15
Oct
2020
“இன்று நீ
நாளை நான்”
நாம் அனைவரும் வரிசையில் நிற்கிறோம்! என்றவுடன் சுவாமி தரிசனத்திற்கு வரிசையில் நிற்கிறோம். அதேபோல் ரேசன் கடையில் டாஸ்மார்க்கில், தியேட்டரில், இலவசப்பொருட்கள் வாங்குவதற்கு. மருத்துவமனையில், விமான நிலையங்களில் இப்படிப் பல இடங்களில் நாம் வரிசையாக நிற்பது நினைவுக்கு வரும்.
இன்னும் சிலர் எகத்தாளமாய் நான் ஏன் வரிசையில் நிற்கவேண்டும்? எனக்கிருக்கிற பணத்தில், செல்வாக்கில் அனைத்தும் என் வீடு தேடி வரும் என்பார்கள் ஆனால் நாம் அனைவரும் வரிசையில் நிற்கிறோம்!.
பூமியில் பிறந்ததிலிருந்தே நாம் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். ஓடிக்கொண்டே இருக்கிற இந்தப் பூமியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினை நிர்ணயித்து இலச்சியங்களை வளர்த்துக்கொண்டு இலட்சங்களைச் சேகரித்துக் கொண்டு நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
ஒவ்வொருவரும் எங்கேயோ பயணித்துக் கொண்டிருப்போம். கேட்டுப் பார்த்தால் பள்ளிக்கு, அலுவலகத்திற்கு, வேலைக்கு, கல்யாணத்திற்கு என்று முடியும் பயணத்தை முன்மொழிவார்கள். ஆனால் மகானைக் கேட்டுப் பாருங்கள் அழகாகச் சொல்லுவார் நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால்! மரணத்தை நோக்கி என்பார். அதுதான் அந்தக் கேள்விக்கான சரியான விடை. ஆம் நாமும் அந்த வரிசையில் நிற்கிறோம்!.
இந்தப் பூமியில் ஒவ்வொருவரும் வரிசையாக வந்தோம் வருகிறோம். அதேபோல் வரிசையாகச் சென்று கொண்டு இருக்கிறோம். இங்கு யாரும் நிரந்தரமில்லை. இந்தப் பூமி யாருக்கும் நிரந்தரமும் இல்லை. தங்காமல் போய்க் கொண்டேதான் இருக்கப் போகிறோம். ஆம் நாமும் அந்த வரிசையில் நிற்கிறோம்.!
எப்படி வந்தோம்? பெற்றோர்களைக் காட்டுவோம். எதற்காக வந்தோம்? எப்போது போவோம்? இது தெரியாது என்போம். புரியாத புதிர் என்போம் ஆனால் நாமும் வரிசையில் நிற்கிறோம்.
கண்டிப்பாக ஒரு நாள் போகத்தான் போகிறோம். வந்தோம், போனோம் என்றில்லாமல் வந்து வாழ்ந்து விட்டுத்தான் போவோமே! வேகமான உலகில் விபத்தில் போய்விடுகிறார்கள். வேலை கிடைக்கவில்லை என்று, வாழ வழியில்லை, வாழவிடவில்லை என்றும் காதல் கைகூடவில்லை, கடன் தொல்லை, சமூகத்தில் அவமானம் எனச் சாவை முத்தமிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படியோ சாவு வரத்தான் போகிறது ஏனென்றால் நாமும் வரிசையில் நிற்கிறோம்.!
எனவே நாளை நம் கையில் இல்லை நன்றாக நினைத்துப் பாருங்கள் அந்த நாளையப்பயந்தான் நம்மை நடைபிணமாக்குகிறது. நொந்து நோயாளியாக்குகிறது. முடக்கிவிடுகிறது அடங்கிப் போக வைக்கிறது. அதனால்தான் நம்மில் பலர் பூமியில் வாழும் பொன்னான வாழ்வை சுடுகாட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி விடுகிறோம்.
நமக்குப் பயம், வீட்டுக்குப் பயம், சமூகத்துக்குப் பயம், இருட்டுக்குப் பயம், தேர்வுக்குப் பயம், இப்படி ஒவ்வொன்றுக்கும் பயந்து நாம் என்னதான் இந்தப் பூமியில் செய்யப் போகிறோம்.? எப்போதுமே புகைந்து கொண்டிருப்பதை விட எரிந்து விடுவதே மேல். நாம் இன்னும் அதிக நாள் இங்கு வாழப் போவதில்லை நாமும் அந்த வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.! நமது டோக்கன் நம்பர் நமக்குத் தெரியவில்லை. அது வந்தவுடன் நமக்கு அழைப்பு வரும். எப்படி வரும்? எப்போது வரும்? என்று நமக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக வரும் ஏனென்றால் நாம் அந்த வரிசையில் நிற்கிறோம்.
இப்படிப்பட்ட வாழ்க்கையில் அழைப்பு வந்தவுடன் யாரையும் அழைத்துக் கொண்டுபோகப் போறதுமில்லை. எதையும் எடுத்துக் கொண்டு போறதுமில்லை. விலையுயர்ந்தது என்று நாம் எண்ணியதெல்லாம் விட்டுவிட்டுத்தான் போகப் போகிறோம் சொத்துக்கள் என்று நீங்கள் சேர்த்ததையெல்லாம் ஒருமுறை பாருங்கள். உங்கள் பீரோவில் நீங்கள் அடுக்கி வைத்திருக்கிற பொருட்களையெல்லாம், உடைகளையெல்லாம் ஒருமுறைப் பாருங்கள் உங்களுடையது என்ற எதுவும் உங்களோடு வரப் போகிறதில்லை.
பிறகு எதற்காகத் தேடுகிறீர்கள்? யாருக்காக தேடுகிறீர்கள்? இதைவிட ஒன்று முக்கியம் நீங்கள் இல்லாத போதும் உங்களைத் தேட வேண்டும். அதற்காக வாழுங்கள். நீங்கள் இறந்த பிறகும் எல்லோர் இதயத்திலும் வாழவேண்டும். அதற்காக வாழுங்கள். நீங்கள் இருக்கும்போதே அனைத்தையும் கொடுங்கள். உங்கள் அன்பையும் கொடுங்கள் உங்கள் வாழ்வின் அர்த்தம் விளங்கும். இருக்கும்போது சிரிக்க வையுங்கள் நீங்கள் இல்லாதபோது அவர்கள் அழுவார்கள். இருக்கும்வரை யாரையும் கண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இறந்தபிறகு அவர்கள் மொத்தக் கண்ணீரும் முத்தமாய் உங்கள் உடம்பில் பட்டு உருண்டு செல்லும். நீங்கள் சேர்க்கும் உறவுகள், பாசங்கள் மட்டுமே இறுதிப் பயணத்தின் எல்லை வரைவரும். இதனை மட்டுமே சம்பாதியுங்கள். உங்கள் மறைவில் ஒவ்வொரு கண்ணீர் துளிகளும் இந்தப் பூமியில் உங்கள் அன்பைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
‘மண் எனக்குச் சொந்தமென்று
மயங்கித் திரிந்தது என் இறந்தகாலம்
மண்ணுக்குத்தான் நான் சொந்தமென்று
மறுபடிப் புரிந்தது நான் இறந்தகாலம்’