30

Jan

2026

பாவம் என்பது…

இந்தக் கூற்று நமக்கு வாசிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இதில் உள்ள உண்மைகள் புரியும். ஆணும் பெண்ணும் படைப்பில் சமம்தான். இந்த இரண்டு உயிர்களும், இயற்கையின் சுழற்சியில் புதிய படைப்பை உருவாக்கி இந்த பூமிக்குக் கொடுக்கும் புண்ணிய பணியைச் செய்ய கருப்பையை பெண்கள் தாங்குகிறார்கள். பெண்கள் கருத்தரிக்க அணுக்களைப் பெற ஆண்களைச் சார்த்து இருக்க வேண்டிய நிலை இருப்பதனால் படைப்பிலே இந்த அடிமைத்தனம் தோன்றியதோ? என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் ஆண்கள் இன்றுவரை பெண்களை அடிமையாக எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடிமையாகத்தான் நடத்துகிறார்கள்!

ஆணாதிக்கம் மிகுந்த இந்தச் சமுதாயம் எப்போதும் பெண்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்குத்தான் மதங்களைக் கண்டுபிடித்தது. சக மனிதனை அடிமையாக்கச் சாதியைக் கண்டுபிடித்தது. இதனால் சாதியால் ஊருக்குள் அடிமையை வைத்திருந்தோம் மதத்தால் வீட்டுக்குள்ளேயே அடிமைகளை வளர்த்திருந்தோம்.

மதங்களைப் பொறுத்தமட்டில் எல்லா மதங்களும் பெண்களை அடிமைபடுத்த ஒன்று போல் போதிக்கின்றன. ஒருமதம் பெண்களைத் தீட்டு என்கிறது. ஒருமதம் பெண்களால்தான் ஆதி மனிதன் பாவம் செய்தான் என்கிறது. ஒருமதம் பெண்கள் பாவம் செய்யத் தூண்டுபவர்கள் எனவே அவர்கள் முழுவதும் உடைகளால் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. பெண்களை அடிமைப்படுத்துவதில் மட்டும் மதங்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன.

புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள் பெண்கள் செய்த பாவத்தில் தான் பூமியே பாவத்தில் மூழ்கியிருக்கிறது என்பார்கள். ஒரு மன்னன் எத்தனை மனைவிகள் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்களோ, குழந்தைகளோ அப்படிச் செய்துவிடக்கூடாது. அது பாவம்.

இப்படி எண்ணிப்பாருங்கள் குடிக்கலாம், சண்டை போடலாம், பிறரைத் தவறான எண்ணத்தோடு பார்க்கலாம், பழகலாம், தொடலாம். இதெல்லாம் ஆண் என்ற திமிரும் அதிகாரமும், பணமும் இருந்தால் மட்டுமே செய்யலாம். ஆனால் பெண்களோ, குழந்தைகளோ செய்யக்கூடாது. கடவுளின் பூசாரிகளாக, அவதாரங்களாக, ஆண்கள் இருக்கலாம். பெண்களுக்கு அது தீட்டாகும் ஆண்கள் பெண்களிடம் அத்துமீறலாம். பெண்களோ, குழந்தைகளோ அதனைச் செய்யக் கூடாது. அதனை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.

ஒரு ஆண் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். ஆனால் பெண்களும், குழந்தைகளும் அனுமதி பெற்ற பின்தான் சென்று வர முடியும். ஆண்கள் உடைகளை மடித்துக் கட்டலாம். மேலாடை இல்லாமல் காற்று வாங்கலாம். அது பெண்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஆண்கள் சொத்துக்கு உரிமை கேட்கலாம், சுகத்தை வெளியில் தேடலாம் தப்பில்லை. ஆனால் இது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தவறாகும். ஒரு ஆண் குடித்துவிட்டு குப்புறக் கிடக்கலாம். எழுந்து போய் மீண்டும் சரக்கு வாங்கலாம். வீட்டில் வைத்து மீண்டும் குடிக்கலாம். தட்டிக் கேட்டால் மனைவியை அடிக்கலாம். ஆனால் இதில் எதையும் சிறுவர்களோ, பெண்களோ செய்துவிடக் கூடாது. ஏனென்றால் அது பாவம்! குற்றம்.

விடுமுறை நாட்கள் என்றால் ஆண்கள் எத்தனை மணிவரை வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால் பெண்களோ, குழந்தைகளோ தூங்கக்கூடாது. இங்கு வீட்டு வேலைகள் முழுவதையும் பெண்களே செய்து முடிக்க வேண்டும். வீட்டுக்கென்று சமைப்பதோ சுத்தம் செய்வதோ பெண்களை மட்டுமே சார்ந்தது. விரும்பிய பொருட்களை வாங்கக்கூடாது. விரும்பிய மனிதர்களோடு பேசக் கூடாது. இப்படி எத்தனையோ கூடாதுகள் உண்டு. மீறினால் பாவங்கள். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மட்டும் தண்டனைகள். பீடி, சிகரெட் பிடிப்பது ஆண்களுக்குத் தப்பில்லை இப்படியே போய்க்கொண்டிருக்கும் எண்ணிப் பாருங்கள் ஏன் இந்தச் சமூகம் ஆண் சமுகத்திற்கு அங்கீகாரமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிமைத்தனத்தையும் வைத்திருக்கிறது?

தொடக்க காலத்தில் கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும். பின்பு கொஞ்சம் மறுமலர்ச்சி வந்தபிறகு பெண்கள் மொட்டை அடித்து வெள்ளை உடையணிந்து வீட்டுக்குள் இருக்க வேண்டும். வெளியே வந்தால் சகுனத்தடை, எந்த நல்ல காரியங்களிலும் பங்கெடுக்கத் தடை. இதே மனைவி இறந்தால் கணவர் புதுமாப்பிள்ளை தானே. ஆலமரத்தடித் தீர்ப்பு இருக்கும்வரை பெண்களுக்குத்தானே தண்டனை கொடுத்திருக்கிறோம். இப்போதும் நமது சட்டங்களும், சம்பிரதாயங்களும் பெண்கள் கடைபிடிக்கிறார்களா? என்று தானே பார்க்கிறோம்! கற்பு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்கள் வாழ்வியல் ஆகும். அடக்கம், ஒடுக்கம் பெண்களுக்குப் பெருமை தரக்கூடியது. இன்றளவும் பெண்குழந்தைகள் படிப்பதற்குத் தடை, விளையாடத்தடை, நடனம் ஆடத்தடை, என்று படித்த முட்டாள்கள் கூட இதைப் பறைசாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். பெற்றோர்கள் என்ற போர்வையில் இன்னும் பிசாசுகள் இருக்கத்தானே செய்கிறது.

ஒரு பையனின் அப்பா டவுசர் பனியனோடு பஜாருக்கு வரலாம். அதேபோல் அவனது அம்மா வரமுடியுமா? இல்லை அதைத்தான் நினைத்துப் பார்க்க முடியுமா? அண்ணன் காதலிக்கலாம்! அக்கா காதலிக்கலாமா? அவளால் நம்ம ஒட்டுமொத்த குடும்பத்தின் மானமே போய்விடுமே!

கோவிலின் கருவறைக்குள் நுழைவது! கோவிலில் புசாரியாவது! குடிப்பது! கூலி அதிகம் இருப்பது! ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படட ஒன்றாகும். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மறுக்கப்பட்டது. அதற்கென்று அவர்கள் குரல் கொடுத்தால் அது பாவமாகும். ஆன்மீகம் என்பது ஆண்கள் கையில் பெண்களை அடிமையாக்கும் பெரிய கண்டுபிடிப்புதான். இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கசப்பான உண்மை.

புத்தரின் உண்மைக் கதை தெரியுமா? அக்காலத்தில் பெண்கள் நீரில் குளிப்பது தீட்டு என்று சொன்னார்கள். இந்தக் கலாச்சாரத்தை உடைப்பதற்காக நதிநீர் அனைவருக்கும் பொதுவானது. பெண்களும் நதியில் நீராடலாம். சொத்துரிமையில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று கூறினார். இதனால் அதிகாரத்தில் இருந்த ஆண்வர்க்கத்தால் இரவோடு இரவாக நாடுகடத்தப்பட்ட புத்தர் நாடு கடத்தப்பட்டார் இன்று புத்த மதத்தின் தலைவராக அவர் போற்றப்படுகிறார்.

கிறிஸ்தவ மதம் தோன்றக் காரணமானவர் இயேசு கிறிஸ்து. இவர் முன் ஒரு நாள் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை அவரிடம் கொண்டு வந்து அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். உடனே இயேசு அவர்களைப் பார்த்து விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் இங்கே! விபச்சாரம் செய்த ஆண் எங்கே? என்று கேட்டார். உடனே அனைவரும் கலைந்து ஒடினர். கற்பு என்பதைப் பொதுவில் வைப்போம். பெண்களைச் சமமாக மதிப்போம் என்ற கொள்கையோடு அதிகார வர்க்கத்தோடு மோதினார். அதிகார வர்க்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடம்பரம் என்ற பெயரில் நடந்த விபச்சாரங்களைச் அவர் கண்டித்ததால் அவர் திட்டமிட்டு பொய்க் குற்றம் சாட்டப்பட்டு அரசியல் படுகொலை செய்யப்பட்டார்.

இராமச் சக்ரவர்த்தி தனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைக்காக தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்றார். மனைவியை சிறிது காலப்பிரிவுக்குப்பின் மீண்டும் அவர்கள் ஒன்று சேரும்போது சேர்ந்து வாழ்வதற்கு இந்த சமூகம் கொடுத்த தண்டனை சீதை நெருப்பில் இறங்கி தன் கற்பை நிருபிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அந்த அளவுகோல் இராமனுக்கு இல்லை.

தன் சகோதரி உடன்கட்டை ஏறுவதைத் தடுத்த வங்காளத்துப் பிராமணர் சமூகத்தைச் சார்ந்த இராஜாராம் மோகன் ராய் இந்திய நாட்டில் வாழ முடியாமல் இன்று சிலையாக இலண்டனில்தான் இருக்கிறார். அவரது கல்லறை கூட அங்குதான் இருக்கிறது.

இன்றையக் காலக்கட்டத்தில் பெண்ணுரிமைக்காகப் பெரும்பாடுபட்ட ஈரோடு பெரியார் இறந்தபிறகும் இன்றும் சில நாய்களால் கடித்துக் குதறப்படுவதைக் கண்டுகொண்டு தானே இருக்கிறோம். இதிலிருந்து தெரியவில்லையா? அகங்காரம் கொண்ட ஆண்வர்க்கம் இன்னும் பேயாய் அலைந்து நாட்டைச் சுடுகாடாக்குகிறது என்று.

இப்போது சொல்லுங்கள் நமது தாயும், நமது சகோதரியும், நமது மனைவியும், தனது மகளும், இந்தச் சமுதாயத்தால் சாகடிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு கட்டமைப்பில்தான் வாழ்கிறோமே தவிர அவர்கள் கட்டுகளை இன்றும் நாம் அறுத்தெரியவில்லை. பெண்கள் விடுதலைக்காக பெரியார்போல் உழைக்கத் தேவையில்லை. கொஞ்சம் பெரிய மனசோடு வாழக் கற்றுக் கொள்வோமே!

ஒரு பெண் நம்மோடு பேசும்போது நம்பிக்கை வரணும். பழகும்போது பாதுகாப்பாய் உணரணும், உடனிருக்கும்போது அவர்கள் உயர்வுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். பொதுவாக சொல்லணும்னா இரத்த சம்பந்தமில்லாத ஒரு பெண்ணோடு நட்புரிமையோடு பழகுவதை இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நடந்து கொள்வோம்.

வருகின்ற தலைமுறைக்கு ஆண் பெண் உறவு ஆபத்தானது, ஆபாசமானது, அங்கீகரிக்கக்கூடாதது என்ற தவறான எண்ணங்களை உடைத்தெரிந்து புதிய காற்றை சுவாசிக்கச் செய்வோம். இந்தப் புரட்சி இன்னும் இந்தப் பூமிக்கு வரவில்லை. உங்களின் சுத்தமான மனதால் இங்கு இன்னுமொரு சுதந்திரம் கிடைக்கட்டும். அதனைச் செய்த புண்ணியம் உங்களைச் சேரட்டும்.

பெண்களே! புதிய போர்முறையை துவக்குங்கள். அதில் புனிதத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் புரட்சி தொடங்கட்டும் சமத்துவம் பெருகட்டும்.

“பெண்களை…
நினைப்பில் (மதித்து) தெய்வமாய்
நடப்பில் (மிதித்து) படிக்கட்டாய்
பயன்படுத்துகிறோம்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES