22

Feb

2025

பாலங்களைப் புதுப்பியுங்கள்…

பாலங்கள் என்றவுடன் பிரிக்கும் சுவர்களை எழுப்பாதீர்கள். இணைக்கும் பாலங்களை எழுப்புவீர்கள் என்பார்கள். அதாவது சுவரானது பிரிக்கும் பாலமானது இணைக்கும் என்ற சூத்திரத்தைச் சொல்வார்கள். ஆகவே ஒருமுறை நீங்கள் போய் பாலங்களைப் பார்த்துவிட்டு வந்து இந்தப் பகிர்வை வாசியுங்கள்.

பாலம் அருகில் சென்று பாருங்கள். பாலமானது இரு கரையையும் தொட்டு நிற்கும். இரு கரையையும் தொட்டு நிற்பவர்கள் இங்கு மிகக் குறைவு. பொது முடிவு எடுப்பவர்கள் ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் இரு பக்கங்களையும் தொட்டுப் பார்த்து இருவருக்கும் சமமாக முடிவெடுப்பது தான் பாலம். இரு ஜாதியாய் இருக்கலாம், இரு மதமாய் இருக்கலாம், இரு கட்சியாக இருக்கலாம் இரு பக்கமும் கரங்கள் நீட்டி இரண்டையும் இணைக்கும் பாலமாக இருங்கள ஓர வஞ்சனை வேண்டாம்.

பாலங்கள் கட்டப்பட்டதன் அவசியம் மனிதனின் பாதையில் நீர்நிலைகள் குறுக்கிடுவது அல்லது நீர் நிலைகளின் நடுவே மனிதன் குறுக்கிடுவது. ஆயினும் நீர் நிலைகள் பாதிக்கப்படாமல் மனிதன் தன் பயணத்தைத் தொடரவும், மனிதன் தன் பயணத்தில் தடங்கல் ஏற்படாமல் ஆறு பயணிக்கவும் ஆற்றின் மேலே பாலம் கட்டுவார்கள். பாலம் கட்டிப் பயணத்தைத் தொடர்வார்கள். இதனால் நீர் நிலைகளும் நின்று போகாது. மானிடப் பயணத்திற்கும் தடை ஏற்படாது. இவை இரண்டுமே மனித முன்னேற்றத்தை அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் அட்சய பாத்திரம். இருவர் பயணமும் தடைபடாமல் ஒருவர் ஒருவருக்குத் தடையாக இல்லாமல் பயணத்தைத் தொடர பாதுகாப்பாய் நிற்பது பாலம் ஆகும்.

பாலம் நகரத்தின் அடையாளம் அல்ல. அது கிராமத்தின் நாகரீகம் அதுவும் பல நேரங்களில் கிராமங்களின் அடையாளமே பாலங்கள் தான். மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் அதில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். சில நேரங்களில் கிராமத்திற்கு அதுவே காதலர்கள் அமர்ந்து பேசும் பூங்காவாக இருக்கும். சில நேரங்கள் பயணத்தில் முன்னே செல்பவர்கள் அடுத்து வருபவர்களுக்குக் காத்திருக்கும் இடமாகவும் அது இருக்கும். கிராமத்திற்குப் பல்வேறு நாகரீகத்தின் வெளிப்பாடாகப் பாலம் அமையும். இது பயணங்களின் பாதுகாப்பாக அமையும். சற்று இளைப்பாறும் இடமாகவும் இருக்கும்.

கிராமத்தில் நீர் நிலைகளுக்குக் கட்டப்பட்ட பாலங்களின் மேலே பலம் பொருந்திய கற்களால் கட்டப்பட்டிருக்கும். ஆனால் கீழே நீர்நிலைகள் செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கும். இங்கு சிலபேருடைய வெளி வாழ்க்கை பலம் வாய்ந்ததாகத் தெரியும். உள்ளே எட்டிப் பார்த்தால் ஓட்டையாகத்தான் தெரியும் என்பதைப் பாலம் படம் பிடித்துப் பாடம் சொல்கிறது.

நகரத்தில் உள்ள மேம்பாலங்கள் தரையில் இருந்து மேலே எழும்பிச் செல்லும். உயரமான இடம் சென்று மீண்டும் அதே போல் தரை இறங்கி வரும். அதே போல்தான் வாழ்க்கை என்பது! வாய்ப்புக் கிடைக்கும் போது அது நம்மை மேலே எடுத்துச் செல்லும். மீண்டும் அதே நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். மேலே செல்லும் போது ஆடிவிடவும் கூடாது. கீழே இறங்கும் போது வாடி விடவும் கூடாது. என்ற வாழ்க்கைத் தத்துவத்தை பாலம் எவ்வளவு பக்குவமாய்ச் சொல்கிறது என்று பாருங்கள்.

பயணத்தின் போது ரயில் தண்டவாளங்கள் குறிக்கிட்டால்? அங்கு பாலம் இல்லை என்றால் நம் பயணம் தடுக்கப்படும். அவர்கள் சென்ற பிறகே நமக்கு வழி கிடைக்கும் அதுவரை காத்து இருக்க வேண்டும். அதேபோல்தான் இந்தச் சமுதாயத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களோடு நம்மால் போட்டி போட முடியவில்லை. அவர்கள் நம்மை நிறுத்தி வைத்துச் சிரித்து விட்டுச் செல்வார்கள். ஆனால் பாலம் இருந்தால் அவர்கள் எப்போது வந்தாலும் நமக்கு கவலை இல்லை. நாம் அவர்களுக்கு மேலே கூட செல்லலாம் எனவே பாலம் என்பது நம்பிக்கையை நமக்கு உறுதிப்படுத்துவது. காலம் கைகொடுக்குமானால் எந்தக் கடலையும் தாண்டி விடலாம்!

