12
Dec
2024
நமது வாழ்க்கைப் பயணத்தில் தொடக்கக் காலத்தில் இருந்ததுபோல் இப்போது இல்லை. விஞ்ஞான உதவியால் வேகமாக வளர்ந்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் வளர்ச்சிகள் எல்லாம் சாபங்களாகி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
பார்க்கும் இடமெல்லாம் பக்தர்கள்! கிடைத்த இடத்திலெல்லாம் சாமிகள்! வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வழிபாடுகள்! நமது பக்தி என்ன? பயணங்கள் என்ன? புதுப்பித்தல் என்ன? புனரமைவு என்ன? அதனால் கிடைத்த பலன் என்ன? மக்களிடம் மாண்பு இருக்கிறதா? மனித நேயம் வளர்ந்திருக்கிறதா? கடவுள் பக்தி கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொடுத்திருக்கிறதா? இல்லையே? காட்டு மிராண்டிகளாக வாழ நமக்குக் கடவுள் தேவையா?
எல்லோருக்கும் கல்வி கொண்டு வந்தோம். இலவசமாகப் புத்தகம் நோட்டுக்களைக் கொடுத்து மகிழ்ந்தோம். வீடுதேடி அழைத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்தோம். அடிப்படைக் கல்வியில் அத்தனை பேரும் தேர்ச்சி என்றோம். மாலைநேரப் படிப்பு, தனிப்பயிற்சி என்றெல்லாம் கொடுத்தும் கல்வி நமக்குக் கொடுத்தது என்ன? ஒழுக்கத்தில் உயர்ந்தோமா? ஊர்போற்ற வாழ்ந்தோமா? நேர்மையில் நடந்தோமா? நீதியை காத்தோமா? இல்லையே?
தொழில்களைப் பெருக்கினோம்! வேலைவாய்ப்பை அதிகரித்தோம்! நிறுவனங்களை உருவாக்கினோம்! உற்பத்தியைப் பெருக்கினோம்! நம் தேவையை அடைந்து விட்டோமா? நிம்மதியாய் வாழ்கிறோமா? இல்லையே! வறுமைக் கோட்டிற்குக் கீழே மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறோமே! ஏன்? ஆய்வு செய்து பாருங்கள்.
இன்று மதங்கள் உச்சம் தொடுகிறது. ஓவ்வொரு மதங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோவில் எழுப்புவதும் திருவிழா நடத்துவதும் கொடிகட்டிப் பறக்கிறது. கோவில் என்ன சொல்கிறது? அடுத்த மதத்துக் கோவிலை விட என் கோவில் அழகாக இருக்க வேண்டும்! இது போட்டி! அவன் எப்படி இங்கு கோயில் கட்டலாம்? இது பொறாமை! இதனால் ஏற்படும் சண்டை, சச்சரவுகள். இதனால் அடுத்தவன் வழிபாட்டிற்கு இடையூறு செய்தல், அப்படியென்றால் உனக்கு எதற்கு கடவுள்? பக்தி.?
உன் விருப்பப்படி கடவுள் வைத்துக் கொள் தவறில்லை. ஆனால் உன் விருப்பத்தை நிறைவேற்ற அவரைப் பயன்படுத்தாதே! உன் கடவுள் எவ்வளவு உயர்ந்தவராகவும் இருக்கட்டும்! ஆனால் அடுத்தவன் நம்பிக்கையை அவமானப்படுத்தாதே! அங்கங்கள் முழுவதிலும் ஆண்டவனின் அடையாளங்கள் ஆனால் செய்வது முழுவதும் பொறுக்கித்தனங்கள் இது எப்படி பக்தி வளர்ந்து இருக்கிறது என்று சொல்ல முடியும்? நன்றாகப் பகல் வேசம் பெருகி இருக்கிறது.
மதங்கள் நம்மைச் செம்மைப்படுத்தத் தானே! மனிதநேயம் போதிக்கத்தானே! அது எப்படி பிற மதக்காரர்களைப் புண்படுத்தும்? அது எப்படி அடுத்தவர்களை அழிக்க ஆவேசத்தை ஏற்படுத்தும்? மதம் உருவாகக் காரணம் அடிமனதில் எழும் ஆசையும், பயமும் தான். நம்மால் முடியாது என்று மனசு சொல்லும் ஆனால் அடிமனது சில ஆசைகளை வைத்துக் கொள்ளும் அதை நிறைவேற்ற அது நாடுவதுதான் கடவுள். அடிமனதில் சில பயங்கள் இருக்கும் அதனைப் போக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது. அதைத்தான் அவர்கள் கடவுளாக உருவாக்கியிருக்கிறார்கள். ஆசை எல்லாவற்றையும் அனுபவிக்க, பயம் என்பது நோயும், பேயும்.
மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைகிறவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப துணி எடுப்பார்கள். அது அவர்களுக்குப் பிடித்தது. அவர்களைப் போல் எல்லோரும் ஒரே நிறத்தில் தான் எடுக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? அப்படி அவர்கள்; விரும்புகிற நிறத்தைத் தவிர பிற நிறத்தில் எடுத்தால் அவர்கள் துன்புறுத்துவோம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அது போல் தான் அவரவர் விரும்பும் மதத்தை அவரவர் விரும்பும் வழியில் பின்பற்றட்டுமே! விட்டுவிடுங்கள். எல்லோரும் ஒரே மதத்தை எதற்கு பின்பற்ற வேண்டும்?
கல்வி வந்தால் காட்டுமிராண்டித்தனம் குறையும். ஒழுக்கம் உயரும் அப்படியென்றுதான் சமூகம் நினைத்தது. படித்தவனிடம் ஆலோசனை கேட்போம். படித்தவன் பொய் சொல்ல மாட்டான். படித்தவனை மதிக்க வேண்டும். மரியாதை செலுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்று சொல்வார்கள். இன்று கல்வியில் முன்னேறி விட்டோம். ஒழுக்கத்தைக் காற்றில் பறக்க விட்டோம். தேடித் தேடி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கிறோம். ஆனால் பண்பாட்டைப் புதை குழியில் போட்டு மிதித்து விட்டோம்.
கல்வி கடைச்சரக்காகி விட்டது. பணம் இருப்பவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். வகுப்பறைகள் ஏலம் விடப்படுகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு எட்டாததால் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள். கல்வியைப் போல் வியாபாரம் இங்கு வேறு எதுவுமே இல்லை. மாணவர்கள்தான் இன்று போதைப் பொருட்களை விதைக்கும் நாற்றங்கால்களாக இருக்கிறார்கள். மாணவர்கள்தான் குழுக்களாகப் பிரிந்து ஏரியாத் தாதாக்களாக தங்களை இனம் காட்டிக் கொள்கிறார்கள். மாணவர்கள்தான் சாதியின் அடையாளங்களோடு சண்டையிடுகிறார்கள். மாணவர்கள்தான் ஒருவருக்கு ஒருவர் உயிருக்கு உயிராய் காதலித்து ஏமாற்றி இறப்பைத் தழுவுகிறார்கள். மாணவர்கள் ஆசையினால் குடும்பங்களில் குழப்பம் உருவாகிறது. இப்போது சொல்லுங்கள் இதுதான் கல்வி கற்றுக் கொடுத்தது என்றால் இந்த கல்வியால் நமக்குத் தேவையா?
அனைவரும் வேலைக்குக் கிளம்பிவிட்டோம். எண்ணற்ற நிறுவனங்கள் நம்மை அழைக்கிறது. ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடக்கிறது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வேலைகளான விவசாயம், நெசவு போன்றவற்றைச் செய்யக் கூட ஆளில்லாமல் எல்லோரும் கம்பெனியை நோக்கி ஓடுகிறோம். கை நிறையச் சம்பளம் வாங்குகிறோம். வசதிகள் பெருகி விட்டது. வாய்ப்புகள் பெருகி விட்டது. ஆனால் நிம்மதி?
நிம்மதி எங்கே? அதை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய நாம் அது இல்லாமல் தானே அலைகிறோம்! நிர்வாணமாய் நிற்கக் கூடாது என்று வந்தவர்கள். இப்போது ஆடம்பரத்திற்காக ஆடைகளைக் குறைத்துக் கொண்டோமே! இதைவிட நிர்வாணமாக இருந்தால் கூட நிம்மதியாய் இருந்திருக்காலாமே! கதவின்றி, படியின்றி ஓட்டைக் குடிசையில் வாழும்போதும் முற்றத்தில் தூங்கும்போதும் பாதுகாப்பாய் உணர்ந்தவர்கள் இன்று சுற்றுச் சுவருக்குள், இருக்கும் பூட்டிய அறைக்குள் காவலாளி, பாதுகாப்பு, எச்சரிக்கை மணி, கண்காணிக்கும் கேமரா இருந்தும் பயந்துகொண்டே இருக்கிறோமே! தேவையா இது நமக்கு?
கல்லோடு மண்ணோடு கஞ்சி காய்ச்சி குடிக்கும்போது எட்டிப்பார்க்காத இறப்பு கூட இருபத்தி நாலு மணிநேர சேவை மருத்துவமனை வந்தபிறகும் பிணத்தையல்லவா மருத்துவமனைகளில் வாங்கிச் செல்கிறோம் வசதி வந்த பிறகும் மருத்துவர்கள் பயப்படுத்துகிறார்கள். திருடர்கள் பயம், அரசின் நெருக்கடி பயம், தாதாக்கள் பயம், அரசியல்வாதிகள் பயம், நிம்மதியாக ஒரு நிமிடம் கூட நிற்க முடியாத நிலை வந்த பிறகு இந்தப் பணம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
உங்களுக்குப் பட்டம், பதவி, பணம், வசதி, ஆடம்பரம் என வந்தபிறகு நிம்மதி இல்லாத வாழ்க்கை. பிறப்பில், மகிழ்ச்சியைப் பகிர யாருமில்லை. இறப்புக்கு ஆறுதல் சொல்லவும் ஆட்கள் இல்லை. வாருங்கள் உறவைத் தேடி ஒரு பயணம் செல்லுவோம். மனிதனை வெறுக்கும் மதங்களை விட்டு விலகுவோம். உறவுகளைப் பிரிக்கும் கல்வியை ஒதுக்குவோம். நிம்மதியைத் தொலைக்கும் பணத்தைத் தொலைத்திடுவோம் ஆயிரம் பிறவிகள் இல்லை நாம் பிரிவதற்கும் சேருவதற்கும் ஒரே பிறப்புத்தான் அதுவும் இதுதான்! உங்கள் வாழ்க்கைப் புத்தகத்தில் எத்தனை பேர் இடம் பிடித்திருக்கிறார்கள் நீங்கள் எத்தனைபேர் இதயத்தில்? நான் எத்தனைபேர் இதயத்தில்?
“இதயம் கையளவு
இருக்கைகள் அங்கு
வானளவு…”