23

Aug

2016

புரட்சிக்கு ஏது வறட்சி

ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டால் அனைத்து இந்தியனுக்கும் விடுதலை உணர்வு வீறுகொண்டு எழும், புரட்சிக்கனல்கள் பூபாளம் பாடும், நெஞ்சில் நாட்டுப்பற்று நிற்கும், புரட்சிகள் கனவில் மிதக்கும், ஆனால் இவை எல்லாம் வார்த்தையோடு வறண்டு விடுகிறதோ? எனண்ணத்தோன்றுகிறது இப்போது இங்கு படுகொலைகள், ஆணவக்கொலைகள், வழிப்பறிகள், சாதிக்கலவரங்கள் இவைதானே ஊடகம் முழுவதும் ஊடுரூவி நிற்கிறது. நடுரோட்டில் பட்டப்பகலில் பகிரங்கமாகக் கொலை நடக்கிறது. இந்த வாடிக்கை மனிதர்கள் அத்தனைபேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். ஆணவக்கொலை என்று ஒன்று அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. பெற்று பாசமாய் வளர்த்து ஆளாக்கிய குழந்தைகளை ஆணவத்துக்குக் காவு கொடுத்துவிட்டு கல்லறை கட்டி வழிபடுகிறார்களே இதுவும் இங்கு அரங்கேறிக்கொண்டுதானே இருக்கிறது. இதனைத்தான் ஒரு கவிஞன் சொல்வான் இரவினில் சுதந்திரம் வாங்கிவிட்டோம் விடிந்ததும் அனைவரும் தூங்கிவிட்டோம். இப்போது நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோமா? என்ற கேள்வி எழும்! ஏனென்றால் வெளிநாட்டுச் சந்தைதான் வீடுமுழுவதும் நிறைந்திருக்கிறது வெள்ளைக்காரன் மட்டும்தான் நாட்டை விட்டுப் போயிருக்கிறான்.

அவன் விட்டுச்சென்ற மொழி நாம் நாவிலே நர்த்தனமிடுகிறதே. இதனைத்தான் முண்டாசுக்கவிஞன் சொல்வான் மெல்லத்தமிழ் இனி சாகும் என்றான் இதுதானே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிக் கூடங்கள்தான் இன்று முளைத்துக் கொண்டிருக்கிறது. வெள்ளைக்காரத்தனம்தானே நமது வீட்டுப்பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

உனது தாய் மொழி எது என்றால்? தமிழ் மொழி பற்றிக்கூறுகிறீர்கள். ஆனால் நீ பேசும் ஆங்கிலம் எது? உனது அப்பன் மொழியா? தமிழ்த் தாய்க்கு ஆங்கில அப்பன் என்றால் சமுதாய ஒழுக்கக்கேடல்லவா? ஏனென்றால் அவரவர் மொழியில்தான் அவரவர் வாழ்க்கைத்தடங்களும், ஆன்மீகம், கலாச்சாரமும், மானுடவியல் பண்பாடும் புதைந்து கிடக்கிறது. அதைப்புதைத்துவிட்டு அல்லது தொலைத்துவிட்டு வேறு எங்கே நாம் பயணப்படப்போகின்றோம்? ஒரு கலாச்சாரச் சீரழிவு நம் கண்முன் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஏன் நாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம் என்பது தான் இன்னும் புரியவில்லை.

வேட்டி கட்டிய அப்பன்கள் எல்லாம் இப்போது கோட்டிக்காரனாகத் திரிகிறான். தாவாணியில் ஆடிவந்த மயில்கள் எல்லாம் இப்போது சுடிதாருக்குள் சுருண்டு கிடக்கின்றன. அம்மாக்கள் முந்தானையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் எல்லாம் இன்று பாலகர் காப்பகத்தில் ஆயாக்கள் மடியில் அடைக்கலம் தேடிகொண்டு இருக்கிறது. தாய்ப்பாசம் கூட இப்போது தவணைமுறையில்தான் கிடைக்கிறது. அம்மா ஆபிஸிற்கு விடுமுறை என்றால் மட்டுமே ஆயாக்கள் மடியிலிருந்து அம்மாக்களுக்கு மாற்றப்படுகிறது குழந்தைகள். இதுவரமா? சாபமா? இது குழந்தைகளுக்கு சாபம் தானே! இன்று தாய்ப்பால் கொடுப்பது தட்டுப்பாடாகிவிட்டதால்தானே முதியோர் இல்லங்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. மொத்தத்தில் மானிடம் ஏதோ தொலைத்துவிட்டதா? அல்லது மறந்துவிட்டதா? என்பதுதான் இன்றையக் காலக்கட்டங்களில் தேவை இத்தகைய புரட்சிதான். இதற்கு ஆயுதம் எடுத்துப்போராட வேண்டி அவசியமில்லை. மனங்களுக்குள் ஏற்பட வேண்டிய மாற்றம் இழந்த சொர்க்கத்தை மீண்டும் எடுத்து வருவோமா? கல்வி;க்காக நமது குழந்தைகளை பள்ளிகளில் மட்டுமல்ல டியுசன் சென்டர்களிலும் தொலைத்துவிட்டு வந்தோமே அதனை நம் அருகில் வர அனுமதிப்போமா? குடும்பத்திற்காகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தைவிட்டே ஓடிக்கொண்டு இருக்கிறோமே! மீண்டும் குடும்பத்திற்குத் திரும்பி வருவோமா?

