16
Jul
2020
“வரங்களே சாபங்களானால்
தவங்கள் எதற்காக?”
இன்று ஒட்டுமொத்த உலகமும் தெற்குப் பகுதியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாத்தான் குளத்தில் ஒருசில சாத்தான்கள் செய்த வேலையினால் கண்ணியமான காவல்துறை இன்று தலை கவிழ்ந்து நிற்கிறது. மக்கள் அனைவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தம்மால் எவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ! அவ்வளவு இறங்கி விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் காரணம் ஈடுகட்ட முடியாத அந்த கண்ணியமிக்க ஜெயராஜ் பெனிக்ஸ் அவர்களின் இறப்பு, இப்படி ஆங்காங்கே நடக்கின்ற அத்து மீறல்களும், ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டும் காக்கிச் சட்டைகளின் அட்டூழியங்களும் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டதால் ஒட்டு மொத்தக் கொந்தளிப்பாகச் சாத்தான்குளம் சம்பவம் குலுக்கி எடுத்துவிட்டது.
ஆனால் இதுதான் சரியான நேரம் என்று அனைவரும் காக்கிச் சட்டைகளைக் களங்கப்படுத்தி விடாதீர்கள் எத்தனை நல்லவர்கள், எத்தகைய அர்ப்பணிப்போடு தியாகம் நிறைந்து அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவசர கதியில் அவர்களையும் காயப்படுத்திவிடக் கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சத்தமிடுவோம், குற்றங்கள் குறைய வேண்டும் போராடுவோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. எத்துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துறையில் ஒரு பத்துப்பேராவது கருப்பாடுகள் இருக்கத்தானே! செய்யும். அதனையும் அத்துறையோடு இணைத்து விடாதீர்கள். அவர்களைக் களையெடுக்க அவர்களே புறப்பட்டு விட்டார்கள்.
சாத்தான்குளச் சம்பவத்தில் காவல்துறை மட்டுமா? தவறு செய்தது மருத்துவத்துறை! நீதித்துறையும் தானே? ஆனால் இவர்கள் மட்டும் அதிகமாக விமர்சிக்கப்படுவது இவர்கள் நம் நண்பன். நண்பன் இடரும் போது துரோகியாக மாறுகிறான். அதுதான் இவ்வளவு கொந்தளிப்பு கோப வார்த்தைகள், ஆயினும் அவர்கள் மீது நம்பிக்கை வரக்காரணம்… சில உண்டு.
உடனிருந்து உண்மைக்குச் சாட்சியம் கூறத் துணிந்து வந்த வீர மங்கை ரேவதியும் ஒரு காக்கிச்சட்டைதானே! மதிப்பிற்குரிய ரவி I.P.S. அவர்கள் காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கண்ணியமாகக் கூறுகிறாரே. ஒரு D.S.P. நான் காய்கறி வாங்கச் செல்லும்போது லுங்கியோடு செல்வேன் அந்தக் கடைக்காரன் ஒரு வாடிக்கையாளருக்கு என்ன மதிப்பு கொடுப்பானோ அதைத்தான் எனக்கும் தருவான். எச்சூழலிலும் என் எல்லையைக் கடக்கமாட்டேன் என்கிறாரே இவரும் காவல்துறைதானே. இந்தக் கொரோனாக் காலத்தில் பணியில் இருந்தபோது கொரோனாத் தொற்றினால் மரணத்தை முத்தமிட்டுயிருக்கிறார்களே அதனை மறந்துபோக முடியுமா? ஏன் உள்ளத்தை உருக்கும் எங்கப்பாவைத் தொட்டுப் பாக்கணும் என்று அழுத ஒரு ஆய்வாளரின் பெண் குழந்தையின் சத்தம் இன்னும் இதயத்தில் எங்கேயோ கேட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆகவே உணர்வுப் பூர்வமாக ஒரு துறையின் மீது கோபத்தைக் கொட்டுவதைவிட நம் மனதிற்குப் பட்டதை மனப்பூர்வமாக அவர்களிடம் எடுத்துச் சொல்வோம் அதற்கு உரிமையும் உண்டு கடமையும் உண்டு.
