20

Jan

2023

பொய்…

– ஞானக்கிறுக்கன்

சாலை ஒரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஞானக் கிறுக்கன். திடிரென்று வீட்டிலிருந்து அழுதுகொண்டு ஓடிவருகின்ற ஒரு சிறுவனைப் பார்த்தான். அதன் பின்னால் அவனது தந்தை கடுங்கோபத்துடன் ஓடிவந்தார். வந்த வேகத்திலும் அவர் உதிர்த்த வார்த்தைகள் மட்டும் ஞானக்கிறுக்கனின் காதில் வந்து விழுந்தது. என்னிடமே பொய் சொல்லுகிறாயா? என்ற வார்த்தை இதனைக்கேட்டு ஞானக்கிறுக்கன் சத்தமாகச் சிரித்தான் உடனே அவன் நீ ஒரு கிறுக்கன் அதனால் சிரிக்கிறாய் என்றான். உடனே ஞானக்கிறுக்கன் நீ கிறுக்கன் என்று சொல்வது தான் உண்மை. அதே போல் கிறுக்கன்கள் என்றும் பொய் சொல்வதில்லை அதனால் கிறுக்கன் என்று சொன்னாலும் எனக்குக் கோபம் வருவதில்லை.

இப்போது தகப்பன் கோபத்தை கொட்டிவிட்டு ஞானத்தில் சிந்திக்க ஆரம்பித்தான். ஞானக்கிறுக்கனிடம் கேட்க ஆரம்பித்தான். நீ என்ன சொல்ல வந்தாய்? ஞானக்கிறுக்கன் பேசினான். பொய் சொல்லாதவர்கள் இந்தப் பூமியில் யாரும் இருக்கிறார்களா? சொல்லுங்கள் போய் பார்த்து விட்டு வருகிறேன். இன்னும் நீங்கள் அரிச்சந்திரன் காந்தி என்றே சொல்லிக் கொண்டிருந்தாலும். எத்தனை காலம் தான் இதனைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது? இப்போது வாழ்கிறவர்களில் யாராவது இருக்கிறார்களா? என்றால் அடையாளம் காட்ட முடியுமா? இல்லை என்றால் இந்த மானிடச் சமுதாயத்திற்கு அவமானம்தானே!

யாராவது இருவர் எதையோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இடையில் புகுந்து என்ன என்று கேட்டால் ஒண்ணுமில்லை, சும்மாதான் எனும்போது அவர்கள் சொன்னது அப்பட்டமான பொய்தானே! இப்போது வீட்டில் அலைபேசி மணி வந்தவுடன் அனைவரும் ஆவலுடன் கேட்போம். உடனே ஒரு பதில் வரும். கம்பெனி விளம்பரம், தவறான நம்பர், நெருங்கிய நண்பன். இதனை எண்ணிப் பாருங்கள் இதில் எந்த அளவு உண்மை இருக்கும். சிலருக்கு அலைபேசி சத்தம் கேட்டவுடன் உடனே எடுத்துக் கொண்டு தனியாக ஒடுகிறார்களே! இதுதான் உண்மையான வாழ்க்கையா?

பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள் இப்போது அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள். அவர்கள் ஆசிரியரிடம் பெற்றோர்களிடமும் சொல்லுகின்ற காரணங்களில் உண்மை இருக்கா?. தன் பிள்ளை தவறே செய்யவில்லை என்று தகப்பனார்கள் வந்து ஆசிரியர்களிடம் முறையிடுகிறார்களே. இதில் உண்மை உண்டா? கட்டுப்பாடற்ற பெண்குழந்தைகளைக் கட்டுக்கோப்பாக வளர்க்க ஆசிரியர் ஆசைப்பட்டுக் கண்டிக்கும் போது அதை ஏற்க மறுத்து ஆசிரியர் கட்டிப்பிடித்துவிட்டார் என்று வீண்பழி சுமத்துகிறார்களே அந்த உண்மையை அதனை ஊருக்குச் சொல்வதுண்டா?

பள்ளிக் கட்டணம் செலுத்தப் பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லும்போது இந்த இந்தப் பயிற்சி எல்லாம் இருக்கிறது என்று சொல்லி பணம் வாங்குவார்கள் பயிற்சி கொடுத்துள்ளார்களா? பெண் தேடி பரிசம் போடப்போகும் போது பெண் வீட்டார் பெண்ணைப் பற்றி பேசுவது எல்லாம் உண்மையா? பெண் வீட்டார் கேட்கும் போது ஆண் பிள்ளையைப் பற்றி அளந்து விடுவோமே அத்தனையும் உண்மைதானே? இல்லை இருவரும் காதலர்களாக இருந்தாலும் இருவரும் ஒருவர் ஒருவரிடம் பேசுவது எல்லாம் உண்மையா? அப்படியென்றால் யார் உண்மையைப் பேசுகிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள் என்பதனை உணர்ந்து பாருங்கள் இதே போல் எத்தனையோ உரையாடல்களை நீங்கள் கேட்பீர்கள்? அத்தனையும் உண்மையா? என கொஞ்சம் ஆய்ந்து பாருங்கள்.

இந்த உலகிலே உண்மையை மட்டும் பேசுபவர்கள் என்று ஒருசிலரையாவது உங்களால் சொல்ல முடியுமா? அப்படிப் பேசினால் அவன் உலகில் இருக்க முடியுமா? அப்படியென்றால் என்னதான் பேச முடியும்? யார் தான் பேசமுடியும்? பேசுங்கள் பெருமைபடப் பேசுங்கள் உண்மையைப் பேசுவீர்களோ, பொய்யைச் சொல்வீர்களோ தெரியாது ஆனால் பிறருக்கு நன்மை செய்யும்படிப் பேசுங்கள். உங்கள் பேச்சு பிறருக்கு உயிர் கொடுக்க வேண்டும். உறவைக் கொடுக்க வேண்டும். பிறருக்கு உத்வேகம் கொடுக்க வேண்டும். உறவைக் கொடுக்க வேண்டும். சரிவைத் தடுக்க வேண்டும் சரித்திரம் படைக்க வேண்டும்.

ஒரு வியாபாரி தன்னுடைய பொருளை விற்பதற்காகக் கூட்டிக் குறைச்சுச் சொல்லலாம். ஆனால் இன்று விளம்பரம் என்ற பெயரில் சொல்வதெல்லாம் பொய்தானே. அப்படி நிகழும், இப்படி நிகழும், அதிசயம் நிகழும் எனச்சொல்லி அத்தனைபேரையும் ஏமாற்றி விடுவதுதானே இன்றைய விளம்பரம்! வணிகரிடம் இருக்கின்ற தராசு முள் தடுமாறினாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளலாம். நீதிபதியின் கையில் இருக்கின்ற தராசு தடுமாறலாமா? தடுமாறினால் உலகம் நிலை மாறிவிடுமே! அந்தப் பயம் நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது நீதிபதிகள் எழுதுகின்ற தீர்ப்புகள் எல்லாம் உண்மைகளைத்தான் உரைக்கின்றனவா!

ஆகவே உண்மையைச் சொல்லுங்கள் இல்லாவிட்டால் சொல்லாமல் போங்கள் ஆனால் எல்லோருக்கும் தன்மையைச் சொல்லுங்கள். சின்னச் சின்னப் பொய்கள் இருக்கட்டும் அது யாருக்கும் சிக்கலைத் தராமல் இருக்கட்டும். அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் தன் சொத்துக்களைச் சொல்லும்போது உண்மையைச் சொல்லுவதில்லையே! நடிகர்கள் வாங்குகின்ற ஊதியத்தில் உண்மையை உரைப்பதில்லையே! அப்படி இருக்கிற நிலையில் இந்தச் சின்னப்பையனைப் போட்டு அடிக்கிறாயே என்ன நியாயம்?

உண்மை, பொய் என்பது மனதைப் பொறுத்தது இடத்தைப் பொறுத்தது. ஆகவே அடுத்தவர்கள் பொய்க்கு தீர்ப்பெழுதுவதை விட்டுவிட்டு நாம் உண்மையாக இருப்போம். உண்மை முகத்தைக் காட்டுவோம். உண்மை பேச வேண்டிய இடத்தில் உறுதியாகப் பேசுவோம். பொய் பேசுவதும் பிறருக்கு பெருமை தருவதாக இருந்தால் அதனையும் துணிந்து சொல்வோம். பொய் பேசுகின்ற வைக்கீல்களைவிட பொய் வாக்குறுதி கொடுக்கிற அரசியல்வாதிகளைவிட, பொய் முகத்தால் நடித்து நம்மை ஏமாற்றக்குடியவர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல குடிமகனை வளர்த்தெடுங்கள் தண்டனை கொடுக்கின்ற தகப்பனாய் இருப்பதைவிட வழிகாட்டுகின்ற தகப்பனாய் இருங்கள் தட்டிக் கேட்கத் துணிவதைவிட தட்டிக் கேட்கத் துடிப்பாய் இருங்கள். நல்லதைச் செய்யச் செய்ய தீமைகள் காணாமல் போய்விடும். தண்டிப்பதைவிட, கண்டிப்பதைவிட துணை இருங்கள். தூக்கிவிடுங்கள் நல்லதே நடக்கும் என்று கூறிவிட்டு ஞானக்கிறுக்கன் தன் வழியே சென்றான்.

“மெய்யே(உடம்பு) பொய்யாகும்போது
பொய் மெய்யாகுமா?”

ARCHIVES