14
Mar
2024
பழங்காலத்தில் மன்னர்கள் வேட்டைக்குப் போவது வழக்கம். இது கதைகளில், வரலாற்றில் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன நினைத்தோம்? மன்னர் தன் வீரத்தை நிலைநாட்டவும் பொழுது போக்காகவும் வேட்டையாடினார்கள். ஆனால் இந்த வேட்டைக்குப் பின்னால் பெரிய ஒரு வரலாற்று உண்மை பொதிந்து இருக்கிறது.
மனித வளம் பெருகுவதற்கு மனிதன் வாழும் இடத்தைவிட பல மடங்கு அவனைச் சுற்றி காடுகளும், நீர்நிலைகளும் இருக்க வேண்டும். இவை இல்லாத பகுதிகளில் பருவம் தப்பாமல் மழை பொழிந்து பூமி செழிக்க வேண்டும். இந்த மழைக்கு ஒவ்வொரு ஆண்டும் தேங்கி நிற்கின்ற நீர் நிலைகளில் உள்ள நீரே மீண்டும் மழையாகிறது. நான்கில் ஒரு பங்கு குடி நீருக்கும். மீதமுள்ள பங்குகள் விவசாயத்திற்கும் பிற உயிர்களுக்கும் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டது. இதிலும் மீதமுள்ள நீர் நிலைகள் ஆவியாகி அவை தான் மேகங்கள் ஆகின்றன. மழையாகப் பொழிகின்றன.
மழை பருவம் தப்பாது பெய்யும்போது இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் காடுகள் செழிக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இளைப்பாறவும், இனப்பெருக்கம் செய்யவும், இரையாகவும் தடையின்றி தன்னைக் கொடுக்கும். தாவரங்களைத் தின்னுகின்ற விலங்குகள் பெருகும்போது காடுகள் குறையும். மாமிச உண்ணிகள் அவற்றை வேட்டையாடி சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய் என அவைகளும் தனது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் போது இவை சமமாகும். இதுதான் பெரிய வாழ்வியல் சுழற்சி இவற்றில் எதுவும் மிஞ்சுவிடக்கூடாது பற்றாக்குறையும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக மன்னர் எடுக்கின்ற மாபெரும் முயற்சியே வேட்டையாடுதல் ஆகும்.
காட்டிற்குள் எப்போதும் பழங்குடியினர் வாழ்வார்கள். காட்டைப் பயன்படுத்துவார்கள் என்று நினைப்போம். ஆனால் அவர்கள் தான் காட்டைப் பாதுகாப்பவர்கள். அவர்கள்தான் காட்டின் நிலவரத்தை மன்னர்களுக்கு அறிவிப்பவர்கள். தாவர உண்ணிகள் அதிகமானால் காடுகள் காலியாகிக் கொண்டு இருக்கும். உடனே மன்னருக்குத் தகவல் தர மான், மிளா, என வேட்டையாடுவார் யானைகள் அதிகமானால் மரங்களையெல்லாம் ஒடித்து காடுகளை அழித்து மழைகளைக் கெடுத்துவிடும். இதனால் நீர்நிலைகள் வற்றிப்போனால் விலங்குகள் ஊருக்குள் வர மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும். மாமிச விலங்குகள் அதிகமானால் தாவர உண்ணிகள் அழிந்துவிடும். தாவர உண்ணிகளின் கழிவுகளே காடுகள் செழிக்கக் காரணம்.
தாவர உண்ணிகள் குறைந்தால் மாமிச விலங்குகளுக்கு இரை கிடைக்காமல் ஊருக்குள் வந்து ஆடு, மாடு, கோழி, மனித வேட்டை என ஆரம்பித்து விடும். எனவே அரசன், யானையை, புலியை, சிங்கத்தை வேட்டையாட ஆரம்பித்து விடுவார். அப்போது கிடைத்த யானைத் தந்தங்கள், புலிநகம் போன்றவற்றை அலங்காரப் பொருளாக வீட்டில் வைத்து இருந்தார்கள். இப்படி மக்களின் வாழ்வாதாரத்தை சமநிலையாக்கவும் நாட்டையும், காட்டையும் நலிய விடாமல் பாதுகாக்கவுமே மன்னனின் வேட்டை இருந்தது.
