24
Jan
2016
அன்புத் தம்பி!
அழைத்தார்கள் என்னை
வாழ்த்தவேண்டும் உன்னை
வருகிறேன் என்றேன்.
உன்னை வாழ்த்த
ஓராயிரம் இருந்தாலும் – இந்த
அண்ணனின் வாழ்த்து
அருந்தவம் அல்லவா! – அதை
அறிந்தவன் நீயல்லவா!
உன் வாழ்க்கை ஒரு
போராட்டம் – நீ பிறரை
வாழ வைத்த நீரோட்டம்
சாமியின் தேரோட்டம் – உன்
சந்நியாச தொடரோட்டம்
நீ பாதம் வைத்தால் – அது
பசுமையாகும் – நீ
பாசம் வைத்தால் வாழ்வு
இனிமையாகும்
பதவிக்கு உன்னைத்
தேடாதவர்கள் கூட
உதவிக்கு உன்னிடம்
ஓடி வருவார்கள்
யாருக்கும் குறை
வைத்தில்லை – எதிலும் நீ
குறை சொன்னதும் இல்லை
உன் நாற்றாங்காலில்
வளர்ந்தவர்கள் தான் இன்று
நல்லாட்சி செய்கிறார்கள்
உன் வகுப்பறையில்
இருந்தவர்கள் தான் இன்று
பகுத்தறிவாளர்களாய்
உலவுகிறார்கள்
உன்னை வாழ்துவதற்கு
என்ன தடை? ஆனால்
அனைத்தையும் எப்படி
வார்த்தையில் வடிக்க!
காரணம் சொன்ன போது
கலங்கித்தான் போனேன்;
உனக்கு ஒய்வா?
உலகம் ஓப்புமா?
நிலவுக்குத் தேய்வுண்டு
இன்னொரு வளர்பிறையை
வளர்த்தெடுக்க
சூரியனுக்கு ஓய்வா?
ஆசிரியப் பணிதான் – நீ
ஆற்றிய பணியா? நீ
காட்டிய வழியே
காலங்காலமாய்
பாதையாயிருக்குமே!
நீ தொட்டது துலங்கும்
தோட்டம் வைத்தால்
காய்காய்க்கும் – நீ
பட்டபாடுகளெல்லாம்
பலன்களாகத்தான் மலர்ந்திருக்கும்
நீ மாநிலத்தை ஆளும்போது தானே
மலையாள நாட்டில்
மாவடி நிலம் வாங்கினாய்
விவசாயப் பணியே – இங்கு
விளங்கியது உன்னால் தானே!
சட்டத்தின் நுணுக்கங்களை
சரியாய் சொல்லுவதில் – நீதானே
சாமர்த்தியன் – பல
திட்டங்கள் தீட்டி
திறம்பட விளங்கவைத்து
தேற்றியவனும் நீதானே
பலசோதனை பலவேதனை
பட்ட பாடுகள் தான்
எத்தனை! எத்தனை!
பக்குவமானாய் – பல
பாடமும் படித்தாய் – பலரை
பாங்குடன் வளர்த்தாய்
பாசத்துடன் அணைத்தாய்
உன்மீது அடித்த புயல்
இடம்மாறி அடித்திருந்தால்
இமயமலை கூட – கொஞ்சம்
இடம் பெயர்ந்திருக்கும்!
உன் மீது அடித்தவெயில்
இடம் மாறி அடித்திருந்தால்
பாதிச் சமுத்திரமே
பாலையாய் போயிருக்கும்!
நீயோ!
புயலிலே சவாரி செய்தாய்!
வெயிலையே சமாதி செய்தாய்!
ஆனாது ஆகட்டும்
போனது போகட்டும்
அடுத்த சரித்திரம் – இன்றே
உன்னில் தொடங்கட்டும்
உனது வெற்றிப் பயணத்தில்
ஒவ்வொரு படியிலும்
நான் இருந்திருக்கிறேன்
இருக்கிறேன், இருப்பேன்!
அம்மையும் அப்பனுமாய்
உன் அருகிலிருப்பேன்
சென்றுவா! வென்றுவா!
புதிய சரித்திரத்திற்கு இன்று
பூஜை போடப்படுகிறது
வாழ்க வளமுடன் – நீ
வருவாய் நலமுடன்.
சகோ S. அமல்ராஜ்
———————————————————————————–
————————————————————————
மாட்சிமை தங்கிய இறைவனின் இனிமையான இறை ஊழியருக்கு எனது உள்ளத்தின் ஆழத்தில் காவியம் பாடும் கவிதை
இந்தியத் திரு நாட்டிலே…
தமிழ் மாநிலத்திலே …
சிவகங்கை மாவட்டத்திலே…
சூசையப்பர் மண்ணிலே…
பரிசுத்த தம்பதியர்க்கு…
பரிசுத்தமாய் உருவான…
நீதியின் செங்கோலாய்…
மலர்ந்த எங்கள் ஐயாவே…
உம் பெயர் வாழ்க…
உம் வார்த்தை வாழ்க…
உம் சிந்தனை வாழ்க…
தேவனுக்காக தேசத்திற்காக…
கல்வியின் பயன் ஓழுக்கத்தில்…
திலகமாய் திகழும் கலைக்கூடத்தின்…
தலைமை ஆசிரியர் ஐயாவே…
குன்றின் மேல் விளக்காக…
எம் பள்ளி நிகழ்வதும்…
உமது கடின உழைப்பாலே…
நீதி நேர்மை சத்;தியம்…
நெறி தவற இலட்சியம் கொண்டு…
எம் பள்ளி சுடர்விடுவதும்…
உமது வழி காட்டுதலே…
நீர் பணி ஆற்றிய புனித மரியன்னை
கல்விக்கூடம்…
மங்கா புகழுடன்…
தீர்க்கமாய் ஒளிரும்
நீர் யார்?
எங்கும் இருக்கின்றீர்
எல்லா பணியிலும் இருக்கின்றீர்…
உங்களை இப்படியும் பார்க்கலாம்…
அப்படியும் பார்க்கலாம்..
உம் பணி வாழ்வுக்கு ஈடாக…
உம்மை போல் இனி ஒரு…
செங்கோல் ஐயா பிறப்பாரா…?
அன்பும், கோபமும் அரவணைப்பும்…
நீட்டிக் கொடுத்தலும் வழிகாட்டுதலும் தந்து…
என்னை விளக்கேற்றும்…
நல் தந்தையாக…
நல் தோழராக…
நல் ஆற்றுனராக…
நல் தலைமை ஆசிரியராக…
வாழ்ந்து ஒளிவீசும் உங்களுக்கு
பிரிவின் கவிதை அல்ல…
தொடர்ந்து மலரும் உறவின் கலிதை…
இறைவனின் இறை ஊழியரே…
பனையை போல் உயர்ந்து
லீலி மலர் போல் பூத்துக் குலுங்கி
அருகம் புல் போல் படர்ந்து
நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் செழித்து வளர…
சிறகை விரித்து சிகரத்தை நோக்கி…
இமயம் போல் உயர்ந்து நிற்க…
ஜெபத்தோடு வாழ்த்துகிறோம்…
அருட்சகோ கவிதா பால்
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி
விக்கிரமசிங்கபுரம்
——————————————————————-
எம் அன்புச் சகோதரர்க்கு
நீவிர் உழைப்பின் மாதிரி
உழை க்கின்ற பாதிரி
உழைப்பவர்க்கோர் முன்னோடி
அலைகடல் போல் அயரா உழைப்பு
சிந்தனைச் சிற்பி
சீர்மிகு சிந்தனையாளர்
சிறப்பான மாமனிதர்
சிறகடித்துப் பறக்கும்
சிந்தனை வானில்
சிட்டாய் உலா வரும்
உயர்ந்த மனிதன்
உதய சூர்யனாய்
என்றுமே கண்டதில்லை
சந்திரனாய் தவழ்ந்து வரும்
சரித்திர சாதனையாளர்
விரிசல் மேட்டு நிலத்தின் மலரின்
வாசம் நான்கடி மட்டுமே
சூசையப்பர் பட்டணமாம்
கரிசல் காட்டு நிலத்திலே
விளைந்த நன்மலராம் உம் பணி
நாடு முழுதும் மணம் சேர்த்ததுவே
மானுட சேவைக்காய்
மாணவர் நலனுக்காய்
உழைத்திட்ட உத்தமர்
இவரல்லவோ தலைவர்
பழக இனிமை
பணியில் நேர்மை
பார்வையில் கூர்மை
பாதையில் நேர்மை
பண்புக்குச் சான்று
உயர்ந்த எண்ணம்
உயரிய உள்ளம்
உண்மையே உம் மொழி
ஆல் போல் விழுதூன்றி
பலனறித்த செம்மல் நீர்
இமயம் போல் எல்லோர்
இதய சிம்மாசனத்திலும்
வீற்றிருக்கின்றீர்
கல்வெட்டாய் எம்
இதயத்தில் பதிந்தவர் நீர்
கடமைக் கருவோடு
கலந்திட்ட அருட்சோதரரே
நீவிர் அன்போடும்
அமைதியோடும்
அன்னை மரியின் ஆசியோடும்
அவர் மகன் யேசுவின் அருயோடும்
ஆண்டுகள் பல நற்சுகத்துடன்
வாழ்க பல்லாண்டு
வளர்க பல நூறாண்டு
என இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்! வணங்கிறேன்!
