24

Jul

2020

யார் இந்த சகுனி….

“நூற்றைக் கெடுக்குமாம் குருணி
நூற்றைக் கெடுத்தது சகுனி”

இன்று சாத்தான்குளம் சம்பவம் வியாபாரிகள் கொலைவழக்கு உச்ச நிலையை அடைந்து பரபரப்புச் செய்தியாய் உலகமெங்கும் உலவி வருகிறது. இதற்கு காரணம் இதுவாக இருக்கலாம்! அதுவாக இருக்கலாம்! என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வெளிவருகிறது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏனென்றால் தீவிர விசாரணையில் அந்த உண்மை தேடப்பட்டு வருகிறது. அவர்களின் புலனாய்விற்கே விட்டுவிடுவோம். ஆனால் அவற்றிலும் ஒரு சகுனி ஆட்டம் அவர்களுக்கு சாவுமணி அடிக்க அதுவும் காரணமாக இருந்திருக்கிறது.

முதல் நாள் மாலை நேரத்தில் கடைகளை அடைக்கச்சொல்லிவிட்டு காவல்துறை சென்றுவிட்டது. அப்போது ஜெயராஜ் என்பவர் சாதரணமாக ஏதோ சொல்லியிருக்கலாம். அங்கிருந்த ஒருநபர் K.K. என்று வைத்துக்கொள்வோம். அவர் அதனை காவல்துறையிடம் சென்று அவர்கள் அப்படிச் சொன்னார்கள், இப்படிச்சொன்னார்கள் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் சேர்த்துச் சொல்லி காவல்துறையை உசுப்பேற்றி விட்டிருக்கிறார். உடனே நம்மையா? அப்படியா சொன்னான்? என ஈகோ பிடித்த அதிகாரிகள் தன்னை கொம்பன், கம்பன் என மார்தட்டியவர்கள் காட்டுத்தர்பார் நடத்தி இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைச் செய்து முடித்து விட்டார்கள். ஆக ஒரு சகுனியின் சதியும், ஈகோவின் அநீதியும் இந்த அசிங்கத்தை அரங்கேற்றிவிட்டது.

யார் இந்தச் சகுனிகள்? மகாபாரதக் காலத்தில் இருந்தே மண்ணில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். தனக்குத் தலைவனாக எந்தவிதமான தகுதியோ, வசதி வாய்ப்புகளோ இல்லாத போது பலகீனமான தலைவர்களைத் தன்னுடைய தந்திரத்தாலும், தாராளத்தாலும், பணத்தாலும், வேசத்தாலும் மயக்கி தானே மறைமுக ஆட்சி செய்வதே சகுனிகளின் வேலை ஆகும். இந்தச் சகுனிகள் புல்லுருவிகளாகப் பல்வேறு நிறுவனங்களில் அமைப்புகளில் தொழிற்சாலைகளில், அரசுத்துறைகளில் ஆட்சியாளர்களிடத்தில் இன்றும் பரவிக்கிடக்கிறார்கள்.

இன்று பல்வேறு நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும், மனிதர்களின் அழிவிற்கும், அவப்பெயர்களுக்கும், நீதிமான் தண்டனை அடைவதற்கும், பலர் மௌனமாய் மரணித்துப் போவதற்கும், ஊமையாவதற்கும் ஒதுங்கிச் செல்வதற்கும், குடும்பத்தின் அழிவுகளுக்கும், நண்பர்களின் பிரிவுகளுக்கும் இந்தச் சகுனிகளின் சதி ஆட்டமே காரணமாக இருக்கும்.

இந்தச் சகுனிகள் ஏதோ ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் ஆனால் பேராசை பிடித்தவர்கள் குறுக்கு வழியில் தான் நினைத்ததைச் சாதிக்கத் துடிப்பவர்கள், இதற்காக எதையும் செய்வார்கள். பிறரைக் காட்டிக்கொடுப்பதும், போட்டுத்தள்ளுவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. மனச்சாட்சியின் செயல்பாடோ, மனிதத்தன்மையின் வெளிப்பாடோ இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

நாம் ஒவ்வொருவரும் பொதுவாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளோம். பொதுவாழ்வில் பயணிக்கும் போது எங்கேயாவது இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்தித்தே இருப்போம். அப்போது நாம் உடலூனமுற்றோரைப் போன்று ஊமையாய் இருந்திருப்போம். ஒதுங்கிக்கிடந்திருப்போம். ஓரங்கட்டப்பட்டிருப்போம். பழிச்சொல்லுக்கு ஆளாகியிருப்போம். ஏன் கடுமையான தண்டனை கூட அனுபவித்திருப்போம். இப்போது நினைத்தாலும்…..? பெருமூச்சு விடுவோம்.

அதனை இப்போது நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதை பெரிதாக எண்ணமாட்டீர்கள். நீங்கள் பக்குவப்பட்டிருப்பீர்கள். இப்போது அவர்களைச் சந்தித்தால் அவர்கள் பரிதாப நிலையில் இருப்பார்கள். நடிப்பவர்களுக்குத்தான் இந்த உலகம் மேடை கொடுக்கிறது என்று ஆதங்கப்பட்டிருப்பீர்கள். நடிப்பவர்கள் நம்மைவிட உயர்ந்த இடத்தில் இருப்பதாக எண்ணியிருப்பீர்கள். ஆனால் அவர்கள் வேசம் கலைந்த பிறகு அதள பாதாளத்தில் கிடப்பார்கள். காற்றடிக்கும் போது தூசி கட்டிடத்தின் மீது பறப்பது போல தோன்றும் ஆனால் காற்று நின்ற பிறகு அது சாணியில் விழப்போகிறதோ? சகதியில் விழப்போகிறதோ? தெரியாது.

சகுனிகள் எல்லாம் ஒட்டுண்ணிகள்தான் சொந்தக்காலில் நிற்க முடியாது. பலகீனமற்ற தலைவனின் தோளில் இருந்துதான் பயணிப்பார்கள். இங்கு நிரந்தரத்தலைவனுமில்லை, நிரந்தர ஆட்சியுமில்லை அப்படியிருக்க சகுனிகள் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? நிம்மதியாக வாழ முடியும்?

இருப்பினும் பலகீனமான தலைவர்களோடு பயணித்து அவர்கள் பாழாக்கியதையோ, பாதிப்பு ஏற்படுத்தியதையோ யாராலும் தவிர்க்க முடியாது. தடுக்கவும் முடியாது. அது நரக வேதனையாக இருந்தாலும் கடந்துதான் செல்ல வேண்டும். மகாபாரதத்தில் சகுனி, இராமாயாணத்தில் கூனி, விவிலியத்தில் யூதாஸ், நமது வரலாற்றில் எட்டப்பன், நாடகத்தில் புருட்டஸ் என வரலாறு நம்மிடம் வரிசையாக வாசிக்கிறது.

அன்று தொடங்கி இன்றுவரை சாத்தான்குளத்தில் நடந்த சாவு வரை தொடர்கிறது. நம்மைச்சுற்றியும் இருப்பார்கள். நாம் அதனைக் கண்டறிவோம். பொறுத்துக்கொள்வோம். அவர்கள் வீழ்ந்த பிறகு வீழ்த்தத்துடிக்காமல் மறுவாழ்வு கொடுப்போம். ஒருவேளை நமக்குக் காயம் ஏற்பட்டிருந்தால் ஆற்றிக்கொள்வோம். மனதை மாற்றிக்கொள்வோம். தற்போது நாம் அவர்கள் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தால் இதுவும் கடந்துபோகும் எனத்தேற்றிக் கொள்வோம். செத்தாலும் சகுனியாக மாறக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் சகுனி நம் முதுகில் ஏறிவிடக்கூடாது என சபதம் எடுப்போம். மனிதனாக இருப்போம். மனித நேயத்தை மதிப்போம். நேர்மையாய் நடப்போம் குறுக்கு வழியை தவிர்ப்போம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது சமுதாயமாக இருக்கட்டும்.

“நீ நல்லவனா இரு இல்ல கெட்டவனா இரு. அது முக்கியம் இல்ல.

ஆனால் நம்புறவங்களுக்கு உண்மையா இரு. அதான் முக்கியம்”.

ARCHIVES