இப்போது பாலங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படுகிறது. காரணம் வாகனங்கள் அதிகமாக, பயணங்கள் அவசியமாக, பாலங்கள் தன்னை அகலப்படுத்துகிறது. நவீனப்படுத்துகிறது. அதுபோல நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனப் பாலம் பாடம் தருகிறது. பழமையே மாறாமல் இன்னும் மண்பானை, குச்சிவீடு, கடுங்காப்பி, கருவாடு சுடுதல் என்று இருந்தால் காலம் நம்மைக் கழித்து விடும் என்று கவனமாகச் சொல்கிறது.

பாலம் பழுதடைந்தால் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டியது வரும். அது போல் தான் உறவு சரியில்லை என்றால் அதாவது பிறரோடு தொடர்பில் சரியில்லை என்றால் நாம் அடைய வேண்டிய இடத்தைச் சிரமப்பட்டு அடைய வேண்டியது வரும். ஆகவே உறவு செம்மையாகவும் சிறப்பாகவும் இருந்தாலும் காலத்திற்கு தகுந்தாற் போல் நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் கண்ணுக்குத் தெரியாத பாலம் ஒன்று கடலில் இருக்கிறது அதுதான் ராமர் பாலம் அதற்கு அத்தனை விலங்குகளும் உதவியதாக வரலாறு கூறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியாமலே கடலில் அது இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பாலங்கள் பல வகைப்படும் ஓடு பாலம், தொங்கு பாலம், இரும்புப் பாலம், கயிற்று பாலம் என்று இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பாலம் தன்னை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் இணைப்பது ஒன்றுதான் அதன் வேலையாக இருக்கும். அதேபோல் தான் நீங்கள் யாராயிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் இணைத்துப் பயணிப்பது தான் உங்களுக்கு இறுதிவரை நோக்கமாக இருக்க வேண்டும். இரும்புப் பாலம் பாதுகாப்பானது, கயிற்றுப் பாலம் பயமானது. அதேபோல் நம்மோடு பயணிப்பவர்களுக்கு நீங்கள் தந்தையாக, நண்பனாக, கணவனாக, ஆசனாக யாராக இருந்தாலும் நீங்கள் அவர்களுக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர பயமாக இருந்து விடக்கூடாது.

இரும்புப் பாலங்கள் பலமானது. அதனை எதுவும் அழிக்க முடியாது. ஆனால் இரும்பை இரும்பின் துருவே அழித்துவிடும். அதேபோலதான் இன்றைய வாழ்க்கை. நம்பிக்கைதான் நம்மை நகர்த்திக் கொண்டு போகும். அதே வேளையில் அந்த நம்பிக்கைதான் நம்மை நரபலி கொடுக்கவும் செய்யும். நம் சாதியின் மீது, மதத்தின் மீது, பணத்தின் மீது, பதவியின் மீது, நட்பின் மீது, உறவின் மீது நாம் வைக்கின்ற ஒரு வித நம்பிக்கைதான் ஒரு காலக்கட்டத்தில் நம்மை அழித்து விடும். நம்பிக்கை மதத்தின் மீது வரும்போது மூடநம்பிக்கையாகிறது. மனிதர்கள் மீதுபடும்போது அவநம்பிக்கையாகிறது. அதுவே நம்மை அழித்து விடுகிறது.

இன்று நாடு நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது, பூமி போதையில் தள்ளாடுகிறது, காரணம் தெரியாமலேயே மனிதர்கள் ஒருவரை ஒருவர் காரித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். கல்லை சிலை என்போம். அந்தக் கல்லை உடைத்ததற்குப் பிறர் பல்லை உடைப்போம். காரணம் மதங்களைக் காப்பாற்ற மனிதர்களைக் கொல்லுகிறோம். கோயில்களைக் கட்டுவதற்கு, கூட இருப்பவர்களுக்குக் குழி வெட்டுகிறோம். நம் கடவுளை வழிபட இங்கு பிற மதத்தவர்களுக்கு கல்லறைகளை கட்டுகிறோம்.

ஆகவே உங்களுக்குச் சொல்லும் ஒரே செய்தி பாலங்களைக் கட்டி எழுப்புங்கள். அனைவரையும் இணைக்கின்ற பாலங்களாக இருங்கள். நாட்டையோ ஊரையோ தனிமைப்படுத்த வேண்டுமென்றால் ஊரை இணைக்கின்ற பாலத்தை உடைக்க வேண்டும். இதனைத் தீவிரவாதிகள் செய்து மனிதர்களை திண்டாட வைப்பார்கள். ஆகவே நீங்கள் யார் தகர்த்தாலும், தகர்ந்து போகாமலும் எச்சூழலிலும் தன்னிலை மாறாமலும் பிறரை இணைக்கின்ற பாலங்களாகப் பிறப்பெடுத்து வாருங்கள். நீங்கள் இல்லையென்றால் இங்கு பலர் துன்பப்பட்டு திண்டாடுவார்கள் என்பதனை உணர வையுங்கள். குடும்பங்கள் பிரிந்து விவாகரத்தில் வாழ்வதைத் தடுத்து நிறுத்துங்கள். பணம் பதவியால் உடன்பிறப்புகள் உயிரிழந்து கிடப்பதை உயிர்ப்பியுங்கள்.

வாருங்கள் பாலமாய் வாழ்வின் காலமாய்…..

“காலமாகும் வர
பாலமாக இருங்கள்!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES