10
Feb
2023
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்” என்று மீசைக் கவிஞன் மீண்டும் வந்து இவர்கள் முகத்தில் உமிழ வேண்டும் போல் இருக்கிறது. பாஞ்சாலியை துயில் உறியும் போது தர்மனின் சூதாட்டத்தினால்தானே வந்தது எனவே சூதாடிய கையை எரிக்;க வேண்டும் என்று தம்பி அர்சுனனிடம் எரிதழல் கொண்டு வா தம்பி அண்ணன் கையை எரித்திடுவோம் என்று ஆவேசமாகக் கத்தியது போல் கத்தத் தோன்றுகிறது. கையை எறிக்கத் தோன்றுகிறது.
சமீப காலமாக தமிழ் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிற இல்லை…. இல்லை அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிற ஒரு செய்தி பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற கிராமத்தில் ஆதிக்கச் சாதியினர் பட்டியலின மக்களின் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்தார்கள் என்ற அறுவறுக்கத்தக்க செய்தி. இதனைக் கேட்கும் உங்களுக்கே கோபம் கொப்பளிக்குமே. இந்த இழி செயல் மனிதர்களை என்னவென்று சொல்வது? இவர்கள் கையை எரிக்கக் கூடாது!. கண்ட துண்டமாய் வெட்டி காட்டில் எறிய வேண்டும் விவிலியம் கூறுவது போல் கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி கடலில் எறிய வேண்டும்.
இவர்களைப் பற்றி எழுதும்போது வார்த்தைகூட வன்முறையாகத்தான் வருகிறது. ஏனெனில் வரைமுறையற்று நடந்துகொண்ட இந்த மனிதர்களை என்னவென்று சொல்வது இவர்களைப் பற்றி நான் எழுத நினைத்தபோது எனக்கு வந்த தலைப்பு மலமாகிப் போன மனிதர்கள் என்றுதான் வந்தது. ஆனால் எழுதுவதற்கு அறுவெறுப்பா இருந்ததால் அதனைத் தவிர்த்து விட்டேன். ஆனால் அறுவெறுக்கத் தக்க இந்த இழிசெயலைச் செய்த கீழ் மக்களை என்னவென்று சொல்வது?
“பறைச்சியாவது ஏதடா? பனத்தி ஆவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டு இருக்கிறதோ?” என்ற பாட்டை கேட்டதில்லையா? பரதேசிகளா! எந்த உலகத்தில் இருக்கீறிர்கள் இந்தியாவின் தென் பகுதியைத் தான் வளர்ந்த நாகரீகங்களாக எண்ணி மகிழ்ந்தோம். இப்போது இப்படிப்பட்ட செயல்களால் நம்மை காட்டுமிராண்டிகள் என்று காட்டிவிட்டார்களே! இது பெரியார் பிறந்த மண் என்று பெருமைப்பட முடியவில்லையே!. இந்த கூறுகெட்ட மனிதர்களின் செயலினால் கூனிக் குறுகி நிற்கிறோமே.!
எத்தனை காலங்கள் ஆனாலம் இன்னும் சிலரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்களே. இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் ஆணையரும் இணைந்து பட்டியலின மக்கள் வழிபட வகை செய்தனர். இருவருமே பெண் அதிகாரிகள் இருப்பினும் பாரதிகண்ட புதுமைப் பெண்களாக மாறிப் புரட்சி செய்தனர். இன்னும் எத்தனை நாட்கள் இந்த அவல நிலையை எண்ணி அழுவது?
பிறப்பில் எல்லோரும் சமமடா! இந்தப் பேதைகளுக்கு எப்போது புரியுமடா? இறப்பும் எப்போதும் பொதுவடா! இந்த ஏமாளிகளுக்கு எப்போது புரியுமடா? செத்தவங்க பிணமெல்லாம் நாறுது? நாறாத பிணனெ;பது யாராது? இந்தக் கொடுமையைக் கண்டு கொதிக்காது இரத்தமல்ல! இதற்குச் சப்பைக் கட்டு கட்டுனா அவன் சுத்தமில்ல! இதனை ஏனென்று கேட்க ஆளில்லையா? இல்லை எல்லோரும் ஊமையா, வாய் இல்லையா?
யார் மேலே கீறினாலும் இரத்தம் ஒண்ணுதான் இதிலே மேல் சாதி ஏது? கீழ் சாதி ஏது? ஒரு சமூகத்தை உருப்பட விடாமல் ஆக்க வேண்டுமென்றால் அதனை அழிக்க அணுகுண்டு தேவையில்லை அவர்களிடையே சாதி, மதத்தை சரியாய் விதைத்தால் போதும்! அவனே அழிவான் அடுத்தவனையும் அழித்துக் கொள்வான் உண்ணும் உணவை உற்பத்தி பண்ணும்போது உடுத்த உடையை நெசவில் நெய்யும்போது வைத்தியம் பார்க்கும்போது வாணிபம் செய்யும் போதும் பார்க்காத சாதி மனிதனைப் பார்க்கும்போது வந்து விடுகிறதா பச்சோந்திகளா? அசுத்தம் செய்கிறவன், அயோக்கித்தனத்தில் உழல்கிறவன் வெள்ளை உடையில் அலைகிறான். ஊரைச் சுத்தம் செய்கிறவன் அழுக்குத்துணியில் திரிகிறான். இங்கு உடலில் அழுக்குள்ளவன் தீட்டு உள்ளத்தை அழுக்காய் வைத்திருப்பவன் தலைவன். அட வெட்கம் கெட்டவங்களா? இங்கு இப்படி பலபேர் பார்வையாளர்களாக இருப்பதனால்தான் பல பச்சோந்திகள் இங்கு பகிரங்கமாக நடமாடுகிறது.
மனித நேயத்திற்கு ஊறு விளைவிக்கும் மதத்தைச் சுட்டெறியுங்கள் சமத்துவத்திற்கு சமாதி கட்டும் சாதியை தீயிலிடுங்கள். சாதி, மதம் பேசுகிறவனுக்கு சரியான தண்டனை கொடுங்கள். சாதியைச் சொல்லி ஓட்டுக் கேட்டாலோ, கூட்டத்தை கூட்ட நினைத்தாலோ அவனுக்கு உயிரோடு சமாதி எழுப்புங்கள். பள்ளிகளிலே குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களே உங்கள் குழந்தை என்ன சாதி? என்ற இடத்தை வெற்றிடமாக்குங்கள் விரும்பியவர்கள் விரும்பிய வேலை பார்க்கட்டும் விரும்புகிறவர்கள் விரும்புகிறவர்களை மணந்து வாழட்டும். சாதி, மதத்தால் இடையூறு செய்கிறவர்களை சங்காரம் நிஜமென சங்கே முழங்கு.!
சாதியை விட்டொழிப்போம். நீதியைத் தூக்கிப் பிடிப்போம் சாதியின் பெயரால் அநீதி நடந்தால் கொதித்தெழுவொம். நாம் பார்க்கின்ற மனிதர்கள், பழகுகின்ற மனிதர்களில் அன்பை மட்டுமே பார்ப்போம். தோல் பார்த்து, மேல் பார்த்து, ஆள் பார்த்து பழகுகிற அயோக்கியர்களை அப்புறப்படுத்துவோம். நாம் எல்லோருக்கும் பொதுவானவர்கள் என்பதனை எண்பிப்போம். இப்போது உங்களை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களும் உங்களுடன் அன்பாக இருப்பவர்களும் உங்கள் தேவைக்கு உதவுபவர்களும் எந்த அடிப்படையில் இணைந்து இருக்குறீர்கள்? இதயங்களால் இணைவோம் அன்பினால் ஆள்வோம் பாசத்தால் வாழ்வோம் பழக்கத்தால் உயர்வோம்!.
“சமத்துவம் பெருகிவிட்டால்
சாதிகள் சமாதியாகிவிடும்”