03

Mar

2022

புண்ணியம் தேடி…

புண்ணியம் தேடிக் காசிக்குப் போகலாம், கங்கையில் தலை மூழ்கலாம். வேளாங்கண்ணிக்கு நடக்கலாம், நாகூரில் ஓதலாம், ஜென் மடத்தில் தியானிக்கலாம், ஆசிரமத்தில் அமைதியாய் இருக்கலாம், ஆனாலும் புண்ணியத்தைக் கண்டடைந்து வீட்டீர்களா? என்று கேட்டுப் பார்த்தால் அவர்களே சொல்வார்கள் அதுதான் புரியல? என்பார்கள். சரி புண்ணியம் தேடிப் போனது போதும் புண்ணியமே உங்களைத் தேடி வர வைத்து விடுவோமா!? எப்படி?

“நீ நிறைவு பெற விரும்பினால் உன்னுடையதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு” என்கிறது விவிலியம் நேற்று யாருடையதோ? இன்று உங்களுடையது! இன்று உங்களுடையது நாளை யாருடையதோ? என்கிறது கீதை. ஆற்று வெள்ளம் போல வரும் செல்வம் கரையில் இருக்கின்ற மரத்தையும் கவனித்துவிட்டுச் செல்வதுபோல உங்கள் இல்லத்திலும் அது உறவாடிவிட்டுச் செல்ல இருக்கிறது. அது செல்வோம் என்பதனால் தான் செல்வம் என அழைக்கிறோம். அத்தகைய செல்வத்தை உங்களது சுயநலத்தால் உங்கள் வீட்டுக்குள்ளேயே பதுக்கவும், ஒதுக்கவும் நினைப்பதால்தான் ஒவ்வொரு துன்பமும் ஏற்படுகிறது.

நமக்கு இறைவன் கொடுத்தது நமக்கானது மட்டுமல்ல நம் வழியாகப் பிறருக்குச் செல்வது இதனால்தான் ஒரு திரைப்படபாடல் “ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்கிறது. விளைகின்ற நெல்லை எல்லாம் வயல்களே வைத்துக் கொள்வதில்லை. வளர்கின்ற மீன்களை எல்லாம் கடல்களே வைத்துக் கொள்வதில்லை. சேர்கின்ற துளிகளையெல்லாம் வானமே சேமிப்பில் வைத்துக் கொள்வதில்லை. பழுக்கின்ற பழங்களை எல்லாம் மரங்கள் தனக்கெனப் பதுக்கிக் கொள்வதில்லை. பிறகு ஆறறிவு படைத்த மனிதா! ஆளுமைத்தன்மை கொண்டவனே, நீ ஏன் எதிர்காலத்தை கண்டு பயப்படுகிறாய். இதற்காக எப்படியெல்லாம் சேமிக்கிறாய்? எங்கெங்கெல்லாம் பதுக்குகிறாய்!

எல்லா மதங்களும், எல்லா மதத்தலைவர்கள் “கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல” என்று கூறிவிட்டார்கள். பிறகு ஏன் பிதற்றிக் கொண்டு இருக்குகிறீர்கள். பணக்காரர்கள் தாங்கள் வாரிசுகளுக்காகப் பதுக்கி வைக்கிறார்கள். அவர்கள் அப்படி சேமித்து வைத்தால் அவர்கள் புதல்வர்களுக்கு என்ன வரலாறு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற செல்வத்தையும் நீங்கள் அடைந்த உயரத்தையும் மேடைதோறும் முழங்குவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அத்தகைய வரலாறு வந்துவிடாதபடி அவனை உழைக்கவிடாமல் உருப்படவிடாமல் உழைப்பின் மேன்மை புரியாமல் ஊதாரியாய் திரிய ஒரு சோமாறியை இப்பூமிக்கு அனுப்பியது போலாகிவிடுமே. அவன் இந்தப் பூமிக்கு இனப்பெருக்கத்திற்காக வந்த இழிபிறவியா? அதுவும் உன் வயிற்றிலா? கேட்பதற்கே வெட்கமில்லையா?

பணத்தையும் பொருளையும் அதிகமாகச் சம்பாதியுங்கள் காரணம் அவை நண்பர்களைச் சம்பாதிப்பதற்காக. பணத்திற்காகப் பல்லக்குத் தூக்க பலபேர் ஓடிவருவார்கள் அவனை பக்கத்தில் வீடாதீர்கள் அவன் பழுத்த மரத்துப் பறவைபோல மரம் சருகாகும் போது அவர்கள் நம்மை மறந்து விடுவார்கள். தேவைப்படும் போது நம்மைத் தேடுபவர்களை தெரியாதவர்கள் போல் இருந்துவிடுங்கள் ஏனென்றால் அவர்கள் தேவை நிறைவேறிய உடன் நம்மைத் தெருவில் விட்டுச் சென்றுவிடுவார்கள். இது தெரியாமல் தான் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகள், மனைவி, பெரியோர், உற்றார் உறவினர், நண்பர்கள் என ஒரு சுயநலக் கூட்டத்தோடு சுருண்டு கிடக்கிறோம். அதனை விட்டு வெளியே வாருங்கள் புண்ணியம் தேடுவோம்!.

எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவன் தனக்கென வாழத்தலைவன் நிலையில்லாத உலகம் என்ற நிசர்தனத்தையும் தன் நெஞ்சில் நிறுத்தியிருப்பான். ஆனால் தான் கடந்து வந்த பாதையில் பல நிரந்தரங்களையும் நினைவிடங்களையும் நிறுத்தி விட்டு வந்திருக்கிறான். அவன் வாழ்க்கையில் ஏற்றங்கள் எல்லாம் எல்லை கடந்தது தான். வயதிற்கு மீறிய பொறுப்புகள் பொறுப்பான மனிதர்கள் தனக்குத்தான என எண்ணிக் கொண்டிருக்க, விருப்பமில்லாது இருக்கிற இந்த விளையாட்டுப் பிள்ளையின் வாசல் கதவினை அந்த வாய்ப்புகள் வந்து தட்டும். அந்த வாய்ப்புகளையெல்லாம் வரலாற்றுச் சாதனைகளாக மாற்றுவதில் அவன் வல்லவன். அவன் வாழ்விலும் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உண்டு. ஏற்றங்களையெல்லாம் இறைவன் கொடுத்தது. இறக்கங்களையெல்லாம் மனிதர்கள் கொடுத்தது. எனினும் இன்றும் அவன் தாகம் தணியவில்லை. காரணம் இவன் உறவினர்களுக்காக உழைப்பவனல்ல, உடனிருப்பவர்களுக்காகவும் உழைப்பவனல்ல ஊருக்காக உழைக்கிறான் ஒன்றும் இல்லாதவர்களுக்காக உழைக்கிறோம். இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறான் நான் வியந்து இரசித்துக் கொண்டேதானிருக்கிறேன்.

இவர்கள் இறைவனை தேட வேண்டியதில்லை இறைவனே இவர்களைத் தேடி தினமும் வருகிறான். இவர்கள் உபவாசம் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இறைவனின் சகவாசத்தில் இருக்கிறார்கள். ஆகவே இல்லாதவர்களோடு இருப்பதைப் பகிர்வது இறைவழிபாடகாக நம் ஒவ்வொருவருக்கும் இருக்கட்டும். நம் இனத்தைக் கடந்து முகவரி இழந்து தவிப்பவருக்கு நாம் முகமாகவும், அகமாகவும் இருப்போம். நாமே நல்லது செய்வோம் அல்லது நல்லவர்களோடு இணைந்து நல்லது செய்வோம். இந்தப் பூமிக்கு நீங்கள் வந்ததன் பொருள் புரிய வேண்டுமென்றால் புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள். அதன் பொருள் என்னவென்றால் இருப்பதை உங்கள் இனம் சேராத இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் பகிர்வோம்! மகிழ்வோம் வாங்க பங்காளிகளே!

“உன்னைக் கொடு உள்ளதைக் கொடு
உள்ளத்தைக் கொடு உலகம் முடியும்வரை கொடு”

ARCHIVES