16

Aug

2024

முயல் ஆமை கதை..

முயல் ஆமை கதை தெரியுமா? என்பார்கள். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி என்பார்கள். ஆமையும், முயலும் என்பது கதையும் அல்ல, போட்டியும் அல்ல, அது வாழ்க்கை. முயல் என்பது வேகம். ஆமை என்பது நிதானம் இரண்டும் இணைந்ததுதான் வாழ்க்கை. முயலும், ஆமையும் ஒன்றாக இணையுமா? போட்டி போடுமா? என்று நினைக்காதீர்கள். அப்படி அமைவதுதானே இல்லற வாழ்க்கை!

முயல் என்பது ஆண், ஆமை என்பது பெண் ஒன்று எப்போதும் வேகமெடுப்பது. மற்றொன்று நிதானமாகத் தன்னை வெளிப்படுத்துவது. ஒரு வேகமும் ஒரு நிதானமும் இணைந்து வாழ்வது தான் இல்வாழ்க்கை என்பதன் வெளிப்பாடாகும்.

உருகுகின்ற மெழுகும் எரிகின்ற திரியும் இணைந்தது தான் ஒளி. திரவமான எண்ணெயும், துண்டுத் துணியும் இணைந்ததும் ஒளி அது தீபம். இதைத்தான் இறைவன் மென்மையைப் பெண்ணாகவும் திண்மையை ஆணாகவும் உருவாக்கிக் குடும்பத்தை உருவாக்குகிறான் பெண்கள் என்பது தசை, ஆண்கள் என்பது எலும்பு, ஆணிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட எலும்புகளிலிருந்து எழுந்து வந்தவள் தான் பெண்ணென்று வேதம் சொல்கிறது. எனவே பெண்களின் அன்பு, அழகு, பரிசம், பலன் அத்தனையும் தசைகளிலிருந்து வெளிப்படுவது தான். ஆண்களிடமிருந்து பெண் தன்னை வேறுபடுத்திக் காட்டுவது தன்னுடைய தசைகளினால் தான்.

எனவே இதனை இணைத்துப் பார்ப்பதற்குத்தான் முயல் ஆமை கதையை எவனோ வகுத்திருப்பானோ? என எனக்கு எண்ணத் தோன்றுகிறது. ஆமைக்கும் பெண்மைக்கும் என்ன சம்பந்தம்? ஆமை நீரில் வாழ்வது இனப்பெருக்கத்திற்காக நிலத்திற்கு வருகிறது. ஒரு பெண் ஒரு குடும்பத்தில் பிறக்கிறாள் இல்லற வாழ்விற்காக இன்னொரு இடம் பெயர்கிறாள்.

ஆமை எங்கு சென்றாலும் தன் ஓட்டைச் சுமந்து கொண்டுதான் செல்லும். அதேபோல் பெண் என்பவள் எப்போதும் தன் குடும்பத்தைச் சுமந்து கொண்டே செல்பவள். தன் பிறந்த வீடு, புகுந்த வீடு, தன் குடும்பம் என அனைத்தையும் சுமந்து கொண்டே செல்பவள் தாம்பத்தியத்திற்குக் கணவனையும், தாய்மைக்குக் குழந்தையையும் வாழ்க்கைக்கு குடும்பத்தையும் சுமப்பவள்.

பந்தயத்தில் முயல் வேகமாக ஓடுவது போன்றுதான் தோன்றும்! அதே போல் ஆண் எங்கு புறப்படுவதாயிருந்தாலும் அல்லது பணிக்குச் சென்றாலும் அவர்கள்தான் முதலில் புறப்பட்டுப் பெண்ணை புறப்படு என்று சொல்வதுபோல் இருக்கும். ஆனால் திருவிழாக்களோ திருமண விழாக்களோ, அல்லது பொருட்கள் வாங்குவதோ பெண்தான் அனைத்தையும் செய்து முடிப்பாள். அதே போல்தான் ஆமை தாமதமாகப் பயணித்தாலும் இறுதியில் அதுதான் வெற்றிக் கோட்டைத் தொடும்.

முயல் பந்தயத்தில் வேகமாக ஓடும் பிறகு தூங்கிவிடும் அதேபோல்தான் ஆண் என்பவன் அவனுக்கு என்று சில வேலைகளை வைத்திருப்பான் அதனை மட்டும் செய்வான் பின்பு ஓய்வெடுக்கச் சென்று விடுவான். ஆனால் பெண் என்பவள் பெரிதாக வேலை எதுவும் இருப்பதாகத் தெரியாது அதிகாலையில் எழுந்து வேலையைத் தொடங்குகிறவள் இரவில் அனைவரும் தூங்கும் வரை தனது பணிகளைச் செய்து கொண்டே இருப்பாள்.

ஆமை என்பது நிலத்திலும் வாழும் நீரிலும் வாழும் ஆனால் முயல் நிலத்தில் மட்டுமே வாழும் அதே போல் தான். பெண்களுக்கு வீட்டு வேலை ஆண்களுக்கு காட்டு வேலை என இருந்தது. இப்போது அது நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாக மாறிவிட்டது. வீட்டுவேலை என்பது சமைப்பது, இடங்களைச் சுத்தமாக வைப்பது, வீட்டை அலங்காரப்படுத்துவது, என பல நுணுக்கமான வேலைகள் உண்டு நிறுவன வேலை என்பது பொருளீட்டுவதற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் அமைவதாகும். இதில் ஆமை நீரிலும், நிலத்திலும் வாழ்வது போல வீட்டு வேலைகளையும் வாழ்வாதார வேலைகளையும் செய்ய முடியும். ஆனால் முயல் போல் ஆண்கள் பலரால் வாழ்வாதாரப் பணிகளை மட்டுமே செய்ய முடியும். அதே போல் பெண்கள் உடை அணிவதிலும் ஆண்கள் அணிகின்ற உடைகளை பெண்களால் அணிய முடியும். ஆனால் ஆண்களால் அவர்களுக்கு என்று உள்ள உடைகளை மட்டும் தான் அணியமுடியும்.

