05
Oct
2021
பத்திரிக்கைகள், ஊடகங்கள் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி. இன்று அவர் வீட்டில் ரெய்டு. இவர் வீட்டில் ரெய்டு என்பதுதான். முக்கிய ஆவணங்கள் சிக்கின. கோடிகோடியாகப் பணம் சிக்கின. தங்கக் கட்டிகள், நகைகள் கட்டுக் கட்டாகப் பணங்கள் சிக்கன. என மறுநாள் செய்திகள் வரும். இல்லையென்றால் அடுத்த நாளே அதனைப் பற்றிப் பெரிய செய்தியாக இல்லாமல் இருக்கும். அதற்குக் காரணம் கேட்டால் கைப்பற்றிய பொருட்கள் அரசு எடுத்துக் கொண்டு அந்தக் கேசை இல்லாமல் செய்துவிட்டது எனப் பேசுவார்கள்.
இது எல்லாம் அனைவரும் ஆங்காங்கு பேசுவார்கள், செய்திகளில் வாசிப்பார்கள், கேட்பார்கள் பிறகு நமக்கென்ன என இருந்து விடுவார்கள், காரணம் இது யாரு சொத்தோ! எவனோ ஒருவன் களவாடி விட்டான் என்பதுதான் நம் எல்லோரும் நினைத்துவிட்டு அதனை வெறும் பேப்பர் செய்தியாகக் கடந்து போகிறோம்.
அது நம் சொத்து, நமக்கு வரவேண்டிய அரசு சலுகைகள் நமக்குள்ள உரிமையைத் தட்டிப் பறித்து இலஞ்சம் என்ற பெயரில் நம்மிடமே பிடுங்கப்பட்ட காசு என்பதனை யாருமே உணர்வதில்லை. அரசு அலுவலர்களும் அரசியல்வாதிகளும் நம் கண்முன்னே அவர்கள் களவாடினாலும் எதிர்த்துக் கேட்க வழியில்லாது ஏனென்று கேட்க ஆளில்லாது அவர்கள் திருடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் திட்டிக் கொண்டே இருக்கிறோம். அதோடு நம் உணர்ச்சி உறங்கிப் போய்விடுகிறது.
நம் வீட்டில் எவனாவது திருடினால் நாம் சும்மா இருப்போமா? கத்துவோம், சண்டையிடுவோம், உதவிக்கு ஆட்களை அழைப்போம். துணைக்குக் காவல்துறை வசம் செல்லுவோம். ஆனால் நாட்டை ஒருவன் திருடும் போது நமக்கென்ன என்று இருந்து விடுகிறோம். மின்சாரம் திருடுகிறான், மணலைத்திருடுகிறான், தண்ணீரைத் திருடுகிறான். பொது இடங்களை வளைத்துப் பிடிக்கிறான், கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறான், நமக்கு வரும் உரிமைகளைக் கொள்ளையடித்துப் பதுக்குகிறான், ஒதுக்குகிறான். இதனையெல்லாம் பாரமுகமாக இருந்து கொண்டு பாசாங்கு செய்து கொண்டு சூடு சுரணையற்ற ஒரு சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
பெண் குழந்தை பெற்றவர்கள் தன் பெண்ளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவார்கள். ஆகவே மணமகன் நல்லவனா? பெண்ணை வைத்து குடும்பம் நடத்துவானா? கெட்ட பழக்கங்கள் ஏதும் உண்டா? குடும்பத்தோடு ஒத்துப் போவானா? பெரியோர்களை மதிப்பானா? என பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்து திருப்தி அடைந்தால் தானே பெண் கொடுப்போம்.
ஆனால் நம் மண்ணை ஒருவனிடம் ஆளக்கொடுக்கும்போது எதையுமே பார்க்காமல் இனாமாகத் தூக்கிக் கொடுத்து விடுகிறோமே. பெண்ணும் மண்ணும் ஒன்றுதான் பெண்ணைக் கொடுக்க எவ்வளவு யோசிக்கிறோமோ! ஆராய்கிறோமோ! அவ்வளவு தூரம் நம் மண்ணையும் நம்மையும் ஆள ஒரு தகுதி வேண்டும்.
இன்று மண்ணை ஆள்வதற்கு ஒரு குவாட்டரும் ஆயிரம் ரூபாயும் கொடுத்துவிட்டால் உடனே சத்தியம் செய்ததுபோல் அவனுக்கே ஓட்டுப் போட்டு விடுகிறோமே! நாம் எவ்வளவு பெரிய ஏமாளிகள்? ஒரு பெண்ணை ஒரு குவாட்டருக்கும், 1000 ரூபாய்க்கும் கொடுப்போமா? கொடுத்தால் நமக்கு பெயர் என்ன?
பெண்ணும், மண்ணும் ஒண்ணுதான் இரண்டும். நமது மானம் காக்கப் பிறந்தவர்கள் அவர்களை மரியாதையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். பெண்ணுக்குத் திருமணம் மண்ணுக்குத் தேர்தல் ஆகவே இவை இரண்டிலும் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் நாம் இந்த இரண்டையும் ஒப்படைக்க வேண்டும்.
பெண்ணை ஒருவன் கொடுமைப்படுத்துகிறான் என்றால் உடனே ஊர் கூடிப் பஞ்சாயத்துப் பேசி நாம் விவாகரத்துப் பெற்று வேறு ஒருவருக்கு மண முடித்துக் கொடுக்கிறோம். அதேபோல் நம் எதிர் பார்க்கிறதை செய்யாத போது பணத்தாசை பிடித்து அலையும் போது மக்களே ஒன்று திரண்டு அவன் பதவியைப் பறிக்க வேண்டும். நாம் எங்கே! ஒன்று திரளப் போகின்றோம்? நாம் தாம் சாதியால், மதத்தால், மொழியால், இனத்தால் கட்சியால் பிரிந்து கிடக்கிறோமே! பிறகு எப்படி ஒன்று திரள்வது? இதனால் குற்றவாளிகள் ஆள்கிறார்கள் நாம் அவர்களுக்குக் கோசம் போடுகிறோம்.
இப்போது தேர்தல் வருகிறது குவாட்டருக்கும் பிரியாணிக்கும் விலை போகமால் தம் மகளுக்கு ஏற்ற மண மகன் போல நம் மண்ணுக்கு ஏற்ற ஆளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நல்லவர்கள் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. நாமும் அதற்குத் துணை போகி விடக்கூடாது. உப்பைத் திண்ணவன் தண்ணீர் குடிக்க வேண்டும் தப்புச் செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஓ! இளைய சமூதாயமே! களத்தில் இறங்கு! இந்தக் கொடியவர்களின் கூடாரத்தைக்கூண்டோடு காலி பண்ணு. நல்லவர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டு உள் கையில் உலகம் அதனை உருப்படச் செய்! அரசியல்வாதிகள் வீழட்டும் மனிதநேயம் என்பவர்கள் ஜெயிக்கட்டும் விலைபோய்விடாதே! அவர்கள் வலையை விரிப்பார்கள் அவர்களே மாட்டிக் கொள்ளட்டும் நாம் நாட்டைக் காப்போம் ஜெய்ஹிந்த்…
“உன்னால் முடியும் – நீ
சொன்னால் விடியும்”