07
Mar
2021
பெண்கள் என்றால் எலும்பும் சதைகளால் ஆன பிண்டங்கள் அல்ல. ஆண்கள் அவற்றை ருசிக்கத் துடிக்கும் ஓநாய்களும் அல்ல இவற்றை மாற்றிச் சிந்திப்பவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல… இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே அக்னி வார்த்தைகளை அள்ளித் தெளிப்பதுபோல் தோன்றும்.
காரணம் நான் பார்க்கின்ற காட்சிகளும் கேட்கின்ற செய்திகளும். நெஞ்சைப் பதற வைக்கின்றன. எங்கு பார்த்தாலும் பாலியல் சீண்டல்கள் படர் தாமரையாகப் பரவிக் கிடக்கின்றன. தட்டிக் கேட்கும் பத்திரிக்கையாளருக்கும், தண்டனை கொடுக்கும் உயர் பதவியில் இருப்பவர்களுக்குமே இந்தக் கதியென்றால் வயலில் வேலைசெய்யும் சுப்பம்மாவுக்கும் கடையில் வேலை செய்கின்ற இராசத்திக்கும் என்ன கதியாகும்!? எண்ணிப்பாருங்கள் காரணம் இங்குள்ள சட்டங்களும் கட்டுப்பாடுகளும் மதக்கோட்பாடுகளும் பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது. ஆட்டை இன்னும் இருக்கமாகக் கட்டிப்போட்டு விட்டு புலியை தாராளமாக அவிழ்த்து விடுவதில்தான் சமூகம் அக்கறை காட்டுகிறது. இதுவா சமத்துவம்?!
பெண் குழந்தைகளை இப்படி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கண்டிக்கிற பெற்றோர்களே! ஆண் குழந்தைகளிடம் பெண் குழந்தையிடம் இப்படித்தான் பழக வேண்டும் என சொல்லியாவது கொடுங்களேன். பெண் குழந்தையென்றால் பேரு கெட்டுப் போய்விடும் என்கிறீர்களே! ஆண் பிள்ளை என்றால் அத்து மீறலாமா? இரண்டு கண்ணில் ஒன்றைப் பாதுகாப்பீர்களா? இரண்டு கைகளில், கால்களில் ஒன்றை வைத்து ஒன்றுக்குத் தீங்கு செய்வீர்களா? இதில் ஒன்று உயர்ந்தும் ஒன்று தாழ்ந்தும் இருந்தால் அது உடல் ஊனம்தானே? அப்படியென்றால் பிள்ளைகள் மட்டில் பாகுபாடு எதற்கு?
எங்கு பெண்குழந்தைகளுக்கு இழுக்கு ஏற்படும்போது அதன் மானம் காக்கத் துடிப்பவனே மறவன். மற்றவன் மடையன் ஆனந்த யாழைப் பாட்டுப் பாடுவது மட்டும் அப்பாவின் அன்பல்ல. தன் மகளை ஆண்மையோடும், ஆளுமையோடும் உருவாக்குவது அப்பாவின் கடமை. எந்தப் பெண் குழந்தையைப் பார்த்தாலும் நம் தாயோ, சகோதிரியோ, மகளோ நம் மனக்கண் தெரிய வேண்டும். இதற்கு மாறாகச் சிந்திப்பவன் தண்டிக்கப்பட வேண்டும். சமத்துவம் பேண வேண்டும் புதுச்சரித்திரம் எழுத வேண்டும்.
