31

May

2024

பாலைவனம்…

ஒருமுறை என நெருங்கிய தோழர் என்னிடம் வந்து நீங்கள் பலதைப்பற்றி எழுதுகிறீர்களே! ஏன் இந்தப் பணத்தைப் பற்றி எழுதுங்களேன்! என்றார். நான் ஏன்? என்றேன். எல்லோரும் இங்கே பணம், பணம் என்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு இறந்தபின் எதுவுமே கூட வராதபோது எதற்கு இவ்வளவு ஆசை? என்று ஆதங்கப்பட்டார்! எரிச்சல்பட்டார்! கோபப்பட்டார் நான் கூறினேன் நீங்க எதற்கு அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? என்றேன். திகைத்துப் போனார். பலர் பல விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் தப்பில்லை. ஆனால் அது தனக்கென சுயநலத்தோடு இருப்பதுதான் தவறு.

பணம் எல்லோருக்கும் தேவைதான். சிலருக்கு அதன் மூலம் பிறருக்கு உதவிசெய்யவும், உயர்த்திவிடவும், சிலருக்கு தன் தேவையை நிவர்த்தி செய்யவும், சிலருக்கு தனது ஆசையை நிறைவேற்றவும், தனது ஆடம்பரத்தைப் பறைசாற்றவும், தனது அற்ப ஆசையை அனுபவிக்கவும், அடுத்தவனைக் கெடுக்கவும், அடுத்தவனை அழிக்கவும், பணத்தை பயன்படுத்துவார்கள். சிலர் குறுக்கு வழியில் தான் நினைத்ததைச் சாதிப்பதற்கும் திமிர்த்தனத்தால் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவும். பணத்தினால் பிறரை அடிமைப்படுத்தவும் இந்தப் பணத்தைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. அதுதான் பாவம்!

பணம் புண்ணியத்திற்குப் பாதை காட்டும் பாவத்திற்குக் கையைப் பிடித்து இழுக்கும். இங்கு பலர் பணத்தால் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பணத்தைத் தேடுவதிலும், தேடுவதைப் பதுக்குவதிலும், பதுக்குவதைச் செலவழிப்பதிலும், பாவங்களையும், தவறுகளையும் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். பணத்தைக் குறுக்கு வழியில் சம்பாதித்தவர்கள் மரணத்தைப் பரிதாபத்திற்குரிய வகையில் தழுவியிருக்கிறார்கள். பதவியையும், அதிகாரத்தையும், பணத்தால் அறுவடை செய்தவர்கள் சிறைக்குள் சிலகாலம் உலவியிருக்கிறார்கள். பணத்தைப் பிறரிடமிருந்து பறித்தவர்கள் தன் குடும்பத்தைப் பரிதாபமாகப் பறிகொடுத்திருக்கிறார்கள். பணத்தோடு வாழ்ந்த பணக்காரர்கள் பலர் பிறருக்காகக் கொடுத்து உதவியவர்கள் இறந்த பின்னும் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனக்கென வாழ்ந்தவர்கள் வியாதியில் விழுந்து மருத்துவமனையில் இருந்து பரிதாபமாக மரித்துப் புதைத்த இடம் கூடத் தெரியாமல் போய்விட்டார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் உண்டு அவருக்குக் கொடுத்து மகிழ்வதில் கொள்ளை இன்பம். தான் வாங்குகிற சம்பளத்தில் ஒரு பகுதியை மாணவர்களுக்கு கொடுத்து மகிழ்வார். மாணவர்கள் வெற்றி அடையும் போதும் மாணவர்கள் புதிதாக ஒரு முயற்சியைத் தொடங்கும் போதும் முதலில் பணம் கொடுத்துப் பாராட்டுவது அவரது கரங்களாகத் தான் இருக்கும். கொடுக்கும்போது அவர்களது முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்பு எரிவதுபோல் முகம் பிரகாசிக்கும் அதைப்பற்றி எவர் தடுத்தாலும், விமர்சித்தாலும் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாக அள்ளிக் கொடுக்கும் அற்புதமான மனிதர்.

இன்னொரு நண்பரும் உண்டு கணவன் மனைவி இருவருமே ஊதியம் பெறுபவர்கள்தான். அதையும் தாண்டி அசையாச் சொத்துக்கள் மூலமும் வருமானம் உண்டு. ஆனாலும் பழமை மாறாதவர் தாங்கள் சம்பாதிப்பதால் வசதியால் உயர்கிறோம் என்ற எந்த அடையாளமும் இல்லாமல் வாழ்பவர்கள் தனக்கெனவும், தன் குடும்பத்திற்கு எனவும் எதையும் சேகரிக்காதவர். நட்புக்காகவும், தேவையில் இருப்போர்க்காகவும் எதையும் எப்போதும் செய்கிறவர். கணக்குத்தான் வாழ்க்கை ஆனால் கணக்குப் பார்க்காமல் கொடுப்பது அவரது வாடிக்கை.

கடவுள் பக்தியுள்ள நண்பர் ஒருவர் உண்டு. இரக்கத்தை இதயமாக்கி இறைவன் அவரிடம் கொடுத்திருக்கிறான். பத்தில் ஒரு பகுதி கொடு என்று கடவுள் சொன்னானோ என்னவோ? பத்தாதவர்களுக்கெல்லாம் கொடுப்பார். தமக்குப் பத்தாவிட்டாலும் கொடுப்பவர், சென்னையைப் போல் அவரது வாழ்க்கை. வெள்ளம்போல் செல்வம் வந்தாலும் கடலுக்குக் கொடுத்துவிட்டு சில நேரங்களில் நீருக்குத் தவிப்பதுபோல இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு தனது தேவையை மறைத்துக் கொள்வார் இல்லை இல்லை மறந்துவிடுவார் மகத்தான மனிதர்.

இப்படி எத்தனையோ பேர் என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அத்தனைபேரையும் எழுத இந்தக் கட்டுரை போதாது அவர்களை அடுத்த கட்டுரைக்கு விட்டுவைக்கிறேன். எங்கள் பள்ளியில் படிக்கின்ற எத்தனையோ மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது பெற்றோர்களுக்கும் உதவுகிற பெரிய மணம் படைத்தவர்கள். என்னைச் சுற்றி வாழ்கிறவர்கள் எல்லோரும் பெரிய பணக்காரர்கள் அல்ல. ஆனால் பெருந்தன்மையான மனக்காரர்கள். பொதுக்காரியமாய் இருந்தாலும் சரி பிறர் தேவைக்காய் இருந்தாலும் சரி வற்புறுத்தலின்றி, தற்புகழுக்கின்றி அள்ளிக் கொடுப்பதில் இலக்கியம் காட்டாத இன்றைய வள்ளல்களாகத்தான் வாழ்கிறார்கள். இவர்களோடு வாழ்வதனால் எனக்கும் கொஞ்சம் இளகிய மனமும் உண்டு இரக்கக் குணமும் உண்டு.

ஆனால் வெளி உலகம் எனக்கு வெறுப்பைத் தருகிறது. எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்கள் கொடுக்க மனமில்லாத கொடூரர்கள். தன் தேவையை மட்டுமே பேசுகின்ற தறுதலைகள் தன்னுடைய தவறுகளுக்குச் செலவழிக்கிற தற்குறிகள் இவர்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன? என்று எண்ணுமளவிற்கு மனதிற்குள் நாற்றமடிக்கின்ற மனிதக் கழிவுகள்.

கோவிலுக்குச் சென்று பாருங்கள் அழுக்கு உடையில் தன் தேவைக்காய் கையேந்துகிற பிச்சைக்காரர்களைவிட ஆடம்பர உடையில் கோவிலில் இருந்து கொண்டு ஆண்டவனிடம் அதைக் கொடு இதைக் கொடு என்ற நச்சரிக்கிற அடங்காப் பசியுள்ளவர்கள். பிராத்தனை என்ற பெயரில் பிதற்றுவார்கள்.

தன்னுடைய உழைப்புக்குக் கிடைக்கின்ற ஊதியத்தில் உயராமல் வசதியைப் பெருக்க வருகின்றவர்களிடம் எல்லாம் கையேந்திப் பிச்சையெடுக்கின்ற இலஞ்சம் பெறுகிறவர்களிடம் தஞ்சம் புகுகின்ற பணம் ஏழைகளின் வயிற்றெறிச்சலில் வருகின்ற அந்தப் பணம் ஏழைகளின் வயிற்றுப் பசியை எப்படிப் போக்கும்? இவர்கள் தான் அடங்கா பசியுள்ள அயோக்கியர்கள்!

சிலர் இருக்கிறார்கள் கொடுக்க மனம் இருக்காது இருந்தாலும் தன்னைக் கொடைவள்ளல்களாகக் காட்டிக் கொள்வார்கள் ஒரு பிச்சைக்காரர்களைப் பார்த்தால் கூட கொடுக்க மனம் இருக்காது! ஆனால் அவர்களுடைய கொடூர குணம் கையும், காலும் நல்லாத்தானே இருக்கிறது! பிறகு ஏன் பிச்சை எடுக்கிற? என்று சுடு சொல்லால் சுடுவார்கள். இவர்கள் என்னமோ கை, கால் இல்லாதவர்களைத் தேடித் தேடி கொடுத்தவர்கள் போல்! இவர்களையெல்லாம் எரியும் நெருப்பில் எரிய விட வேண்டும் கொடுக்க மனமில்லாவிட்டாலும் பிறர் மனம் புண்படும்படி பேசாமல் பொத்திக் கொண்டு இருப்பது அவர்களுக்கு நல்லது.

சிலர் உண்டு அனாதை இல்லம், முதியோர் இல்லம் வேறு ஒரு பொது நிகழ்வு என்று எதற்கும் ஐந்து பைசா கூடக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் கதையளப்பார்கள் நான் எவ்வளவு செய்கிறேன் தெரியுமா? தெரியாது. என்ன செய்யுற? யாருக்குமே தெரியாமச் செய்யிறயா? அப்போ இருட்டுக்குள்ள செய்யுறயா? இருட்டுக்குள் ஒருவன் செய்யுறது என்னவென்று இதை வாசிப்பவர்களுக்குப் புரியும்! வாய்ப்புக் கிடைக்கும் போது உதவி செய்யுங்கள். வாய்ச்சவுடால் வேண்டாம் கொடுக்க மனமில்லாத குரங்குகளே! பிறர் கொடுப்பதற்குத் தடையாய் இருப்பதைவிட கொஞ்சம் விசம் குடித்து விடுங்களேன். ஏனென்றால் நீங்கள் கக்குவதும் விசமாகத்தான் இருக்கிறது விசம் விசத்தை முறிக்கட்டும்.

மண்ணும் மழைத்துளியும் தான் இந்தப் பூமியை வளப்படுத்தும். மழைத்துளி மண்ணிலோ, நீர்நிலையிலோ விழுந்தால் பலன் கொடுக்கும். அது சாக்கடையில் விழுந்தால் யாருக்கு பயன்? வயலில் இருக்கின்ற மண்தானே வளம் கொடுக்கும். பாலைவன மணலால் யாருக்கு பலன் கிடைக்கும்? கொடுக்கும் மனமில்லாதவர்கள் மனக்குஷ்டம் உள்ளவர்கள். அழுகிய கரங்களில் தேன் சொட்டும் பலாச்சுளை இருந்தாலும் அது அருவறுப்பத்தானே!

நதியோ, கடலோ, மலையோ, மரமோ அனைத்தும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பழங்களை எல்லாம் மரங்கள் தனக்கே வைத்துக் கொள்வதில்லை. வளங்களையெல்லாம் நிலங்கள் தனக்கு மட்டும் வைத்துக் கொள்வதில்லை. நீ மட்டும் ஏன் மனிதா அனைத்தையும் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறாய்? நம்மிடம் கடவுள் கொடுத்த அத்தனையும் நமக்காகக் கொடுக்கப்பட்டதல்ல! நம் வழியாகப் பிறருக்குக் கொடுக்கப்பட்டது நீ கொடுக்கும் போது கடவுளாகிறாய்! கடவுளாய் உன்னைப் பிறருக்கு காட்ட விரும்புகிறார். இறைவன் கொடுப்பதை நீ தனக்கென வைத்துக்கொள்ளும் சாத்தானாய் மாறாதே! கொடுக்காதவன் கையில் உள்ள பணமெல்லாம் அழுகிய கையில் உள்ள அமுதம் போன்றது. நதியைப் போல் நடந்து போய் கொடு! மரத்தினைப் போல் மனமகிழக் கொடு! விலங்குகளைப் போல் உழைப்பைக் கொடு! உயிரைக் கொடு! உன்னையும் இன்னொரு கடவுளாகக் பூமிக்குக் கொடு! இங்கு பூசை செய்ய பல கரங்கள் உன்னைக் கும்பிடுகின்றன.

“பலருக்குப் பயன்கொடுக்க
பயணமானால் அது நதி
தனக்கென தேங்கி விட்டால்
அது சாக்கடை…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES