27
Sep
2023
காட்டு விலங்கா? வீட்டு விலங்கா? என இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விலங்கு யானை. ஏனென்றால் காட்டுக்குள் திமிராகவும் நடக்கிறது. ஊருக்குள் கட்டுப்பட்டும் நடக்கிறது. துதிக்கையால் தூக்கி வீசவும் செய்கிறது. துதிக்கையால் அர்ச்சனையும் செய்கிறது. நன்கு பழகிய பாகனைக் கூடத் தூக்கி எறிகிறது. முன்பின் தெரியாத குழந்தையைக்கூட தன்மேல் வைத்து அழகு பார்க்கவும் செய்கிறது. இதனைச் சிங்கத்தைப் போன்று விலக்கவும் முடியவில்லை பசுவைப்போல் நெருங்கவும் முடியவில்லை பழகப் பழகத்தான் யானை நமக்குப் புரிகிறது. யானை மட்டுமே நமக்குத் துணையாக நிற்கிறது.
இப்படி யானையைப் பற்றிப் பேசும் போது சிறுவயதில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. நான் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது பாபநாசம் அருகிலுள்ள பொட்டல் புதூரில் இருந்து கோயில் யானை ஒன்று மதம்பிடித்து சங்கரன்கோவில் செல்லும் பாதையை நோக்கி வருகிறது என்று தொலைபேசி வழியாக அனைத்து ஊர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது ஊரில் உள்ள தபால் நிலையங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் அப்போது அலைபேசியோ, அனைத்து வீடுகளிலும் தொலைபேசியோ அக்காலத்தில் இல்லை இதனால் தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட்டு ஊர்; முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் எச்சரிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் அவசரமாக விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் விரைவில் வீட்டுக்குச்செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள் அந்த யானை சேர்ந்தமரம், வீரசீகாமணியைக் கடந்து நடுவக்குறிச்சிக்கு அருகில் ஒரு கோவிலில் வந்து சாந்தமாக நின்றுவிட்டது.
சில ஆண்டுகள் கழித்து நான் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது எங்கள் பள்ளியில் ஏழுபிறவியிலும் தேடினாலும் கிடைக்காத ஒரு தங்கமான ஆசிரியர் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது எதிரே குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவன் நேருக்கு நேராக மோதி அவர் உயிரைப் பறித்துவிட்டான். முதல் நிகழ்வில் பாகனுக்குக் கட்டுப்படாத யானை அத்துமீறி அழிவை ஏற்படுத்துகிறது. இரண்டாம் நிகழ்வில் மூளைக்குக் கட்டுப்படாத உடம்பு தறிகெட்டுத் தாறுமாறாகச் சென்று அடுத்தவர்களை அழித்து விடுகிறது.
உருவத்தில் பெரியதாக யானை இருந்தாலும் யானைப் பாகன் தனது அங்குசத்தால் அதனை நல்ல முறையில் பயிற்சி கொடுத்து சாதுவான மிருகமாக அதனை மாற்றிச் சாமியாக அனைவரையும் கும்பிட வைக்கிறான். இல்லையென்றால் சாமியைத் தூக்கி வரும் வாகனமாக அதனை மாற்றி விடுகிறான். அதே போல் மூளை முறையாகப் பயின்று தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டால்? உடம்பை ஆலயமாக்கவும் செய்துவிடும் நம்மை சாமியாகவும் வாழ வைத்து விடும்.
யானை, பாகனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்வரை அதனைக் குழந்தைகள் கூட கொண்டாடுவார்கள். உடம்பு மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள வரை குழந்தை உள்ளமாகவே நாம் இருப்போம். சில நேரங்களில் பாகனே குடித்துவிட்டு யானையைத் தனியாக விட்டுவிடுகிறான்; என்றால்? எல்லோருக்கும் அதன் மீது பயம் ஏற்பட்டுவிடும் அப்போது யானையைத் துறத்தவும் காட்டுக்குள் விரட்டவும் நெருப்பைக் கொண்டு மிரட்டவும் ஆரம்பித்துவிடுவார்கள். அதே போல் மனிதன் குடித்துவிட்டு மூளை தடுமாற, வாய் உளர ஆரம்பித்தவுடன் மனிதர்கள் அவனை வெறுக்கவும், ஒதுக்கவும், திட்டவும் தேவைப்பட்டால் ரெண்டு தட்டுத் தட்டவும் செய்து விடுவார்கள்.
யானைக்குப் பட்டுடை உடுத்தி அலங்காரம் செய்து சாமிக்கு நிகராக அதனை வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் அதற்கு மதம் பிடித்துவிட்டால் அத்தனையும் தூக்கி எறிந்து விட்டுத் தன்னை அலங்கோலப்படுத்தி அகோரமாக ஓடி வரும். அதுபோல் குடித்துவிட்டு போதையில் இருப்பவன் உடை நழுவி, அழுக்காகி, தன்னை அசிங்கப்படுத்தி சாலை எது? சாக்கடை எது? என்று தெரியாமல் பிறர் தூற்றவும், ஏசவும் செய்து தூக்கி எறியவும் செய்து விடுவார்கள்.
