19

Jul

2024

மது…

இன்று நாடே பயங்கரப் பரபரப்பாக இருக்கிறது. காரணம் போதையை ஒழிப்பதற்காக புதிய அவதாரங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பொங்கி எழுவதைப் பார்த்தால் போதை போன இடம் தெரியாத அளவிற்கு போய் விடும் என்ற எண்ணம் வரும்! ஆனால் அடுத்து வருகின்ற தீபாவளிக்கு இலக்கு நிர்ணயித்து இத்தனை கோடி விற்று இருக்கிறது என்று கணக்கு காண்பிக்கப் போகிறார்கள்…

இப் போதை இப்போதைக்குக் குறையப் போவதில்லை பிறகு எதற்கு இந்த நாடகம்? என்று தான் தெரியவில்லை. எப்போதும் எதிர்கட்சிகளுக்கு இது ஒரு பெரிய ஆயுதம் இந்த மது விலக்கு! ஆளுங்கட்சி அதற்கு ஒரு வாக்குறுதி கொடுப்பார்கள் இப்போதை படிப்படியாகக் குறைக்கப்படும் என்பார்கள். ஆனால் விற்பனை லிப்ட் வேகத்தில் மேல் ஏறிவிடும்.

நாடு நலம் பெற வேண்டுமென்றால் பயிர்கள் செழித்தோங்க வேண்டும். பயிர்கள் செழித்தோங்க வேண்டுமென்றால் களைகள் அகற்றப்பட வேண்டும். இங்கு நம் நாட்டில் களைகள் என்பது போதைதான். போதை இங்கு களையப்படவே இல்லையே! அது பற்றிய கவலைகள் கூட இல்லையே! ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே நாளில் அத்தனையும் ஒடுக்கப்படும். ஏனென்றால் உற்பத்தி செய்கிறவர்களும் அதற்கு ஒப்பந்தம் செய்கிறவர்களும் அவர்கள்தான். உற்பத்திக்கு உத்தரவு கொடுத்து விட்டு குடிப்பவர்களின் குரல்வளையைப் பிடித்து விட்டால் குடியை நிறுத்திவிடலாம் என்று எந்தக் கூமுட்டையும் நினைக்க மாட்டான்.

பொதுவாக மனிதனுக்கு மண், பெண், பொன் இந்த மூன்று ஆசைகளில்தான் அழிகிறான் என்று சொல்வார்கள். ஆனால் இந்த மூன்றையும் தாண்டி இன்று மனிதன் அழிவது குடியால்தான். குடியைக் கொடுக்கிறவன் மண்ணை ஆள்கிறான். குடிப்பவன் பெண்ணைச் சீரழிக்கிறான். குடிக்கக் காசில்லாதவன் பொன்னைத் திருடுகிறான். இந்த ஆசையின் அலங்கோலங்களுக்கு குடிதானே ஆணிவேர்.

விவிலியத்தில் ஒரு காட்சி உண்டு ஏரோது என்ற மன்னன் தன் அண்ணன் மனைவியை வைத்திருந்தான். அந்தச் சமயத்தில் யோவான் என்ற தீர்க்கத்தரிசி வாழ்ந்து வந்தார். அவர் இவன் தவறுகளைக் கடிந்ததால் அவரைச் சிறையிலடைத்துவிட்டான். சிறையில் வைத்து இருந்தாலும் அவர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தான். அவர் சொல் கேட்டு வருந்தினான். திருந்தி விடுவான் என நினைத்த நேரத்தில் ஒரு விருந்தில் மது போதையில் இருந்த ஏரோது மன்னனை சிலர் தூண்டிவிட்டு யோவானின் தலையை வெட்டச் செய்துவிடுவார்கள். இதனால் போதையில் பாதை தடுமாறிய ஏரோது இன்று வரை அந்த வரலாற்றுக் கரையோடு வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறான்.

இப்படிச் சில பாவங்கள் பூமிக்கு வரும்போது குருக்கள், மதத்தலைவர்கள் அதன் அழிவிலிருந்து மீட்டெடுப்பார்கள். சாமிக்கே சாராயம் படைத்து கும்பிட்ட கூட்டம் இது. ஆனால் அது கூட கண்ணியமாக இருந்தது. ஆனால் நாகரீகம் பெருகியபோது வண்ண விளக்குகளில் பணக்காரர்கள் குடிக்க, சாலை ஓரங்களில் தொழிலாளர்கள் குடித்துவிட்டுக் கிடக்க தண்ணீர் பஞ்சத்தைக் கூட தாங்கிக் கொள்கிற எங்களால் பண்டிகை நாளில் அடைக்கப்படுகின்ற டாஸ்மார்க்கைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இன்று மதத்தலைவர்களே மதுத்தலைவர்களாகத்தானே தெரிகிறார்கள். பூசைகளில் எல்லாம் இப்படித்தானே பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களுக்கே அது பாவம் என்று தெரியாத போது அவர்கள் அடுத்தவர்களை அதிலிருந்து எப்படி மீட்டெடுப்பார்கள்? இன்று துறுவறமும் தூய்மையை இழந்து தூக்குமேடையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் குடியிலேயே அவர்கள் குடியிருப்பதால்…

நாட்டிற்கு வளர்ச்சியை அரசு செய்ய வேண்டும். வளர்ச்சியைத் தடுக்கும் தீயசக்திகளை அரசு தடுத்து ஒழிக்க வேண்டும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கிறது. குருகுலக் கல்வியை விற்றுவிட்டு குடிப்பதற்கு அரசு வழிவகை செய்து கொடுக்கிறது. காரணம் நாடு வியாபாரிகளால் ஆளப்படுகிறது.

வியாபாரிகளுக்குத் தெரிந்தது எல்லாம் இலாப நட்டமே… முதலீடு, வருமானம் அவர்களது மூலதனம் நாட்டை ஆள்வதற்கு அவர்கள் போட்டி போடுவதற்குக் காரணம் நாட்டை அவர்கள் ஒரு சந்தையாகப் பார்ப்பதால் தான். கையில் கிடைத்ததைச் சுருட்ட வேண்டும். சுருட்டியதை விற்க வேண்டும். விற்பதில் வசதியைப் பெருக்க வேண்டும். மண்ணகத்திலேயே மகாராசாவாக வாழ வேண்டும். இதைத் தவிர வேறு எந்த இலட்சியமும் இல்லை. இதனால் தான் அன்பைப் போதிக்க வந்த இயேசு கூட கோவில் கூடாரம் வியாபாரிகளின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்று சவுக்கை எடுத்துச் சுற்றுகிறார். வியாபாரிகளை விரட்டி விட்டால் நாடோ, வீடோ சுரண்டலில் இருந்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

நம் நாடு சுதந்திரம் அடையுமுன் அதற்காகப் போராடியவர்கள் சிறை சென்றார்கள். அது நாட்டுப்பற்று அதே பற்றுடன் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டை ஆண்டார்கள். இன்று அதற்காகச் சிறைக்குச் சென்றவர்களையெல்லாம் அழைத்தா சிம்மாசனம் கொடுப்பது? அல்லது சிறைக்குச் செல்ல வேண்டியவர்களை வைத்தா கட்சியை வளர்ப்பது? இங்கு எல்லாமே வியாபாரமாகிவிட்டது. எங்குமே வியாபாரிகள் பெருகிவிட்டார்கள். நாளை நம்மையும் விற்று விடுவார்கள் எச்சரிக்கை…

சுயபுத்தியில் யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத்தான் நாடு சோமபான, சுராபானத்தில் சொர்க்கத்தைப் பார்க்க ஆசைப்படுகிறது. இன்று பணக்கார வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் சாராய வியாபாரிகளே! தான் சமுதாயத்தில் பெயரோடு நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு பலரைத் தள்ளாட வைத்திருக்கிறார்கள்.

இன்று குடிப்பதை தடுப்பதற்காகச் சட்டம் இருக்கிறது விளம்பரங்கள் இருக்கிறது. ஆனால் சினிமாவில் குடியோடு பாட்டு இல்லாத படத்தைக் காண முடியாது. குடி இல்லாத கோயில் திருவிழாக்கள் இல்லை குடி இல்லை என்றால் நட்பிற்கு அடையாளம் இல்லை. குடி இல்லை என்றால் உறவுகள் சேர்க்கை இல்லை பாண்டிச்சேரியின் புகழே பார் நடத்துவதில் அல்லவா இருக்கிறது!

கோவாவின் சிறப்பைக் கொண்டாடுகிறார்கள்! எதற்கு? மது நாட்டுக்கு வீட்டுக்கு உடம்பிற்குக் கேடு என்கிறீர்கள். சரி அப்படியென்றால் அதை ஏன் விற்கிறீர்கள்? அதுவும் அரசே ஏற்று நடத்துகிறதே ஏன்? நாட்டிற்கு நல்லது செய்கிறேன் என்று தானே மக்களிடம் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள்? என்னாச்சு?

அரசியல்வாதிகள் வரவில்லை, வியாபாரிகள் வந்தார்கள் காசுகளைத் தந்தார்கள் எங்களிடம் இருந்த ஓட்டுக்களை வாங்கினார்கள். நாங்கள் வெற்றியடைந்தோம் என்றார்கள். பிறகு தவணை முறையில் பணத்தினைப் புடுங்கி எங்கள் தாலிவரை எடுத்துக் கொண்டார்கள். தேர்தலுக்கு உழைத்தவர்களுக்குக் கூட குடிப்பதற்கு கொண்டு வந்து கொடுத்ததனால் நாங்கள் ஓட்டைக் கொடுத்து “மாண்புமிகு” வாக்கினோம். அவர்கள் இப்போது திருவோட்டைக் கொடுத்து எங்களைத் தெருவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். சாராயச் சாவுகளைக் குறித்து பேசுகிறோம். இந்தச் சமுதாயம் குடியில் மூழ்குகிறதே யார் காப்பாற்றுவார்? இறைவனுக்கே வெளிச்சம்.

“ஏழைகளின்
வியர்வைகளை
எப்போதும் மதுக்கள்…
குடித்துவிடுகின்றன”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES