06
Feb
2026

தண்ணீர் பஞ்சம் வந்தது. தானியங்கள் பஞ்சம் வந்தது. தாதுபொருட்கள் பஞ்சம் வந்தது என்று அடுக்கடுக்காக வந்த பஞ்சங்களினால் அல்லல்பட்டாலும் கடின உழைப்பாலும் பஞ்சத்திலிருந்து மீண்டு மீண்டும் மறுவாழ்வு அடைந்தோம். மாற்றுவழி கண்டோம். மறுபடி வராமல் பார்த்துக்கொண்டோம். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பஞ்சம் பற்றாக்குறை, தலைமைக்கு வந்துள்ளது. தலைவர்களுக்கு வந்துள்ளது.
வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சிக்கு மனிதனின் கூட்டு முயற்சி மிக மிக முக்கியம் வழிகாட்டவும், வழிநடத்தவும் காலத்தின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலளிக்கவும், தலைமைத்துவமும், தலைமையும் தேவை. ஆனால் மனிதனுக்கு சுயமும்(நுஊழு) சுயநலமும் வந்தபிறகு பிறரோடு இணைந்து வாழவும் கட்டுக்கோப்பாய் கட்டுக்குள் வாழவும் விரும்பாமல் தனக்கென ஒரு பாதை அமைப்பதாக எண்ணி தான்தோன்றித் தனமாக வாழ ஆரம்பித்ததால் இன்று ஒழுங்கு கெட்டு, ஒழுக்கம் கெட்டு நாம் உருப்படாமல் போவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. சரியான தடம்காட்டத் தலைவன் இல்லாமல் தலைமக்குப் பஞ்சமாகிவிட்டது.

காலம் தனக்குத் தேவையான தலைவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்பார்கள். தொடக்கக் காலத்தில் மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தபிறகு அவனுக்கு ஏற்படுகின்ற இடர்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ள வலுவான தலைவன் தேவைப்பட்டான். ஆகவே வலுவான ஒருவன் தன்னைத்தானே தலைவனாகவும் ஆக்கிக் கொண்டு மற்றவர்களைக் கீழ்படிய வைத்தான். குழுக்கள் அதிகமாக அதிகமாகத் தேவைகள் அதிகமாகும்போது குழுக்களோடு குழுக்கள் மோதித் தன்னைப் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவும். எதிர்ப்பவர்களையும், எதிரிகளையும் வீழ்த்தித் தனக்குத் தேவையானவற்றைத் தேடிக்கொள்ளவும், முரடர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பின்னர் கொஞ்சம் நாகரீகம் தோன்றியபின் சில கட்டமைப்பை உருவாக்கினார்கள். சண்டை, போர் என்று சொன்னால்கூட அதில் சில தர்மங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இங்கு வேகத்தோடு விவேகமும் தேவைப்பட்டது. புஜங்களில் பலம் இருந்தாலும் புத்தியும் தேவைப்பட்டது. சண்டையைவிட சாமர்த்தியம் தேவைப்பட்டது. வெற்றியை இலக்காக வைத்தாலும் எதிரியை வீழ்த்தும் சூழ்ச்சியும் தேவைப்பட்டது.

இதனால் சில காலங்களில் சந்திரகுப்தர்கள் தோன்றினார்கள். இதற்காகச், சாணக்கியர்கள் உருவானார்கள். சந்திரகுப்தர்களே சாணக்கியர்களானார்கள், சாணக்கியர்கள் சிலநேரம் சந்திரகுப்தர்கள் ஆனார்கள். அக்பர் ஆட்சி செய்தாலும் பீர்பாலும் தேவைப்பட்டது. எனவே தலைமை என்பது தனிமனிதனைச் சார்ந்ததல்ல குழுக்களின் பலத்தைச் சேர்த்துக் கொண்டு குழுக்களுக்கு வளத்தைச் சேர்ப்பதே தலைமை எனப்பட்டது.
பணம், பட்டம், பதவி, சுகம் எனத் தேட ஆரம்பித்தபோது தலைமையை எதிர்த்தே தலைவர்கள் தோன்ற ஆரம்பித்தார்கள். தலைமை மன்னராட்சியாகும்போது அதில் சிலர் மனச்சாட்சியை விட்டுவிட்டுத் தனிச்சுகத்திற்காக, மற்றவர்களையும், மற்றவர்கள் உழைப்பையும் சுரண்ட வந்த சுயநலத்தலைவர்களை எதிர்த்துத் தோன்றிய தலைவர்களும் உண்டு. அவற்றில் சிலர் மதத்தலைவர்களாகவும், புரட்சித்தலைவர்களாகவும் தோன்றினார்கள். அப்படி வந்தவர்கள்தான் புத்தன், இயேசு, காந்தி, மண்டேலா, பிடல்காஸ்ட்ரோ, சேகுவாரா என ஒரு பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

