02

Jan

2026

மனதிற்கினிய… மரிய பூரணத்திற்கு!

நீ எனை விட்டுப் போனபிறகும் நான் நலமாக இருக்கிறேன். நீ நலமா? என நான் இனி எப்படி அறிவது?

எனை விட்டுவிட்டுப் போய் விட்டாய்…! என்மேல் இந்த உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும் அந்த அளவு அன்பு செய்ய முடியாது அதற்குத்தான் அம்மா என்று பெயர் வைத்தவனையே… நான் பெருமையாக நினைத்துக் கொள்கிறேன்.

உன் விரல் பிடித்து கொண்டு நான் சந்தோசமாக அலைந்த நாட்கள் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் என் நினைவு முழுவதும் நீயாகிவிட்டாய்! எனது முதல் முத்தமும் நீதான்! என் முதல் சத்தமும் நீதான். நீ சாவை முத்தமிட்ட பிறகு என் சத்தம் எல்லாம் அடங்கி விட்டது. நான் சத்தமாக அழுதது உன் சவத்தை எடுத்துக் கொண்டு போகும் போதுதான்….

அம்மா உனது பிரிவு எனக்கு பெரிய மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது இதனால் பல நாள் நான் தூங்காத இரவுகளைக் கடந்திருக்கிறேன். மருத்துவர் என்னிடம் தூக்க மாத்திரை எடுக்கலாம் என்றார். அம்மா உனக்குத் தெரியும் உன் சேலையை நான் மூடிக்கொள்ளும் போதெல்லாம் தூக்கம் தானாகவே என்னைத் தழுவிக்கொள்ளும். உன் முந்தானை சேலையின் வாசம்தான் எனது சிறு குழந்தை பருவத்தின் தூக்க மாத்திரை.

உன் இறுதிப் பயணத்தில் நீ போகும் போது புத்தாடை அணிந்து புதுப்பொலிவுடன் போய்விட்டாய். நீ மட்டும் இருந்தால் அந்தச் சேலையை என்னிடம் கொடுத்துவிட்டுப் போயிருப்பாய். நீ கண்களை முடியிருந்ததால் என் கையில் எள்ளும் தண்ணியும் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள்.

அம்மா உனக்குத் தெரியுமா? நீ இறந்த அன்று நான் மனம் உடைந்து அழுதுவிட்டேன். நல்ல வேளை நீ கண்ணை மூடி! கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்தாய் இல்லையென்றால் நீயும் நான் அழுவதைப் பார்த்து அழுகையை அடக்கியிருக்க மாட்டாய்! ஆனால் அம்மா அன்றைக்கு எல்லோரும் உன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள் நீ மட்டும் ஏனோ யாரிடமும் பேசாமல் இருந்தாய்…? எங்களைப் பிடிக்கவில்லையோ என்னமோ…!

எப்போதாவது உனக்கு சேலை எடுத்து வந்தால் எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்? என்பாய்! ஆனால் அன்றைக்கு அத்தனைபேரும் சேலை எடுத்து வந்தும் எதுவுமே சொல்லவில்லையே ஏன்? கலர் பிடிக்கவில்லையா? அதற்குத்தான் நீ கண்களை முடிக்கொண்டாயா..? அதற்குப்பிறகு உன்னை எங்கு தேடியும் காணவும் இல்லையா…?

சின்ன வயதிலிருந்து உனக்கு நான் கடைசிப் பிள்ளையாய் இருந்ததனால்; எங்கேயும் யாரிடம் என்னை விட்டுவிட்டு போகமாட்டாய். எப்போதும் சீக்கிரம் என்னை தேடி வந்து விடுவாய். அதனால் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக எங்க அம்மா வருவாள் என்று மேற்கிலிருந்து வரும் பாதையை பார்த்துக் கொண்டே இருப்பேன். எங்கள் ஊருக்கு மேற்கே எங்கள் ஊர் கல்லறை இருக்கிறது. கல்லறைப் பக்கம் வரும்போது அம்மாவை ஒடிப்போய் கட்டிப்பிடிப்பேன். அம்மா முத்தம் கொடுப்பாள் (ஆனால் இப்போது கல்லறை பக்கம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்) அம்மா வரவே இல்லை பாவம் நான் இலவுகாத்த கிளி.

எங்க அம்மா ஏதாவது தவிர்க்க முடியாத வேலைகளுக்கு வெளியே போக வேண்டுமென்றால் என்னை என் அக்காவிடம் விட்டுச்செல்வாள்; அவள் கூடப்பிறந்ததால் அக்காள். அவள் எனக்கு அம்மா கொடுத்த அம்மா. அவள் உச்சரித்த வார்த்தைகளில் என் உள்ளம் கவர்ந்தது என்னை பெருமையாகச் சொன்ன என் தம்பி இவன் என்பதுதான். அவள் சொன்ன அந்த வார்த்தையா? வாழ்க்கையா? என்னை அகில உலகத்திற்கு மட்டுமல்லாமல் ஆகாயம் வரை என் பெயரைச் சுமந்து சென்றது.

