28

Jan

2023

மனம் திறந்த மடல்….

எத்தனையோ வலைத்தளங்கள் இணையத்தில் விரிந்து கிடக்க இந்த இளையவனின் வலைத்தளமும் ஒன்று இதில் நான் எழுதத் துவங்கும் போது எனக்குள் ஏதோ ஒரு வேட்கையோ சாதிக்கத் துடிக்கும் எண்ணமோ என்னிடம் இருந்தது இல்லை. ஆனால் நான் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏதோ ஓன்று சொல்லத் துடிக்கின்ற செய்திகள் புதைந்து கிடக்கிறது என்பதனை நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் சொல்ல மறந்ததை சொல்லத் துடித்ததை நான் சொல்ல முயற்சிக்கிறேன். அதனை நீங்கள் வாசிக்கும் போது உணர்வீர்கள் என நம்புகிறேன்.

இதுதான் பாதை! இதுதான் பயணம்! என்ற நோக்கில் இந்தப் பயணம் இல்லை இதைத்தான் சொல்ல வேண்டும் இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் எனக்கு இல்லை ஏனென்றால் எண்ணப் பறவை எப்படி வேண்டுமென்றாலும் பறக்கும் என்பது என் எழுத்துக்களோடு பயணிக்கும் உங்களுக்குப் புரியும். அதனை எந்தக் கூட்டுக்குள்ளும் இன்னும் எவரும் அடைக்க விரும்பவில்லை. அதற்காக உங்களை வாழ்த்துக்கிறேன் இந்த எழுத்துக்களை வாசிக்கின்ற நீங்கள் என் வாசகர்கள் அல்ல எனது குருக்கள் எனது குருக்கள் அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள். நீங்கள் உடனிருக்க எனது கற்பனைக் குதிரை எந்த மலையையும் கடந்துவரும் இந்த மைதானத்திலும் நடந்து வரும்.

அருகிலிருந்து சிலர் என்னை ஆற்றுப்படுத்துகிறீர்கள் பக்கத்தில் இருந்து சிலர் என்னைப் பாராட்டுகிறீர்கள். தூரத்தில் இருந்து துரோணாச்சாரியாக கற்றுத்தருகிறீர்கள் உங்கள் ஒவ்வொருவரின் பாராட்டுதலிலும் நான் உயர்ந்து நின்று, இன்று எனக்கு இமயமலையே இடுப்பளவுதான் தெரிகிறது.! நீங்கள் தருகின்ற உற்சாகத்தில் என் பேனாவின் பிரசவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு பாராட்டுதலையும், நான் வேதமாகவும், விவிலியமாகவும், கீதையாகவும், குரானாகவும் கொண்டாடி மகிழ்கிறேன். நீங்கள் என்னை உச்சி முகர்ந்து உச்சத்தில் வைத்திருக்கிறீர்கள்.

எனது வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை யாரையும் ஏனோ, தானோ என்று அன்பு செய்ததில்லை. ஒவ்வொருவரையும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தே உணர முற்பட்டிருக்கிறேன் அப்படியிருப்பதனால் அவர்களின் உள்ளக்கிடங்கையும் உணர முற்பட்டிருக்கிறேன். அதன் தாக்கம் தான் இந்த எழுத்துக்கள் ஆனால் உங்களுடைய கருத்துக்களை உங்கள் உணர்வில் நான் பதிவு செய்யவில்லை என்றாலும் ஓரளவு நான் உளறியிருக்கிறேன். இதற்கே நீங்கள் தருகின்ற ஆதரவும், பாராட்டும் அந்த ஆண்டவனால் கூட கொடுக்க முடியாது வாழ்த்துங்கள் வளர்கிறேன் இல்லை இல்லை வாழ்கிறேன்.

