை மிக்க ஆயுதம் அலைபேசி. ஏன் நான்காவது தூண் நம் கையில் இருக்கும் அலைபேசிதான். எத்தனையோ பயனற்ற செய்திகளைப் பகிர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். காலை வணக்கம், மாலை வணக்கம் யாராவது கேட்டாங்களா? தேவையற்ற விதத்தில் நீங்கள் நேரத்தைச் செலவிடுவது மட்டுமல்லாது அடுத்தவர்கள் நேரத்தையும் திருடுகிற திருடர்கள் நீங்கள்! ஒத்துக் கொள்கிறீர்களா?
எங்கெங்கு அநீதி நடக்கிறதோ! எங்கொருவர் தன் கடமையைச் செய்ய மறுக்கிறாறோ? இலஞ்சம் வாங்குவது, அவதூறு பேசுவது, திருடுவது, தவறான செயல் செய்வதை உடனே படம் பிடியுங்கள். அதனைச் சென்று சேர வேண்டிய இடத்திற்கும் சேரவேண்டிய நபர்களுக்கும் சேரும் வரைப் பரப்புங்கள்.
தேவையற்ற செய்திகளை, உண்மையெது! பொய்யெது! எனத் தெரியாது. பரப்புவதும் அடுத்தவர்கள் பெயரைக் கெடுப்பதற்கும் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறவர்கள் உண்மையை உரைக்க எழுந்து வாருங்களேன்!
ஏதோ உண்மையைப் பேசுவது போல எழுந்து வந்து ஒருசிலர்களை மிரட்டிப் பெற வேண்டியதைப் பெற்று விட்டு பின் வாங்குகிற கோழைகளை, பிணந்திண்ணிகளைத் தோலுரித்துக் காட்டுங்கள்.
ஊருக்கு நான்கு இளைஞர்கள் போதும் ஊரில் நடக்கின்ற ஒவ்வொரு வளர்ச்சிப் பணிகளும் எவ்வளவு செலவில் நடைபெறுகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள் அங்கு செலவு செய்ததும் ஒதுக்கப்பட்ட நிதியும் சரியாக இருக்கிறதா? எனச் சரிபாருங்கள் இல்லையென்றால் வெறெங்கும் ஒதுங்கி விட்டதா? எனக் கேள்வி கேளுங்கள்.
நான்காவது தூணை வசைபாடி என்ன பயன்? ஊரில், பாலம், ரோடு, குளம் வெட்டுவதல், மணல் அள்ளுதல் எல்லாம் உங்கள் கண்முன் தான் அத்தனை அசிங்கங்களும் அயோக்கியத்தனமும் நடக்கிறது. எதையும் யாரும் தட்டிக் கேட்டதில்லை ஆனால் ஊடகங்கள் மட்டும் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோமே? அப்படி என்றால் நீங்களும் நானும் இதனையெல்லாம் வேடிக்கை பார்க்கிற வாடிக்கை மனிதர்கள் தானா? வாய்ச்சவுடால் செய்யும் உத்தமபுத்திரர்களா? இல்லை உண்மைக்காக உயிரையும் கொடுப்பவர்களா? யோசிப்போம். இனிமேல் இந்த நாட்டின் நான்காவது தூண் ஊடகம் என்று உரைப்பீர்கள்? இல்லை நானும் நீங்களும்தானா!
“கோழையாய் வாழ்வதைவிட
வீரனாய் சாவோமே!”