நான் சாதாரணமானவன் அல்ல அந்த இராமனுக்கே தம்பியாய் பிறந்தவன். ஆனால் எனது இராமன் தம்பி இலட்சுமனனையே படிப்பதற்காக முதலில் போனான். பின்பு சில காலம் என்னோடு வாழந்து என் வாழ்க்கையின் பல நிலைக்குக் கொண்டு வந்தவன். என் எதிர்காலமாக இருந்தவன். பின்பு பாழும் நோயினால் என்னைப் பாதியிலே பரிதவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டான். அவன் மட்டும் இருந்திருந்தால் எனக்கு அகில உலகமோ ஏன் ஆண்டவனே தேவையில்லை!

ஆனாலும் என் அக்கா மட்டும் இல்லையென்றால் இன்னும் அழுது கொண்டே இருப்பேன். அம்மாவைப் பற்றி எழுதும்போது சிலரை நினைவுப் படுத்தாலும் ஆனால் நிரப்பி விட முடியாது! என்று கூறி இருந்தேன். ஆனால் எனக்கு அக்கா அம்மா உருவத்திலும் இருக்கிறாள்.

ஒரு தாயின் கனவு தன் பிள்ளை சம்பாதித்து நமக்கு அனுப்புவான் என்பது. ஆனால் நான் என் அம்மாவை அனுப்பும்வரை சம்பாதிக்கவேயில்லை. நான் சம்பாதித்தது இல்லை என்பதால் பாவம் என் அம்மாவின் கனவு என்னில் நிறைவேறாமலே போய்விட்டது.

நாங்கள் மூன்று பேர் ஆனாலும் அதிகமாக அம்மாவிடம் வாழ்ந்தவன் நான் தான். அதனால்தான் இன்னும் என் மனதில் நீ வாழ்ந்து கொண்டே இருக்கிறாய். எல்லோரும் சொன்னார்கள் உங்க அம்மா இறந்திட்டாங்க என்றார்கள். எங்க அம்மா இறக்கலாம்… ஆனால் என்னைப் பார்க்காமல் இருக்கமாட்டாள் இப்ப வந்திருவாள்… வந்துருவா.

நான் என்னதான் குளிச்சாலும் நீ வந்து குளிப்பாட்டினாத்தான் உனக்குத் திருப்தியா இருக்கும். ஆனா உனக்காக நான் குளிக்கணும் அது சாத்திரம் என்று அன்று என்னைக் கட்டாயப் படுத்தினார்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? எங்கம்மா வந்து குளிப்பாட்டாம நான் குளிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தேன். ஆனா யாரோ ஒருவர் சொன்னார் அம்மாவை குளிப்பாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

எம்மா அன்றைக்கு எத்தனையோ பேர் நம்ம வீட்டிற்கு வந்திருந்தார்கள். நீ ஏனோ எழுந்து யாரையும் வாங்கன்னு கேட்கவில்லை ஆனா உன்னை புதுப்பெண் போல் அலங்கரித்து வைத்திருந்தார்கள். யார் கண்ணும் பட்டுவிடக்கூடாது என்பதற்காக உன்னைப் பெட்டியில் வைத்துத்தான் வெளியே கொண்டு வந்தார்கள் ஆனால் அந்த பெட்டியை எங்கே வைத்தார்கள்? தெரியல எங்கம்மாவையும் காணல..

அம்மா நீ இருக்கும்வரை நான் அழுததே இல்லை… ஆனா இப்போ அழுகை அழுகையா வருது… கண்ணீரைக் கைக்குட்டையால் துடைப்பார்களாம். ஆனால் எல்லாக் கண்ணீரையும் எங்கம்மா முந்தானைதான் துடைத்தது. ஆத்தாசேலை தொட்டிலானது… தூங்கும்போது பாயானது… குளிக்கும்போது தலைதுவட்டியது… குளிர் அடிக்காமல், கொசுக்கடிக்காமல், மூடி நின்றது. மழைக்காலத்தில் குடையானது ஆனால் அவளுக்கு கடைசிவரை ஒரு சேலையும் எடுத்துக் கொடுக்க வழியில்லாமலேயே வாழா வெட்டியாய் வாழ்ந்து விட்டேன்.

அம்மா யார் கொடுத்த அன்பையும் ஒரு தாய் கொடுக்க முடியும்! ஒரு தாய் கொடுத்த அன்பை இனி யார் கொடுக்க முடியும்?

அம்மா ஆவியோடு பேச முடியுமா இந்தப் பாவி? எனக்கு எல்லா இடத்திலும் உன் உருவம் தெரிகிறது! எல்லாத் திசையும் உன் குரல் கேட்கிறது. எல்லோர் மனங்களிலும் உன் அன்பு புரிகிறது. ஆனால் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருக்கிறது.

துக்கம் எவ்வளவு கொடியது என்பது நெஞ்சில் சுமப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அம்மாவை இழந்த பிறகுதான் உலகம் நம்மை உதறிவிட்டது என்பது புரியும். ஆயிரம் இருந்தால் என்ன அம்மாவுக்கு ஈடாகுமா?

எங்கம்மா வருவா… என்னைத்தனியா விடமாட்டா… வாம்மா… வா… காத்திருக்கிறேன். இல்லேன்னா கூட்டிட்டுப்போ… உன்னைப் பார்க்காம இருக்க முடியல…

நனைந்த விழிகளுடன்…

உனது மகன்

“நிச்சயம் மழை வரும்
என் மீதும்…
சில துளிகள் விழும்…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES