25
Apr
2025
குழந்தைகளுக்கு விடுமுறை விட்டாச்சு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் ஆனால் பெற்றோர்களுக்குத் திண்டாட்டம் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு அவ்வளவு கஷ்டமா? என்று கேட்டால் இந்தத் தலைமுறைக்கு அது கஷ்டம்தான். காரணம் என்ன? எவ்வளவு பணம் என்றாலும் செலவு செய்யத் தயார் ஆனால் தனது குழந்தைகள் பல்வேறு திறன்களில் வளர்ந்தே ஆக வேண்டும் என்று பேராசைப் பிடித்து அலையும் பெற்றோர்களே இங்கு அதிகம்.
இதோ பள்ளிகள் விடுமுறை விட்டாச்சு. பிள்ளைகள் சுதந்திரக் கனவில் இருப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் அவர்களுக்கு பயிற்சிகள் என்ற பெயரில் பல்வேறு கூண்டுகள் தயார் செய்து வைத்திருப்பார்கள். கடமைமிகு பெற்றோர்களே நீங்கள் செய்கின்ற இந்தப் பிழைகள்தான் இன்று தறிகெட்ட தலைமுறையாக தார் ரோட்டில் அலைந்து கொண்டு இருக்கக் காரணம். விளையாட்டில் அவன் செலவழிக்க வேண்டிய உடல்திறன்களை நாம் வீணடிப்பதால் அவன் நம்மோடு விவாதம் செய்வதிலும் அடுத்தவர்களைக் காயப்படுத்துவதிலும் செலவழித்துக் கொண்டிருக்கிறான். கொஞ்சம் சுதந்திரமாய் பிள்ளைகளைப் பறக்கவிடுங்கள் சுயமாய் சிந்திப்பதை வளர்த்து எடுங்கள். சுதந்திரம் கொடுக்கிற அனைவரையும் குழந்தைகள் சொந்தக்காரர்களாய்க் கொண்டாடுவார்கள்.
லீவு விட்டவுடன் பிள்ளைகளுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்ய அவர்களை அனுமதியுங்கள். கிராமங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள் பல்வேறு ஞானிகள் கற்றுக் கொடுப்பதைவிட கிராமங்கள் அதிகமாகக் கற்றுக் கொடுக்கும் இப்போது பாதுகாப்பாக, பகட்டாக கல்விகற்று எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்ற இந்தக் குழந்தைகளுக்கு கிராமத்துப் புழுதியிலும், சகதியிலும்தான் பல கின்னஸ் புத்தகங்கள் கிடக்கின்றது என்று தெரியவரும். வகுப்பில் தலைவன், ஆசிரியர், தலைமையாசிரியர் என்ற அதிகார வர்க்கமும், அதன் கட்டுப்பாடுகளையும் கண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு மூத்தோர்களுக்குக் கொடுக்கிற மரியாதையும், சுயக்கட்டுப்பாடுகள்தான் வாழ்வில் உயர்ந்தது என்று கிராமத்தில் காணும் மனிதர் வழியாகத் தெரியவரும்.
நகரில் உடைகளைச் சுத்தமாய் வைத்துக் கொண்டு உள்ளங்களை அழுக்காய் வைத்திருக்கும் உத்தமர்களைப் பார்த்துப் பயந்த நமது குழந்தைகள் உடைகள் அழுக்காய் இருந்தாலும் உள்ளம் சுத்தமாக வைத்திருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் வாழும் வித்தியாசமான உலகத்தை நமது குழந்தைகள் பார்க்கட்டும். பள்ளியில் அவரவர் குழந்தைகளை அவரவர் வீட்டார் வந்து அழைத்துச் செல்வதைப் பார்த்துப் பழகிய நம் குழந்தைகளுக்கு கிராமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கிடைப்பதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து அனைவரையும் சொந்தப் பிள்ளைகளாகப் பார்க்கும் அம்மா அப்பாக்களைப் பார்க்கும் அனுபவம் கிடைக்கட்டும்.
தன் பெற்றோரைத் தவிர யாரிடம் பேசத் தெரியாத குழந்தைகளை கிராமத்திற்குள் சந்திப்பவர்கள் நீ யாரு? யாரு வீட்டுக்கு வந்திருக்கிற? என்று நலம் விசாரிக்கும் நல்ல உள்ளங்களைப் பார்க்க அனுமதியுங்கள். பக்கத்து வீட்டில் கூட பழகாமல் இருந்த பட்டணத்து வாழ்க்கையை மறந்து கிராமத்திற்குச் சென்றால் தூரத்து உறவுகள் என்று சொல்லிக் கொண்டு வந்து தூக்கிக் கொஞ்சும் சொர்க்கத்தை இழந்து விடாதீர்கள்.
கிராமத்தில் கோயில் கொடை என்பது ஊரே திரண்டு வந்து சாமி கும்பிட்டு ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஆகா… சாமி கும்பிடுவது அடுத்த மதத்துக்காரர்களிடம் சண்டைப் போடுவதற்கல்ல, சந்தோசமாய் அனைவரும் கூடிக் கொண்டாடுவது என்பது குழந்தைக்குப் புரியும். ஊரைச் சுற்றி எத்தனை கோயில்கள் இருக்கிறது என்று பார்க்க அனுமதியுங்கள். சில மரத்தின் அடியில்! சில குளத்துக் கரையில்! சில மலைமேல! சில ஊருக்குள்ளே! இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றுக்கும்; ஒரு வரலாறு உண்டு அதனை கேட்டு வரச்சொல்லுங்கள்.
கிராமத்தில் பழகும் மாணவர்களோடு பாதுகாப்பாக வெளியில் சென்று வரச் சொல்லுங்கள். அங்கு பார்க்கின்ற மரங்களையெல்லாம் என்னென்ன பெயர் என்று மாலையில் உங்களிடம் வீட்டுக்கு வந்ததும் சொல்லச் சொல்லுங்கள் பாடும் பறவைகள், காணும் விலங்குகளையும் அவற்றைப் பற்றியும் சொல்லச் சொல்லுங்கள். கூட்டமாக மரங்களில் இருக்கும் கூடுகளை இரசிக்கச் சொல்லுங்கள் விலையுயர்ந்த பொருட்களாக நாம் நகரத்தில் வாங்கியவையெல்லாம் கிராமத்து மக்களின் உழைப்பில் வருவது என்பதனை உணரச் செய்யுங்கள்.
தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதி ஆபத்தானவை அவற்றில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கற்றுத்தாருங்கள். குழந்தைகள் விடுமுறையில் இருப்பதால் வீட்டுக்குள் இப்போது தான் அனைத்து இடங்களிலும் பிள்ளைகள் சென்று விளையாடும். எனவே எவை எவை எங்கிருக்கிறது அதனை எப்படிக் கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். மின்சாரம், காஸ் சிலிண்டர் போன்றவற்றில் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள் வீட்டுக்கு வருகின்ற மனிதர்கள் யார்? யார்? அவர்களுடன் எவ்வாறு மரியாதையுடன் பழக வேண்டும் எனக் கற்றுத்தாருங்கள். அதேபோல் வெளியே செல்லும்போது கவனமாகச் செல்லச் சொல்லுங்கள் ஏனென்றால் இப்போது தெருக்களில் நாய்கள் பெருகி விட்டது. நாயை காயப்படுத்தினால் கூட நாலுபேர் வருவார்கள் ஆனால் நம்மை நாய் கடித்து விட்டால் எந்த நாயும் வராது என்று எச்சரியுங்கள்.
இந்த இடத்தில் நான் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய சிவகுமார் அவர்கள் எந்தச் செயலையும் வித்தியாசமாகச் செய்யக் கூடிய விபரமான மனிதர், பள்ளிகளுக்கு வராத, பாடங்கள் தெரியாத, பள்ளிக்கு வராததால் பாடங்கள் தெரியாத, பாடங்கள் தெரியாததால் பள்ளிக்கு வராத மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு Mission Delta என்ற ஒன்றை அறிமுகம் செய்து அனைவரையும் எழுத வாசிக்க வைத்தவர், எழுத்தறிவித்தவன் இறைவன் மறுக்க முடியாது.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வின் முடிவையையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிற இந்தச் சமூகத்தில் எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு (NMMS) முக்கியத்துவம் கொடுத்து அதற்காகக் கடுமையாக உழைத்தவர். இதனால் அரசு நான்கு வருடங்கள் அவனுக்கு நிதி வழங்கும். எட்டாம் வகுப்பு வரை கற்றுக் கொடுத்த ஆசிரியரைக் கூட அந்த மாணவன் பனிரெண்டாம் வகுப்பு வரை அவரது உதவியால் பெற்ற பணத்தை பெறும் போதெல்லாம் நினைத்துக் கொள்வான். வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு இந்தக் கல்வித் தொகை கடவுள் தந்த வரமாகும். இதற்காய் உழைத்து இந்த மாவட்டத்தை தமிழகத்திலேயே முதல் இடத்திற்கு கொண்டு வந்தார்.
இவரது அடுத்த அவதாரம்தான் விளையாட்டுப் பயிற்சி முகாம் மீண்டும் மாணவர்கள் கிடைக்கும் நேரத்தில் அலைபேசியில் தொலைந்துவிடக் கூடாது என்றும் இதனால் தனது அறிவை தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்திலும் அழகாக திட்டமிட்டு கோடை விடுமுறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் துணையோடு விளையாட்டு முகாம் பல்வேறு பள்ளிகளில் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட ஒரு இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இவர்களையும், இவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுத்தத் தயாரான உடற்கல்வி ஆசிரியர்களையும் நம்பி அனுப்பும் பெற்றோர்களையும் மனதார வாழ்த்துகிறேன். நம் குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் நல்ல இடத்தில் நம் குழந்தைகள் இருக்கும்.
இதே போல் குழந்தைகளை தொலைந்துபோன நம் பழைய விளையாட்டுக்களைத் தேடி எடுத்து விளையாடச் சொல்லுங்கள் இப்போது பல பள்ளிகள் குழந்தைகள் விடுமுறைக்குச் செல்லும்போது கோலி, பம்பரம் கொடுத்து அனுப்பியிருக்கிறது. அதனைப் பாராட்டுங்கள் பெண் குழந்தைகள் கயிறு தாண்டுதல், நொண்டி, கண்ணாம்பூச்சி, பல்லாங்குழி விளையாடச் சொல்லுங்கள் குச்சி கம்பு, அணில்-நாய், கபடி, கிளியந்தட்டு என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். சின்னச் சின்னக் காயங்கள் ஏற்படும் செல்லம் கொடுக்காதீர்கள் உடைகள் அழுக்காகலாம் கண்டிக்காதீர்கள். கூட்டுறவும், விட்டுக் கொடுத்தலும், தியாகமும் ஒன்று சேர்ந்து வெற்றியடைவதும், தனிமனித விருப்பம் கடந்து பொது வெற்றிக்காக ஒன்றுபட்டு போராடுவதையும், விளையாட்டைத் தவிர வேறெதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆகவே குழந்தைகள் விளையாடட்டும் அவர்கள் வாழ்வில் நீங்கள் விளையாடாதீர்கள்?
“விளையாட்டு என்பது
குழந்தைகளை சுயமாய்
சிந்திக்க வைப்பது”