இந்தத்தலைமுறை கிரிக்கெட்டு ஸ்கோருக்காகக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறதே. அடுத்தவேளை சோற்றுக்கு வழிசெய்யும் விவசாயத்தைக் கற்றுக்கொடுப்போமா? பைக்கிற்கும், செல்போனுக்கும் டேப்பிற்கும் ஆலாய்;ப் பறக்கும் இளைய தலைமுறைக்கு அப்துல்கலாமைப் பற்றி அறியத்தருவோமா? தேவையை அதிகரித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒருவர் ஒருவரைத் திட்டிக்கொண்டே திரியும் பெற்றோர்களைத் தெளிய வைப்போமா? உயர்குடி, மேட்டுக்குடி என்று வாழ்ந்தமக்கள் எல்லாம் டாஸ்மாக்குடியால் தம் தாழ்ந்து போய்விட்டார்களே அவர்களுக்குப் புதுத்தடம் காட்டுவோமா? கட்டிடம் எழுப்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு இன்று காணாமல் போய்விட்ட ஆறு ஏரி குளங்களை எல்லாம் மறுபடி கொண்டு வந்து மனமகிழ்ச்சி கொள்வோமா?

ஆற்று மணலை எல்லாம் அள்ளிவிட்டோமே இது ஆறுகளின் கொங்கைகளை அறுத்து எரிந்தது போலல்லவா? மீண்டும் இந்தக் கண்ணகியை மீட்டெடுப்போமா? காடுகளை அழித்து வளங்களைக் குறைத்து நோய்களைச் சுமந்துகொண்டு நடைபிணங்களாக அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த அபலை வாழ்வுக்கு ஆறுதல் தேடுவோமா?

பிளாஸ்டிக் பொருட்களால் நிலமகளைக் கெடுத்து நிர்கதியாய் நிற்க வைத்திருக்கிறோமே இதற்கு ஏதாவது நிவாரணம் தேடுவோமா? தேடல்களைக் குறைத்துக்கொண்டு நிம்மதியாய் நிற்கக்கற்றுக் கொள்வோமா, பட்டம், பதவி பணத்திற்காய் பறந்து கொண்டு இருந்தோமே அதை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருப்போர்களின் பக்கத்தில் அமர்ந்து பக்குவமாய் பேசுவோமா? வேண்டியதைச் சாப்பிட ஆசைப்பட்டு உணவகத்தை தேடி அலைவதைவிட வேண்டியவர்களோடு அமர்ந்து சாப்பிடக் கற்றுக்கொள்வோமா?

பிள்ளைகளுக்கு சிம்மாசனம் வாங்க நேரத்தை செலவு செய்வதை விட்டுவிட்டு இன்று தொட்டிலை ஆட்டி தூங்க வைப்போமா? மடிக்கணிணி என்று ஏன் பெயர் வந்தது அந்தமடியில் குழந்தைகள் அல்லவா குடியிருக்க வேண்டும். இது எப்போது மாறிவிட்டது? வாழ்க்கையில் முன்னேறுவது முக்கியம்தான். அதற்குப் பயணப்படவேண்டும். பதட்டப்படக்கூடாது. நல்லவீடு என்று எது என்று வீதியில் நின்று வெளிப்புறம்பார்க்காதீர்கள். அது பணத்தின் திமிரையும் ஏழையை இகழ்வதாக மட்டுமே இருக்கும் உள்ளுக்குள் வந்துதான் அதனை உணரவேண்டும். கடன், பகை, நோய் இல்லாத வீடுகுள் தான் மண்ணில் மகத்தான வீடுகள். ஆசை அதிகமாகும்போது கடன்வருகிறது. கடன் கவலையைத் தந்து நோயை பெற்றெடுக்கிறது. நோய் உங்களை வாழ்வின் இறுதிக்கு எடுத்துச்செல்கிறது. உழைத்தால் கடனில்லை உறவாடினால் பகையில்லை இரண்டும் போய்விட்டால் நோய்இல்லை. என்றைக்Nகுh கிடைக்கிற பளபளப்பிற்காக வீட்டுக்குள் இருக்கிற கலகலப்பை இழந்துவிடாதீர்கள். இன்றைக்குத் தேவை இன்றையப் புரட்சி நல்ல மனிதனாய், நல்ல குடும்பமாய். நல்ல சமூகமாய், நல்லதே நடக்க நாமும் உழைப்போம் நாளும் உழைப்போம், அத்தகைய புரட்சி வீரர்களாய்ப் புறப்படுவோம்! புதிய சுதந்திரம் படைப்போம்! இனிவரும் சுதந்திரத்தை மிட்டாய் கொடுத்து ஏமாற்றாதீர்கள் அன்பைக் கொடுங்கள் அனைவரும் சுவைக்கட்டும் அதுவே இனிமலரும் சுதந்திரமாக இருக்கட்டும்.

ARCHIVES