திறமையின் அடிப்படையிலும், காலத்தின் தேவையின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வாக்குரிமையின் அடிப்படையில் எடுக்க முனைந்தபோதுதான் தரம்கெட்ட மனிதர்களிடம் தலைமைப் பொறுப்பு சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டது. சமத்துவம் மலரும் சந்தனமாக மணக்கும் என்று நினைத்த அரசியல் சாக்கடையாய் நாற்றமெடுக்க ஆரம்பித்தது.
தலைவர் தோன்றினார்கள், உருவாக்கினார்கள், காலம் அவர்களை அடையாளம் காட்டியது. தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுபோல இவர்களது காலத்தில் மக்கள் அடிமையாகவும், வாழப் பழகிக் கொண்டார்கள். அவர்கள் அடிமை வாழ்வின் சுகத்திலே சொர்க்கத்தைக் கண்டதால் அடிமை வாழ்க்கையைக் பழகிக் கொண்டார்கள். எனவே அடிமைகள் தனக்னெ;று ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டு அதற்கு ஆமாம் சாமி போடுகின்ற தலைவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். இதனால் கூட்டம் அதிகமாக இருப்பவர்களில் ஒருவன் தலைவாகிறானே தவிர கொள்கை உள்ளவன் தலைவனாவது தடுக்கப்படுகிறது.

இதனால் கொள்கையுள்ளவன், தலைமைப்பண்பு உள்ளவன் கூட்டத்தோடு மோதி தன்னை இழப்பதைவிட தனி வழியே தன் பயணத்தை அமைத்துக்கொள்கிறான். இதனால் கொள்கை இல்லாத கூமுட்டைகள் தனக்குரிய தலைவனை ஒரு முட்டாளையே முன்மொழிகிறார்கள். இதனால் அவர்கள் கூட்டம் அதிகமாய் கூடுகின்ற சந்தைப் பகுதியில் குப்பையிலிருந்து ஒன்றைப் பொறுக்கி வருவதுபோல மதத்தலைவர்களில் ஒருவனை! சாதித்தலைவர்களில் ஒருவனை! இரசிகர்கள் கூட்டம் ஒரு நடிகனைத் தனக்குரிய தலைவர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாட்டை ஆள நடிகனை அழைக்கின்ற கேவலமான நிலைக்கு வந்துவிட்டோம். துறவிகள் மடங்களில் சாதித்தலைவர்களுக்குத் தலைமைப்பீடம் கொடுப்பது எனத்தடம் புரண்டுவிட்டோம்.
கற்பனைச் சந்தையில் கதாநாயகனாக இருப்பவனைக் கடவுளாகப் பார்க்கின்ற கருமத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்தத் தலைமுறை எந்த சுய அறிவும் இல்லாமல் எந்தச் சொந்தத் திறமையும் இல்லாமல் எவனோ ஒருவன் சொல்லிக் கொடுத்ததை நடித்துக் கட்அவுட்டில் உயர்ந்திருப்பான்! கடவுளாகக் காட்சித் தருவான். மக்களைக் காக்கும் மகானாகத் தெரிவான். இந்தக் கூமுட்டைகளெல்லாம் அவனைக் கும்பிடும்! கொடிபிடிக்கும்! அவனும் உயிர் கொடுப்னே; என உரக்கச் சத்தமிடுவான். கிறுக்கனைப்போல் உளறுவான். கோமாளியைப் போல் செயல்படுவான். இத்தனைக்கும் ரசிகன் நிழலில் மட்டுமே அவன் தலைவனைப் பார்த்திருப்பான். இந்தத் தரிகெட்ட தலைமுறை எங்கே நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கப் போகிறது. எங்கே போகிறது இந்தப் பயணம்?
கொஞ்சம் படித்தவர்கள் வாழ்கின்ற, இறையடியார்கள் என்று சொல்லுகின்ற கூட்டமாக இருந்தாலும் சரி இவர்கள் வசதிக்காகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை, தாங்களே உருவாக்குவார்கள். தனக்குச் சாதகமான, ஜால்ரா தட்டுகிற தலைவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனக்குச் சாதகமாக இல்லையென்றால் மிரட்டுகிறார்கள், மடியவில்லை என்றால் அவன் கதையாய் முடிந்துவிடுகிறார்கள்.

மதத்தலைவர்களா? சாதித்தலைவர்களா? திரைப்பட நடிகர்களா? இன்று தலைவர்களாய் சுமக்கின்ற இளவல்களே உங்கள் தலைவர்களை எங்கே தேடுகீறிர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்! உன்னைப் பற்றி ஒரு மயிரும் தெரியாத ஒருவனுக்கா நீ உயிரைக் கொடுக்கப் போகிறாய்? எப்போதுமே குளிர்சாதன வாகனத்தில் சுற்றுபவனுக்கா நீ கத்திரி வெயிலில் கட்அவுட் வைக்கிறாய்? சினிமா மோகத்தால் சீரழிந்த என் சமூகம் எப்போது சீராகப் போகிறது? நடிக்க மட்டுமே தெரிந்த ஒருவன் என் தங்கமே! தமிழே! உயிரே என்பான் உனக்காக ஒரு சல்லிக் காசைக் கூட செலவு செய்யமாட்டான் இவனுக்கா நீ சிம்மாசனம் அமைக்கப் போகிறாய்?
போதும் போதும் அவனுக்குப் போஸ்டர் ஒட்டியது உன் புத்தியைத் தீட்டு! நீ கொடுத்த காசில் தனக்குரிய கதாநாயகியோடு கட்டி உருளுகிறவனுக்காய் நீ பரிந்து பேசி உடன் இருப்பவர்களோடு கட்டி உருண்டு கொண்டிருக்கிறாய்? கருப்புப் பணத்திலும் கண்டபோதையிலும் இருட்டினைக் கழிப்பவன் வெளிச்சத்தில் நின்று உனக்காக அரசியலுக்கு வருகிறேன் என்பான்! இவனுக்கா நீ விசுவாசி! கொஞ்சம் யோசி! அவனை நடிகனாகப்பார்! விடியலாய் பார்க்காதே! உன்னால் உயர்ந்தவன் அவன் அதனால் இறங்க மறுக்கிறான். எவ்வளவுகாலம் அவனைச் சுமந்து அடிமையாய் இருக்கப் போகிறாய்? நீயே தலைவன் இல்லையென்றால் உருவாக்கிக் கொள். இல்லையென்றால் கொள்கை உள்ள கூட்டத்தோடு வாழ்! சமுதாய அக்கறையோடு ஏழைகளுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவும் நல்ல உள்ளங்களைக் கண்டுபிடி தலைவனாய் வாழ்வது இலட்சியமல்ல! நான்குபேர் நம்மைக் கண்டு தலை வணங்கும் நிலைக்கு வாழ வேண்டும். நம் கரங்கள் நாலுபேருக்கு உதவி செய்தால் நாலுபேர் கரங்கள் நம்மைக் கண்டு வணங்கி மகிழும்.
“வாக்காளர்கள்…
பிச்சைக்காரர்களானால்
சுயநல வாதிகள்
தலைவர்களாகுவார்கள்…”