05
Apr
2024
நீண்ட நாட்களுக்குப்பின் எனது ஊரில் ஒரு மாலைப் பொழுது… பாதையில் எனது சிறிய வயது பள்ளித் தோழி. பார்க்கலாமா? வேண்டாமா? என்று எண்ணும் முன் அவள் சிரிக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் போல… ஆயினும் அவள் சிரித்தாள் நானும் மெல்லிதாகச் சிரித்தேன். தன்னைச் சுதாரித்துக் கொண்டு தனக்குள் அடைபட்டுக் கிடந்த கேள்விகள் எல்லாம் அலை.. அலையாக அவளிடம் இருந்து புறப்பட்டன. எதேச்சையாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு நான் பிறந்த மண்ணில் நாங்கள் இருவரும் எதிரெதிராக நின்று உரையாடிக் கொண்டிருந்தோம்.
எப்ப வந்த..? காலையில.. எங்கே இருக்க? பாபநாசத்தில. என்ன வேலை செஞ்சுக்கிட்டு இருக்க…? வாத்தியாரா… ஊருப்பக்கம் வரவே இல்லையோ…? நேரம் கிடைக்கல… உங்க அப்பா செத்துக்கு வந்தயா…? நான் பார்க்கவேயில்லையே…? வந்துட்டு உடனே போயிட்டேன்… நம்ம நண்பர்களையெல்லாம் பார்த்தயா…? யாரையும் பார்க்க முடியல… உயிருக்கு உயிரான நண்பர்களையெல்லாம் வேலையைத் தேடிப் போனதால தொலைச்சுப்புட்டோம்… நாமும் தொலைஞ்சுட்டோம். எதையோ தேடி நம்ம தொலைச்சுப்புட்டோம்…
நமக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியாரெல்லாம் இப்போ… உயிரோட.. இருப்பாங்களா? யாருக்குத் தெரியும் கற்றுக் கொடுத்தவர்களைக் கூட கண்டு கொள்ளாமல் வாழ்கிற கலாச்சாரம் தானே நமது கலாச்சாரம்! நாம் படிச்ச பள்ளிக்கூடத்த இடிச்சிட்டு இப்போ புதுசா ஒரு பள்ளிக்கூடம் கட்டிட்டாங்க.. நம்ம தலைமுறையின் சாபக்கேடு நமது நினைவிடங்கள் நம் கண் முன்னே அழிவதுதான்… நாம குளிச்சோம்ல… அந்தப் பாறைக் கிடங்கு! அத இப்போ கோரியாக்கி கல்ல உடைச்சு அந்தப் பகுதியையே இப்போ விவசாயம் இல்லாம பண்ணிட்டாங்க…! ஏன்? நாம நிற்கிற ரோடு தண்ணீர் ஓடும் ஓடைதானே! எத்தனை நாள் இங்க கப்பல் விட்டு விளையாண்டு இருப்போம்? இப்போ சொட்டுத் தண்ணியில்ல. இது ஓடி நிறைஞ்சு பொங்கி வழியிற கிணறுகள் எல்லாம் போன இடம் தெரியல.. நாம நினைச்சு பார்க்க முடியாதபடி இப்ப தண்ணிய விலைகொடுத்து வாங்கிக் குடிக்கிறோம். ரொம்பக் கேவலமா இருக்கு! இவ்வளவு சீக்கிரமா அழிவை அள்ளி அணைப்போம் என்று அந்த ஆண்டவன் கூட நினைச்சிருக்கமாட்டான்.
நான் கேட்டேன். ஆலமரத்திற்கு கீழ இருந்த கருப்பசாமிய கோயில் கட்டி வச்சிருக்காங்களே? நீ வேற அது ஐம்பொன் சிலையாம்! இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க. அத கோயிலுக்கு உள்ள வச்சிட்டா யாரும் பார்க்கப் போறது இல்ல… அத தூக்கிக் கடத்திட்டு அது மாதிரி ஒரு தகரச் சிலையை வைச்சு நம்ம ஏமாத்த போறாங்க.. இந்த கும்பாபிசேகங்கள் எதற்கு? கோயிலைக் கொள்ளையடிக்கத்தானே..! திருட்டுப் பசங்க… சாமியார்களும், பூசாரிகளும் இல்லையினா இங்கு மதப்பிரச்சனையே.. இல்ல. இந்த முட்டாள் இல்லையினா நாம முட்டாளாக மாட்டோம். அவங்க வழிபாடுன்னு ஒன்ன வைச்சு நம்ம வாயை அடைச்சிர்றாங்க.. நாமும் முட்டாளாகி வாயப் பொத்தி ஊமையாகிறோம்.
