22
Nov
2024
இது மழைக்காலம் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது சூரியன் இல்லாமல் சுத்தமான வானம் தெரிகிறது. ஆனாலும் என் மேனியில் மெல்லிய தூரல் தொட்டுவிட்டுச் செல்கிறது. கண்ணுக்கே தெரியாமல் வானம் எனக்கு அனுப்பும் கடிதாசி அது. உடம்பு முழுக்க உற்சாகம் பிறக்கிறது. உடம்பு உஷ்ணமும் குறைகிறது. ஆகா கடவுள் கொடுக்கின்ற வரம்தான். இந்த மழையா? அல்லது கடவுளே இந்த மழையா? கற்பனை செய்து காட்சி வழியாகப் பார்க்கிறேன்.
தமிழனை தலைநிமிர்ந்து நிற்க வைத்த குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். அதனைப் பாடிய இளங்கோவடிகள் கடவுள் வாழ்த்து என்று சூரியன், சந்திரன், மழையைப் பாடுவார். காரணம் இவை நேரடியாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதர்களுக்குத் தேடி வந்து உதவி செய்யும் கடவுளுக்கு நாம் வகுத்த இலக்கணம் இந்த மூன்றுக்கும் அப்படியே பொருந்தும் மற்ற இரண்டும் அங்கிருந்தே நமக்கு அருள் கொடுக்கும் மழை மட்டும்தான் வானத்தில் இருந்து இறங்கி வந்து நமக்குப் பலன் கொடுப்பது எனவே மழையை கடவுளாக நினைத்து நான் அதனை வணங்குகிறேன்.
இதுவரை அப்படியே உயர்ந்து கொண்டே செல்வதுதான் பெருமை, புகழ் என்று நினைத்தேன். ஆனால் மழை சொல்லும் பாடம் மாறுபட்டதாக இருந்தது. மேலே செல்வதால் யாருக்கும் பெருமை இல்லை. புகையைப் பாருங்கள் அது மேல் நோக்கிப் போய்க் கொண்டேதான் இருக்கும். அது மேல் நோக்கிச் செல்வதால் காற்றை மாசுபடுத்துகிறது. இதனால் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆனால் மழை என்பது ஆங்காங்கு கிடக்கின்ற நீர்கள் ஆவியாகி மேல் நோக்கிக் சென்று மேகமாவதில் பெருமையில்லை அது மீண்டும் மக்கள் நலனுக்காக இறங்கி வருவதுதான் பெருமை. அதனால்தான் மழையைப் போற்றுகிறோம்.
அதே போல் இந்த உலகில் பணம், பட்டம், பதவி, அழகு, அந்தஸ்து, புகழ், வெற்றி, சாதனை உன்னை மேல் நோக்கி உயர்த்திக் கொண்டே இருக்கும். அனைவரும் என்னைப் பார்க்க வேண்டும் என்று அந்தரத்தில் நின்று கொண்டு இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழ நேரலாம் ஆகவே எல்லோரோடும் சமதளத்தில் நின்று உரையாடுவது உறவாடுவது உனக்குப் பெருமை! ஆகவே எது உன்னை உயர்த்தினாலும் மழையைப் போல இறங்கி வந்து பிறர் மனதைக் குளிர்வித்தால் தான் மானிடப் பிறப்பிற்குப் பெருமை.
இந்த மழை மக்கள் தேவைக்குப் போக ஆங்காங்க நிரம்பிக் கிடக்கின்ற நீர்களை எல்லாம் சூரியன் தன் கதிர் கைகளால் எடுத்துக் கொண்டு சென்று அனைவருக்கும் சமமாக ஏற்றத்தாழ்வின்றி இறங்கி வந்து கொடுக்கும் இந்த மழை சொல்வது என்ன? இப்பூமியில் வளங்கள் இருக்கிறவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழுங்கள் என்பதனைத் தானே இந்த மழை செய்கிறது. மழையானது பூமியில் கிடக்கும் அனைத்து நீர்களையும், அது கடல் நீரோ, சாக்கடை நீரோ என்று கூடப்பார்க்காமல் எடுத்து சுத்திகரித்துப் பூமிக்கு அனுப்புகிறது. அதாவது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மழைத்துளியானது செய்யத்தானே செய்கிறது. எனவே தன்னிடம் வருகின்றவர்களை அசுத்தங்களை நீக்கிச் சுத்தப்படுத்தும் ஆண்டவன் பணியைச் செய்கிறது மழை.
மழையானது மேகத்திலிருந்து இறங்கி வந்து பூமியில் விழுந்தவுடன் எந்த நிலத்தில் விழுகிறதோ அந்த நிலத்தின் நிறமாக மாறிவிடும். தனக்கென்று எந்தத் தன்மையும் இல்லாமல் யாருடன் இணைகிறதோ அவர்களை முன்னிலைப்படுத்தி தன்னை அதற்குள் மறைத்துக் கொள்ளும். இங்கு சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகத் தன்னை அழித்துக் கொண்டு பிறரைப் பெருமைப்படுத்த உழைக்கின்ற சமூக நலத் தொண்டர்களுக்கு மழையானது முன்னோடியாகும் மழைபெய்த பகுதியை புல்வெளிகள் தானே பூமிக்குத் தெரியப்படுத்துகிறது. மழை மார்தட்டிக் கொள்வதில்லையே!
ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், கடல்கள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை எல்லாம் மழையின் மக்கள் தானே. இவைகள் தானே அந்த இடங்களை வளப்படுத்த இந்தப் பூமிக்கு ஈன்று தந்தது. நீரை மட்டுமல்ல நீருக்குள் வாழ்கின்ற உயிர்களையும் நீர்த்துப்போகாமல் பார்த்துக் கொள்கிறது. உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் உயிர் கொடுப்பது நீர்தான். அந்த நீரை மழை தான் கொடுக்கிறது.
மழை நம்மைத் தொடும்போது மனதிற்குள் உற்சாகம் கிடைக்கும் யாரையும் தொடாத அனாதைகளைக் கூட மழை இறங்கி வந்து தொட்டுத் தழுவும். மழைக்கு எப்போதுமே தீண்டாமை தெரியாது அது தீண்டும் போது நமக்கொரு இன்பம் கிடைக்குமே அதனைச் சொல்ல வார்த்தைகள் இல்லை மழை அத்தனையையும் அழகாய் காட்டும் உலகில் உள்ள ஒப்பனைகளை விட உயர்ந்தது மழை! மழை இங்கு அனைவர் மீதும் பெய்யும் ஏழைகளை ஏமாற்றாத இறைவன்! அவன் ஏழைகள் சிரிக்கவே இறங்கி வருவான்.
மழை மதங்களுக்கு அப்பாற்பட்டது. இதன் குழந்தைகள் வேண்டுமென்றால் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாயலாம்! ஆனால் மழை மலையைக் கூட தன் காலடியில் வைத்துத்தான் கவிதை சொல்லும் மழையைப் பாடாத கவிஞன் மண்ணில் பிறக்கவில்லை. மழையைப் பாடவில்லையென்றால் அவன் கவிஞனே இல்லை. துளித்துளியாய் அது பூமியைத் தொடுவதால் மழை மிதவாதி என்று மெத்தனமாய் இருந்து விடாதீர்கள் அவன் வயற்காட்டை விளைய வைத்து புண்ணிய பூமியாக்கியவன் வயநாட்டை சுடுகாடாக்கிவிட்டான். ஜாக்கிரதை! கோபம் வந்தால் கொந்தளித்து விடுவான்.
ஏனென்றால் மழை இயற்கையின் மழலை! அதனை கருவறுக்கும்போது அது நம்மைக் கழுத்தறுத்து விடுகிறது. இயற்கையை கொல்லும்போதெல்லாம் அது தம்மீது குண்டைத் தூக்கி போட்டு விடுகிறது. பூமித்தாயின் மார்பிலிருந்து நீரை எடுத்துக் குடித்தாலும் போர்வெல் என்ற பெயரில் அதன் மார்பகங்களைத் துளையிட்டு இரத்;தத்தை உறிஞ்சும்போது அது பொறுமை இழந்து பூமியை போட்டுத் தாக்காமல் என்ன செய்யும்?
மழை வரும்போது மழலைக்கு மகிழ்ச்சி! ஏனென்றால் பள்ளிக் கூடம் லீவு!, மற்றப்பேருக்கு சில நேரங்களில் தொழில் பாதிக்கப்படலாம். மழை இதயமாய் இருந்தால் எல்லோரும் நனையலாம். ஆனால் மழை கோபத்தோடு வரும் போது கொஞ்சம் பயமாக இருக்கும் இடி மின்னல் என்று ஏவி விடும். எலக்ட்ரானிக் அத்தனையும் காலி செய்யும். தலை வணங்கா மரங்களை தீயிட்டுக் கொழுத்தும் தானும் தீவிரவாதிதான் என்று தோள் தட்டும்!.
உயர்ந்த கட்டிடங்களுக்கு இடிதாங்கி வேண்டும்! குடிசைகளை அது குறிவைப்பதில்லை. மழையின் தூரல்களைத் தடுப்பதற்காக மனிதர்கள் அணியும் உடைகள் அவர்களின் பொருளாதாரத்தின் நிலையை நமக்குச் சொல்லும், ரெயின்கோட் அணிவதில் இருந்து துண்டைத் தலையில் இட்டுச் செல்வதுவரை அவர்கள் யார் என்று இந்த உலகம் அறியும் மழையின் போது ஒரு தாய் தன் குழந்தையின் தலையில் தனது முந்தானையால் மூடிக்கொண்டு செல்கின்ற காட்சி ஒவியமாய் இருந்தாலும் உயிரோடு இருக்கும்! மழையில் நனைந்து கொண்டு ஆடுகின்ற திரைப்படப்பாடல் இன்றும் புத்துணர்ச்சியைத் தரும். மழை நம்பிக்கையைத் தரும், மழை புத்துணர்ச்சியைத்தரும், மழை எச்சரிக்கையைத் தரும், மழை எதிர்காலத்தைத் தரும். மழை வரட்டும் நனைந்து பாருங்கள். நனைந்து பாருங்கள் நினைவுகளைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.
“நிச்சயம் மழை வரும்
என் மீது சில
துளிகள் விழும்”