07
Mar
2025
மார்ச்-8 மகளீர் தினம்
உங்கள் மனம் கவர்ந்த பத்துப் பெண்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் என்று என்னைக் கூறினால் அம்மா, அக்கா என்று அடுக்கிக் கொண்டே போகும்போது நான் கண்டிப்பாகச் சொல்ல வேண்டிய ஒருவர் தான் இந்த ரதீசா… அதற்குக் காரணம் என்ன? இதோ என்னுடைய பதில்தான் இந்தப் பகிர்வு…
நமது வாழ்வியலில் வரங்கள் என்று நாம் கொண்டாடிய பல இன்று நமக்குச் சாபங்களாகி விட்டதோ! என்று என் மனதை அலர வைக்கிறது. பெண்ணியம் பற்றி அதிகம் பேசுகிற, எழுதுகிற நானே இன்று பிறழ்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்! பெண்கள் சரிநிகர் சமமாக வாழ வேண்டும்! யாரிடமும் எதிர்பாராமல் எதற்காகவும் காத்திருக்காமல் எச்சுழலிலும் பிறருக்கு அடிமையாகாமல் வாழ வேண்டும் என்றால் அவர்கள் வேலைக்குப் போக வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ண ஆரம்பித்து விட்டோம்! இன்று பெண்கள் எதற்காக அவர்கள் படிக்க வேண்டும்? பட்டம் பதவி பெற வேண்டும்? தேர்வு எழுத வேண்டும்? வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு சமத்துவம் பெற என்போம். சரி இப்போது எல்லாம் நடந்து விட்டதா? இன்று பெண்கள் சுதந்திரம் பெற்று விட்டார்களா? இல்லையே!
ஆனால் ஏதோ ஒன்றை இழந்து நிற்கிறோம்! என்பதனை உணர முடிகிறதா? பெண்களால் தானே இந்த உலகம் உருவாகிறது. அவர்கள் தானே அதனைக் கட்டமைக்க வேண்டும். அவர்கள் தானே குடும்பத்தைக் குடும்பமாக உருவாக்க வேண்டும் அதனை விட்டுவிட்டு குடும்பத்திற்காக உழைத்து என்ன பயன்? பெண்கள் அதிகமாக உழைக்கின்ற நாடு இன்று பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாகத்தானே சொல்லப்படுகிறது.
நான் சிறுவனாக இருக்கும்போது சிலருக்கு அம்மா இருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியாது. அதனால் அவர்கள் முரடனாக முட்டாளாக பிறரால் வெறுக்கும்படி இருப்பார்கள். ஆனால் இன்று பெரும்பான்மையான மாணவர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள். காரணம் என்ன? அம்மாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அம்மாக்களாக இல்லை! எல்லோரும் வேலைக்குச் சென்று விட்டார்கள். அவர்களால் பணம் வருகிறது! ஆனால் பாசம் கிடைக்கவில்லையே? வீடுகள் அனைத்தும் தெய்வங்கள் வெளியேறிய கோவில்களாக அதாவது, பாழடைந்த மண்டபங்களாக இன்று பல வீடுகள் பூட்டிக்கிடக்கிறது.
இன்று குழந்தைகள் சிறுவயது முதலே அலைபேசியில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். குடும்பத்தலைவர்கள் எல்லாம் குடிபோதையோடு குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் இருக்க வேண்டிய நேரத்தில் இருக்க வேண்டியவர்கள் இல்லாததால் இருக்கக் கூடாதவைகளோடு இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். அடுத்து இன்று எந்தக் குழந்தையும் பெற்றோர்கள் பேச்சைக் கேட்பதில்லை. பெற்றோர்களை மதிப்பதில்லை. காரணம் குழந்தைகள் பேச ஆரம்பித்தபோது அந்த மழலைச் சொல்லைக் கேட்க அம்மாக்கள் வீட்டில் இல்லை. அவர்கள்தான் செல்வம் என்று நீங்கள் கருதாமல் பணத்தைத் தேடிச் சென்றதால் அவர்கள் இப்போது உங்களை மதிப்பதில்லை. உங்கள் பேச்சைக் கேட்பதில்லை.
