14
Feb
2012
ஜெயிப்பது நிஜம்
மாணவர்களே. . .
எழுங்கள் வானமும் தொட்டுவிடும் தூரம்தான். இமயத்தை ஏறிட்டுப் பர்க்காதே, நீ ஏறினால் அதுவும் என் காலடியில்தான். மலைக்க வேண்டாம், நீ மனதுவைத்தால் அவற்றிலிருந்து நிரூற்றை அழைத்து வந்து நீரை அள்ளிப்பருகலாம். எல்லாத்திறன்களும் உனக்குள் உறங்கிக் கிடக்கும்போது நீ ஏன் உலகைக் கண்டு மயங்கிக் கிடக்கிறாய்? உனது சாதனையைத் தொடராமல் தயங்கிக் கிடக்கிறாய்?
மாண்பு, அவன் மாணவன். சமுதாயத்தின் சட்ட திட்டங்களையும் சாரம்சங்களையும் சரியாய் கைக்கொண்ட மாண்பு அவன் என்று மற்றவர்களால் எவன் சுட்டிக்காட்டப்படுகிறானோ அவனே மாணவன். எதிர்காலத்தின் நான் எப்படியிருக்கவேண்டும், எதிர்காலம் எனக்கு எப்படி அமையவேண்டும் என்று இலக்கினை நிர்ணயிக்கவும் அதற்குச் சரியான வழிகாட்டிகள் மூலம் தனக்குத் தானே பாதை அமைத்துக்கொள்ளும் தளமே வகுப்பறை, அமைத்துக்கொடுக்கும் அன்னை கல்வி நிறுவனங்கள், வாழ்ந்து காட்டும் வழிகாட்டி ஆசிரியர்கள்.
தம்பி உன்னை இந்த உலகம் உற்றுப் பார்க்கிறது. உன்னிடம் மட்டுமே உலகை எதிர்பார்க்கிறது. பரீட்சைகள் பாடங்கள், பயிற்சிகள் இவையெல்லாம் உனக்குப் படிக்கட்டுகளாகப் பார்க்கிறது. நீ தாண்டும்போது கைதட்டுகிறது. தடுக்கும்போது, தவறும்போது தலையில் கொட்டுகிறது. ஆனால் அவர்கள் தீர்ப்பல்ல. ஒரு திறனாய்வு. உன்னால் எதுவும் முடியும். நீ தாண்ட முடியாதது ஆறடி நிலம் மட்டுமே.
நீ காண்பதெல்லாம் கல்வியே! படிப்பதெல்லாம் பாடங்களே! முதல் இடம் கடைநிலை என்பதெல்லாம் மனனசக்தியே தவிர, மனதின் சக்தி கிடையாது. உலகம் எடைபோடுவது உனக்குத் தடைபோடுகிறது என்றால் அதனை உடைத்துவிட்டு வெளியே வா! வரலாற்றைப் புரட்டிப்பார் அது உன்னைப் புரட்டிப்போடும்.
அறிவியல் பாடமே வராது என கல்வி நிலையத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மாணவன் ஐன்ஸ்டின் அறிவியல் பாடமாகவே வந்தார். பள்ளிக்கூட வாசைன அறியாத எடிசன் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை இந்தப் புவிக்குத் தந்தார். இப்படி எண்ணற்ற பெயர்களைப் படித்தும் கேட்டும் காது புளித்துப்போய்விட்டது.
இனி புதிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். அதில் உனது பெயர் பதிக்கப்படவேண்டும். இதற்குப் படிக்கட்டு உனது பெற்றோர் என்றால் பாதை அமைத்துக்கொடுப்பது கல்விச்சாலையே. உன்னால் முடியாது என்று உலகம் சொல்லியிருக்கலாம். சொன்னால் விளங்காது என உன்னைத் தாழ்த்தியிருக்கலாம். இதெல்லாம் தேறாது என் ஏளனம் செய்திருக்கலாம், இருப்பினும் சிறு விதைக்குள் ஆலமரம் விருட்சத்தோடு இருக்கிறது என யாருக்குத் தெரியும், கிராமத்தில் சொல்வார்களே கிளிக்குஞ்சுக்கு இறக்கை முளைத்தால் தெரியும் அதன் அழகு என்று. இது உன்னையும் என்னையும் உலகற்குச் சொல்ல முன்னோர்கள் சொன்ன வாக்கு என்று உன் மூளைக்குச் சொல்லினது. முடியாது என்பதை மூளையிலிருந்து தள்ளி வை. தகுதியிருந்தும் தட்டிக்கொடுக்க ஆளில்லையே என்று தயங்காதே! காலையில் கை தட்டியா கதிரவனை எழுப்புகிறார்கள்? காற்றை யாராவது கைப்பிடித்தா அழைத்து வருகிறார்கள்? இருட்டில் நிலவை எந்த நிலவை வைத்துப் பார்க்கிறார்கள்? நட்சத்திரங்களை யார் வந்து வானத்தில் விதைக்கிறார்கள்? இது நடக்குமா? அடுக்குமா? தடுக்கத்தான் முடியுமா? நீயும் அதுபோல்தான்.
