02
Jun
2023
கோடை விடுமுறைக்குப் பின் கொண்டாட்டமாகப் பள்ளி திறக்க இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கப் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பலர் பள்ளியை நோக்கிப் படையெடுத்தாலும் சில பரிதாபமான நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் ஆங்கில மோகத்தில் ஆங்கிலக் கல்வியைக் கற்று விட்டு இப்போது பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போதைக்கு ஏதாவது பள்ளியில் பிள்ளையைத் தள்ளிவிட வேண்டும் என ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கையில் இருக்கிற காசுக்குத் தகுந்தாற்போல ஏதாவது கல்வியைக் கொடுங்களேன்? என்கிறார்கள். அது சரி கல்வி எப்போது கடைச் சரக்கானது? கலைமகள் எப்போது விலை போனாள்?.
விளம்பரம் இல்லாதது விலை போகாது. விசம் கூட விளம்பரம் செய்து விட்டால் விறுவிறு என்று விற்றுத் தீர்ந்து விடும். அதுபோல்தான் இன்று விளம்பரக் கல்விக்கு விலை அதிகம். அதனால்தான் அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகிறது. வேலை வாய்ப்பும் தமிழ் வழிக் கல்விக்கே என்று முழங்குகிறது. அப்படி இருக்க மக்கள் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கே ஆர்வமாய் இருக்கிறார்களே. இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்வது? மொழி என்பது கற்றுத் தருவதல்ல. காது வழியே ஊடுருவி மூளையில் போய் நிற்பது. கற்றுக் கொடுப்பது வாய் வழியும், உடல் உறுப்பின் அசைவிலும் உணர்த்தப்படுவது. அது ஆசிரியர் பங்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்கள் கற்றுத் தருவதுதான் கல்வி. எனவே, தாய் மொழி என்ற ஒன்றைத் தவிர்த்துவிட்டு வியாபார மொழியை விருந்தினராக்கி இன்று பிள்ளைகளை எல்லாம் பேச முடியாத ஊமைகளாகி விட்டார்களே! எத்தனை குழந்தைகள் தங்கு தடையின்றி ஆங்கிலம் பேசுகிறது? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.
வழியோரங்களில் உடலுக்கு ஆரோக்கியமான தேநீர் கேட்பாரற்றுக் கிடக்கிறது. உடலுக்குக் கேடு என எழுதியுள்ள மதுபானக் கடையில் கதவைத் திறக்குமுன் காத்துக் கிடக்கிறார்கள். இதுபோல்தானே இன்றைய கல்வி முறை. என் குழந்தை ஆங்கிலக் கல்வி படிக்கிறான் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களே! உங்கள் பிள்ளை பக்கத்து வீட்டுப்பாட்டிக்குப் பலசரக்குகள் வாங்கப் பிழையின்றி எழுதிக் கொடுத்து விடுவானா? அந்தக் காலத்தில் ஏதோ நாலு எழுத்துப் படித்து விட்டால் நல்லது, கெட்டது தெரிந்து நடந்து கொள்வான் என்பார்கள். ஆனால் இன்று ஏதாவது வேலைக்குப் போக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், வசதியாய் வாழ வேண்டும் இந்த வயிற்றுப் பிழைப்புக்குத்தானே கல்வி! இது கேவலமாய் இல்லையா? வாழ்க்கையைக் கொடுப்பதுதான் கல்வியே தவிர வாழ்க்கைக்கு வசதி செய்வது அல்ல கல்வி!
இக்காலக் குழந்தைகள் அந்நிய மொழியில் அத்தனையும் கற்று விடுமா? இக்காலத்தில் குழந்தைகளுக்கு சொன்னால் புரிவதில்லை. சொற், பேச்சு கேட்பதில்லை, சுய புத்தியில்லை. இவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு எதிர்கால இந்தியாவைக் கட்டமைப்பது? ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உள்ள முக்கிய பொறுப்பு குழந்தையைச் சிறப்பான முறையில் வளர்த்தெடுப்பது, பொறுப்பான பதவிகளில் அமர வைப்பது, அதற்குத் தரமான கல்வியைக் கற்றுத் தருவது. நீங்கள் எதிர்பார்க்கிற அன்பு, அடக்கம், பொறுமை, பொறுப்புணர்வு, சகோதரத்துவம், சமத்துவத்தை இக்காலத்தில் எக்கல்வி கற்றுக் கொடுக்கிறது? உங்களுக்கு அந்தச் சிந்தனை இல்லை. ஆனால் குழந்தைகள் அந்நிய மொழிகள் பல கற்றுக் கொள்ள வேண்டும். கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் எனப் பன்முகத் திறமையில் வளர வேண்டும். பன்முகத் திறமையில் வளர வேண்டும் என நினைக்கின்ற நீங்கள் பக்குவப்பட்ட குழந்தையாய் வளர வேண்டும் என்று நினைக்கலையே. இன்றைய தமிழ்நாட்டை எண்ணிப்பார்க்கும் போது புலிக்கு ஆசைப்பட்டு பூனையும் தன்னைச் சூடு போட்டுக் கொண்டதாம்.
என்ன வளம் இல்லை நமது தமிழ் மொழியில். ஏன் அதை மறக்க வேண்டும்? மறுக்க வேண்டும்? உலகில் 90 நாடுகளில் தமிழ் பேசு பொருளாக இருக்கிறது. பல்வேறு நாட்டு மக்கள் தமிழ் பேசவும், கற்கவும் தனியாத ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு தமிழச்சியின் மடியில் பிறந்தவன் தன் தாய்ப்பாலை மறந்து விட்டு ஆங்கிலச் சாயம் பூசிய உதடுகளில் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறான். ஆங்காங்கு முளைத்திருக்கிற ஆங்கிலப் பள்ளிகள் எங்கள் தமிழ்த்தாயின் மார்புகளை அறுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பெற்றோர்களே வாள்களை எடுத்துக் கொடுப்பதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது. வார்த்தையில் மயங்கி உணர்ச்சிகளை விற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறுமா? தமிழ்நாட்டுக்கு விடியல் கிடைக்குமா? தமிழ்க் குழந்தைகள் தாகத்தோடு தமிழ்பாலை அருந்துவார்களா? திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் அவர்கள் கைவந்த கலையாக மாறுமா? என ஏக்கத்தோடு காத்திருக்கிறவர்களில் நானும் ஒருவன்.
எத்தனையோ தமிழ் பள்ளிகள்! எவ்வளவோ வசதிகள்! ஏகப்பட்ட சலுகைகள்! எதிர்கால வேலைலாய்ப்புகள்! இத்தனை இருந்தும் என்ன பண்ண? ஆங்கிலம் என்னும் மாய வலைக்காரியின் மினுக்களில் என் தமிழ் குழந்தைகளைத் தின்னக் கொடுத்து விட்டு குழந்தைகளைக் கொன்று விட்டோமே! என்ற குற்றப் பழி உணர்வில்லாமல் சுற்றித் திரியும் அப்பாவி மனிதர்களைப் பார்க்கிறேன். தமிழ்தாய் இலவசமாகத் தன்னை தர இருந்தாலும் அதை உண்ண மறுத்து வியாபாரிகளின் வலைகளில் அகப்பட்டு தான் கட்டியிருக்கும் கோவணத்தையும் களவாடக் கொடுக்கிறார்களே என்ன செய்ய? அவர்கள் கல்லாக் கட்டுகிறார்கள், கட்டிடம் கட்டுகிறார்கள். இது அவர்கள் குற்றமா? இல்லையே. அவர்கள் யாரையும் வீடு தேடி வந்து வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை! அவர்கள் யாரையும் ஏமாற்றவும் இல்லை! ஏமாறத் தயாராக இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்பாக்களுக்கு டாஸ்மார்க்கிலும், அம்மாக்கள் ஆங்கில வழிக் கல்வியிலும் பணத்தைத் தொலைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு எப்போது போதை தெளியும்? நல்ல பாதை எப்போது தெரியும்? அது எப்போது புரியும்?
“கானல் நீரை
மான்கள் தேடுகின்றன
பயணங்கள் முடியவில்லை
பாதையில் தெளிவில்லை . . .”