21

Dec

2011

நுழைவு வாயில்

வீரத்தாலாட்டு

       வருடம் ஒருமுறை என் வாசலுக்கு வந்து விட்டுப் போகும் வசந்த விழா. இந்தக் கிறிஸ்துமஸ்  விழா. அதே ஆரிராரோ பாட்டு ஆண்டுதோறும் வந்துவிடுகிறது. இந்தப் பாட்டுக்காக பாலன் பிறந்தாரா? அல்லது இந்தப் பாலனுக்காகப் பாட்டு பிறந்ததா? பட்டிமன்றம் நடத்தலாம் போலுள்ளது. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு உறுத்துகிறது அதை உறுதியாகச் சொல்லுகிறேன். சற்று உரக்கவே சொல்லிக்கொள்ளுகிறேன் இவ்வளவு அட்டுழியங்கள் அநியாயங்கள் நடைபெறும் போது இனியும் நம் பாட்டு பாலன் தூங்குவதற்கல்ல தூங்குகின்ற பாலனை எழுப்புவதற்கு

நாளுக்கொரு அக்கிரமும் பொழுதுக்கொரு அசிங்கமும் சமுதாயத்தைக் கெடுப்பதை நிறுத்திவிட அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

கல்லறைக்குப் போகும்வரை சில்லரைதான் வாழ்க்கை என நினைக்கும் சீர்கெட்ட தலைமுறைகளின் சிந்தனையைத் தெளிவாக்க அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

சாதிக்கொரு நீதியை வைத்துக்கொண்டு, வீதியை நாரடிக்கிற வெட்டிக் கூட்டத்தை விரட்டி அடித்திட அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

மதம் என்ற பெயரில் மனித நேயங்களை மண்ணில் புதைத்துவிட்ட மதவாதிகளின் மூர்க்கப்புத்திக்கு முடிவு கட்ட அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

கண்டதே காட்சி! கொண்டதே கோலம்! கும்மாளமே வாழ்க்கை! என்று தறிகெட்டு நெறிபிறழ்ந்து தடம்மாறி, இடம்மாறித் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழிகாட்டும் விடிவெள்ளியாக வந்துதிக்க வேண்டுமென்று அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

சின்னஞ்சிறுசுகளைச் சிரிக்க விடாமல், அழிக்கும் சிசுக் கொலையும், தாய்மையை மறந்து, கருவறையையே கல்லறையாக்கும் போலித்தனமான தாய்மைக்குச் சாவு மணியடிக்க அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

அதிகாரத்தில் ஆட்டம் போட்டு, பதவிக்காக பிறர் பாதம் கழுவும் அக்கிரம அரசியல்வாதிகளை அடையாளம் காட்ட அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

கோயில்களில் ஒலிபெருக்கி அமைத்து, கும்மாளங்களை அர்ச்சனைகளாக்கி அடுத்தவர்களின் உறக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் அக்கிரமக்காரர்களை அடக்கியாள அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

ஆண்டவரின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு பக்கதர்களிடம் பணம் பறித்தும், விபச்சாரத்தில் விலைபோய்க்கொண்டிருக்கும் வெற்றுக் கூட்டத்தை விரட்டியடிக்க அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

புலர்கின்ற பொழுதெல்லாம் போதைக்கே அடிமையாகி தன்மானம் இழந்து தடம் புரண்டு நிற்கும் இந்தத் தவறான கூட்டத்தை தட்டிக்கேட்க அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முத்திரை பதித்துவிட்டு , லஞ்சம் ஊழலில் லாபம் சம்பாதிப்பவர்களுக்கும், அதிகாரத்தில் அசிங்கத்தை அரங்கேற்றும் அரக்கர்களை அப்புறப்்படுத்த அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

அதிகாரம் படைத்தவர்களிடத்தில் அனைத்தையும் கொடுத்து விட்டு அம்போ என்று நிற்கின்ற அபலைகளின் கண்ணீரைத் துடைக்க அந்தப் அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

சட்டங்கள், சம்பிரதாயங்கள் வேடிக்கைப் பேச்சுக்கள், விளையாட்டுப் புத்திகள், மூடப் பழக்கங்கள், மூர்க்கப் புத்திகளை மூலதனமாக வைத்து, பாமரர்களை ஏமாற்றும் பணிவற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்க அந்தப் பாலனை எழுப்பப்பாடுவோம்!

இதுவே என் தாலாட்டு, நம் தாலாட்டு வெற்றிக்காக விண்ணை முட்டும் வீரத்தாலாட்டு.

ARCHIVES