திருமதி C. ராஜம்
தமிழாசிரியை
புனித மரியன்னைமேல்நிலைப்பள்ளி
விக்கிரமசிங்கபுரம்
—————————————————————————–
எம் தலைமைக்கு வாழ்த்துபா
மாணவர் மத்தியில் இவருக்கு நல் மதிப்புண்டு
மாணவரை நல்வழிப்படுத்த இவரிடம் பற்பல நூற்கள் உண்டு.
அவற்றைப் படித்தால் மாணவரின் வாழ்வில் வெற்றி நிச்சயமுண்டு.
பொருளாதாரத்தில் இவருக்கு நிகர் யாருண்டு?
நான்… இவரின்…
உழைப்பைக் கண்டு உவகை கொண்டதுண்டு.
எளிமையைக் கண்டு மலைத்ததுண்டு.
சுறுசுறுப்பைக் கண்டு சுறு சுறுப்பாய் இருக்க எண்ணியதுண்டு.
நடையைக் கண்டு வியந்ததுண்டு
வாழ்வின் வழிகாட்டியாய் ஏற்றதுண்டு
கண்டிப்பு பலரை பயமுறுத்தியதுண்டு
இவரைப் பார்த்து பயந்த நாட்கள் பலவுண்டு அழுத நாட்கள் சிலவுண்டு
இவரின் தலைமையின் கீழ் பணியாற்றவதில் என்றும் எமக்கு பெருமையுண்டு
ஆதனால் இவரைப் பிரிவதில் சற்று வருத்தமுண்டு
என் தந்தையை விட இவரிடம் பாசம் அதிகமுண்டு
அதனால் இவரின் நலனில் என்றும் அக்கறையுண்டு
அமல அன்னையின் ஆசியும் அருளும் என்றும் இவருக்கு நிறைவுகண்டு
இத்தகைய பல்துறை வித்தகராகிய எம் தலைமைக்கு
வரலாற்றில் என்றும் தனி இடமுண்டு
பூமி உள்ள வரை அவர் புகழ் நிலைத்திருக்கட்டும் என்று
வாழ்த்த வயதில்லாமல் சிரம் தாழ்த்தி வணங்கும்
அன்பு மகள்
திருமதி மஞ்சுரேகா
தமிழாசிரியை
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி
விக்கிரமசிங்கபுரம்
———————————————————————————
வாழ்த்துகிறேன்.
இரவு நேரம் சுவற்றில் தெரியும் நிழலை ஒரு சிறு குழந்தை ரசித்துப் பார்ப்பதுபோல் என் நினைவுகளை ஒருமுறை அசைபோட்டுப் பார்க்கிறேன். இந்த மரியன்னைப் பள்ளி வளாகத்தில் துள்ளித்திரியும் ஒரு சுட்டிக் குழந்தையாகத்தான் நான் ஓடிவந்தேன் ஆனால் இன்று … நெஞ்சம் ஒரு நிமிடம் நிசப்தமாகிறது.
ஐயா உங்கள் முன்னால் ஒரு மாணவனாக உதவி செய்பவனாக, கூப்பிட்ட குரலுக்கு ஒடிவருபவனாக உடன் பணி செய்யும் ஆசிரியனாக உற்ற தோழனாக உடன் பிறவாச் சகோதரனாக, முரண்களைக் கூட்டி வந்து முட்டிக்கொள்பவனாக ஆறுதல் தேடிவரும் ஒருவனாக வழிகேட்டு வந்து நி;ற்கும் பாதசாரியாக… இப்படி எத்தனையோ நிலையில் நான் ஏறி வந்தேனோ! இல்லையோ எனை ஏற்றி வைத்து அழகு பார்த்தீர்கள்! இதற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.? இனிவரும் காலமும் உம் கரங்களைப் பிடித்துக் கொண்டு காலங்களைக் கடந்து செல்வதுதான்…
கடவுள் உங்களைக் காப்பாராக…