17
Feb
2012
வாக்காளர் தினம்
என்று நீ வாழக் கற்றுக்கொள்கிறாயோ அன்று நீ ஆளக் கற்றுக்கொள்கிறாய் என்பது சான்றோரின் வாக்கு.
வாழும்போது செம்மையாக வாழவும் வாய்ப்புக் கிடைத்தால் உலகையே ஆளவும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தகுதியுள்ளவனை மட்டுமே அரியணை ஏற்றவும், தகுதியற்றவனை அந்தக் களத்திலிருந்தே தூக்கி எறியவும் உன்னிடம் கொடுக்கப்படும் ஒரு அட்சயப் பாத்திரமே இந்த அடையாள அட்டை.
அட்டைகள் என்பது நீ அணிந்து இருக்கும் சட்டைகள் போலன்று தேவைப்படுவதைத் தேர்ந்தெடுக்க, தேவையில்லாதபோது மாற்றிக்கொள்ள, இந்தப் புமியின் புர்வீகத்தில் நீ வந்து போன வரலாற்றை நீ வாழும்போது அறிக்கையிடும் உயிர், ஆனால் உயில் போன்றது. இதனை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்? இதனை நாம் உணராததாலே இந்தியா இன்று உலர்ந்துபோய்க் கிடக்கிறது. இளமை உறங்கிக்கொண்டு இருக்கிறது.
ஒரு ஓட்டுநர் உரிமம் பெற்றால் நமது தேசத்தில் எந்தப் பகுதியிலும் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம் என எண்ணுகிறோம். ஆனால் ஓட்டுப்போடும் உரிமையைப் பெற்றவுடன் இதனை எத்தனை ரூபாய்க்கு விற்கலாம் என்றுதானே எண்ணுகிறோம். ஏன் இந்த இழிநிலை. பணத்திற்காக எதையும் இழக்கலாம் என்றால் மானம் மரியாதை விளைந்த மண் என்று சொல்வதெல்லாம் பழங்கதைகள்தானா? ஆகவே ஓட்டுப்போடும் உரிமையை நாம் பெற்றதை உணர்வோம். பல ஐரோப்பிய நாடுகளில் காணக்கிடைக்காத இந்தச் சுதந்தரம் நமக்கு மடிமீது தவழ்கிறது. இதனை மாற்றாந்தாயாக நடத்திக்கொள்கிறீர்களே ஏன்?
அரக்கப் பரக்க அவசர கதியில் ஐந்திற்கும் பத்திற்கும் அறுசுவை உணவிற்கும் ( பிரியாணி ) குடியைக் கெடுக்கும் குவார்ட்டருக்கும் விற்றுவி்ட்டு பிறகு ஐந்தாண்டுகள் அவர்கள் ஆடுகிற ஆட்டத்தை காணச் சகிக்காமல் கண்விழி பிதுங்க நிற்பதற்குக் காரணம் யார்?
உடம்பை விற்பவர்களை தாசி என்றும் வேசி என்றும் இழித்தும் பழித்தும் பேசுகிறவர்களே! ஓட்டுக்காகத் தன்னை விற்பவர்களை என்ன சொல்லப்போகிறீர்கள்? ஒரு உடம்பை விற்கிற தாசியால் இந்த சமூகத்திற்கு சின்ன சலனத்தையோ சபலத்தையோதான் ஏற்படுத்த முடியும். காசு வாங்கிக்கொண்டு மனச்சாட்சியை அடகுவைத்து விட்டு ஓட்டுப் போடுகிறவர்களால்தான் சமுதாயத்திற்கு மொத்தத்தீமைகளையும் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாகும்.
விவிலியக் கண்ணோட்டத்தில் பார்த்தால் விபச்சாரியைக் கூட கல்லால் எறிந்து கொல்லக் கூடாது, மன்னிக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் காசுக்கு ஓட்டை விற்றுவிட்டு அடுத்தவர்களுக்கு இடறலாய் இருப்பவனை இயந்திரக் கல்லைக் கட்டி ஆழ்கடலில் கொண்டு எறிந்துவிடவேண்டும் எனக்கூறுகிறது.
இதனால் பல தகுதியுள்ளவர்கள் தக்க சமயத்தில் தள்ளப்பட்டு விடுகிறார்கள். தகுதியற்றவர்கள் ஆட்சிக்கு வந்து தான்தோன்றித்தனமாகத் திரிகிறார்கள். அதன் விளைவு இன்றுவரை நாம் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இன்றைய நாட்டின் நடப்புகளை நாளேட்டில் புரட்டிப்பாருங்கள். நெஞ்சம் கனக்கும் , நிம்மதி தொலையும், இரத்தம் உறையும், சித்தம் கலையும். கண்ணுக்கெட்டியதெல்லாம் கள்ளக்காதல் கொலைகள்தாம். நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதெல்லாம் நில அபகரிப்பு வழக்குகள்தான். இதற்குக் காரணமென்ன? வரலாற்றுப் பிழைகள் ஒரு வரலாறாகவே வந்துகொண்டிருக்கும்.
இன்றல்ல, நேற்றல்ல இந்தப் புமி முழுமையடைந்த போதே இந்தப் பிழையும் செய்துவிட்டது. இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். அயோத்தி தேசமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது நல்லாட்சி நடத்த நல்லவன் ஒருவன் வருகிறான். ஆயிரம் மனைவியைக்கொண்ட தசரதச்சக்ரவர்த்தி என்று சொல்லும் போது, இந்திய இறையாண்மைக்கு களங்கம் வருவதாக இருந்தது. ஆதலால் அவரின் ஏக புதல்வன் ஏக பத்தினி விரதன் தூய ஆட்சியைத் துவங்கப்போகிறான் என்ற மக்களின் நம்பிக்கையில் திடீரென்று மண்விழுந்தது. கூனி குறுக்கிட்டாள். கைகேயி காயை நகர்த்தினாள். ஆட்டம் தப்பாட்டமானது. பதவியைப் பற்றித் தெரியாத ஒருவன், பரதன் பட்டாபிசேகம் ஏற்றான். தர்மம் தலைகுனிந்தது. அதர்மம் ஆட்சிப்பீடம் ஏறியது. அன்றே நாம் தொலைத்துவிட்டோம் இந்தியாவின் இறையாண்மையை.
ஏக பத்தினி விரதனை நாம் காட்டுக்குள் அனுப்பிவிட்டோம். ஏகப்பட்ட மனைவி வைத்திருப்பவர்களையும் அதன் மூலம் நடக்கின்ற அக்கிரமங்களையும் நாம் நாட்டுக்குள் வைத்துக்கொண்டோம். ஒருவனுக்கு ஒருத்தி என்றவனை பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவேண்டும் என்றார்கள். ஆனால் இன்றும் நாட்டுக்குத் திரும்பவே இல்லை. இதனால் இன்று நாட்டில் நடப்பது என்ன?
கள்ளக் காதல், மனைவி மரணம், இடையுறாக இருக்கும் குழந்தைகள் கொலை என நாள்தோறும் பத்திரிக்கைகளில் வந்துகொண்டே இருக்கிறது. இது இன்றல்ல நேற்றல்ல அன்றே செய்த பிழையால் அசிங்கத்தை நாம் சந்தனமாகப் பூசியிருக்கிறோம்.
