10
Jan
2021
இன்று ஆளாளுக்குப் பச்சைத் துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு நானும் விவசாயிதான் என்று சொல்லும் போது வடிவேல் ஜோக் ஞாபகம் வந்து சிரிப்புதான் வருகிறது. மீசை வைத்தவனெல்லாம் பாரதியா? தாடி வைத்தவனெல்லாம் தாகூரா?
இந்தப் புத்தாண்டு எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எனக்கு உயிர்தந்த இரண்டாம்தாய். எனக்கு உணவிட்டுக் காக்கும் கடவுள்! விவசாயி. அவர்கள் எல்லாம் தலைநகரில் குளிரில் நடுங்கி வெயிலில் உலர்ந்து அனைவருக்கும் உணவளிக்க விவசாயத்தை வாழவையுங்கள் என்று போராட்டத் தீயில் வெந்து கொண்டிருக்கும்போது நான் மட்டும் எப்படிப் புத்தாண்டைக் கொண்டாட முடியும்?
எனக்காக அவர்கள் தன் உயிரை இழந்து கொண்டிருக்கும் போது என்னாலும் என்னைப் போன்றவர்களும் எதுவும் செய்ய முடியாமல் இருப்பது எம்மையே நாம் மூச்சு விடும் பிணமாக நினைத்து முடங்கிக் கொண்டோமோ? இல்லை, சுரண்டல் சமுதாயத்தில் சூடு, சொரணையில்லாமல் சுருக்கிக் கொண்டோமா? என எண்ணத்தோன்றுகிறது.
விவசாயம் என்பது மண், மாடு, மனிதன் இணைந்தது. இந்த மூன்றின் கலவையே முழுமையான விவசாயம் இதனால் தான் முதன் முதலில் விவசாயத்திற்கு டிராக்டர் பயன்படுத்தும் போது காந்தி நேருவெல்லாம் விவசாய விஞ்ஞானி குமாரப்பாவைக் கேட்டு முடிவெடுங்கள் என்றார். அவரிடம் அதிகாரிகள் விளக்கும் போது அவர் கூறிய ஒரு வார்த்தை இது மாடு பார்க்கும் அத்தனை வேலைகளையும் செய்து வேலையை எளிதாக்கும். விரைவில் செய்து முடிக்கும் என்றீர்களே. இது சாணி போடுமா? என்றார். அதற்கு அதிகாரிகள் கேலியாய் சிரித்தார்கள்.
அதன் விளைவுதான் மாடு விவசாயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேற்றப்பட்டது. சாணி உரம் நின்றுபோனது. செயற்கை உரத்தின் வன்புணர்ச்சியினால் மண் வலுவிழந்து போனது. பெண்ணும் மண்ணும் ஒத்துப்போகாதவர்களோடு உறவு கொள்ள நேரிட்டால் பெண்ணுக்குக் கற்புப் போகும். மண்ணுக்குச் சத்துப் போகும்.
இனி ஒரு விதி செய்வோம். அதற்காய் எல்லோரும் பாடுபடுவோம். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்க எண்ணும் அரசிடம் அவர்கள் போராடட்டும் அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில் எல்லோருக்குள்ளும் ஒரு விவசாயி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். எல்லோரையும் ஏதோ ஒரு விவசாயி வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
எத்தனையோ பெண் பிள்ளைகள் முன்னுக்கு வரும்போது எங்கப்பா விவசாயம் செய்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்குக் கொண்டுவந்தார் என்று சொல்லும் வீரநங்கைகளே. என் அன்புக் குழந்தைகளே. நான் மணந்தால் ஒரு விவசாயியைத்தான் மணப்பேன் என வீரசபதம் எடுங்களேன். புதிய புரட்சி பூமியில் பரவட்டும். நாட்டில் விவசாயம் மலரட்டும் உங்களால் முடியும்.
காசு இருக்கிறவர்களிடம் மட்டும் தன்னைத் திறக்கிற ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமாகப் பார்க்கின்ற இச்சமூகம் காசு இருக்கிறவர்களுக்கு மட்டும் தன் கதவைத்திறக்கிற கல்வி நிலையங்களையும் அவ்வாறு எண்ணவேண்டும். விவசாயியின் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கல்வி நிலையங்கள் பெருக வேண்டும். அதனை வணங்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிலையங்களிலும் காலை வழிபாட்டு நேரத்தில் எல்லாம் ஒவ்வொரு விவசாயின் மூலம் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.
நகரத்தில் பொதுக்கட்டிடங்கள் எல்லாம் ஒரு விவசாயின் மூலமாகத் திறந்து வைக்கப்பட வேண்டும். நம்மை ஆளும் தலைவர்கள் நம்மிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு விவசாயியாக இருக்க வேண்டும். இதனை நம் ஒவ்வொருவரும் இலட்சியமாக எடுத்துச் செயல்படுத்துவோம்.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் எஞ்சிய காலங்களில் விவசாயத்தில் தன் காலத்தைக் கழிக்கும் விழிப்புணர்வு வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தம் குழந்தைகளைச் சட்டை அழுக்காகமல் கணிணிக்கு முன் பணியைச் செய்யத்தான் ஆசைப்படுகிறோமே தவிர கழனியில் இறங்கிப் பணி செய்வதைக் கேவலமாக எண்ணுகிறோம். நாளைய உலகம் சோற்றுக்கு என்ன செய்யும் என்று சிந்தித்துப் பார்த்தோமா? என் தாத்தாவிடம் குளுகுளு (A/C) அறையில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னவுடன் அவர் சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தை செத்த பிறகல்லவா அந்தப் பெட்டிக்குள் வைக்க வேண்டும் என்றார்.
கழனியில் காற்றோட்டமாக வேலை செய்யும்வரை எவருக்கும் நோய்கள் இருந்ததில்லை, பாயில் படுத்த படுக்கையாய்க் கிடந்ததில்லை. இன்று சொல்ல முடியாத வியாதிகளால் மனிதன் செத்து மடிகிறான். இருக்கிற காலம் இன்பமாக வேண்டுமென்றால் மீண்டும் நாம் இயற்கை விவசாயத்தை நேசிப்போம், வாசிப்போம், யாசிப்போம், சுவாசிப்போம்.
என்னை வழிநடத்திய எங்கள் தலைவர்கள் எல்லாம் உயர் பதவிகளில் இருந்தாலும், இப்போது விவசாயத்தில்தான் தன் வாழ்வை நடவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வணங்குகிறேன். உங்களை வரவேற்கிறேன். நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இயற்கை விவசாயத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இறங்கவா? இல்லை இறக்கவா?
“கடவுளை விட
கைதொழ வேண்டியவன்
விவசாயி மட்டுமே”