உனக்கு இன்னும் அந்தக் கோபம் குறையலயே..? அதற்கு அவள் சிரித்துக் கொண்டே எல்லாமே நீ கற்றுக் கொடுத்ததுதானே! சரி நீ ஏன் அதை தட்டிக் கேக்கல..? நான் கேட்டா? நாலு பேரை நான் வைச்சிறுக்கேன்னு நா கூசாம அந்தப் பெரிய மனிசங்கள் கதை விடுவாங்க. ஆண்களின் அற்பப் புத்திதானே… இந்த அசிங்கமான அரசியல்…! எதிர்கருத்தை எழுந்து நின்று எவர் சொன்னாலும் உடனே சிறையில் போடுவது போல… பெண்களை வீட்டுச் சிறையில் வைக்கிற விளங்காதவர்கள் தானே நீங்க! நான் நாட்டு அரசியலைச் சொல்லல…! நம்ம ஊர் நிலைவரத்தை சொல்றேன்.
ஊர் எவ்வளவோ மாறிருச்சு… இல்ல? நீ வேற.. ஊர் பாதி அழிஞ்சிருச்சு…! கேட்டா வளர்ந்துட்டோம்னு சொல்லுவாங்க ஆனா உண்மைய சொன்னா நாமதான் உயிரோடு புதைஞ்சிக்கிட்டு இருக்கோம்… என்ன இவ்வளவு விரக்தியா பேசுற…? பிறகென்ன எல்லாருடைய கையிலும் இப்போம் செல்லு வந்திருச்சு! ஆனா எவன் மனசிலயும் ஒழுக்கம் இல்ல…! அன்றைக்கு கோயில் கொடையில கரகாட்டம் பார்க்கும்போது கெட்ட வார்த்தையைக் கூட எதார்த்தமா பேசுவாங்க… சிரிப்போம்! ஆனா இன்னைக்கு யதார்தத்தைக் கூட கெட்ட எண்ணத்தோடுதான் பாக்காங்க… பொட்டப் புள்ளைங்க பாவடை இல்லாம போகும்போது கூட பாசமாத்தாம் பாத்தாங்க… ஆனா இன்னைக்கு பாலுட்டுகிற ஒரு தாய் பாலூட்டும் போது அவள் மார்பகத்தைக் கூட காமமாத்தானே பாக்கிறாங்க. பாவிப் பயலுக…
அப்போது என் பையன் நான்கு பேரோடு எங்கள் அருகில் ஓடிக் கொண்டிருந்தான். அவள் அவனிடம் டேய் தம்பி! இந்த ஊரு பிடிச்சிருக்கா…? என்றாள். அவன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்று விளையாடுகிற சந்தோசத்தில் அவளுக்குப் பின்னால் வந்து ஒளிந்தான். அவனைக் கட்டியணைத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். பல ஆண்டுகள் அவள் மனதிற்குள் பதியம் போடப் பட்ட முத்தம் அது. காலம் கடந்து இன்று கரையேறி இருக்கிறது. ஒரு பெண் தான் விரும்பிய முத்தத்தைக் கொடுப்பதற்குக் கூட இவ்வளவு காலம் காத்துக் கிடக்க வேண்டி இருக்கிறது! முத்தம் என்பது அன்பின் உச்சம். எல்லோராலும் எல்லோருக்கும் கொடுக்க முடியாது. அது காசுக்காகக் கொடுத்தால் அது விபச்சாரம். சினிமா வந்து முத்தத்தைச் சீரழித்து விட்டது.
உனக்குத் தெரியுமா? உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா அத நான் வெளியில சொன்னா.. ரொம்பப் பேருக்கு என்னைப் பிடிக்காமப் போயிரும். அத என்னால சொல்லவே முடியல…! அன்பை சொல்லிப்புரிய வைக்க வேண்டாம் ஆனால் அதை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அன்பு அர்த்தமற்றதாகி விடும். உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல…? ஒருமுறை நான் கீழே விழுந்த போது நீ தூக்கிவிட்ட… அதப் பார்த்த பலரும் தன் மனசில இருந்து இறக்கவே இல்ல… ஏன்னா தொட்டு நடிக்கிற நடிகை, கரகாட்டக்காரி இவர்களையெல்லாம் எல்லோரும் தொடலாம் என்று துணிகிற ஒவ்வொருத்தனையும் நறுக்கணும்….
பாசம் இல்லாமல் பெத்த தகப்பன் கூட பெண் குழந்தையைத் தொடக்கூடாது. தொடுவதும் பெண்ணிடம் இருந்து வந்தால் அது அன்பின் அடையாளம் ஆணிடமிருந்து வந்தால் ஆசையின் அதிகாரத்தின் திமிராகும். யாராவது தகுதியற்றவர்கள் தேவையில்லாமல் என்னைத் தொடத்துணிந்தால் நான் நெருப்பாய் நிற்பேன். அந்த நேரத்தில் பல அயோக்கியர்கள் அவன் மட்டும் தொட்டுத் தூக்கினால் உனக்கு நல்லா இருக்குமோ! என்று அடிக்கடி உன்னை ஞாபகப் படுத்துவார்கள் தகப்பன் யாரென்று தெரியாத தாய்க்குப் பிறந்தவர்கள்.