அனாதை இல்லங்கள் பெருகிவிட்டது என்று அலருகிறீர்களே! மழலையர் பள்ளிகள் பெருகிவிட்டது என்று உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியவில்லையா? மழலைக்கு ஒரு நீதி, கிழவர்களுக்கு ஒரு நீதியா? இது அநீதி இல்லையா? பெண்கள் வேலைக்குப் போவதால் ஆண்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறது. பொறுப்புக் குறைவதால் பொறுப்பற்ற தனமாக அவர்கள் பொழுதைக் கழிக்கிறார்கள். ஆண்கள் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும்போது பெண்கள் அதனைச் சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள் அதற்குத்தானே குடும்பத்தில் பெண்கள் தேவை. இருவரும் வேலைக்குச் சென்று பணம் ஈட்டி கிடைக்கும் பணத்தால் இங்கு என்ன வேண்டுமென்றாலும் வாங்கலாம் என்ற ஆடம்பர நிலைதானே இப்போது தெரிகிறது? அதனால் குடும்பத்தில் அமைதி இல்லையே? விவாகரத்துகள் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கிறதே!
இப்போது புரிகிறதா? பெண்கள் வேலைக்குப் போவதை நான் தப்பாகச் சொல்லவில்லை. ஆனால் அது தப்பாகப் போகும்போது தட்டிக் கேட்கத்தானே செய்ய வேண்டும். அந்த வகையில் நான் பார்த்து வியந்த பெண்தான் இந்த ரதீஷா… எங்க அம்மா எங்களிடம் அடிக்கடிச் சொல்வார்கள் நான் உங்களுக்காகத்தான் வாழ்கிறேன் என்று. அது எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது. இவ்வளவு பாசம் பற்றோடு, இவ்வளவு அடக்கத்தோடு, ஒழுக்கத்தோடு பிறர் பாராட்டும்படி வாழ்வதற்கு என் அம்மா எந்த வேலைக்கும் செல்லாமல் அதில் கிடைக்கும் வசதி வாய்ப்புகளை எல்லாம் தியாகம் செய்து எங்களோடு இருந்து எங்களை வளர்த்தெடுத்திருக்கிறார்;. உண்மையிலேயே எங்களுக்காகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்! இல்லை இல்லை எங்களுக்காக மட்டும்தான் வாழ்ந்திருக்கிறார் என்பதனை உணருகின்றேன்.
இதன் மறு உருவம்தான் இந்த ரதீஷா. என் அம்மாவை விட உயர்ந்தவர். காரணம் என் அம்மா வாழ்ந்த காலத்தில் இவ்வளவு பெண்கள் வேலைக்குச் சென்றதில்லை. ஆனால் இப்போது வேலைக்குச் செல்வதே கௌரவம் என்று எண்ணும் சூழலில் இந்த வறட்டுக் கௌரவத்திற்கு வாய்ப்புக் கொடுக்காமல் தன் குழந்தை தன் குடும்பம்தான் என் வாழ்க்கை என்பதனை நன்கு உணர்ந்து இன்று பலரும் பாராட்டும்படி பெருமையாக இங்கு மட்டுமல்ல கடல் கடந்தும் வாழ்ந்து வந்த பெருமை இவர்களுக்கு உரியது.
சின்ன வயதில் இவர் இரட்டைக் குழந்தையில் ஒருவராய்ப் பிறந்து தன் தாயின் அன்பை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனதால் என்னவோ அடிமனதில் தனக்கு கிடைக்காதது போல் தன் குழந்தைகளுக்கு அமையக் கூடாது என்பதனை உணர்ந்து எப்போதும் அருகிருக்கும் அம்மாவாக அருகிலிருந்து தன் குழந்தைகளைப் பாசத்தில் பணக்காரர்களாகப் பார்த்துக் கொள்கிறார். இதனைக் கண்டு நான் பிரமித்துப் போகிறேன். இப்போது இந்தக் குடும்பத்தலைவி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பணி அழுத்தம் இல்லாமல் தன் அப்பா அம்மாவோடு பலகாலம் கழிக்கும் பாசக்குழந்தையாக இருக்கிறாள். இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்! கொடுத்து வைத்தவள். இந்த வேலைதான் வாழ்வு என்ற வறட்டுக் கொள்கையை எப்போதும் எண்ணாதவர்.