பெண் உரிமைக்குப் பெரிதும் குரல்கொடுத்தவர்களில் ஒருவர் இயேசு. ஒருமுறை அவரிடம் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பிடித்து அவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று யூதச் சட்டம் சொல்கிறது என்பார்கள். உடனே இயேசு விபச்சாரம் என்பது பெண் மட்டும் செய்வதல்ல. அப்படியென்றால் அந்த ஆண் எங்கே? அவனையும் இழுத்து வாருங்கள் அவனுக்கும் தண்டனை கொடுப்போம் என்றவுடன் அனைவரும் கலைந்துவிட்டார்கள். ஏனென்றால் ஆணுக்குத் தண்டனை கொடுக்கும் அளவுக்கு ஆண்மையுள்ளவர்கள் இங்கு குறைவு பெண்ணிடம் வீரம் காட்டுகின்ற பேடிகள் தான் இங்கு அதிகம். கிறிஸ்து சமத்துவத்திற்காகப் போராடினார்? கிறிஸ்தவர்கள்?
ஒருமுறை ஒரு கருத்தரங்கிற்குச் செல்லும் போது வெளிநாட்டினரும் அதில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த வெளிநாட்டுத் தம்பதியினர் பலரையும் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனைக் கண்ட அருகிலிருந்த நண்பர் அவருக்குத் தமிழ் தெரியாது என நினைத்து அவன் மனைவியைக் கட்டிப்பிடிக்கும் போதும் சிரித்துக் கொண்டிருக்கிறாரே என்றார். உடனே அவர் அழகாகப் பதில் சொன்னார் அவர்கள் என் மனைவியின் உடலை மட்டுமே தொட்டிருக்கலாம். ஆனால் என் மனைவியின் மனது எப்போதும் என்னை விட்டுப் போகாது என்று அழகிய தமிழில் பதில் சொன்னார். தன் மனைவியின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் நம்பிக்கையையும் என்னவென்று சொல்வது.!
நாம் என்ன நினைக்கிறோம்? மனசு எங்கு வேண்டுமானாலும் அலையட்டும் உடம்பை மட்டும் யாரும் பார்த்துவிடக் கூடாது தொட்டுவிடக் கூடாது என கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி வைத்து காவல் இருக்கிறோமே இதுதான் உயர்ந்த கலாச்சாராமா? சமத்துவம் இல்லாத எதுவுமே சமாதிதான்.
பெரியார் பெண் விடுதலையைப் பற்றிப் பேசும் போது விருப்பமில்லாத ஆடவனோடு வாழ்வதைவிட விரும்புகிறவனோடு ஒரு பெண் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அவள் திருமணம் ஆனால் கூட என்றார். உடனே அக்கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து அப்படியென்றால் உங்கள் மணியம்மையோடு நான் வாழலாமா? என்றார். உடனே பெரியார் சிரித்துக் கொண்டே அட முட்டாளே! இது மணியம்மையிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றார். இதனைக் கேட்கும்போதே சோட்டால் முகத்தில் அடித்தது போல் இருந்தது. இதுதானே சமத்துவம்! பெண்ணியம் பேணுதல்!.
என் தாயும், என் தமக்கையும், என் மகளும் பெண்தான். இவர்கள் என் வீட்டில் மட்டுமல்ல நான் ரோட்டிலும், காட்டிலும், எத்திசையிலும் நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களைக் கண்ணியத்தோடு காக்கின்ற கடமை எனக்குண்டு. என்னைப் பார்க்கின்ற ஒவ்வொரு பெண்ணும். தன் பாதுகாப்பை என்னில் பார்க்க வேண்டும். சிலருக்கு மகனாக, சிலருக்குத் தோழனாக சிலருக்குச் சகோதரனாக, சிலருக்குத் தகப்பனாக இந்தப் பூமியில் வாழ்வதற்குத் தானே புறப்பட்டு வந்திருக்கிறேன். எந்த நிலையிலும் நான் ஏமாறாமல், யாரையும் ஏமாற்றாமல் வாழ்வதே வரம். நீங்களும் அப்படியென்றால் நிச்சயம் கொண்டாடுங்கள் மகளீர் தினத்தை….
“‘மடியிலிருந்து – என்
மரணம் வரை – என்
தெய்வம் – என்
மடியிலிருக்கும் – என்
மகள் மட்டுமே”