மகாபாரத நிகழ்ச்சி ஒன்றையும் மனதிற்குள் எண்ணிப்பாருங்கள். தர்மன் ஒரு சத்திய சீலன் . இருந்தாலும் சகுனி ஆடிய சதுரங்கத்தில் மனை போனது, மனைவி பறிக்கப்பட்டாள். அரசாட்சி அபகரிக்கப்பட்டது. காட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இன்றளவும் இதுதானே நடக்கிறது. நேர்மையான அதிகாரிகளையும் நேருக்கு நேராக குறைகளை எடுத்துக் கூறுபவர்களையும் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு மாற்றுவது தானே வாடிக்கை, நமக்கு முன் நாள்தோறும் அரங்கேறும் வேடிக்கை. துரியோதனன் அவையிலே பாண்டவர்கள் மத்தியில் பாஞ்சாலி சேலை உரியப்படும்போது பாண்டவர்கள் கை கட்டப்பட்ட நிலையிலேதான் நின்றார்கள். இன்று துரியோதனனாக, துச்சாதனனாக அரசியல்வாதிகளும் பாண்டவர்களாக அரசு அதிகாரிகளும் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் நாட்டை எவ்வளவு உரிய முடியுமோ செல்வங்களை எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவையும் உறிஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். அதனை அரசு அதிகாரிகள் கை கட்டி வேடிக்கை பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அன்று பாஞ்சாலி என்ற ஒரு தனிப் பெண்ணுக்கு நடந்ததாக இந்த தரணி வேடிக்கை பார்த்ததாலே அரசவையில் அத்தனைபேருக்கு மத்தியிலும் ஒரு பெண் துயிலுரியப்பட்டாள். அதனால்தான் இன்றளவும் மக்கள் நகை களவுபோனால் துடிக்கிறார்களே தவிர நதியே களவு போனாலும் கண்டுகொள்வதில்லை. அன்று பாஞ்சாலிக்காக ஒரு கண்ணண் வந்தான். இன்று இந்த பாரதத்திற்காக யார் வருவார்? நீங்கள்தான் வரவேண்டும். அன்று சகுனியும் கூனியும் ஆடிய ஆட்டம் நல்லவர்களைத் தள்ளிவிட்டு தீயவர்களைத் தீய வழிகளில் தேர்ந்தெடுத்துவைத்தது. அதனால் பாரதம் எவ்வளவு பங்கப்படுத்தப்பட்டது என படித்தவர்களுக்குத் தெரியும்
ஆனால் இன்று பணமும் சாதியும்தான் கூனியாகவும் சகுனியாகவும் மாற்றுருவில் வந்து ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றிவிடுகிறது. பணம் படைத்தவனும் சாதித்தலைவர்களுமே அரசியல் நடத்தி வெற்றி பெறுகிறார்கள். நல்லவர்கள் பின்வாங்கிக் கொள்கின்றனர். நாடு நல்லவர்களை ஈன்றெடுக்க, நல்லாட்சி என்றும் நிலைத்திருக்க, நல்லவர்களைத் தோந்தெடுங்கள். இன்று கிடைக்கிற இலவசத்திற்காக பல வேசம் போடாதீர்கள்.
பழங்காலத்தைப்போல யானை வந்து யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ! எவர் காளையை அடக்குகிறார்களோ! அல்லது எவர் வீரத்தில் வெற்றி பெறுகிறார்களளோ! அவர்களல்ல தலைவர். நீங்கள் சுயமாகச் சிந்தித்து சுய சிந்தனையில் சீர்தூக்கிப் பார்த்து தகுதியானவர்களை, தரத்தில் உயர்ந்தவர்களை தன்னலம் கருதாதவர்களை உன்நலம் பார்க்காமல் உயாந்த உள்ளத்தை கள்ளம் கபடமில்லாது காசு பணத்தைத் தேடாது எதிர்காலம் கருதி ஒளியேற்றிட இந்த வாக்களிக்கும் உரிமையை வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.
சாதிக்காக ஓட்டுப்போட்டு வீதிக்கு வந்து விளங்காமல் போகாதீர்கள். அன்பளிப்பு என்ற பொயரில் வாக்களிக்கும் உங்களுக்கு வாய்க்கரிசி கொடுப்பார்கள். அதனை வாங்க அலையாதீர்கள். அது இறந்த பிறகு செய்யவேண்டியது. இருக்கும் வரை உழைத்து உண்ணுங்கள். உங்கள் வியர்வையில் உங்கள் உணவு தெரியட்டும். அடுத்தவன் எச்சில் பருக்கையில் ஆயுள் தேரை இழுக்க வேண்டாம்.
எவனோ எறிகிற பிச்சைக்கு அலைகின்ற நாய்களல்ல நாம். எவனோ உடைக்கின்ற தேங்காய்க்கு அலைகின்ற பொறுக்கிகளல்ல நாம். இந்திய தேசத்தின் பதிய தலைமுறைகளையும் பொறுப்பான தலைவர்களையும் உருவாக்கும் பொன்னான வாக்குச் சீட்டு உங்கள் கையில் உள்ளது. அதனைப் பொறுப்பாகப் பயன்படுத்துங்கள். அதனில் மட்டும் தவறி சாதிக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு விலை போனீர்கள் என்றால். இனிமேல் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.