இப்போது தன் வாழ்நாளை தாய் வழி, தந்தை வழி, கணவர் வழி, நட்புக்கள் வழி என அனைவரது வீட்டு நலநட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு உறவுகளின் இணைப்புப் பாலமாக இருக்கிறார். இவர்கள் எடுக்கின்ற முடிவு அன்பின் அடிப்படையிலேதான் இருக்கும். இவர்களைச் சுற்றியுள்ள குடும்பத்தார்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் அத்தனைபேரும் இறுதிக்காலத்தில் இளைப்பாறும் அன்னைத் தெரசாளாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். இவரைத் தேடிப் போனால் இவர் வேலைக்குப் போயிருக்கமாட்டார். வீடு பூட்டிக் கிடக்காது. இடத்திற்கு இடம் மாறிப் போகமாட்டார். இன்ப துன்ப நேரங்களில் எனக்கு லீவு இல்லை எனச் சொல்லமாட்டார். இதைவிட வேறென்ன இந்த வாழ்க்கையில் நாம் அன்பானவர்களிடம் எதிர்பார்க்கப்போகிறோம். உழைத்து ஒரு வீடு வாங்கி அதைப் பூட்டிப் போட்டுச் செல்வதைவிட கல்லறையில் கட்டில் போட்டு படுத்துக் கொள்ளலாமே!
இவருக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணை இவரைக் குழந்தையாக நினைத்து வளர்த்தெடுப்பவர். இவரைச் சுற்றி அக்கா, தங்கை, அம்மா, மாமா, உடன்பிறப்புகள் அனைவரும் விட்டுக்கொடுத்து தொட்டுத் தழுவிச் செல்கின்ற தென்றல்கள். வீட்டில் ஆண்கள் எப்போதும் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பவர்கள் பெண்கள் உணர்வுப் பூர்வமாக முடிவெடுப்பார்கள். இந்த உலகம் பாசத்திற்குக் கட்டுப்பட்டதால் எங்கள் தம்பிமார்கள் உணர்வுப் பூர்வமாக முடிவெடுக்கும் பெண்களின் முடிவே பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்களை இல்லத்தின் அரசியாக்கிவிட்டு, தேவைப்பட்டால் அறிவுப் பூர்வமாகப் பேசும் அமைச்சர்களாகத் தான் இருக்கிறார்கள். இதனால் இப்போது இந்த ரதீசா எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் காரணம் எப்போதும் குடும்பத்தோடு இருந்து குடும்பத்தாரின் உணர்வுகளை மதித்து முடிவெடுப்பதுதால்தான் எங்கள் அனைவருக்கும் பிடித்தமானவராக மாறிவிட்டார்.
எங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் அருகிலிருக்கவும், அரவணைத்துச் செல்லவும், அதே நேரத்தில் கட்டுக்கோப்பாய் குடும்பத்தை வழிநடத்திச் செல்லவும் அனைத்துக் குழந்தைகளின் உதடுகள் ரதிசா அம்மா என்று அழைக்கும்போது உங்களுக்காகத்தான் நான் என்று சொன்ன என் அம்மாவுக்கு இவர் இன்று உயிருட்டுகிறார், நினைவுட்டுகிறார். பெண்களே பிறரைப்போல வாழ நினைத்து நீங்கள் தனக்குரியதைத் தவறவிட்டு விடாதீர்கள்.
நான் வேலைக்குப் போகிறவர்களுக்கு எதிரியல்ல ஆனால் வீடு இருளடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று குழந்தைகளை இருட்டாக்கி விடாதீர்கள். சொந்தக் காலில் நிற்கிறேன் என்று ஒற்றைக் காலில் பயணிக்காதீர்கள். எப்போதும் தடுமாறுவீர்கள். சொந்த ஊரில், சொந்த வீட்டில், சொந்தங்களோடுதான் என் சொர்க்கம் இருக்கிறது எனப் புரிந்து குழந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் அத்தனையும் தூக்கி எறிந்து விட்டு குடும்பத்தைத் தூக்கி நிறுத்தும் அத்தனை பெண்களுக்கும் என் மகளீர் தின வாழ்த்துக்கள். ஏனென்றால் எனது பார்வையில் இந்த ரதிசாக்களுக்குத் தலைவணங்குகிறேன். இவர்கள் சொர்க்கத்தை காட்டுபவர்கள் அல்ல. சொர்க்கத்தை உருவாக்குபவர்கள் பறக்க ஆசைப்பட்டு கூட்டை இழந்து விடாதீர்கள். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த ரதிசா அம்மாவைப்போல் ஒரு அம்மாவுக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும். உலகத்தில் எதுவும் வேண்டாம் ஒரு அன்பான அம்மா அருகிருக்கும் அம்மா மட்டுமே போதும்! அனைவருக்கும் எமது மகளீர் தின விழா வாழ்த்துக்கள்.
“அகிலமே தனதானாலும்
குழந்தையைப் பிரிந்தால்
அதனால் பயன் என்ன?”