முயல் காடுமேடு சுற்றி வருவது. அதற்குப் பல்வேறு ஆபத்துக்கள் உண்டு. அதே போல்; ஆண்கள் பல இடங்களுக்குப் பயணிப்பவர்கள் பலரை சந்தித்து வருபவர்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகள், போராட்டங்கள், பாதிப்புகள், உயிரிழப்புகளுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால் பெண்கள் ஆமையைப் போல் பிரச்சனை என்று வரும்போது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு ஓட்டுக்குள் ஆமைத் தன்னை அடக்கிக் கொள்வதுபோல் பெண்கள் தாங்களை அடக்கிக் கொள்வார்கள். அவர்கள் உடல்பலத்தைக் காட்டமாட்டார்கள் மௌனமாகி விடுவார்கள். இதனால் பிரச்சனைகளிலிருந்து எளிதில் தன்னை விடுவித்துக் கொள்வார்கள்.

ஆமைக்கு நிலத்திலும் வாழத் தெரியும், நீரிலும் வாழத் தெரியும். ஆனால் முயலுக்கு நிலத்தில் மட்டுமே வாழத் தெரியும். அதுபோல்தான் பெண் என்பவள் பிறந்த வீட்டு உறவிலும், புகுந்த விட்டு உறவிலும் தன்னைக் கரைத்துக் கொள்வாள். ஆண் தான் பிறந்த வீடு தனக்குரிய உரிமை என வாழ்வார்களே தவிர புகுந்த வீட்டில் அவர்களுக்கு வாழத்தெரியாது.

நீரில் வாழத்தெரிந்த ஆமைக்கு நிலத்தில் வாழும் முயலோடு போட்டியில் கலந்து கொள்கிறது. ஆகவே பெண் பிறந்த வீட்டை மறந்து முற்றிலும் கணவனுக்காக கணவன் வீட்டோடு பயணிக்கிறாள். ஆமை முட்டையிட்டு குஞ்சி பொரிப்பது. முயல் குட்டிபோடுவது முட்டையிடுவதில்; இருவகையான கருத்தரிப்பு உண்டு முட்டையிடுவது ஒன்று! அதிலிருந்து குஞ்சி பொரிப்பது மற்றொன்று. அதேபோல் பெண்ணுக்குள் இரண்டு பிறப்பு ஒன்று கருத்தரிப்பது மற்றொன்று குழந்தை பிறப்பு.

முயலுக்கு ஆமையோடு போட்டியல்ல. ஆனால் தன்னுடைய மதிப்பை உலகிற்குக் காட்ட அது பந்தயத்தில் கலந்தது போலவும், தனக்கு முன்னால் ஆமை ஒன்றுமே இல்லை என்ற அலட்சியமும், அதனால் தூங்குவதும், தூங்குவதால் தோல்வியைத் தழுவுவதும்தான் கதையின் முக்கிய சாரம்சம்.
ஆண்களின் அலட்சியமும், பெண்களை ஏளனமாக எண்ணுவதும், தம்மால்தான் எல்லாம் முடியும் என்ற தலைக்கனமும், குடும்ப வாழ்வு தோல்வியில் முடிந்து விடுகிறது. அது பந்தயத்தில் தோல்வி! இங்கு வாழ்க்கையில் தோல்வி!

இன்று பல முயல்கள் பந்தயத்திலேயே கலந்து கொள்வதில்லை. ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் போதையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற முயல்கள் குடும்பத்தையும் கவனிக்காமல் ஆமைகளையும் அனுசரிக்காமல் வெட்டித்தனமாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆமைகள் குடும்பத்தை ஓடுகளாய் முதுகில் சுமந்து கொண்டிருக்கிறது.

ஆமைகள் ஓடுகளையும், சுமக்க வேண்டும் பந்தயத்திலும் வெற்றியடைய வேண்டும் என்பது போல குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். வாழ்க்கையும் நடத்த வேண்டும். உறவுகளையும் அனுசரிக்க வேண்டும். சமுதாயத்தில் பேறுவாங்க வேண்டும் இருப்பினும் இன்றைய ஆமைகள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆமைகள்தான் இன்று அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. ஆமைகள் சார்பாக ஆண்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன். ஆண்களே நீங்கள் செய்கின்ற அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு பணியை அதாவது உங்களால் ஒரு கருவைச் சுமக்க முடியுமா? அதுவரை நீங்கள் தோற்றுக்கொண்டுதான் இருப்பீர்கள். பிறகு நீங்கள் எப்படி உயர்ந்தவர்கள்? நாம் சமமாக வேண்டுமென்றால் முயற்சி செய்யலாம்!

“பார்த்தவர்களை எல்லாம்
பேசத் துடித்தால்…
அது ஆண் மனசு…
பிடித்தவர்களிடம் மட்டுமே
பேச நினைத்தால்…
அது பெண் மனசு..”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES