18

Dec

2020

வீட்டுல விசேசங்க…

மனித நாகரீகத்தின் உச்சம் மனிதன் வீடுகளில் வாழ ஆரம்பித்தது. வீடுகளில் வாழ ஆரம்பித்தவன் தன் மகிழ்ச்சிக்கு விழாக்களைக் கொண்டாடினான். விழாக்களில் தனிமனித விழாக்கள் பொது விழாக்கள் என்று இருவகைப்பட்டன. திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா போன்றவை தனிமனித விழாக்களாகக் கொண்டாடப்பட்டன. பொங்கல், போகி ஜல்லிக்கட்டு என்பவை பொது விழாக்களாகக் கொண்டாடப்பட்டன. பின்பு மதம் தோன்றியபின் மதவிழாக்களும் கொண்டாடப்பட்டன.

பின்பு விழாக்களும் பெருகியது கொண்டாட்டங்களும் கூத்தாட்டங்களாக மாறியது. இரச்சலைப் பெருக்கி எரிச்சலைத் தர ஆரம்பித்தது. அடுத்தவர்களோடு போட்டி போட்டு அராஜகம் செய்யும் விழாக்களாக அரசியல், மத விழாக்கள் மாறியது.

தனிமனித விழாக்களில் பிறருக்கு உணவு வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பித்தது. அதில் வயிராற உணவிட்டால் வாயாற வாழ்த்துவார்கள் என நல்லெண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என உறவினர்கள் பொருட்களையும், பணத்தையும் அள்ளிக் கொடுத்தார்கள் இது காலப்போக்கில் மொய் என்ற பெயரில் கடன் கொடுப்பது அதனை அடுத்த விழாக்களில் வட்டியோடு வசூல் செய்வதுபோல இன்றைய விழாக்கள் அமைந்ததுதான் வருத்தத்தைத் தருகிறது.

சமீபத்தில் ஒரு திருமண விழா அதிர்ச்சியுடன் கூடிய ஆனந்தத்தைத் தந்தது. அருமையான ஒரு மாற்றத்திற்கு விதையிட்டது போல் விளங்கியது நீங்கள் இதனைப் படித்து பிடித்திருந்தால் பின்பற்றலாமே!

அவுரங்கபாத் என்ற நகரில் அஜய் முனாட் என்ற தொழிலதிபர், தனது அன்பு மகள் ஸ்ரேயாவிற்கு திருமணம் நடத்தினார். வித்தியாசமான கொண்டாட்டம் வியக்க வைக்கும் சீர்வரிசை, சொந்தக்காரர்கள் யாருக்கும் அவர் சொல்லிவிடவில்லை. நண்பர்களை வரவைத்து பார்ட்டி கொண்டாடவில்லை. கருணையை கையில் எடுக்கிறார் ஏழைகளை விருந்துக்கு அழைக்கிறார்.

அவரது மகளின் திருமணத்தன்று 2 ஏக்கர் நிலத்தில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் 90 வீடுகள் அவர் செலவில் கட்டி அவரது மகளின் திருமண நாளில் 90 ஏழைகளுக்கு வழங்குகிறார். அன்றைய நாளில் அவர் கூறும்போது இந்த சமுதாயம் தான் இவ்வளவு பெரிய வசதியை எனக்குக் கொடுத்தது அதற்குத் திருப்பித் தரக் கடமைப்பட்டுள்ளேன். அதுவும் எனது மகளின் திருமண நாளில் வழங்குவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான் என்கிறார். இந்தச் சமூகத்தில் புதிய முறையில் ஒரு கொண்டாட்டம் உங்களுக்குப் பிடித்து இருந்தால் நீங்களும் மனதார ஒரு வாழ்த்து அனுப்புங்கள். அவள் மகளுக்கு.

என்னிடம் படிக்கும் மாணவர்களிடம் வகுப்பறையில் நான் சொல்லும் செய்தியும் இதுதான். திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. ஒவ்வொரு ஆணுக்கும் இன்னொரு தாயை இனம் காட்டும் இனிய நிகழ்வு. ஆகவே உங்கள் சொந்தக் காரர்களிடம் எல்லாம் சொல்லிவிடுங்கள் வீட்டுப்பக்கம் வந்துவிடாதீர்கள் என்று நீ விரும்பும் பெண்ணோடு ஒரு அனாதை ஆசிரமத்தில் அல்லது முதியோர் இல்லத்தில் உன் திருமணத்தை நடத்து அவர்கள் வயிராற உண்டு மனதார வாழ்த்துவார்கள் “மகராஜன் நீ நல்லா இருக்கணும்”,”இராசாத்தி நீ தீர்க்க ஆயுளோடு இருக்கணும்” இந்த வாழ்த்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

இதை விட்டுவிட்டு மைக்கில் பொய்யைச் சொல்லி மொய் என்ற பெயரில் கடன் கொடுத்து, பொண்ணு சரியில்லை புடவை சரியில்லை என்று புறம் பேசித்திரியும் புறம்போக்குகளுடன் தான் உங்கள் திருமணவிழா நடக்க வேண்டுமா? புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடும் போது அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் அங்கு போன பின்புதான் உங்கள் அருமை அவனுக்குப் புரியும். அவன் வைத்திருக்கிற பொருட்கள் எல்லாம் பெற்றோர் இருப்பதால் ஆசையாய் வாங்கிக் கொடுத்தது என உங்களைத் தெய்வமாக மதிப்பான். அவன் மூலமாக அந்தக் குழந்தைகளுக்குப் பொருட்களைக் கொடுங்கள். கொடுக்க வேண்டும் என்ற குணமும் அவனுக்கு வரும். இல்லாதவர்களுக்கே கொடுக்கின்ற எண்ணம் வந்து விட்டால் உங்களை எச்சுழலிலும் கைவிடமாட்டான். இதை விட்டு விட்டு வசதியானவர்களை வரவழைத்து அவர்களோடு அவன் தன்னை ஒப்பிட்டு தன்னிடம் இல்லாததற்கு ஏங்குவான். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும் இது சொந்தக் காசிலே சூன்யம் வைத்ததுபோல் ஆகும்.

ஒருவகையில் நாம் தாம் நமது தலைமுறைகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். கற்க வேண்டியது கல்விமட்டுமல்ல அதிலே நாம் நின்றுவிடுகிறோம். கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் மட்டுமல்ல. நாமும் தான் என்பதனை மறந்து விடுகிறோம். நல்லவற்றை நாமும் கற்றுக் கொடுப்போம் நல்லதைச் செய்வோம் நல்லது நடக்கும் ஏழைகளுக்கு இரங்குவோம் இறைவனுக்கு நெருக்கமாவோம்.

“நமக்குக் கீழ் உள்ளவர்களை
நாம் கவனித்துக் கொண்டால்
நமக்கு மேலுள்ளவன்
நம்மைக் கவனித்துக் கொள்வான்”

ARCHIVES