06
Aug
2021
முதல் அலை மிரட்டியது இரண்டாவது பலரைச் சாகடித்தது. மூன்றாவது அலை எப்போது வரும்? என்ற ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது! எப்போது வரும்? எப்படி வரும்? எப்போது உச்சந்தொடும் என்ற கேள்வியின் தேடல்தான் தொலைக்காட்சியிலும், செய்தித் தாளிலும் நமது மனம் அன்றாடம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது?.
இந்த மருத்துவ உலகம், இது கொரோனா வைரஸ், இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படும் இவ்வாறு உருமாறும் என்றெல்லாம் கண்டுபிடித்தது. ஆனால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க மட்டும் மருத்துவ உலகம் போராடிக் கொண்டு இருக்கிறது.
முதல் அலை முதியவர்களைத் தாக்கும் இரண்டாவது அலை இளைஞர்களைத் தாக்கும் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என முறைவைத்து முடிவு சொல்கிறார்கள். எத்தனையோ நோய்களை நம் முன்னோர்கள் சந்தித்தது உண்டு இதனைவிடக் கொடிய வியாதிகளை எல்லாம் கண்டு, மீண்டு வந்தவர்கள் தான் நம் முன்னோர்கள். அதனை எல்லாம் தாண்டித்தான் இவ்வளவு மக்கள் தொகையைப் பெருக்கி இருக்கிறோம். அம்மன், காலரா, எலும்புருக்கி, இளம்பிள்ளைவாதம், எய்ட்ஸ் இதனையெல்லாம் சந்தித்து விட்டுத்தானே நம் முன்னோர்கள் வந்துள்ளார்கள். அதுவும் இவ்வளவு மருத்துவ உலகம் இல்லாதபோதே நம்முன்னோர்கள் கடந்து வந்திருக்கிறார்கள் அப்படியிருக்க இந்நோய்க்கு இவ்வளவு மருத்துவர்கள், இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் நடுங்கிப் போனோம்? ஒடுங்கிப்போனோம்.?
ஊரடங்கு ஒருபுறம், மருத்துவமனைக்குப் போக பயந்தது ஒருபுறம், ஊடகங்கள் அதனையே காட்டிக்காட்டி மிரட்டியது ஒருபுறம். வாட்ஸ் அப்பில் வருகின்ற இறப்புச் செய்திகள் ஒருபுறம் நம்மைக் கொஞ்சங்கூட திடமாக இருக்க விடாமல் பயந்து நடுங்க வைப்பதிலேயே குறியாக இருந்து விட்டது.
ஒன்று ஞாபகம் இருக்கிறதா? நாம் பிறரைக் கல்லறையில் அடக்கம் பண்ணப் போகும் போது கல்லறைத் தோட்டத்தில் நாம் ஒரு வாசகத்தைப் பார்ப்போம். “இன்று நான் நாளை நீ” இதனைப் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம் ஆனால் ஒருநாளும் இப்படிப் பயந்தது இல்லையே? இப்போது ஏதாவது கொரோனாவில் இறந்து விட்டால் நாளை நாமாக இருந்து விடுவோமோ? என ஏன் பயப்படுகிறோம்? எங்கே நமது தன்னம்பிக்கையை இழந்தோம்? எங்கே பயத்தை உள் நுழைய விட்டோம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.!
எந்த நோய்க்கும் மருத்துவரை நம்புவோம் ஆனால் இங்கு மருத்துவர்களே தயங்கிவிட்டார்கள் சிலர் கிளினிக்கிற்கே வருவதில்லை சிலர் வந்தாலும் எட்டி நின்று என்ன செய்கிறது? என்று கேட்டுவிட்டு அனுப்பி விடுவார்கள் இதுதான் எல்லை இல்லாப் பயத்தை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும் தன் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்த மருத்துவர்கள், செவிலியர்களால்தான் பல இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. தன்னுயிரைத் தந்து பல உயிரைக் காத்த பல்வேறு மருத்துவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் நன்றிகள் பல.
மூன்றாவது அலை வரட்டும். பயம் வேண்டாம். குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. எச்சூழலிலும் அவர்களைப் பயமுறுத்திவிடாதீர்கள் தன்னம்பிகையையும் தைரியத்தையும் கொடுத்துவிடுங்கள் கொரோனா நோயினால் செத்தவர்கள் கொஞ்சப் பேர்தான். பயத்தால் செத்தவர்கள்தான் மீதிபேர்.
முதல் அலையை நாம் முறையாக அணுகாததால் நாம் கையைத் தட்டினோம். விளக்கை ஏத்தினோம், மணியை அடித்தோம் கோ…கோ… கொரோனா எனக் கோசம் போட்டோம் இதற்கு படித்தவர்களும். பள்ளிக்கூடம் நடத்துபவர்களும் சொன்ன விளக்கம் வேறு, வியாக்கினம் வேறு. இதனால்தான் நாம் இத்தனை இழப்புகளைச் சந்தித்தோம்! ஏமாந்தோம்! இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதனையும் புரிந்து கொண்டோம் இனிமேல் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.
இரண்டாம் அலையில் அரசு அதிக அக்கறை எடுத்துச் செய்ய வேண்டியதைச் செய்து நமக்கும் விழிப்புணர்வு கொடுத்து நம்மைக் காப்பாற்றியுள்ளது அதற்கும் நன்றி சொல்ல வேண்டும்.
மூன்றாவது அலை வரட்டும். யாரும் முடங்கிப்போய் விட வேண்டாம். முன்மதியுடன் செயல்படுவோம். நமது முதல்வர் சொன்னது போல இது கடக்க முடியாத காலம் அல்ல. யாரும் பயத்தினை விதைக்காதீர்கள். கேட்கின்ற வார்த்தையும் பார்க்கின்ற காட்சியும் நம்மைத்திடம் கொள்ளச் செய்ய வேண்டும்.
வியாதி வரத்தான் செய்யும் அதனை வீட்டுக்குள் வைத்து மறைக்க வேண்டாம் உடனே மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு இருங்கள் அவர்கள் விரும்பியதை செய்து கொடுங்கள் விளையாட அனுமதியுங்கள் அவர்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாகட்டும்.
நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுங்கள். மற்ற வியாதியைப் போல் மருத்துவம் செய்தால் குணமடைந்துவிடலாம் என்று சொல்லுங்கள். நம்புங்கள். குணமடைந்தவர்களை அடையாளம் காட்டுங்கள். எந்த வியாதியில் இறந்தாலும் கொரோனாதான் கொன்றது என்ற வடிகட்டிய பொய்யைப் பரப்பாதீர்கள். கொரோனா பற்றிய பேச்சினை கொஞ்ச காலம் நிறுத்தி வையுங்கள். பஞ்சு டயலாக் பேசியவர்கள் எல்லாம் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படுத்துக்கிடக்கிறார்கள். இப்போது நிஜ ஹீரோக்களாக நீங்கள் நெஞ்சை நிமிர்த்துங்கள் முன்மதியோடு செயல்படுங்கள்.வருமுன் காப்போம் என வாழப் பழகுங்கள். வருவது வரட்டும் வாழ்க்கை நம்கையில் வாழ்ந்து பார்ப்போம்.
“நம்பிக்கை நமக்குள் இருந்தால்
நல்லதே நாள்தோறும் நடக்கும்.”