அதே வேளையில் உங்கள் ஒவ்வொரு ஆலோசனைகளையும் சிரமேற் கொண்டு சிந்திக்கவும் விரும்புகிறேன். அப்படி வந்த பதிவுகள் ஒன்றை உங்களோடு பகிர விரும்புகிறேன். அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உரியதாகவும், உயிரானதாகவும் இருப்பதால் உங்கள் பார்வைக்கு ஒரு ஓலை அனுப்புகிறேன்.

மதிப்பிற்குரிய சுதா அவர்கள் ஒரு குரல் பதிவை எனக்கு அனுப்பி இருந்தார்கள் அதில் உங்கள் பதிவில் விவசாயிக்குக் கடிதம் அதை நான் படித்தேன் ரசித்தேன் அதில் மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் உணர்ச்சி மிகுந்ததாகவும் எழுதி இருந்தீர்கள். ஆனால் எல்லாம் ஏட்டளவிலும் பேச்சளவிலும் இருந்து என்ன பயன்? விவசாயத்திற்கும் விவசாயிக்கும் முக்கியத்துவம் இல்லையே? விவசாயியை மற்ற அதிகாரியைப் போல் வணங்குவதில்லை? என்று கேட்டிருந்தார்கள்? இது என்னைப் பார்த்து கேட்ட கேள்வியானாலும் உலகிற்கு உணர்த்த வந்த கேள்வி? ஆகவே உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்! உங்கள் பதில் என்ன?

அன்பிற்கினிய சுதாவிற்கு உங்களுக்குப் பதில் சொல்லுவது போல் ஒவ்வொருவருக்கும் இதனை வாசிக்கத்தருகிறேன் எங்கள் பள்ளியில் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒரு விவசாயி தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை வைத்துள்ளேன். என்னைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு கொடி வணக்கமும் விவசாயினால் தான் ஏற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் யாரும் முன்வருவதில்லை அவர்களுடைய ஏழ்மை, இயலாமை, நமக்கென்ன தெரியும் என்ற நம்பிக்கை அவர்கள் தயங்குகிறார்கள் அதனால் தான் முடியவில்லை.

விவசாயி குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி நிலையங்களில் முன்னுரிமை வழங்குகிறோம். எங்கள் ஆசிரியர்கள் தொடக்கத்திலேயே விவசாயிக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் விவசாய வேலை தடைப்படும் படி எந்த விவசாயியையும் பள்ளிக்கு அழைத்துக் காக்க வைப்பதில்லை அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களைச் சந்திக்கிறோம் மேற்படிப்புக்கும் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறோம்.

கடந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு மாநில நல்லாசிரியர் விருது, சிறந்த பள்ளி விருது, அதிகமான மாணவர் சேர்க்கை, அதிகமான மாணவர்கள் தேர்ச்சி, மாவட்ட ஆட்சியர் பாராட்டு, பல்வேறு இயக்கங்கள் சங்கங்களின் பாராட்டு என்று பல பட்டங்களைப் பெற்றோம் எங்கள் பள்ளியில் நடைபெற்ற அப்பாராட்டு விழாவிற்கு என் அக்காவின் கணவர் ஒரு விவசாயி என்ற முறையில் திரு காசிராஜன் அவர்களே தலைமையேற்று நடத்தினார்கள். இன்றளவும் அவர்கள் ஆலோசனையின் படியே நடக்கிறேன் எல்லா நிலையிலும் நான் விவசாயத்தை ஏற்றி வைத்திருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், முடிந்தவரை நான் விவசாயம் காக்க முயற்சி செய்கிறேன். எங்கள் பள்ளியில் விவசாயப்பிரிவு மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்குவிக்கிறேன் உற்சாகப்படுத்துகிறேன்! இதனை வாசிக்கின்ற நீங்கள் என்ன வாய்ப்புத் தருகிறீர்கள்? வாழ வைக்கிறீர்கள்? உங்கள் பதில்? நான்! நீங்கள்?

“விவசாயம் காப்போம்
என்பதல்ல முழக்கம்!
விவசாயம் பார்ப்போம்
விவசாயியைக் காப்போம்!”

ARCHIVES