காலம் மாறியது. இப்போது பலரும் வேட்டையாட ஆரம்பித்து விட்டார்கள். மன்னரும் வேட்டையாடுகிறார்கள். மன்னர் ஆசியோடு மந்திரிகளும் வேட்டையாடுகிறார்கள். இவர்களின் துணையோடு அதிகாரிகளும் அகப்பட்டதைச் சுருட்டுகிறார்கள். இவர்கள் வாழ்வாதாரத்திற்காக வேட்டையாடவில்லை. தாங்களின் வசதிகளைப் பெருக்குவதற்காக வேட்டையாடுகிறார்கள். வேட்டைகளைப் பிடிக்கப்போகிறேன் என்று தடுக்கப்போகும் அவர்களே எடுத்துக் கொண்டது அதிகம். இந்த வேட்டை அழிவின் ஆரம்பம்! இவர்களின் வேட்கை அடங்காத ஆத்திரம்! மரங்களைத் திருடினார்கள், மலை வளங்களைத் திருடினார்கள் நீர் நிலைகளைத் திருடினார்கள். விவசாய நிலங்களில் வீடு கட்டிவிட்டு விவசாயிகளுக்கு சமாதி கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
மலைவாழ் மக்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கிற ஆடு, மாடுகளை மட்டுமல்ல மனைவி மக்களையும் வேட்டையாடி அவர்களின் வேட்கைகளைத் தணித்துக் கொள்கிறார்கள். பாவம் செய்வது இவர்களாகவும், அதற்காகப் பலி கொடுப்பது பாமர மக்களாகவும் இருக்கிறது. குளத்தை வீடாக்குகிறார்கள். மலையைக் கோரியாக்குகிறார்கள் விளை நிலங்களை கம்பெனியாக்குகிறார்கள் ஆற்று மணலை அள்ளி விற்கிறார்கள். கண்முன் தெரிகிற அத்தனையையும் கரையான் அரிப்பதுபோல் களவாண்டு கொண்டு இருக்கிறார்கள்.
நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதற வைக்கும். விலங்குகளே வேட்டையாடாத குழந்தைகளை வேட்டையாடும் கொடூரச் செயல் நடந்து கொண்டிருக்கிறது. போதைப் பொருளுக்குள் மனிதன் புதையுண்டபோதும் அது கிடைக்காதபோதும் அது கிடைப்பதற்காக அந்தக் கீழ்த்தரமான செயலையும் செய்கிறான். களவு, வழிப்பறி, கொலை, கொள்ளை எனக் கூச்சமில்லாமல் செய்து வருகிறான். அது கிடைத்தவுடன் போதையில் கையில் கிடைத்ததையெல்லாம் கற்பழித்து விடுகிறான். தரங்கெட்ட வாழ்வால் தடுமாறிப் போகிறான். தடம் மாறியும் போகிறான். மனித உருவில் இருக்கிறான் மானம் கெட்டுத் திரிகிறான். காமத்தையும், கோபத்தையும் கக்கிக் கொண்டு இருக்கிறான். இப்போது பிஞ்சுகளைக் கூட பிய்த்து எறிந்து விடுகிறான். இப்போது பெண்கள் அல்ல பெண் குழந்தைகளே இங்கு நடமாட முடியாதபடி பல நரகாசுரன்கள் நம் மத்தியில் இருக்கிறாhகள் ஜாக்கிரதை…!
இப்போதுதான் மன்னர் காலத்தில் ஆடிய வேட்டைகள் தேவைப்படுகிறது. எந்த விலங்குகள் அதிகமாகிறதோ! அந்த விலங்குகளை வேட்டையாட வேண்டும். இப்போது மனிதன் காட்டை அழித்துவிட்டதால் போதுமான இரையும் நீரும் கிடைக்காமல் நாட்டுக்குள் விலங்குகள் வரும். ஆனால் நமக்கேதும் பெரிய துன்பங்களை அது விளைவித்ததில்லை.
