16
Jun
2018
நதிக்குத் தெரிவதில்லை – அது நடந்து வந்த பாதையில் வளர்ந்த பயிர்களை – ஆனால் பயிர் ஒன்று வாழ்த்துகிறது நதியினை......
இந்த மரியன்னை மேல்நிலைப் பள்ளி விக்கிரமசிங்கபுரம் என்னும் மகா சமுத்திரத்தில் நானும் கலந்தேன், ஒடினேன் ஒரளவு கரை சேர்ந்திருக்கிறேன் என்ற களிப்போடும் என்னைப் போன்ற எத்தனையோ துளிகளையும் நதிகளையும் கடல்களையும் தந்த எமது பள்ளி இந்தாண்டு 75ஆம் ஆண்டில் நடைபோடுகிறது என எண்ணும்போது மகிழ்ச்சியின் அலைகளில் மூழ்கி மூழ்கி எழுகிறேன்.
இந்தப்பள்ளி எண்ணற்ற உறவுகளை எனக்குத் தந்தது. இதில் பலர் தொட்டுவிடமுடியாத உயரத்தில், சிலர் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில். ஒருசிலர் பலர் நம்மை மறந்திருப்பாhகளோ! என நினைத்துப் பலவற்றை மறந்து வாழ்கிறார்கள். பலர் பார்க்கத்துடித்தும் இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி? என்ற தயக்கத்துடன் தடங்களையும் தடயங்களையும் மறந்து வாழ்கிறார்கள். அத்தனை நல்ல உள்ளங்களையும் எனது எண்ணங்களால் வருடிவிட்டு வரவேண்டுமென இந்த எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிறேன். இந்த எழுத்துக்கள் எவரது கண்ணில் படுகிறதோ அவர்களுக்கும் இந்த மரியன்னை நிறுவனத்திற்கும் ஏதாவது தொடர்பு இருந்தாலும் எங்கிறுந்தாலும், எப்படி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை இந்தத் தொட்டிலுக்கு வந்து செல்லுங்கள் உங்களின் பசுமையான நினைவுகளை மறக்கமுடியாத மலரும் நினைவுகளை அசைபோட்டுப்பர்ருங்கள்.
என்னைப் பொருத்தமட்டில் ஒவ்வொருவரும் தமது புனிதப் பயணமாக புண்ணிய இடங்களுக்கோ, குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதுபோல தாம் கற்ற கல்வி நிறுவனத்திற்கு ஒவ்வொரு கல்வியாளர்களும் சென்று வரவேண்டும் மீண்டும் நமது மழலையின் உருவங்களை மறுபடிக் காண வேண்டும். நமது விளையாட்டுக்களையும் சேட்டைகளையும் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கவேண்டும் பழைய நண்பர்களின் பெயர்களையும், முகங்களையும் மீண்டும் ஒருமுறை மீட்டுரு எடுத்து அசைபோட்டு ஆனந்தப்படவேண்டும்.
வாருங்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிக்குப்போவோமே! நாம் நின்ற இடம், படித்த இடம் விளையாடிய இடம், சேட்டை செய்த இடம் ஒரு டீயோ, சோடாவோ, மாறி மாறிக்குடித்த மனநிறைவான நேரம் சின்னச் சின்னப் பிரச்சனைக்காய் சண்டையிட்டதையும், பிறகு கட்டிப்பிடித்து மச்சான், மாமன் என்று மனநிறைவோடு பேசியதையும் மனதிற்குள் அசைபோடுவோம்.
வாருங்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிக்குப்போய் வருவோம் வேர்கள் அப்படியேதான் இருக்கிறது விழுதுகள்தான் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காலத்தின் தேவை கருதி சில கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. முதுமையின் அடையாளமாக சில பழைய ஆசிரியர்களை பள்ளி பணிவிடுப்பு செய்துள்ளது உங்களோடு படித்தவர்கள் கூட இப்போது ஆசிரியர்களாக இருக்கலாம். சேட்டை செய்து கொண்டிருந்த ஓரு சிறுவன் இன்று அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்திக் கொண்டிருக்கலாம். சிலவற்றைப் பார்க்கும்போது சிரிப்பு வரலாம் சிலவற்றைப் பார்க்கும்போது ஆச்சர்யம் வரலாம். சுpலவற்றைப் பார்க்கும்போது நமக்கு சில எண்ணங்கள் வரும் வரணும் வாருங்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிக்கும் போவோம்!
வாருங்கள் ஒரு காலத்தில் நம்மை பதியம் வைத்திருந்த இரண்டாம் கருவறை அந்த வகுப்பறை நாம் துள்ளித்திரிந்த இன்னொரு தொட்டில் அது. நம்மைப் பக்குவமாய் நடவு செய்து பதியம் வைத்து உயிர் வளர்த்த இன்னொரு நவீனத் தொழிலாளி நம் ஆசிரியர்கள். அவற்றையெல்லாம் கண்டுவருவோம் அனைவரையும் அலைபேசி வழியாக அகம் நோக்குவோம் மெயில் வழியாக மயிலாகப் பறப்போம் செய்திகள் வழியாகத் தழுவிக் கொள்வோம் மீண்டும் நம் இளமையையும், இதயத்தையும் புதுப்பித்துக் கொண்டு உறவுகளை உள்வாங்கிக் கொள்ள மீண்டும் குழந்தையாவோம், படித்ததை திரும்பிப் பார்ப்போம் உறவுகளைத் தேடி அணைப்போம் கிறிஸ்தவனுக்கு ஒரு யெருசலேம்போல், இந்துவுக்கு ஒரு காசிபோல் முகமதியர்களுக்கு ஒரு மெக்காவைப்போல் பௌத்தர்களுக்கு ஒரு கயா போல் நம்மை புடமிட்ட அந்த புண்ணிய இடத்திற்குப் போய்வருவோம், சீமையிலிருந்து வரும் மகனுக்காய் வழிமேல் விழிவைத்து காத்துக் கிடக்கும் ஒரு தாயைப்போல் மரியன்னையின் வாசல் உங்கள் வரவினை எதிர்நோக்கியுள்ளது வாருங்கள் பள்ளி செல்வோம் நமது பழைய நினைவுகளோடு. ஏனென்றால் அந்த நினைவுதான் இன்னும் சங்கீதமாய் இதயத்தில் இசை பாடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் படிப்பதற்கல்ல பழைய நினைவுகளை ரசிப்பதற்கு.....