19

Dec

2024

வீடு…

மனிதனின் அடிப்படைத் தேவைகள் காற்று, உணவு, உறைவிடம் என்பார்கள். காற்று இந்தப் பூமியில் கலந்தே இருக்கும். உணவு உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசு. ஆனால் வீடு என்பது நமது சேமிப்பின் அடையாளம். உணவும், வீடும் நமது வசதியையும் செல்வாக்கையும் பிறருக்குச் சொல்லும். வீடுகள்தான் ஊர்களை உருவாக்குகிறது.

இந்த வீடுகள் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? எவ்வாறு தோன்றியது? என்ற கேள்விகள் இருக்கிறது. ஆயினும் எதற்கு எப்படி, எவ்வாறு எனச் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் மனிதனுக்கு இருக்கிற பகுத்தறிவு அவனுடைய சில செயல்களுக்கு, மறைவிடம் தேவைப்பட்டது. அதற்காக அவன் அமைத்ததுதான் வீடு.

வீடு என்பது முதன்முதலில் குகையில் தோன்றி இன்று குடியிருப்பு வீடுகள் வரை வளர்த்திருக்கிறது. படைப்பு தோன்றி இன்று அரண்மனை வீடுகள் வரை வளர்த்திருக்கிறது. இப்பூமியில் உயிர்கள் உருவான பிறகு எண்ணிப்பாருங்கள். அவைகள் காடுகள், மலைகள், நீர்நிலைகள், மேடு, பள்ளங்கள், பாலைவனங்கள் என்றுதான் இருந்திருக்கும். அப்போது உயிர்கள் தோன்றியவுடன் அது வாழ்வதற்கு வசதியான இடங்களில் வாழ்ந்திருக்கும்.

மனிதன் இயற்கைக்குப் பயந்தான் இயற்கையிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இடி, மின்னல், மழைக்குப் பயந்து குகைக்குள் ஒடுகிறான். இயற்கையிலிருந்து மனிதன் பிரிகிறான். அதற்கு அவனது வீடு தேடும் விருப்பம் காரணமாகிறது.

குகைக்குள் ஒழிந்த மனிதன் அங்கு இருளைக் கண்டு பயப்படுகிறான். இரவு முழுவதும் தவிக்கிறான். இதனால் அடர்ந்த காட்டை விட்டு சமதளத்திற்கு ஒடுகிறான். இப்போது வீடு அவனைக் காட்டைவிட்டுப் பிரிகிறது.

காட்டில் வாழும்போது எல்லாப் பறவைகளும், எல்லா விலங்கினங்களும் அவனுக்கு உறவாக இருந்து உறவாடியது. ஆனால் அவன் சமதளத்திற்கு வரும்போது அங்கு வாழ இயலாத நிலையில் சில பறவைகள், சில விலங்குகள் காட்டிலே தங்கி விடுகிறது. இப்போது வீடு மனிதனை சில உயிர்களிடத்தில் இருந்து ஒதுங்க வைத்துவிடுகிறது.

சமதளத்திற்கு வந்த மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தான். ஆடு மாடுகளைப் பொதுவாக வளர்த்துப் பயன் பெற்றார்கள். அப்போது அடுத்த குழு ஆநிரைகளை கவர்ந்து செல்வதும் அதை மீட்பதற்காக அக்குழுவோடு போரிடுவதுமாக வாழ்ந்து வந்தார்கள்.

அக்குழுக்கள் இடையே ஏற்படும் கருத்துவேறுபாடு காரணமாக நெருங்கிய சொந்தங்களோடு குடும்பமாக வாழ ஆசைப்பட்டான். இதனால் வீடு அவனை சமுதாயம் என்னும் கடலில் இருந்து பிரித்தெடுத்துக் குளத்திற்கு கொண்டு வந்தது போல் அவனைக் குறுக்கிவிட்டது. கூட்டுக்குடும்பமாக இருந்த மனிதன் திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் போது உறவை விரும்பாத துணையைத் திருமணம் செய்யும்போது அவர்கள் சுயநலத்திற்காக தனிக்குடித்தனம் செல்வார்கள். அப்போது அவ்வீடு அவர்களைக் குடும்பத்தில் இருந்து பிரிக்கிறது.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும், பல குழந்தைகள் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்ப அனைவரும் வாழும் அளவிற்கு பெரிய வீடாகக் கட்டுவார்கள். கட்டுக் குலையாத கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் எனக்குரிய சொத்தை எனக்குப் பிரித்துக் கொடு என்று வீட்டைப் பிரித்துக் கேட்கும் போது அண்ணன் தம்பி உறவுகள் கூட அறுந்து போகிறது. வீடு தொப்புள் கொடி உறவைக் கூட தொடர முடியாமல் செய்து விடுகிறது.