கண்ணிய மிக்க காவல்துறை பொதுமக்களின் நண்பன். நண்பர்கள் என்ற முறையில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு உங்கள் மீது அதிகமாகவே சுமத்தப்பட்டுள்ளது. நேர்மையாளர்கள் ஒன்றுசேர்ந்து நியாயத்தை கொண்டுவரவேண்டும். உங்களையே சுய ஆய்வு செய்யுங்கள் ஒருசில கேள்விகள் உங்கள் பார்வைக்கு……
எல்லாத்துறையிலும் இருக்கின்ற திருடர்களைத் தேடிப்பிடித்து தண்டனை கொடுக்கின்ற நீங்கள் உங்கள் துறையில் இருக்கின்ற கயவர்களை ஏன் விட்டு வைக்கிறீர்கள். இவர்கள் குற்றம் மட்டும் செய்யவில்லை. கண்ணியமிக்க காவல்துறையையும் களங்கப்படுத்துகிறார்கள் அந்தக் களைகளை நீங்களே முன்வந்து உடனடியாகப் பிடிங்கி எறியுங்கள் வயல்கள் பசுமையாகட்டும்.
நேர்மையான அதிகாரிகள் எப்படியெல்லாம் பந்தாடப் படுவார்கள் என எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொருவரும் நேர்மையானர்களாக இருந்துவிட்டால் அதிகாரிகளால், ஆட்சியாளர்களால் என்னதான் செய்ய முடியும்? எத்தனை பேருக்கு மாற்றல் கொடுக்க முடியும்? என்று ஒரு கை பார்த்துவிடுங்கள்.
காவல்துறை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கம்பீரம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டிய தருணம் இது. இந்த வழியோரம் நின்று வாகனங்களிடம் பிச்சையெடுப்பவர்களை கொஞ்சம் வடிகட்டுங்கள்.
கூவம் ஆற்றைப் போல் நாவில் பேச்சை உதிர்பவர்களையெல்லாம் கொஞ்சம் கண்ணியமாகப் பேசச் சொல்லுங்கள்.
ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகளிடம் பணியின் நிமித்தம் பக்கத்தில் இருங்கள், பாதுகாப்பாளராய், அடிமைகளாய் அல்ல எப்போதும் ஏழைகளின் தோழனாய் இருந்து பாருங்கள் அவன் எப்போதும் உங்களை நெஞ்சில் வைத்துக் கொண்டாடுவான்.
நாங்கள்தான் உங்களுக்கு நண்பன் இன்னும் எதற்கு friends of Police? அது வந்த பிறகுதானே எளியவர்களுக்கு எதிரியாகிவிட்டீர்கள் இன்னும் எதற்கு நமக்கு?
எங்களுக்காக எங்கள் நலனுக்காக எப்போதும் நீங்கள் இருந்துபாருங்கள் காலமெல்லாம் உங்களை கையெடுத்துக் கும்பிடுவோம் கடவுளாக. அதற்கு சரியான தருணம் இது உங்களை நம்பி, உங்களை மட்டும் நம்பி இருக்கிறோம் களைகளைக் காப்பாற்றாமல் எங்கள் நீதியை எங்களுக்குப் பெற்றுத்தாருங்கள் உங்கள் மீது எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நீங்கள் சொல்லலாம் ஒரு நாள் காவல் நிலையம் இல்லையென்றால் என்னாகும் என்று 132 கோடிக்கு மேல் வாழும் மக்கள் கூட்டத்தில் மொத்தமே 15,639 காவல்நிலையங்கள்தான் இருக்கிறது. புரிந்து கொள்வோம். மக்கள் இன்னும் மனச்சாட்சிக்குப் பயந்துதான் வாழ்கிறார்கள். அறத்தோடு வாழ்வோம் அறத்துக்காக வாழ்வோம் நீங்களும் நாங்களும்.