26
Dec
2021
இதை எப்படி எழுதுவது? இதயத்தில் ஈரம் இல்லாமல் இறந்தவர்களின் கல்லறை காயுமுன் எப்படி வரைவது தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. இறந்த மகன்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக மௌன அஞ்சலிக்காக அந்த மரணத்தின் வலியை சுமந்து கொண்டு நிற்கிறது.
எப்படி நடந்தது? யாரால் நடந்தது? ஏன் நடந்தது? என்றெல்லாம் இங்கு ஆராயும் நிலையில் நாம் இல்லை விதியின் விளையாட்டு வேறு மாதிரி முடிந்துவிட்டது. தர்மம் தலைகாக்கும் என்பார்களே அது இப்போது பொய்த்துப் போய்விட்டதோ. அந்தப் பள்ளியை நடத்துகிற நிர்வகிக்கிற அத்தனைபேருமே ஏழை மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்குபவர்கள் அவர்கள் மனசு நோகும்படி இந்த நிகழ்வு அமைந்து விட்டதே என்பதுதான் மனசு இன்னும் வலிக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயேசு பிறப்பு பிறந்தபோது ஏரோது மன்னன் குழந்தைகளைக் கொன்று குவித்தான் என யூத வரலாறு கூறுகின்றது. அதேபோல் இப்போது இயேசு பிறக்க இருக்கின்ற நேரத்தில் இப்படிக் குழந்தைகளை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறோமே! இறைவா! உமது இதயத்தில் இரக்கமில்லையா? இல்லை எங்கள் மீது இரங்கவில்லையா?
கொரோனா என்ற கொடிய வியாதிகளிடம் இருந்து தப்பிப்பிழைத்து பெரிய போராட்டத்துடனும், சோதனையுடனும் தான் இந்தப் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்களும் மாணவர்களும் பயணித்து வருகிறோம். ஆனால் இந்தக் காலகட்டம் ஆசிரியர்களுக்குப் போதாத காலம்போல் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் ஆங்காங்கு போக்சோ சட்டத்தில் கைதாவதும் மாணவிகள் தூக்கில் தொங்குவதும் செய்தியாகக் கேட்கும்போது இதயத்தை ஈட்டியில் இடிப்பதுபோல் இருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாகக் காத்து இருந்து காவு வாங்கியதுபோல கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களில் மூச்சை நிறுத்தியது. நான்குபேரைக் காயப்படுத்தி ஞாயம் தேடுகிறது. ஒவ்வொரு மாணவர்களும் பேட்டி கொடுக்கிறார்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள். காரை உடைக்கிறார்கள். களேபரம் செய்கிறார்கள். இதையெல்லாம் செய்துவிட்டால் இறந்தவர்கள் உயிர்த்தெழப் போகிறார்களா? இல்லையே! ஒன்று மட்டும் உறுதி ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இல்லாது போனால் இன்னும் பல தடைகள் வரத்தான் செய்யும் தவறுகள் நடக்கத்தான் செய்யும்.
அதில் ஒருசில மாணவர்கள் சொல்லும்போது பெரிய மாணவர்கள் தள்ளி அச்சுவர் விழுந்தது என்று பேட்டிக் கொடுக்கிறார்கள் பல்வேறு இடங்களில் நம்முடைய விளையாட்டுகள் விபரீதத்தில் முடிந்துவிடும் அதற்கு இது ஒரு சாட்சி. இந்த விளையாட்டினால் வந்த வினை மூன்று மாணவர்களை இழந்துவிட்டோம். பாவம் தாளாளர், தலைமையாசிரியர் விளையாட்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட தாளாளர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார். அவர் செய்த தர்மம் ஏராளம் ஏராளம், யாருக்கும் வழங்குவதில் தாராளம். தனக்கெனச் சேகரிக்கத் தெரியாதவர் அவருக்கா? இந்த நிலைமை? என எண்ணும்போது சத்தியத்திற்கே சோதனையா? இந்த சாவினால் அவருக்குத் தண்டனையா? இறைவா யார் குடியை நாங்கள் கெடுத்தோம். எவர் சுகத்தை நாங்கள் அழித்தோம். நல்லவர்களை நீ சோதித்துக் கொண்டிருந்தால் நாங்கள் எப்படித்தான் உன்னை நம்புவது? கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்கும் என்பார்கள் இப்படி எங்காவது ஒன்று நடக்கும்போதுதான் நாமெல்லோரும் விழித்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும். இழந்ததை இழந்தவையாக இருக்கட்டும். இழந்த உயிரை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்பதால் கனத்த இதயத்தோடு அதனை ஏற்றுக் கொள்வோம்.
அன்பான ஆசிரியர்களே அரசு ஒரு உத்தரவு போட்டுள்ளது. விரும்பிய மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என. ஆனால் மாணவர்கள் 95% பேர் பள்ளிக்குத் திரும்பி விட்டார்கள். அத்தனைபேரும் நம்மை நம்பித்தான் பள்ளிக்கு வருகிறார்கள் என்ன நடந்தாலும் எம் பள்ளியும் ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான். அந்த நம்பிக்கை எப்போதும் வீண்போகக் கூடாது.
ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு ஆல்போல் தளைத்து அருகுபோல் வேரோடி ஒட்டுண்ணிபோல் நம்மை ஒட்டியே நம் பயணம் தொடர வேண்டும். அவனுடைய எதிர்காலம் நம்முடைய கரங்களினால் எழுதப்படுகிறது. என்று நம்புகிறான். ஆதனால்தான் ஏசினாலும் பேசினாலும் தூசிபோல் தட்டிவிட்டு மீண்டும் மீண்டும் நம்மைச்சுற்றி வருகிறான். அவனது எதிர்காலத்தைக் கல்வியில் மட்டுமல்ல பாதுகாப்பிலும் பாதுகாப்பதிலும் அவனது பக்கத்தில் இருக்கிறோம் என்பதனை உணர்த்துங்கள் எத்தனையோ ஆசிரியர்கள் தாங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் பாதிக்கு மேல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் செய்கிறார்கள் என்று செய்தி வழியாக செவியில் இரங்கும்போது மனசு சிறகடித்துப் பறக்கிறது. அதுவே தொடரட்டும். நல்லவர்களே ஆசிரியப் பெருமக்களே இந்த ஆண்டு இயேசு பிறப்பாய் இருந்தாலும் சரி புதுவருடப் பிறப்பாய் இருந்தாலும் இறந்த மாணவர்களின் ஆன்மா சாந்தியடைய இருக்கின்ற ஏழை மாணவர்களுக்கு நம்மால் ஆன உதவியைச் செய்வோம். வருகின்ற ஆண்டில் அவர்கள் வளர்ச்சிக்காகவே நம் வாழ்வை அர்ப்பணிப்போம். நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் நலமுடன் வீடு வர நம்பிக்கையோடு செபிப்போம் நல்லதே நடக்கும் நம்பிக்கையுடனும் இரு கையில் இதயத்தில் மாணவர்களோடு நடைபோடுவோம்.
“பிதாவே ஏன் பிள்ளைக்கறி சாப்பிடுகிறாய்?
பிடிக்கவில்லையா எங்களை?
தவறு இருந்தால்! எங்களைத்
தண்டித்துவிடு இல்லை மன்னித்துவிடு”