வீடு என்பது வாழ்ந்ததன் அடையாளம். பெரியோர்களின் நினைவகம். ஆனால் இப்போது வாழும் தலைமுறைகள் வீட்டைப் புதுப்பிக்கிறேன், புதுவீடு கட்டுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய வசதியைப் பெருக்கிக் கொள்ள பெற்றோர்களின் கனவினைச் சிதைப்பார்கள். வீடு அடையாளங்களைக் குழிதோண்டிப் புதைக்கிறது.

இன்றும் காரைக்குடிப் பக்கத்தில் பெரிய பெரிய வீடுகள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது அவர்கள் வாழ்ந்து கெட்டு வறுமையானதை அது வாசித்துக் கொண்டிருக்கிறது. சில வீடுகள் மனிதரில் இருந்து மனிதரைப் பிரித்து சாதீயத்தின் அடையாளத்தைச் சாற்றிக் கொண்டு இருக்கிறது. சில வீடுகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுங்கி நின்று காலணி என்று பெயர் வாங்கிக் கொண்டு தாழ்ந்த சாதி என அவ்வூர் தடமாறிக்கிடக்கிறது.

படித்து முடித்து படித்த வேலைக்காக வெளியூர் சென்று அவ்வூரில் அவர்கள் தேவைக்காக வீடு கட்டி வாழும்போது அவ்வீடு அம்மனிதரை சொந்த ஊரில் இருந்து பிரித்து விடுகிறது. சொந்த பந்தங்களில் இருந்து அவனைத் தனிமைப் படுத்துகிறது.

இப்போது வீடுகள் அதிகாரத்தின் மிடுக்கும் ஆக்கிரமிப்பின் வெளிப்பாடும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க கட்டிடத்தில் கொட்டுகிற நிகழ்வுமாகத்தான் இருக்கிறது. பொதுவாக ஒரு குடியிருப்பில் சுற்றுச்சுவர், அத்தனை வீடுகளையும் அடைகாக்கும், ஆனால் அங்கு வீட்டில் வாழ்கிறவர்கள் அடுத்த சுவருக்குள் இருப்பவர்களைப் பற்றி எதுவும் தெரியாமலே ஆயுளை முடித்துவிடுவார்கள்.

இன்று பல வீடுகள் விளைநிலங்களை வேட்டையாடி வருகிறது. பயிர் விளைந்த பூமியில் இன்று சுவர் வளர்கிறது. அப்படி என்றால் எதிர்காலம் சோற்றுக்கு என்ன செய்யும்? வயலில் வீடுகட்டும் போது வீட்டிற்கு அடிக்கிற மண் கிராமத்தான் சொல்லில் சொன்னால் உண்ணும் உணவில் அல்லவா மண்ணள்ளிப் போடுகிறோம்.

இப்போது எழுப்பப்படுகின்ற பல வீடுகள் பல மலைகளை மடியறுத்துவிட்டது. ஆறுகளைக் கருவறுத்து விட்டது. நிலத்தின் நீரை அது மார்போடு உறிஞ்சிவிட்டது. இயற்கையைத் தின்று ஏப்பம் விட்டு நிற்கும் அரக்கனாகத்தான் இன்று வீடுகள் எழுந்து நிற்கிறது. ஏரிகளில் வீடுகள் எழுப்பிய பிறகு வயல்கள் வறண்டுபோய் கிடக்கிறது. வசதியானவன் வீடுகட்டி வாடகைக்கு விட்டதால் பல குடும்பங்கள் இன்று தெருவில் குடியிருக்கிறது.

இயேசு சொல்வார் கட்ட வேண்டியது வைத்துக் கட்டாமல் கல்லையும், மண்ணையும் கலந்து கட்டினால் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். வீட்டுக்குள் அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, சந்தோசம், சமாதானம், நிம்மதி இருக்க வேண்டும். இதற்குப்பதில் கட்டில், மெத்தை, டி.வி. குளிர்சாதனப்பெட்டி, ஆடம்பரப்பொருட்கள் இருந்து நிம்மதி இல்லையென்றால் உயிரோடு கல்லறையில் இருப்பதற்கு ஒத்திகைதானே!

ஒரு வீட்டைப் பார்த்தேன் அழகான வீடு, அத்தனை வசதிகளும் இருந்தது. வண்ணச்செடிகள், விலையுயர்ந்த நாய்கள், கலர் கலராக மீன்கள், பல வகையான பறவைகள் எல்லாம் வளர்ந்திருந்தன. ஆனால் அந்த வீட்டுக்காரரின் பெற்றோர்கள் மட்டும் முதியோர் இல்லத்தில் இருந்தார்கள். இதனை நீங்கள் வீடு என்பீர்களா? எனது தாத்தா மாடியிலிருந்து முற்றத்தில் விளையாடும் பேரப்பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தால். அது வீடல்ல மண்ணுலக சொர்க்கமாகும். வாருங்கள் அமைப்போம்.

“இன்றைய வீடுகள்
சித்தார்தனை வளர்க்கிறது
சமுதாயம் மட்டுமே
புத்தனைத் தருகிறது”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES