02
Oct
2020
“இந்தத் தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும்
அணையா விளக்கே!”
கானம் பாடிய தேவப்புறா வானம் நோக்கி விரைந்தது. காரிருள் ஒன்று பூமியைக் கவ்வியது. தாலாட்டுப் பாடி, காதல் இசைத்து, சோகம் மறந்து, குதுகலித்து ஆடி, குழந்தைகளுடன் ஓடி களிப்புற்று இருக்க கானம் தந்த வானம்பாடி ஒட்டுமொத்த இதயங்களையும் ஒப்பாரி பாடவிட்டு ஓடிவிட்டது. கலைமகள் அன்று கானம் கேட்காமல் காதை மூடிக்கொண்டாள். வாத்தியங்கள் வசைபாடியது. காற்றுகள் தூற்றிச் சென்றது. காரணம் எங்கள் இரத்த அணுக்களில் மொத்தமாய் படிந்திருந்த கலையின் தாக்கத்தை காலன் மொத்தமாய் கொண்டு போனது. ஆம் இன்னிசை இதய தேவன் S.P.B மறைந்தார்.
S.P.B என்றவுடன், பாடல், ராகம், இசை, விருது மேடை, கச்சேரி, என்றெல்லாம் ஞாபகம் வரும் ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு மேடையிலும் அவர் உதிர்த்த வார்த்தைகளை மொத்தமாகச் சேகரித்தால் அது இன்னும் ஒரு வேத நூலாகவே இருக்கும் அவ்வளவு விசயங்கள் அவற்றில் கொட்டிக்கிடக்கிறது.
அவர் இறுதிமேடை என்றுச் சொல்லப்பட்டு ஒளிபரப்பப்பட்ட மேடை நிகழ்ச்சியில் அவர் பேசியது கொரோனா என்பது சாபம் அல்லது. அது நாம் இயற்கையை வஞ்சித்ததால் அது நம்மை எழுந்து வந்து எதிர்த்து நின்று அழிக்கிறது என்றார். நான் ஒவ்வொரு மேடையிலும் இதைக் குறித்து பேசுகிறேன் என்பார். நாம் அண்டை நாட்டின் எல்கையை அத்துமீறி ஆக்கிரமிக்கிறபோது அந்நாடு அதன் படைகளைக் கொண்டு, எதிர்க்கும், அடக்கும். அதுபோல நாமும் எல்லையைக் கடந்து இயற்கையை அழிக்கும்போது அதுவும் எழுந்து வந்து நம்மை அழிக்கிறது. இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து உலகையே ஊனமாக்கி நாட்டை நரகமாக்கி வாழ்வதுதான் நாகரீகமா?
மரங்களை முழுவதும் அழித்துவிட்டு காற்றுக்குக் கையேந்துகிறோம், மலைகளை முழுவதும் அழித்துவிட்டு மண்ணரிப்பில் விழுந்து மடிகிறோம், வயல்களை, வீடாக்கிவிட்டு வயிற்றுப் பசிக்குத் தடுமாறுகிறோம். காற்றை நாசமாக்கிவிட்டு அசுத்தச் சேற்றைப் பூசிக் கொள்கிறோம். இதுவரை மயானத்தை நோக்கிப் பயணிப்போம். இப்போது மயானத்தில்தான் படுத்திருக்கிறோம்!
S.P.B இன்னொன்றும் சொன்னார். நாம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பவர்கள் ஆகவே சாதி, மதம், இனம் என்று பிரித்து தன்னைத் தானே தனிமையாக்கிக் கொள்ளாமல் இறக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம். எது நிரந்தரம்? என்று நமக்குத் தெரியும் தானே. பிறகு எதற்கு இவ்வளவு பதுக்கலும் ஒதுக்கலும்? இன்றைக்கு எவ்வளவு தேவையோ அதனை வைத்துக் கொள்வோம். நாளைக்கு நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.நாளைப் பசியை நாம் தீர்த்துக் கொள்ள இன்று எத்தனை பேரைப் பட்டினி போடப் போகிறோம்?
S.P.B ஒரு கூட்டத்தில் பேசுவார். எனக்குப் போர்த்துகிற பொன்னாடை எல்லாம் நானும் எனது வாகன ஒட்டுநரும் எடுத்துக் கொண்டு பயணிப்போம். அப்போது சாலை ஓரமாகத் தூங்கிக் கொண்டு இருப்பவர்கள் மீது போர்த்திவிட்டு வருவோம் என்றார். இதனைக் கேட்டபோது நமக்கே புல்லரித்தது. அவர் எவ்வளவோ உதவிகள் செய்தவர் அதனையெல்லாம் அவர் சொல்லவேயில்லை ஏன் இதனைச் சொல்லுகிறார் என்றால் இப்படிச் சின்னச் சின்ன விசயங்களை அடுத்தவர்களுக்குச் செய்ய அறிவுறுத்துகிறார். நீங்களும் குருடர்களுக்குக் கண்ணாயிருங்கள். செவிடர்களுக்குப் பண்ணாயிருங்கள். இல்லாதவர்களுக்கு எல்லாமுமாய் இருங்கள்.
உலகத்தில் மனிதர் வாழும்பகுதி விரித்து கொண்டே இருக்கிறது. இதயம் மட்டும் சுருங்கிக் கொண்டே போகிறது. சுயநலம் தலைவிரித்தாடுகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க எனச் சிந்தித்த நாம் இப்போது மானிடம் எல்லோரிடமும் எப்படிப் பறிக்க! எனச் சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். வீட்டைப் பெருக்கிக் குழந்தைகளைச் சுருக்கிக் கொண்டார்கள். உணவைக் குறைத்து மாத்திரைகளைப் பெருக்கிக் கொண்டார்கள். கோயில்களை அமைத்து கூட்டமாக வாழ்ந்தவர்கள். கோவில்களை உடைத்து தனித்தனியாய்த் திரிகிறார்கள். நாகரீகமாய் ஆடை அணிந்து மிருகமாய் அலைகிறார்கள். வசதிகளைப் பெருக்கி நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் நிம்மதி வேண்டுமா? இறைவனின் சந்நிதியைத் தேடுவதை விட எதிர்வரும் சந்ததியைத் தேடுவோம். இருப்பதைக் கொடுப்போம். இதயம் மகிழ்வோம். கொடுப்பதற்குப் பொருட்கள் தேவையில்லை மனசு மட்டுமே போதுமானது. மற்ற அனைத்தும் தன்னால் வரும்.
“இருகரம் நீட்டி இறைவனைத்
தொழுவதை விட
ஒரு கரம் நீட்டி
உதவி செய்வோம்”
-அன்னை திரெசாள்