16

Apr

2020

இயேசு உயிர்த்துவிட்டார்

இயேசு உயிர்த்துவிட்டார் எப்படி? ஆலயங்கள் திறக்கவில்லை, வழிபாடுகள் நடக்கவில்லை, கோபுரங்கள் ஒளிரவில்லை, பீடங்களில் பூக்களில்லை ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார்! பாடல்கள் முழங்கவில்லை, காணிக்கை வழங்கவில்லை, மெழுகுவர்த்திகள் ஏற்றவில்லை. மணிகள் ஒலிக்கவில்லை ஆனாலும் இயேசு உயிர்த்துவிட்டார்! பகட்டான உடைகள் உடுத்தி பக்கத்திலிருப்பவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று காட்டவில்லை. கோயில்களில் இருக்கைகளைத் தேடி அலையவில்லை. முக்கியமானவர்கள் என்று பீடத்திற்கு முன் யாரும் நிற்கவில்லை. கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு வெளியில் நின்று அரட்டை அடிக்கவில்லை ஆனாலும் இயேசு உயிர்த்துவிட்டார்! தூங்குகின்ற குழந்தையைத் தூங்கவிடாமல் கோயிலுக்கு அழைத்துவரவில்லை. காரில் வந்தால்தான் கௌரவம் என்று காலையில் நடைபயிற்சி செய்கிறவர்கள்கூட மொத்தமாகக் காரில்வந்து கோயில் முற்றங்களை அடைத்துக்கொள்ளவில்லை. இருக்கின்ற விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கல்லறையை நவீனத்துவத்தின்படி திறந்து உயிர்த்த இயேசு சுரூபத்தினை வெளிக்கொண்ரும் மாயாஜால வித்தைகள் இல்லை, இதற்காகவே பயிற்சி எடுத்து காது கிழிய பாடப்படுகின்ற வித்துவான்களின் சத்தங்கள் இல்லை. ஆனாலும் இயேசு உயிர்த்துவிட்டார்!

இப்போது நன்றாக யோசித்துப்பாருங்கள் மக்கள் மத்தியில் ஒரு சத்தமில்லாத புரட்சி ஏற்பட்டிருக்கிறது. மக்கள் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையில் ஏமாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைவரும் வீட்டிலிருந்தபடியே வழிபாட்டினைத் தொடர குருவானவர் தனியாக கோவிலிலே திருப்பலி நிறைவேற்ற எல்லோரும் கடவுளின் உயிர்ப்பை சந்தோசமாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். யாரும் எதிர்பாராத புரட்சி இது. இயேசு இப்போதுதான் உண்மையாகவே உயிர்த்தெழுந்ததுபோல இருக்கிறது. மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி.

இயேசு எதற்காக மரித்தார்? ஏழைகள் சமத்துவம் பெறவேண்டும். வேறுபாடு கூடாது. பணம் பதவியைத் தூக்கி எரிந்துவிட்டு அனைவரும் சமம் என எண்ண வேண்டும். இதற்காகப் போராடி மரித்ததால் இந்த ஆண்டு உயிர்க்கும் போது இத்தனையும் நடந்ததால் உண்மையாகவே மகிழ்ந்திருப்பார்.

இந்த ஆண்டு பகட்டான உடைகள் இல்லை. அவரவர் வீட்டில் அவரவர் உடையிலே இருந்து வணங்கினர். ஆடைகளில் ஏழை பணக்காரன் இல்லை, ஈஸ்டர் முடிந்தவுடன் வெற்றிக்கழிப்பில் குடித்துவிட்டு இரண்டு மூன்று பேர் வாகனத்தில் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கி மரிக்கவில்லை. வழிபாட்டு நேரத்தில் வார்த்தைகளாலோ, வழிபாட்டுச் சடங்குகளாலோ பிரமதத்தவர்களோடு பிரச்சனைகள் இல்லை. ஈஸ்டர் அன்று நண்பர்களோடு சேர்ந்து களியாட்டங்களில்லை. எனவே இயேசு உயிர்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். இதுவே அவர் விரும்பும் உயிர்ப்பாக இருந்திருக்கும்.

நம்மில் பலபேர் பசியோடு இருக்கின்ற, தேவையில் இருக்கின்ற பிறருக்கு உதவிக்கொண்டு இருந்தோம். குடும்பத்தினரோடு அதிக நேரம் செலிட்டு குதுகளித்திருந்தோம். குடியை மறந்து பணத்தையும், நேரத்தையும் அதிகமாகக் குடும்பத்திற்குச் செலவழித்தோம். நாம் இருந்த நோன்புகள் மூலமாக அனைத்தும் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவினோம். என்னைப் பொறுத்த வரையில் நாம் விரும்பினோமோ? இல்லையோ! இயேசு விரும்பிய ஈஸ்டர் இதுவாகத்தான் இருக்கும்.

கடைசியாக உங்களிடம் கேட்பது பசிப்பிணிக்காக நீங்கள் சேர்த்ததை பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுங்கள். இறந்து உயிர்த்த இயேசுவைக் கொண்டாட விரும்புகிறவர்கள் இப்போது வறுமையில் இறப்போருக்கு உயிர்கொடுங்கள் இந்த இரண்டையும் செய்கின்ற உங்களுக்கு எனது ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

ARCHIVES