13

Apr

2019

லீவு விட்டாச்சி

கோடை வெயில் கொளுத்திக் கொண்டு இருக்கிறது. பூமிச் சூட்டைவிட அரசியல் சூடு பொசுக்கிக்கொண்டு இருக்கிறது. தேர்தலும் தேர்வும் முடியப்போகிறது. குழந்தைகளின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோசத்தின் சன்னல்களைத் திறந்து கொண்டு இருக்கிறது. பெற்றோர்கள் கனவு வேறு மாதிரி இருக்கும். பிள்ளைகளை என்னென்ன பயிற்சிகளில் சேர்த்து அவர்களை வளர்த்தெடுக்கலாம் என எண்ணிக்கொண்டு இருப்பார்கள். இத்தகையப் பெற்றோர்களோடு கொஞ்சம் இனிதாய்ப் பேச ஆசைப்படுகிறேன்.

அன்புப் பெற்றோர்களே! உங்கள் ஆசைக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் உள்ளுணர்வை உணருகிறேன். ஆனால் ஒன்று இவற்றில் சில நடைமுறை நிகழ்வுகளையும் நெருடல்களையும் கொஞ்சம் அலசிப்பார்க்க வேண்டும்.

ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டால் அந்த விளையாட்டுக்கு நடுவே சிறிது ஓய்வு கொடுப்பார்கள். உடல்சோர்வை நீக்க மனக்களைப்பைப் போக்க அந்த ஓய்வு தேவைப்படுகிறது. அதுபோல பணி நேரங்களைப் பாருங்கள் ஒவ்வொரு நேரத்திலும் சிறிது ஓய்வு கொடுக்கப்படுகிறது. இந்த ஓய்வுதான் அடுத்த நிமிடத்தை ஆக்கப்பூர்வமானதாக மாற்றும் அப்படி இருக்கும் போது ஒருவருடம் தன்னுடைய உடல் வளர்ச்சியோடு அறிவு வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் வளர்த்துக்கொள்ளத் தனக்குக் கொடுக்கின்ற பயிற்சிகள் முழுவதையும் தன்னுடைய முயற்சியால் போராடி வெற்றியடையும் இளசுகளுக்கு எப்போது நாம் ஓய்வு கொடுக்கப்போகிறோம்.

இன்றையக் காலக்கட்டத்தில் எத்தனையோ பயிற்சிகள் கொடுக்கிறோம். எந்தப்பயிற்சியும் குழந்தைகளுக்கு எழுச்சியையும் விடா முயற்சிகளையும் தரவேண்டும். ஆனால் இப்போது கொடுக்கப்படுகின்ற பயிற்சிகள் அனைத்தும் குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சியைக் கொடுக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் நரம்புத்தளர்ச்சியால்தான் தன் வாழ்நாளை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் கதாநாயகன் அவனது அப்பா, முதல் தெய்வம் அவனது அம்மா இதனை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஊட்டவேண்டும். அம்மாவை விட அதிகமாகக் கொடுப்பவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. அப்பாவை விட அனைத்தும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இவர்களைவிட எனக்குப்பாதுகாப்பு இவ்வுலகில் எங்குமில்லை. இவர்களோடு இருக்கும்போதுதான் நான் சொர்க்கத்தைச் சொந்தம் கொண்டாடுகிறேன் என்று ஒவ்வொரு குழந்தையும் தனதுவாழ்நாளில் நன்கு உணர்ந்து கொள்ளச்செய்யவேண்டும்.