யானைக்கு மதம்பிடித்து விட்டது என்றால்? பழகியவரும் தெரியாது உதவியவரும் தெரியாது உணவு கொடுத்தவரும் தெரியாது உடனிருப்பவர்களும் தெரியாது தூக்கி எறிந்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும். அதே போல்தான் குடிகாரனுக்கு உறவுக்காரர்களும், தெரியாது உடன்பிறந்தவர்களும் தெரியாது எடுத்தெறிந்து பேசிக்கொண்டு இருப்பான் இல்லையென்றால் ஏதாவது இடையூறு செய்து கொண்டு இருப்பான். யானைக்கு மதம் பிடிக்கும் போதும் போதையில் மனிதன் இருக்கும் போதும் இங்கு நடைபெறும் குற்றங்கள் ஏராளம்.
யானை கோயிலில் இருக்கும் போதும் மனிதன் பக்தியோடு இருக்கும் போதும் எல்லோரும் வணங்குவர். யானையும் மனிதனும் மட்டுமே நாமம் பூண்டு இறை பக்தியை வெளிப்படுத்துவார்கள். யானையும் மனிதனும் கடவுளின் உருவத்தைத் தாங்கியவர்கள் இவ்வாறு உள்ளவர்கள் தான் தன் நிலை இழந்து திரியும்போது மனிதனுக்கு இடையூறு செய்து மாண்பை இழந்து விடுகிறார்கள்.
யானைக்குக் குடிக்கும் நீரைவிட அது ஓய்வெடுக்கிற நேரம் மிக முக்கியம் அது தடைபடும் போது அதற்கு மதம்பிடித்துக் கூடாத செயல்களைச் செய்து விடுகிறது. அதே போல் ஓய்வு நேரம் மனிதனுக்கு தடைபடும்போது அதாவது அதிகநேரம் அலைபேசிகளில் இரவுப்பொழுதை கழிப்பவர்கள் உடம்பு உஷ்ணமாகி அதனால் உடம்பு முறுக்கேறி வம்புகளும், பாலியல் தொந்தரவுகளும் அதிகமாகிச் செய்து இன்று சமுதாயத்தை சாக்கடை ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.
உடம்பு என்பது பலம் கொண்ட யானை. மூளை என்பது அதனைச் சரியாக வழிநடத்தும் பாகன். மனம் என்பது அங்குசம் மனம் சத்தியத்தில் நிலைத்திருந்தால் மூளை அறநெறியில் வளர்ந்து வந்தால் உடம்பு என்பது கட்டுப்பட்ட கோயில் யானை போல் இருக்கும். இங்கு மதம், சாதி ஏற்றத்தாழ்வு, பொறாமை, போட்டி, பேராசை, தவறான வழிகாட்டல், காமம் களியாட்டம், குடிவெறி. போதைப்பழக்கம், புகழ், குறுக்கு வழியில் வெற்றியடைதல், அடுத்தவன் பொருளுக்கும் மனைவிக்கும் ஆசைப்படுதல் போன்றவைகளால் மனிதன் மிருகமாகிறான்.
மனம் அருளோடு இருக்க வேண்டும். மூளை அறிவோடு இருக்க வேண்டும். நல்லவற்றைச் செய்ய வேண்டும். நல்லவர்களோடு பேச வேண்டும். நல்ல வழிகாட்டிகளைத் தேட வேண்டும். உலகம் காட்டும் தவறான பாதைகளைத் தூக்கி எறிய வேண்டும். நல்லவர்கள்போல் நடிப்பவர்களை இனம் கண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். கெட்டவர்கள் உயர்வது போல் காட்சி தருவது மாயை என உணர வேண்டும். குறுக்கு வழியைக் கோடி கொடுத்தாலும் பின்பற்றக் கூடாது. தமக்குரியது இல்லாத போது எதன் மீதும் ஆசைப்படக்கூடாது. தனக்குரியதைக் கூட விட்டுக் கொடுக்கவும், பொறுத்துப்போகவும், தியாகம் செய்யவும் மனதைப் பழகிக் கொள்ள வேண்டும். பலம் தெரியாத யானை பிச்சையெடுப்பதைப்போல் நம் வளம் தெரியாமல் யாரிடமும் கையேற்றித் திரியக் கூடாது. பிச்சையும் இலஞ்சத்தையும் பிரித்துப் பார்க்காமல் இரண்டும் இழிசெயல்தான். தர்மம் தான் தலைகாக்கும் தவறவிடாதே! மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். உள்ளம் கோவிலாகட்டும் அறிவு ஆண்டவனாகட்டும் உடம்பு பட்டத்து யானையாகட்டும் பவனி வருவோம். யாரும் வணங்கும் வகையில்..
“அடக்கமாகும் வரை
அடக்கமாக இருப்போம்”