ஆனால் இன்று போதையில் சிக்கி பெண்களை நாசமாக்கும் புறம்போக்குகளை வேட்டையாடுங்கள். பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பார்க்காமல் நெஞ்சைப் பதறவைக்கும் அளவிற்கு காமத்தில் கசக்கியவர்களை கண்டதும் வேட்டையாடுங்கள். ஆண்குழந்தைகளைக் கூட வல்லுறவுக்கு கடத்தும் அயோக்கியவர்களை அரசே வேடிக்கை பார்க்காதீர்கள்! வேட்டையாடுங்கள். கல்லூரிப் பெண்களை காதல் என்ற போர்வையில் காமத்தில் வீழ்த்தி பண்ணை வீட்டில் அவர்களைப் பாழ்படுத்திவிட்டு அண்ணா விட்டுவிடுங்கள் என்று அலரும்போதும், அதனைக் காணொலியில் கண்டபோதும், இன்னும் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறீர்கள்? வேட்டையைத் தொடருங்கள்.
காதல் என்ற போர்வையில் பெண்களை வீழ்த்தி அதனை அலைபேசியில் பதிவு செய்து இதனைப் பொது வெளியில் வெளியிடுவேன் எனப் பயமுறுத்தி அந்தரங்கத்திற்கு அழைக்கும் கயவர்களின் கா…. நறுக்குங்கள். ஜம்முவில் தொடங்கி பாண்டிச்சேரி வரை கொந்தளித்த பாலியல் வன்முறைக்குப் பாடைகட்ட அந்தப் பாதகர்களை வேட்டையாடுங்கள். நாட்டுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீராங்கனைகளிடம் காம விளையாட்டு விளையாடியவர்களைக் கண்டதும் வேட்டையாடுங்கள். பழகிய நாய்களே பாய்ந்ததுபோல பில்கிஸ் பானுவைப் பங்கப்படுத்திய பாவிப் பயல்களை வேட்டையாடுங்கள். படத்தில் நடிக்க வாய்ப்புத் தருகிறோம். பதவி உயர்வு தருகிறோம். பண உதவி செய்கிறோம் எனப் படுக்கையில் பங்கு கேட்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடுங்கள்.
காண்கின்ற பெண்களையெல்லாம் காமப் பார்வை பார்க்கின்றவர்களையும், காமத்தில் விளையாடியவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களையும், காமம் என்ற பெயரில் நல்லவர்கள் பெயரைக் கெடுக்க வதந்திகளைப் பரப்பும் தாசிகளையும் யார் தடுத்தாலும் விட்டு விடாதீர்கள். வேட்டையாடுங்கள். அதிகார வெறியில், ஜாதிக் கொடுமையில், அரசியல் ஆணவத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தியும், எளியவர்கள் மீது சிறுநீர் கழிக்கும் அயோக்கியர்களையும் பொது இடங்களில் கட்டி வைத்து அடிக்கும் பொறுக்கிகளைப் போட்டுத்தள்ளுங்கள்.
காட்டில் கூட ஆபத்தான விலங்குகள் என்பார்கள் ஆனால் அது கூட அமைதியாக இருக்கும். இனப்பெருக்க நேரத்தைத் தவிர எந்த விலங்கும் தன் பெட்டையைத் தேடாது. ஆனால் காலம் முழுவதும் காமத்திற்காய் அலைகின்ற மனித மிருகங்களை வேட்டையாடுங்கள்! இந்த மிருகங்களை வேட்டையாடவில்லை என்றால் யார் வீட்டிலும் பெண் குழந்தைகளை வளர்க்க முடியாது. நீதிபதிகளே! அரசியல்வாதிகளே! காவல் அதிகாரிகளே! நாட்டைப் பாதுகாக்கின்ற நல்வர்களே! நமது வீட்டிலும் பெண்குழந்தைகள் இருக்கின்றன. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
“தீமைகளைத்…
தடுக்காவிட்டால்?
தீயவர்கள் நம்மைத்
தின்றுவிடுவார்கள்.”