17
Jan
2025
காடுகள் அழிக்கப்பட்டு நாடு, நகரங்கள் பெருகி கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் எல்லாம் புதிய புதிய வீடுகளாக ஈன்று புறந்தள்ளி நகரங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் மட்டும் தனிமையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறான்.
இப்போது பல இடங்களில் கேட்கப்படுகின்ற குரல் எது தெரியுமா? நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்து கொள்கிறேன் என்பது தான் அந்தக்குரல். நமக்கு எதற்கு ஊர் வம்பு? அவர்கள் அவ்வாறு சொல்வதற்கு காரணம் என்ன? அவர்கள் சமூகத்தில் வைத்திருந்த அத்தனை உறவுகளும், தொடர்புகளும் போலியாக மாறிவிட்டதால் விரக்தியின் விளிம்பில் நின்று உதிக்கின்ற வார்த்தைதான் அது.
ஒரு காலத்தில் தனிமை என்பது மனிதனைக் கொல்லும். தனிமைப்படுத்தும் போது தான் அதனைத் தண்டனையாக நினைத்தோம். தனிமை போரடிக்கும். பல்வேறு அறியப்படாத மனிதர்களோடு நாம் இருந்தாலும் நம் உறவை பரிமாறிக் கொள்ள முடியாத சூழலில் அந்தத் தனிமையை விட்டுத்தப்பி ஓட நினைத்தோம். அதனால் தான் பல்வேறு மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பித்து ஓடுவார்கள் காரணம் தனிமை அவர்களை உயிரோடு கொல்லும்.
இப்படி இருந்த காலமானது நமக்கு கோவிட் வந்தவுடன் முற்றிலும் மாறிவிட்டது. கோவிட்டில் தனிமைதான் பாதுகாப்பு, தனிமைதான் குணமாக்கும் என்று வந்தவுடன் இந்த தலைமுறை தனிமையை நோக்கி பயணித்தது அதற்கு துணையாக அலைபேசியும் நம்மை அடிமையாக்கியது.
அது தொற்று நோயாக தொற்றிக்கொண்டு இன்று அகற்ற முடியாதபடி நம்மை அணைத்துக்கொண்டது. இன்று குழந்தைகள் கூட அலைபேசி கிடைத்துவிட்டால் தாயும் தேவையில்லை! தாய்ப்பாலும் தேவையில்லை! என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். பிறரை அணுகியே வாழ வேண்டிய கட்டாயத்திலும் கூட தாயே தேவையில்லை என்கின்ற நிலையில் குழந்தை வளர்ந்த பிறகு யாரை அனுசரித்துச் செல்லும்? இக்குழந்தையால் எப்படி நல்லதொரு சமூகத்தையும் குடும்பத்தையும் உருவாக்க முடியும்?
இதனை எத்தனை பெற்றோர்கள் உணர்ந்து இருக்கிறோம்? உங்களுக்கு இப்போது பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக உங்கள் குழந்தையிடம் அலைபேசியை கொடுத்து உட்கார வைத்து விடுகிறீர்கள். பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் வளர்ந்தபிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சந்திப்பார்கள்? அவர்களுக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள்? உங்களுக்குப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஒரு பிரச்சினையை உருவாக்கி உலகிற்கு சதையும் பிண்டமுமாக உங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கிறீர்கள். அந்தக் குழந்தை சமூகத்தைச் சந்திக்கும் போது சமூகம் அவனுக்கு பிரச்சனையாகவும், அவன் சமூகத்திற்கு பிரச்சனையாகவும் இருப்பதால்தான் இன்று இங்கு குழப்பான சூழ்நிலையில் நாம் குடும்பம் நடத்துகிறோம்.
என் கணவர் போதையில் இருக்கிறார் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கத்துகின்ற அம்மணிகளே! அதே போன்று ஒரு போதையில்தான் உங்கள் குழந்தை இப்போது இருக்கிறது. குடும்பத்தைக் கவனிப்பதில்லை, பெற்றோரை மதிப்பதில்லை. அதனைத் தடுத்தால் சண்டைக்கு வருகிறான் என்று அங்கலாய்பவர்களே இது குடிக்கு மட்டுமல்ல, அலைபேசிக்கும்தான் பொருந்தும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? கடை அடைப்பு என்றால் பொறுக்க முடியாத புருசனை கொண்டவர்களே! இனி நெட்வொர்க் வேலை செய்யவில்லை என்றால் பைத்தியமாகத் திரியப்போகின்ற உங்கள் பாலகர்களை எவ்வாறு பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள்?.
இன்று ஒவ்வொரு இடத்திலும் நமக்கு எதுக்கு வம்பு! என்று ஒதுங்கி இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஓடி ஓடி உழைத்தவர்கள் தான். துன்பங்களைத் தேடித் தேடி சம்பாதித்தவர்கள் அதற்கு தீர்வும் கண்டவர்கள். ஆனால் இன்று இந்த மானிடச் சமுத்திரத்தில் கலக்க முடியாமல் தவிக்க காரணம் இதயத்தைப பயிற்றுவிக்காமல் இயந்திரங்களோடு பழகிக் கொண்டிருக்கிற இளைய தலைமுறையோடு ஒத்துப் போக முடியாமல்தான் ஒதுங்கிப் போகிறார்கள். அதனால் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது. பலபேர் ஓய்வுக்குப் பிறகு தாங்களே முதியோர் இல்லம் தேடிச் செல்கிறார்கள். தன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளோடு பழக முடியாததால் தன்னை ஒத்த வயதினரோடு பேசிக் கொண்டிருப்பதற்காகத்தான் முதியோர் இல்லம் நாடுகிறார்கள். குடும்பம் என்பது உறவுகள் என்பதை மறந்து உற்பத்தி செய்வதோடு ஒதுங்கி கொள்வதாக அமைகிறது. மானிடமே எச்சரிக்கை! இதே நிலை நீடித்தால் நாம் மானிடச் ஜென்மமல்ல ரோபோக்களே!. இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் இனி ரோபோக்கள் கண்டுபிடிக்க வேண்டாம் மெல்ல மெல்ல ரோபோக்களாகவே நாம் மாறிவிடுவோம்.
அன்பு இதயங்களே ஆங்காங்கு சில உறவுகளைத் தேடி, உறவுகளைப் பேசி பழகுகிறவர்கள் நம் கண்ணுக்கு பைத்தியக்காரராகத் தெரியலாம். ஆனால் என் பார்வையில் அந்தப் பைத்தியம் நமக்குப் பிடிக்க வேண்டும். அன்பு செய்பவனை பைத்தியக்காரன் என்றால் நானும் ஒரு பைத்தியக்காரனாய் இருந்து விட்டுப் போகிறேன். அந்த பைத்தியக்காரனுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றால் அது அன்பு மட்டுமே நீங்கள் எப்படி?.