நீ முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. உனது பெயரில்தான் இனி உலகத்தின் விலாசம் எழுதப்படும். உனது சாதனைகள்தான் உலக அதிசயங்களாக எண்ணப்படும். உனக்குள் தூங்கிக்கிடக்கும் திறமைகளையெல்லாம் துணிவுடன் எழுப்பு, சாய்ந்து கிடக்கிற தளர்ச்சிகளையெல்லாம் சரியாய் நிறுத்து.
யாருக்காகக் காத்திருக்கிறாய்? யாருக்காகப் பார்த்திருக்கிறாய்? நீதான் உலகம். நீதான் உதயம். உன்னைத் தவிர யாரால் முடியும்? எவரால் விடியும்? முயற்சி செய். பயிற்சி செய். முழு வீச்சில் பணியைச் செய். அணியணியாய் உன்னை அணைத்துக் கொள்ள அகிலமே திரண்டு வரும்.
நமக்கேன் வம்பு என ஒதுங்காதே. நம்மால் ஒன்றும் முடியாது எனத் தயங்காதே. சிறகு முளைத்த பறவையை கூட்டுக்குள்ளேயே வைத்திருப்பது உனது சிந்தனைக்குத் தகுந்த வாய்ப்புகளை நாமே தராததும், பெறாததும் மன்னிக்க முடியாத குற்றம். கிராமத்து மாணவர்கள் என்ன கிள்ளுக் கீரையா, இல்லை கேட்க நாதியில்லையா? ஐயோ, தம்பி உன் பேச்சினைக் கேட்கவே புமி தன் காதுகளைப் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறது.
உன் சிந்தனை வானம் சிறகடித்துப் பறக்கவே பாருலகம் பார்க்கத் துடிக்கிறது. உன்னை உசுப்பிவிட உன்கையில் கொடுத்த அட்சய பாத்்திரமே இந்த பாடப்புத்தகங்கள். அதனை புரட்டிப்பார், அறிவோடு புரண்டுபார். அன்னைத் தமிழ் தனது கருத்து மார்பிலிருந்து அறிவு அமிழ்தத்தினை உனை அணைத்து அருந்தக் கொடுப்பாள். அதில் திருவள்ளுவர் வருவார். தனது எழுத்தாணியை உன்னிடம் திரும்பக் கொடுப்பார். பாரதி வருவான் உன்னிடம் பாட்டொன்று கேட்பான். அலெக்ஸாண்டர் வந்து தனது கூர்மழுங்கிய ஆயுதத்தினை உன்னுடைய அறிவால் கூறாக்கிக்கொள்வான். கணிதமேதை இராமானுஜம் வந்து உன்னிடம் காத்திருந்து கணிப்பொறி பற்றிக் கேட்பார். ஷேக்ஸ்பியரும் செல்லியும் உன்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆங்கிலச்சொல்லுக்கு உனது அகராதியிலிருந்து அர்த்தம் கேட்பார்கள். இத்தனையும் உனக்குள்தான் இருக்கிறது. சொன்னால் நம்பு. உனக்கு வரும் தெம்பு. இதே எண்ணத்தோடு எழு! எதிர்வரும் தேர்வுக்கு முயற்சி செய் முயற்சி செய் தடைகளைக் கண்டு தயங்காதே! விமர்சனங்களால் விரக்தியடையாதே. உன்னால் முடியும்! நீ சொன்னால் விடியும் ! இல்லை இல்லை நீ சொன்னால்தான் விடியும்.