21
Oct
2022
முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது திரைப்படம். அத்திரைப்படம் சொல்லும் கதை யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் எப்போதும் நம் உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அந்த ஆசையானது உச்ச பச்ச நிலையை அடையும் போது அவர்கள் நம்முடனே இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்வது பரவசம் என்கிறோம். இதை எண்ணிக்கொண்டு நாம் பக்தியை நோக்கினால் அதுவும் ஒரு பரவச நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.
முன்னொரு காலத்தில் மனிதன் பயப்படும் போதெல்லாம் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள அவன் பல்வேறு சாதனங்களைக் கண்டெடுத்து உலவவிட்டான். இருளின் பயத்தால் நெருப்பைக் கண்டுபிடித்தான் வலியின் பயத்தால் மருந்துகள் கண்டுபிடித்தான் விலங்குகளின் பயத்தால் இருப்பிடம் கண்டுபிடித்தான் நீரின் பயத்தால் மேடுகளைக் கண்டுபிடித்தான். அனைத்துப் பயத்திலும் இருந்து விடுபட அவன் கண்டுபிடித்த ஒருபொருள் கடவுள்.
இக்கடவுள்களைப் பலவகையில் அவன் கண்டுபிடிக்கிறான். இயற்கையே கடவுளாக, இயற்கையில் வாழும் பறவைகள், மரங்கள், விலங்குகள் கடவுளாக, மனிதர்கள் மாண்புடன் வாழ்ந்து தெய்வங்களாக, இறைவனே ஒரு கற்பனையாக, இறைவனே அவதாரங்களாக, இறைவனே மாய ஜால மந்திர சக்திகளாக, இருப்பவராக எனப் பல வழிகளில் இறைவனை கண்டுபிடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் இருக்கும் இடம் தேடி ஆசைப்பட்டு தன்னுடைய கற்பனையில் ஒரு கடவுளை வடிக்கிறான். இந்தக் கடவுள் வாழும் கடவுளாக பிறரை ஆளும் கடவுளாக உருமாற்ற அதற்குப் பல புனைக் கதைகள் புனைகிறான். மீண்டும் மீண்டும் அதனைச் சொல்லில் சொல்லி ஆள் மனதில் ஆழத்தில் அவனை நம்ப வைக்கிறான். ஏமாளிகளின் கூட்டத்தை ஒன்று திரட்டி தன்னுடைய சுகபோகத்திற்காகத் தன்னை இறைவனின் இடைத்தரகராக மாற்றுகிறான்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எங்கும் நிறைந்து இருக்கிற இறைவனுக்கு இடைத்தரகர் எதற்கு? இது ஏமாற்று வேலை இல்லையா? இப்படி ஏதாவது பகுத்தறிவின்படி கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக தெய்வத்தைக் குறித்து ஒரு பயத்தை ஏற்படுத்தியே வைத்திருப்பார்கள். அது கண்ணைக் கெடுத்துவிடும். பலி வாங்கிவிடும். குடும்பத்தை அழித்துவிடும் இதனால் என்ன பயன்? பூசாரிகளும், கோடாங்கிகளும், சோசியர்களும் மிரட்டி மிரட்டிப் பொருளைப் பறிப்பார்கள்.
ஏறக்குறைய கடவுளைச் சொல்லி பயங்காட்டியும் கடவுள் பெயரைச் சொல்லி நம் பொருளைப் புடுங்குவதும் கடவுளிடம் காணிக்கைக் கொடுக்க நம்ம இடுப்பு எலும்பை முறிப்பதும் எந்த விதத்தில் நியாயம்? கடவுள் பக்தி வந்ததற்குக் காரணம் நாம் ஒற்றுமையில் சாமி கும்பிட, ஊர்க்கூடி தேர் இழுக்க, சாமி வரம் சொல்லி பிறரைச் சந்தோசப்படுத்த, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் நாம் மகிழ்ச்சியடைய, கும்மியடித்து மகிழ, கிடா வெட்டி உண்ண, மேளம் இசைத்து ஆட, தாளத்தோடு பாட, எல்லோரும் சாமி கும்பிடுவதும் விழாக் கொண்டாடுவதும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மனம் குளிர வாழும் வாழ்க்கைக்கு வழிவகுக்க வழிகாட்ட வந்ததுதான் சாமி வழிபாடும், சந்தோசச் கொண்டாட்டங்களும், கோவில் கொடை மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு.
ஆனால் இன்று மதங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?. மதத்தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? மதத்தைப் பற்றி பேசுகிறவர்கள் எதை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்றால் சூது, வன்மம், பகைமை பழிவாங்கல் அடுத்தவன் சொத்துக்களை அழித்தல் கூட்டாகச் சென்று கொடுமைப் படுத்துதல், பிறரை இழித்தும் பழித்தும் பேசுதல் இல்லாத கட்டுக்கதையை எடுத்துவிடுதல், பொல்லாங்கு பேசியதாக பொய்யுரைத்து பிறரைத் தீர்த்துக்கட்டுதல் இவைகள் தான் இன்று மதங்களில் விளையும் மறுமலர்ச்சிகள் இத்தகைய மதங்கள் இந்தப் பூமிக்குத் தேவையா?
மனம் திறந்து யோசியுங்கள் மதங்கள்தான் மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. மதங்கள்தான் பெண்ணடிமைத்தனத்தை வளர்த்திருக்கிறது. மதங்கள் தான் மனிதனைப் பிரித்து ஒருவன் மூலமாக ஒருவனை வேட்டையாடியிருக்கிறது. மதங்கள் தான் அத்துமீறல்களையும் அட்டுழியங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. இவ்வளவு அசிங்கங்களையும் அரங்கேற்றுகிற மதங்களையும், கடவுளையும். மனதில் எதற்கு ஏற்க வேண்டும்?. மண்ணில் வைத்துப் புதைக்க வேண்டும்.
கடவுள் இல்லையென்று சொல்பவர்களால் கடவுளின் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லை. கடவுளின் அவதாரம் என்று சொல்பவனால்தான், பக்தர்கள் தான் மனிதனை மதத்தின் பெயரால் மனிதனைப் பிரித்து மாமிச வேட்டையாடுகிறான். ஆகவே மனங்களுக்கு வெள்ளையடிப்போம் மதங்களை மறுபரீசிலனை செய்வோம். மனிதமே மதம் என்பதனை கண்டு கொள்வோம். பிற மதங்களைப் பழிக்கின்ற மதங்களைப் புதை குழியில் தள்ளுவோம். எல்லோரும் ஓர் மதம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இப்புவியின் மக்கள் இதுதான் மதம் இதுதான் மார்க்கம்!
“கண்ணில் தெரிபவன் சாமி – யாவரும்
கலந்து பேசினால் மதம்
ஒன்றாய் இருந்தால் சொர்க்கம் – பிறரை
ஒதுக்க நினைத்தால் நரகம்”.