நீ சொன்னாய் அல்லவா…! நம்ம குழு கல்யாணம் முடியாமல் இருந்து ஊருக்கு நல்லது செய்வோம்னு சொன்னது எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதனால கல்யாணம் வேண்டாம்னு நான் சொன்னவுடனே! என் அப்பன் கேட்டான் நீ அவனை மனசில நினைச்சிருக்கியான்னு? அசிங்கமா கேட்டான். எனக்கே அவன் அப்பனா..? இல்லை அரக்கனா? என்று எண்ணத் தோன்றியது. இவங்களுக்கு இத்தன வயசுக்குப் பிறகும் அடக்க முடியலனா! தன் பொண்ணையும் அப்படியா நினைக்கிறது? ஆனா… என் மாமன் மகன் என் புருசன் ரொம்ப நல்லவன் எனக்கு எல்லாச் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறான். என் திருமண நாள் எனக்கு தீபாவளி மாதிரி. மகளின் மனதைப் புரிந்து கொள்ளாத அப்பன் என்ற அரக்கனைக் கொன்ற நாள் அது.
உன் கணவனை நான் பார்க்கவே இல்லையே? உடனே அவள் அவன் நாகரீகம் தெரிந்தவன். நாம பேசும்போது வரமாட்டான். நீ பெண்ணியம் பேசுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்! உன்னையும் ரொம்பப் பிடிக்கும்!
ஆமா நம்ம நண்பர்களையெல்லாம் நீ எப்போதாவது நினைச்சுப் பார்ப்பாயா? நினைச்சுப்பார்ப்பேன். ஆனா அது எனக்குள் ஆறாத வலியாகவே இருக்கிறது. நாம எல்லோரும் சேர்ந்து ஊருக்கு பல நல்லது செய்யனும்னு நினைச்சோம். ஆனால் நம்மைப் பிடிக்காதவர்கள் நம்மை ஒழிக்க இவர்கள் இச்சையைத் தீர்க்க ஒண்ணு சேர்ந்திருக்கிற கூட்டம்னு கொச்சையாப் பேசிட்டாங்க அப்போது நம்ம வயசு அப்படி! அதுனால நமக்கெதுக்கு வம்புனு விரக்தியா ஊரைவிட்டு பலரும் வெளியேறிட்டோம். நாம எல்லோரும் நல்லா இருக்கோம்… ஆனா நம்ம ஊரு நல்லா இல்லை இங்க யாருக்கும் ஊரைப்பற்றி பெரிதாக அக்கறை இல்லை. மனசு வலிக்குதப்பா தானும் செய்ய மாட்டாங்க யாரையும் செய்யவும் விட மாட்டாங்க…
இப்போம் மதத்தால பிரிஞ்சு மண்டைய உடைக்கிறோம். மாமன் மச்சான் உறவை அழிக்கிறோம். கட்சிக்காக கலவரத்தை நடத்துறோம். பிரிஞ்சு கிடக்கிறோம், பொறுப்பில்லாத பெரியவங்க, பொறுமையில்லாத சின்னப் பசங்க, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுறவங்க. அடுத்தவன் சொத்தை அபகரிக்கிறவங்க, பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் சந்திக்க விரும்புறவங்க. போதைப் பொருளில் பொழுதைக் கழிக்கிறவங்க, ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பெருகிடுச்சு. ஆனாலும் உன்னைப் போன்ற போராளிகள் ஒரு சிலபேரு இருக்கிறதுனால ஊரு இன்னும் கொஞ்சம் தன்னை சுத்தப்படுத்திக்கிட்டு இருக்கு….
அந்த நேரம் என் பையன் வந்து அப்பத்தா சாப்பிடக் கூப்பிடுதா… என்றான் அவளிடம் சொல்லிவிட்டு சாப்பிட வந்தேன். வரும்போது எனது உள்ளம் உறுத்தியது. எவ்வளவோ பேசிக் கொண்டு இருந்தோம் அதைப்பற்றி சிந்திக்காமல் நான் சாப்பிடத்தான் பிறந்தேனா?.. சே.. அசிங்கமாக இருக்கு! என்று மீண்டும் அவளிடம் சென்று நீ நெருப்பாய் இரு நாங்கள் துணையாய் இருக்கிறோம். ஊரைச் சுத்தம் செய்ய ஆண் பெண் பேதமின்றி மீண்டும் இணைவோம் முதலில் எல்லோருடைய மனதிலும் எண்ணங்களிலும் செயலிலும் பார்வையிலும் இருக்கின்ற அசிங்கங்கள் சாக்கடைகளைச் சுத்தம் செய்வோம். இந்த ஊரில் வாழ்ந்த நாம… இனி ஊருக்காக வாழ்வோம் காலம் கடந்த ஞானம் கடைசியாவது வந்திருக்கிறதே நாங்கள் துணிந்து கைகுலுக்கிக் கொண்டோம்.
“அடுப்பு எரிப்பதை
நிறுத்தி விட்டு – இந்த
அயோக்கியர்களை எரிக்கப்
புறப்பட்டு வாயேன்…”