பெற்றோர்கள் பாசக்காரர்கள் ஆனால் இன்று பகல் வேசக்காரர்களாக மாறிவருகிறார்கள். குழந்தைகளைக் குடும்பவிளக்காக மாற்றுவதை மறந்துவிட்டு பொருள், பணம், புகழ் சம்பாதிககும் இயந்திரமாக மாற்ற எண்ணுகிறார்கள். தன் குடும்பம், தன் சூழல், தன்;நிலை இதனை உணர்த்துவதை விட்டுவிட்டுக் காலையில் எழுந்ததில் இருந்து அவனை அமெரிக்காவிற்கும் இலன்டனுக்கும் அனுப்ப ஆயத்தமாவர்கள். நம் கலாச்சாரத்திற்கு உதவாத உடைகளால் ஒப்பனை செய்து உணர்ச்சிகளைக் கொட்ட முடியாத மொழிகளைக் கற்கப் பேருந்துக்குள் உந்தப்பட்டு பள்ளிகளுக்குள் நுழைக்கப்படுவார்கள். அங்கு ஆசிரியப்பெருமக்கள் தன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ப இந்த அரசுவேலை கொடுக்கவில்லையே! என்ற விரக்தியோடும், ஏதோ இந்த வேலையாவது கிடைத்ததே அதனையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தோடும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறன்கொண்டு நடித்து நிர்வாகத்திற்கு நல்லவர்களாகவும் சமுதாயத்திற்கு கெட்டவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். ஏனென்றால் இளம் வயதில் குழந்தைகளைக் கண்டித்து திருத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அவனைக் கண்டித்தால் அவர்களது கண்ணீருக்குப் பெற்றோர்கள் கணக்குக் கேட்பார்கள். அவனது வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ளாத பெற்றோர்களான அந்த ஆசிரியரையும் நிர்வாகத்தையும் உண்டு இல்லை என்று ஆக்கிக்காட்டுவார்கள். பக்கத்தில் பொறாமையோடும், காழ்ப்புணர்ச்சியோடும் நடமாடிக்கொண்டிருக்கிற சில மனிதர்கள் பள்ளிக்குள் புகுந்து உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்துவார்கள், இல்லையென்றால் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள் இப்படித்தான் நம்மை பண்படுத்த வேண்டிய கல்வி பாழ்பட்டுக்கிடக்கிறது. ஒழுக்கத்தில் உயர வேண்டிய கல்வி கெட்ட பழக்கவழக்கத்தில் படுத்துக்கிடக்கிறது. சீடனாய் இருந்து கற்க வேண்டிய கல்வியை எஜமானாய் இருந்து எட்டிப்பார்க்கிறார்கள் உடையை மட்டும் சீராய் வைத்துக்கொண்டு உள்ளத்தை குப்பையாக்குகிறார்கள். பாலியல் தொந்தரவுகளும், பஸ் பயணக் கலவரங்களும், சாதிச்சண்டைகளும், வழிப்பறிக் கொள்ளைகளும் பயமுறுத்தம் இரு சக்கர வாகனப்பயணங்களும் கிறுக்கனைப்போல் ஒப்பனைகளும் சினிமாவின் மாயவலையிலும், செல்போனில் சிதைந்து போனவர்களும் அதிகமானவர்கள மாணவச் சமுதாயம்தானே!

இத்தனை அவலங்களைப் பிரசவிக்கும் இடம் கல்விக்கூடங்கள்தானா? இத்தகைய கல்விகள் தேவையா? இதற்கு யார் காரணம் பெற்றோர்களா? பிள்ளைகளா? கல்விமுறையா? சமுதாயச் சீர்கேடா? ஆசிரியர்களா? ஆங்கிலக்கல்வி மோகமா? கண்டிப்பாகச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். பிள்ளைகளை விட்டுவிடுங்கள் பெற்றோர்களே யோசியுங்கள் அவர்கள் விடுமுறையில் இதயமாய் ஓய்வு எடுக்கட்டும், இயற்கையை ரசிக்கட்டும், விரும்பிய விளையாட்டு விளையாடட்டும், விரும்பியவர்களைச் சந்திக்கட்டும். விரும்புகின்ற இடங்களுக்குப் போய்வரட்டும் பிறக்க இருக்கின்ற கல்வியாண்டு அவர்கள் விருப்பப்படி அமையட்டும். பெற்றோர்கள் தலையிட வேண்டாம். படிப்பைப் பற்றிய பயமுறுத்துதல் வேண்டாம். பிறரோடு ஒப்பிடுதல்வேண்டாம். உங்களது தேவையற்ற கற்பனையை அவர்களுக்குள் திணித்து அவர்களை மன ஊனமாக மாற்றி மாற்றுத்திறனாளியாய் உலவ விடாதீர்கள். விரும்பியதை விரும்பியபடி படிக்கட்டும். பெற்றோர்கள் தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் உடனிருங்கள் அவனே தேடிக்கொள்ளட்டும், ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். தாய்மொழியில் தடம் பதிக்கட்டும். ஆங்கிலம் கற்று அயல்நாடு செல்வதை விட்டுவிட்டு தாய்மொழி கற்று தம்மோடே இருக்கட்டும். கல்வியும் வேலையும் நம்மை பிரிக்க அல்ல. இணைக்கவும் அணைக்கவுமே! இணைந்தே இருப்போம். இணைந்தே வாழ்வோம். பெற்றோர்களே இந்த விடுமுறையில் பிள்ளைகளை விளையாட விடுங்கள் விரும்பும்போதெல்லாம் உறவாடுங்கள், சுதந்திரத்தை அவன் சுவைக்கட்டும். அதனைப் பகிரட்டும் மனம்போல் வாழ்வு அமைய மனதார நேசிப்போம் நம் குழந்தைகளை?

ARCHIVES