08
Apr
2022
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது வேறெங்கும் நடைபெறவில்லை தற்போது இலங்கை பற்றி எறிவதைத்தான் இவ்வாறு பகிர்கிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்னால் விடுதலைப் புலிகளை வேறறுத்து விட்டோம் என்று கர்ஜித்துத் திரிபவர்கள் இன்று தங்களைக் காத்துக் கொள்ளக் கதறிக் கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகச் சாகும் போது கடவுள் கண்ணை மூடிவிட்டானா? எனக் கண் கலங்கிய போது இப்போது இறைவன் கண்ணைத் திறக்கிறனோ எனத் தோன்றுகிறது. ஆனால் அவன் முழுவதும் கண்ணைத் திறக்குமுன் இலங்கையில் எல்லோரும் கண்ணை மூடிவிடுவார்களோ என கலக்கமாக இருக்கிறது.
மன்னர்கள் செய்த மடத்தனத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? என்று கேள்வி கேட்கலாம். ஆனால் மடத்தனமான மன்னன், ஆட்சி செய்யும்போது மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் மக்களின் முடிவு பரிதாபத்திற்குரியதாக இருக்கும். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு இலங்கைதான். அன்று சக மனிதர்கள் இறக்கிறார்கள் எனத் துடிக்காத சிங்கள மக்கள் இன்று துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று உங்களுக்கு இனம் முக்கியமாகத் தெரிந்ததால் இன்று பணத்தட்டுப்பாடு வந்து நாளை பிணம் படர்ந்து கிடக்கும் சுடுகாடாய் இலங்கை நாடு இருக்கும் என்பது காலத்தின் அறிகுறியாய் கண்முன் தெரிகிறது. காலம் சொல்லுமா? கடவுள் மன்னிப்பாரா? அவர்கள் கலக்கம் தீருமா? எல்லாக் கேள்விகளுக்கும் இறைவன் இடத்தில் மட்டும் தான் பதில் இருக்கிறது. பதில் கிடைக்குமா?
கடவுள் படைத்த படைப்பில் நாம் அனைவரும் காட்டுவாசிகளே மெல்ல மெல்ல நம் கருத்துகளை எண்ணங்களைப் பிறருக்குப் புரிய வைக்க நாம் உருவாக்கிய ஊடகமே மொழி பின்பு நம்மை நாமே கட்டுப் படுத்திக்கொள்ள, கட்டுப்பாடாய் அமைத்துக் கொள்ள உருவானதுதான் கடவுள், மதம், வழிபாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள். இவையெல்லாம் உருவாகும் முன்பு நம்மை நாமே எண்ணிப்பாருங்கள் ஏதோ ஒருவகையில் ஒரு தாயின் மக்கள் தானே. ஆனால் இந்த மொழியும், இனமும், சாதியும், மதமும் வந்தபிறகுதான் எத்தனை பிரிவுகள்? எத்தனை முறிவுகள்? எத்தனை அழிவுகள்? காட்டுமிராண்டியாய் இருந்த நம்மை மொழியும், மதமும், நாகரீகத்திற்கு அழைத்து வந்தது என்று எண்ணினோம் ஆனால் இவற்றோடு நமது அகங்காரமும் ஆணவமும் நரகத்திற்கு நகர்த்திச் செல்கிறது. அழிவுக்கு அழைத்துச் செல்கிறது. இனியும் இதனை நாம் உணராவிட்டால் இப்பிறவியின் அழிவு அதோகதிதான்!.
இலங்கையின் அழிவுக்கு யார் காரணம்? விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக உலக நாடுகளிளெல்லாம் கடனுக்காகக் கையேந்தியது. ஒருவழியாக தனக்கு இடறல் என்று தன் கையையும் காலையும், கண்ணையும் தானே பறித்துக்கொண்டு இப்போது ஊனமுற்றதாய் ஓலமிடுகிறது. தமிழீழத்தை அழித்துவிட்டதாக ஆர்பரித்து ஆட்சிக்கு வந்தவர் வரிக்குறைப்பு செய்ததனால் கையிருப்பு காலியானது. இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டுமென்று செயற்கை உரங்களுக்கு தடைவிதித்ததனால் மூட்டாள் தனமான முடிவாகி முற்றிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. சிங்களர்களைத் தூக்கிப்பிடித்த புத்த பிட்சுக்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவப் போகிறோம் என்பது இருக்கிற பொருளாதாரத்தையும் சவக்குழியில் தள்ளிவிட்டது. புத்தன் சிலையானான். பொருளாதாரம் சிதையானது. கொரோனா தாக்கம் சுற்றுத்துறை வழிவந்த வருமானம் நின்றுபோனது.
வறுமை வயிற்றை கிள்ளுகிறது. பெட்ரோல் விலையைக் கேட்டாலே எரிகிறது. அரிசி கடைசி வாய்க்கரிசியாகத் தான் வந்து சேருமோ! என்னவோ!. இப்போது எந்த வல்லரசு அதனைக் காவு வாங்கக் காத்திருக்கிறதோ! வரலாற்றில மீண்டும் இலங்கை அழிந்து விடுமோ என அஞ்சத்தான் தோன்றுகிறது. அனைத்திற்கும் காரணம் இனவெறி வெறிபிடித்த சிங்களர்கள் தமிழர்களை அழித்ததனால் இப்போது தானே குழிதோண்டித் தன்னை அடக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பக்கத்து வீடு பத்திக்கொண்டு எரியும்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதே நேரத்தில் நாமும் பாடம் கற்க நிறைய விசயங்கள் உள்ளன. அவர்கள் இனவெறியால் அழிந்ததுபோல நாம் மதவெறியால் அழிந்துபோகக் கூடாது. பட்டால்தான் புத்திவரும் என்றால் நாம் அனைவரும் செத்துப்போவோம். பார்த்தாலே புத்திவர வேண்டும். இலங்கை சிங்களர்களுக்கே என்று கோசம் போட்டவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? இலங்கை உள்ள சிங்களர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்தியா இந்துக்களுக்கே என கோசம் போட வேண்டுமா? பிறமதம், சாதிக்காரர்களை அழிக்க, அடக்க நினைக்க வேண்டுமா? சிந்திப்போம்.
ஒரு வீட்டில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி உடை அணிவதில்லை நிறத்தில், ஸ்டைலில், அமைப்பில் மாறுபடலாம் ஆனால் உடை அணிந்திருக்க வேண்டும். அதேபோல் தான் ஒரு நாட்டில் ஒரு மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை விரும்பிய மதத்தைத் தழுவலாம். ஆனால் சமத்துவம், சகோதரத்துவம், பேண வேண்டும். இந்தியா சமத்துவ நாடு, சகிப்புத்தன்மை நிறைந்த நாடு. அதனை மதம், சாதி என்ற பெயரில் சமாதி ஆக்கிவிட வேண்டாம். சமத்துவம் பேணுவோம், சகோதரத்துவமாய் வாழுவோம் சரித்திரம் படைப்போம்.
“போரினால் அழிந்தவர்களைவிட
பொறாமையால் வீழ்ந்தவர்களே அதிகம்”