18

Jan

2019

நினைவுகளைச் சேகரிக்கிறேன்

நெல்லை மாவட்டம் தனது நீண்ட பயணத்தில் பல எல்லைகளை வரலாற்றுக்குள் வடிவமைத்திருக்கிறது. அதுவும் பொதிகை மலையின் அடியில் பல புதிய அத்தியாயங்களை எழுதிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தாமிரபரணி புஷ்கரவிழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு திக்கெங்கிலும் இருந்து தமது தெய்வீகத்தைப் புதுப்பிப்பதற்காகத் தெற்கு நோக்கிப் பயணித்துத் தாமிரபரணியில் தலைமுழுகித் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டார்கள்.

அதே நதியின் கரையில் தன்னை நிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக தம்மை நிமிர்த்தி, தனக்குள் தன்னைத் தேடிவந்த குழந்தைகளை அவர்களுக்கு அடையாளம் காட்டி இன்றவும் விக்கிரமசிங்கபுரம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் தானும் ஒரு அடையாளமாகத் தலைநிமிர்ந்து நிற்கின்ற நமது புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டு என்ற மைல் கல்லைக் கடந்து பவள விழாவாகப் பவனி வருகிறது.

இவ்விழாவினை இந்நாற்றங்காலில் நடைபயின்ற, மாணவ மாணவிகள் நடத்திச்சென்றத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலக உதவியாளர்கள் பெற்றோர்கள், உடன்பயணித்தவர்கள் அத்தனைபேரும் இத்தனைப் பெருமைக்குரியப் பள்ளியின் பெருமையைப் பறைசாற்றுவதே இக்கொண்டாட்டமாகும்.

ஆகா. எனது கண்களை மூடி நினைவுகளைத் வருடிப்பார்க்கும்போது எவ்வளவு விரைவாக எனது நாட்கள் பயணித்திருக்கிறது என்று எண்ணும்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. மீண்டும் மனதிற்குள் அசைபோட்டு மகிழ்கிறேன்.

எனது வகுப்பறைகள், ஆசிரியர்களோடு நான் விழாக்களைக் கொண்டாடிய நாட்கள் சேட்டைகள் செய்து திண்டாடிய நாட்கள், இன்னும் நினைவில் வந்து வந்து போகிறது. செய்த குறும்புகளை எண்ணி எண்ணிப்பார்க்கிறேன்.

தாய்பால் மனிதனை வளர்கிறது என்று எண்ணியிருந்த எனக்கு தமிழ்பாலும் தரணியில் தலைநிமிர வைக்கும் எனப் புரியவைத்த தமிழ் ஆசிரியர் திரு.குமார அழகப்பன், அதிராமல் அசரவைத்த ஆங்கில ஆசிரியர் K. S. கோயில்பிள்ளை, கணக்குக் கடினம்தான், இருப்பினும் கற்றுக்கொடுப்பதை எளிதாக்கினால் எல்லாம் இனிதாகும் எனப்புரியவைத்த ஆசிரியர்கள் திரு. ஜான் லூயிஸ் மனோகரன், திரு. பிரான்சிஸ் ராஜன், ஒழுக்கத்தைக் கல்வியோடு கலந்துகொடுத்த மதிப்பிற்குரிய பொருளியில் ஆசிரியர் திரு. இராபர்ட், கரிசனையோடு கற்றுக்கொடுத்த கணக்குப்பதிவியல் ஆசிரியர் திரு. சின்னத்தங்கம், எனது வகுப்பாசிரியரும் வணிகவியல் ஆசிரியருமான திரு. பன்னீர்செல்வம் ஆகிய அனைவரும் இன்றும் பசுமையாக எனக்குள் பவனி வருகிறார்கள்.

அருட்சகோ. அருள்பிரகாசம், அருட்சகோ. இருதயராஜ், அருட்சகோ. ஞானப்பிரகாசம் இவர்களின் தலைமை கொடுத்தப் பயங்கள் எனது பாதையைச் செம்மையாக்கியது. எங்கள் பள்ளியின் கட்டுபாட்டினை தனது செயல்பாட்டில் வைத்திருந்த அருட்சகோ. லூயிஸ்ராஜ் அவர்களின் ஆளுமை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

கலைத்துறையில் சிற்பியாய் நின்று என்னைச் செதுக்கிய அருட்சகோ. செபாஸ்டின், சகோ. அதிசயம் ஆகியோர் நான் அசையும்போதெல்லாம் எனக்குள் இன்னும் அசைவாடுகிறார்கள்.

கிராமத்துச் சிறுவனாய் இருந்து இப்பள்ளிக்கு வந்து சேர்ந்த சாதாரணச் சிறுவனை நித்தமும் வார்த்தெடுத்து, சோர்ந்து போகாது பார்த்து, தோல்வியுறும்போதும், துவண்டு போகும் போதும் தாயாய் நின்றுத் தட்டிக்கொடுத்துத் தவறு என்றால் நல் தந்தையாய்ப் பொறுத்து, மன்னித்து, புதுவாழ்வு தந்து இன்றவும் எனக்கு எல்லா உணர்வுகளிலும் தனது அன்பால் நிறைந்து இருக்கிற எனது குருநாதர் அருட்சகோ. செங்கோல் அவர்கள், நான் மிரண்ட போதெல்லாம் மீட்டெடுத்து என்னை இன்றளவும் கையைப்பிடித்துக் கொண்டு தனது பயணத்தின் பக்கத்தில் வைத்துப்பார்க்கின்ற பசுமையான நினைவுகள் ஆகா… உள்ளுக்குள் ஏதோ சாரலடிக்கிறது.

நான் பள்ளிக்கு வரும்போதெல்லாம் நமது பள்ளி ஒரு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டிடங்களும் அதன் காலத்தையும் அதனை உருவாக்கிய காரிய தரிசகளையும் இன்னும் கை காட்டிக்கொண்டே இருக்கிறது. போனிபாஸ் ஐயா தொடங்கி அமலதாஸ் ஐயா, அமல்ராஜ் ஐயா, ஆரோக்கியம் பீற்றர் ஐயா என இன்று அழகிய ஆடிட்டோரியம் அமைத்துத்தந்த ஐயா செங்கோல் அவர்கள் வரை இந்நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியிருக்கிறார்கள் என்பது மனதிற்குச் சந்தோசத்தைத்தருகிறது. நமது பள்ளியின் விடுதி, அதன் அருகில் ஆங்கிலப்பள்ளி (10ஆம் வகுப்புவரை) என இந்நிறுவனத்தின் இறகு இன்னும் விரிந்திருக்கிறது.

ஜன்னல் வழியாகப் பார்க்கும் போதெல்லாம் வெள்ளையுடையில் வரப்பில்நின்று விவசாயப்பணிக்கென்றே தன்னை அர்ப்பணித்த திரு. பட்டாபி அண்ணாச்சி, ஓடி, ஓடி உழைத்த சொர்ணம் அண்ணாச்சி, கடவுளுக்குப் பயந்தே பணி தொடரும் சத்துணவு அமைப்பாளர் திரு. ஞானக்கண்ணு, NCC யில் மிரட்டும் திரு. K. S. ஆறுமுகம், கணிதத்தை கடினமில்லாது தந்த திரு. ஆரோக்கிய அருள்ராஜ், விளையாட்டு ஆசிரியர்கள் திரு. அந்தோனிராஜ், திரு. சாலமன், திரு.முருகன், திரு. ஜெயத்திலகம் இவர்களையும் இன்றும் மறக்க முடியவில்லை.

பார்ப்பதற்கு மென்மையாக ஆனால் நிர்வாகத்திற்கு உண்மையாக வாழ்ந்த பாபு சார், வரலாற்றுப் பாடமாக வாழ்ந்துவிட்டுப்போன திரு. குருசாமி ஆசிரியர் ஆகியோரை நினைக்கும்போது இன்னும் கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது.

ஏனென்றால் சில ஆசிரியர்கள் உள்ளத்தில் இருக்கிறார்கள். இல்லத்தில் இல்லையே! சிலரைப்பார்க்கிறேன், சிலரோடு பழகுகிறேன், சிலரோடு பயணிக்கிறேன்.
என்னுடைய காலத்தில் பயின்ற ஆசிரியர்கள் ஜோதிபிரகாஷ், ஆசிரியர் ஆரோக்கியபாபு, திரு.கார்த்திக் (மதுரா கோட்ஸ்) போன்றோரோடு பயணிக்கிறேன். முன்னாள் ஆசிரியர்கள் பலரைச் சந்தித்து வணங்கி இருக்கிறேன். இன்னும் பலரின் துணையோடு முன்னாள் மாணவர்களைக் கூட்டி சங்கம் அமைத்துச் சந்தித்து மகிழ்கிறேன். ஆயினும் எனது நட்பின் தாகம் இன்னும் முடியவில்லை.

தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன். நான் பயிலும்போது, இங்கு இருந்தவர்கள் எல்லாம் எங்கிருக்கிறீர்கள்? வாருங்களேன் ஒருமுறை நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். உள்ளுரிலும் வெளியூரிலும் இருக்கிறவர்கள் ஏன் ஒருமுறைகூட நம் பள்ளியைப் பார்க்க வரவில்லையே! பயின்ற வகுப்பறைகளை, ஓடிவிளையாடிய விளையாட்டுத்திடல், முட்டாய் வாங்கித்தின்ற பெட்டிக்கடை, சாக்குவிரித்து விற்ற மாங்காய், கடன்கொடுத்த ஐஸ்காரர் நின்ற இடம், பேருந்துக்காகக் காத்திருந்த இடம், தாமதமாக வந்தால் விளையாட்டு ஆசிரியரிடம் அடிவாங்கிய இடம், தப்பு செய்ததற்காகக் கால்கள் வகுப்புவெளியே நின்ற இடம் இங்கேதான் இருக்கிறது. நீங்கள்தான் எங்கே இருக்கிறீர்கள்? வாருங்களேன் ஒருமுறை முகம்பார்ப்போம், அகம்சேர்ப்போம்.

உங்களோடு ஒருவனாய் நின்று நமது ஆசிரியர்களாலும், அருட்சகோதரர்களாலும் உருவாக்கப்பட்டு இன்று நமது பள்ளியின் தலைமையாசிரியர் பணியேற்று உங்களுக்காகக் காத்திருக்கிறேன். வாருங்கள் பார்ப்போம் பழகுவோம்.

காலமெல்லாம் அன்போடு

சகோ. R . ஜோ அந்தோனி

ARCHIVES