03

May

2020

மனிதராய் இருப்போம்

“தானாக யாரும் பூமிக்கு வரவில்லை!”
“அதுபோல தனக்காகவும் வரவில்லை!”

கடவுள் படைப்பில் உலகம் என்பது ஒரு அழகிய ஏதேன் தோட்டம். அதனை ஆள, அனுபவிக்க, அதனை உருவாக்க, பிற உயிர்களை மகிழ்விக்க, தனக்குப் பதிலாக இறைவன் மனிதனைப் படைத்தான். மனிதன் அத்தோட்டத்தில் ஆடலாம், பாடலாம், ரசிக்கலாம், புசிக்கலாம். சுதந்திரமாக அதனைச் சுற்ற வைத்தான். இவை அனைத்திலுமே பொதுநலம் இருந்தது.

ஆனால் மனிதன் உலகத்தைத் தோட்டமாகப் பார்க்க மறந்தான். அவன் பார்வையில் உலகம் அவனுக்கு ஒரு சந்தையாகத் தெரிந்தது. அதனால் தான் இவ்வுலகிலிருந்து எதனைப் பறிக்கலாம்! எதனைப் பதுக்கலாம்! ஒதுக்கலாம்! யாரை ஏமாற்றலாம்! யாருக்குக் குழிபறிக்கலாம் யாருக்கு வழிமறிக்கலாம் என்று அவன் எண்ணத் தோன்றினான்.

ஆதி மனிதன் இயற்கையிலிருந்து தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டான். தேவைக்கு அதிகமாக இருப்பின் அருகிலிருப்பவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தான். நம்மைவிட அருகிலிருப்பவர்களுக்கு அதிகம் தேவைப்பட்டால் தன் தேவையைக்கூட குறைத்துக் கொண்டான்.

காலப்போக்கில் மனிதன் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன் உழைப்பை அதிகப்படுத்தினான். தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் உணவளிக்க விளைபொருட்களை உருவாக்கினான். தனக்கு வீடு கட்டும் போது தன்னோடு வாழும் உயிர்களுக்குக் கூடாரம் அமைத்தான், குளம் வெட்டினான், அனைத்து உயிர்களும் தாகம் தீர்க்க, அன்ன சத்திரம் அமைத்தான். இப்படிப் பொது நலத்தில் வாழ்ந்தவன் நாகரீகத்தின் பேரில் தேவையை ஆடம்பரமாக்கிச் சுய நலத்தில் சுருண்டான்.

இப்போது மனிதர்களுக்கு உலகம் என்பது ஒரு சந்தை. ஒவ்வொரு மனிதரைச் சந்திக்கும்போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும். இதனால் எனக்கு என்ன இலாபம்? எனக்கு என்ன கிடைக்கும்? என வியாபார நோக்கிலேயே சிந்திக்க ஆரம்பித்தான். அடுத்தவர்களுக்குக் கொடுக்க நினைத்தவன் அத்தனையையும் தனக்கே வைத்துக் கொள்ள ஆசைப் பட்டான். மனித நேயம் செத்துப் போனது. இதனை மாற்றியமைக்கத்தான் இறைவன் அவ்வப்போது விடுக்கும் எச்சரிக்கை மணி தான் இயற்கைப் பேரிடர்கள்.

இப்போது கொரோனா என்ற கொடிய வியாதியால் இறைவன் நமது குரல்வளையைப் பிடித்து விட்டான். திருந்து, திருந்து என இறைவன் திருப்பித் திருப்பி அனுப்பிய எச்சரிக்கையை எல்லாம் திரும்பிக்கூட பார்க்காமல் நமது வியாபரத்திலேயே குறியாய் இருந்தோம். வியாபாரிகளாய் ஜெயித்தோம். மனிதராயத் தோற்றுவிட்டோம். வாருங்கள் மனிதர்களாவோம்.

இடர்கள் வந்துவிட்டது. இடர்பாடுகளுக்குள் மனிதன் சிக்கிக் கொண்டான். ஓவ்வொருவரும் வியாபாரிகளாய் மாறி அடுத்தவர்களை வாடிக்ககையாளர்களாய்ப் பார்த்துப் பேரம் பேசினோம். ஏமாற்ற நினைத்தோம், அபகரித்தோம், பதுக்கினோம், ஒதுக்கினோம், வசதி வாய்ப்புகளைப் பெருக்கினோம். இதனை மாற்றி மனம் திருந்தி மனிதராவதற்கு நமக்குள் இருக்கும் வியாபாரிகளைக் கொன்று மனிதர்களாய் மாறுவோம்.

ஆங்காங்கு மனிதர்கள் உணவுக்காகச் செத்துக்கொண்டு இருக்கும் போது ஐய்யய்யோ வியாபாரம் போச்சே என்று மார்பில் அடிக்கும் மனச்சாட்சியே இல்லாத வியாபாரிகளின் குரல்கள்தானே அதிகமாகக் கேட்கிறது! இது அசிங்கமாக இல்லையா?

இந்த நேரத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் நிதி கொடுக்கவில்லை என்று விமர்சித்துக் கொண்டு இருக்கிறோமே? நாம் என்ன கொடுத்தோம்? குடிப்பதற்கு அலைகிற கூட்டம் தமக்குப் பக்கத்தில் குடிக்கக் கூட கஞ்சி இல்லையே! என்று எட்டிப் பார்த்து இருப்போமா?

இப்போது ஊரடங்கு உத்தரவு! எப்போது மீண்டும் சகநிலை திரும்பும் எனத் தெரியாது. எந்தப் பலசரக்குக் கடைக்காரர்களோ, துணிக் கடைக்காரர்களோ, உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பவர்களோ தனது கடையைத் திறந்து இல்லாத ஏழைகளுக்கு எடுத்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறார்களா? இல்லையே? கேவலம் கெட்டுப் போன பொருளைக் கூட இனி எப்படி விற்கலாம் எனக் கீழ்த்தரமாகத் தானே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

டாடா நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்து விட்டு இன்னும் வேண்டுமென்றால் என் சொத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறாரே! ஒரு மனிதர். காரணம் அவர் வியாபாரி அல்ல, மனிதர். மனிதரின் மாணிக்கம் நாமும் மனிதராவோம். மனிதர்களை வாழ வைப்போம். மனித நேயத்தைக் கட்டிக் காப்போம். இந்த பூமிக்கு நாம் தான் மனிதர்கள் என்று கொடுப்பதின் மூலம் நம்மை அடையாளம் காட்டுவோம்.

ARCHIVES