09
Jun
2024
இந்திய சனநாயகம் ஒரு பெரிய வெற்றித் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வெற்றிகளும், தோல்விகளும் விமர்சிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் வெற்றியை பெரிதாக யாரும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. எந்தக் கட்சி வென்றது எந்தக் கட்சி தோற்றது என்பதிலும் பெரிதாக ஆர்வம் இல்லை. வேட்பாளர்களும் கட்சிகளுக்கும் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் நிறைவு இல்லாவிட்டாலும் ஒரு நிம்மதி இருக்கிறது.
இங்கு கட்சிகளை அதிகமாக யாரும் வெறுக்கவில்லை ஆனால் கட்சியில் இருந்து கொண்டு அதிலுள்ள தனிநபரின் அகங்காரங்களை ஆணவங்களை, அடக்குமுறைகளை வெறுக்கிறார்கள். சாதி, மத, இன வேறுபாடுகளை விதைத்தவர்களை எதிர்க்கிறார்கள். கொக்கரித்தவர்கள் எல்லாம் இப்போது கூனிக் குறுகி நிற்கிறார்கள் இவர்களுக்கு மட்டுமல்ல இன்று உலகிற்கே புரிகிறது இதுதான் இந்தியாவின் ஜனநாயகம் என்று. இப்படித்தான் மக்களும் தீர்ப்புச் சொல்வார்கள் என்று.
கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி வருகிறது என்பது காலம் கடந்தும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கிறது. வறுமை, வேலையின்மை, விலைவாசியேற்றம் எப்போதும்போல் இருப்பதும் எதிர்கட்சிகள் அதை எதிர்ப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த சில நாட்களில் மனிதாபிமானத்திற்கு எதிராக அரசியல் திரும்பியதால்தான் மக்கள் அவர்களை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மாற்றித் தீர்ப்பை எழுதியும் விட்டார்கள்.
மக்கள் பிரதிநிதியாகத் தேர்தலில் நிற்பவன் எண்ணற்ற பெண்களை வன்புணர்வு செய்து இருக்கிறான். அதனை ஒளிப்பதிவு செய்து மிரட்டி, உருட்டி நினைத்ததைச் சாதிப்பவன் எப்படி மக்கள் பிரதிநிதி என்று மாறுவேடம் போட முடியும்? கண்ணுக்கெட்டிய தூரம் எதிரியே இல்லை என்று சொன்னவர்களுக்கு இப்போது கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டதா?. எதிரில் எத்தனைபேர் எழும்பிவிட்டார்கள்! என்று எண்ணும் அளவிற்கு இறைவன் தீர்ப்பெழுதிவிட்டானே… இதுதானே ஆணவம்! இதற்குத்தான் ஆண்டவன் கொடுத்த அடி இது.
போகின்ற இடமெல்லாம் பொய்களை மட்டுமே அள்ளி வீசிக்கொண்டு, கொடுக்கின்ற வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு எல்லோரையும் ஏமாளியாக்கிவிட்டோம்! என நினைத்தவர்களை ஏமாளியாகவும், கோமாளியாகவும் இன்று மாற்றிவிட்டார்கள் மக்கள்.
அதிகாரம் கையிலிருக்கிறது என்ற ஆணவப்போக்கில் பெண்களை நிர்வாணமாக்கியவர்களை மக்கள் அரசியலில் நிர்வாணமாக்கி அலைய விட்டுவிட்டார்கள். அம்பு எறிவதுபோல் வம்பு செய்தவர்கள் இன்று செம்புக்குள் அடைக்கப்பட்ட சூன்யக்காரி ஆனார்கள்.
வறுமையில் மக்கள் வாடிக்கொண்டிருக்கும் போது பெருமைக்குக் கோவில் கட்டுகிற பிழை எங்காவது நடக்குமா? ஏழைகளின் இடுப்பில் இருக்கும் துண்டைப் பிடுங்கி பணக்காரர்களில் பாதணிகளைத் துடைக்கக் கொடுக்கும் துணிவை நீங்கள் எங்கேயாவது கண்டீர்களா? கட்சிக்காரர்களைப் பிளவுப்படுத்தி கரன்சி நோட்டுகளை அள்ளி வீசி துரோகம் செய்ய வைத்து தூக்கி வளர்த்தவர்களை தூக்கி எறியச்செய்யும் துச்சாதனர்களைதானே வளர்த்து விட்டீர்கள்! இப்போது மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டார்களே! துரோகம், எப்போதும் துணைக்கு வராது! புரிந்து கொள்ளுங்கள் அது நம்மையும் தொங்கவிடத்தான் செய்யும்.
இதுதான் இன்றைய உலகிற்கு இந்தியச்சனநாயகம் சொல்லும் பாடம். இங்கு யாரும் நிரந்தரமில்லை. எதுவும் நிலையானது இல்லை. நேற்று நாம் இருந்த நிலை கடவுள் கொடுத்தது நினைத்து வாடவும் வேண்டாம்! இன்று நமது நிலை கடவுள் கொடுத்தது வசதி வந்துவிட்டது என ஆடவும் வேண்டாம்! காற்றடிக்கும் தூசி கட்டிடத்தின் மீது பறக்கும் காற்று நின்று விட்டால் தூசி சாணியில் விழப்போகிறதோ! சகதியாய் விழப்போகிறதோ! தெரியாது. ஆகவே நம் நிலையை நாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையை பாருங்கள் பழைய பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது. ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? எல்லோரும் இங்கு தான்இருக்கும் இடமும், தான் வசிக்கின்ற பதவியும் நிரந்தரம் என நினைத்துத் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். பூமியின் இருப்பு நிரந்தரம் என பொருளைச் சேர்க்க ஆசைப்படுகிறார்கள். இதனால்தான் அவர்கள் மனிதநேயத்திற்கு எதிராக மாறி அரக்கனாகவும், அயோக்கியனாகவும் அவதாரம் எடுத்துவிடுகிறார்கள். பதவியில் ஆடிய பலபேர் இன்று வயதான பிறகு கை-கால் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம். ஆனால் அது நிரந்தரமல்ல. எனவே இறைவன் எவ்வளவு நாள் கொடுத்திருக்கிறானோ, அதில் நம் சந்தோசமாக வாழவும், பிறர் சந்தோசத்திற்காக வாழவும் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமே. இதில் முதலில் மற்றவரிடமிருந்து நம்மை வேறுபடுத்துவது ஆணவமும், அகங்காரமும், இதனை அதிகம் கொடுப்பது பணமும், பதவியுமே, பணமும், பதவியும் இருந்து நீங்கள் பலருக்கு நண்பராய் இருந்தால் உங்களுக்கு வாழத் தெரிந்திருக்கிறது என்று பொருள். உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையோ தற்கொலை எண்ணமோ எப்போதும் வராது. நிம்மதி என்பது உங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்.
கோபம் என்பது அடுத்த நிலையில் உங்களை அழிக்கும் ஆயுதம் இதனால் அடுத்தவர்களைத் திருத்தலாம் ஆனால் அழிக்கக் கூடாது. அதையும் மீறி உங்கள் வாயில் பிறரைக் காயப்படுத்தும் வார்த்தைகள் வந்து விட்டால்? தயங்காது பிறரிடம் உடனே சென்று மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். அது ஒன்றுதான் உங்களைத் தற்காத்துக் கொள்ளும் ஆயுதமாகும். நீங்களும் நிம்மதி அடையலாம்!
அடுத்து போட்டி, பொறாமைகள் இவைகள்தான் நம்மை எதிரும் புதிருமாக நிற்க வைக்கும் போட்டி கூட சிலநேரங்களில் நம்மை உயர வைக்கும் பொறாமை எப்போதும் நம்மை அழித்து விடும். இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமை தன்நிலையை தான் உணராமல் தனக்குக் கிடைக்காமல் அடுத்தவனுக்குக் கிடைத்துவிட்டதே என்பதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் அழிக்கத் துடிப்பது இதுதான். அடுத்தவர்கள் கோவில்கள் நிறுவனங்களை இடிப்பது சொத்துக்களை அபகரிப்பது போன்றவை நடப்பதற்குக் காரணமாகிறது.
தான் என்ற அகந்தை தனக்குத்தான் எல்லாம் தெரியும், தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்று எண்ணுபவர்கள் பிறரைச் சத்தமில்லாமல் அடக்கச் சாதியைக் கொண்டு வந்தார்கள் இன்றளவும், அடித்தட்டு மக்கள் எழுவதை எவரும் பொறுப்பதில்லை. அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கவே பொது வெளியில் அடித்துத் துன்புறுத்துவது, பெண்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்துவது இழிசெயலை அவர்களை நோக்கி ஏவிவிடுவது, அறுவெறுக்கத்தக்க செயலைச் செய்ய ஆணையிடுவது என்பதை அரங்கேற்றுகிறார்கள். அவர்கள் ஒருநாள் அசிங்கப்படுவார்கள்.
ஒரு படத்தில் ஒரு வசனம் உண்டு இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பார். ஆனால் இப்போது நம் நாட்டை மக்கள் காப்பாற்றி விட்டார்கள். அரசியல்வாதிகள் அழித்த சனநாயகத்தை மக்கள் மீட்டெடுத்து உள்ளார்கள். ஆங்காங்கே சில அரியாத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் நாட்டுப்பற்று உணவர்வோடு மக்கள் வளர ஆரம்பித்துவிட்டார்கள். உடனிருப்பவர்களை உருக்குலையச் செய்யக் கூலிப்படைகளை ஏவிவிடுவது போல அரசு இயந்திரங்களையே தவறாகப்பயன்படுத்தியதையும் நாட்டாமைகளை விலைக்கு வாங்கி நீதியைச் சாகடித்தவர்களையும் இப்போது நிலை குலையச் செய்துவிட்டார்கள். தவறு செய்தவர்கள் திருந்தாவிட்டாலும், மக்கள் தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டார்கள். இனி மக்களுக்குப் பயமில்லை. எவர் ஆட்சியமைத்தாலும் கொக்கரிக்காமல் குனிந்து கும்பிடு போட்டுக் கொண்டிருப்பார்கள். இனி அவர்களுக்குத் தூக்கமில்லை நமக்குத் துக்கமும் இல்லை. நாம் நிம்மதியாக இருப்போம். நல்லது நடக்கும்.
“வலியவனுக்கு,.
வலியவன்
வையகத்தில்
இருப்பான்…”