07
Feb
2025
இந்த பூமி எதிரிகளால் வீழ்ந்ததை விட துரோகிகளால் வீழ்ந்ததே அதிகம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த வாய்மொழித் தத்துவத்தை உதிர்க்கிறோம். துரோகம் என்பது நமது அறியாமைக்காக நாம் அடைந்த தோல்விக்குப் பிறர் மீது நாம் சுமத்தும் பழிச்சொல்லே துரோகம் ஆகும்.
அன்பு என்பது பொறுமை உள்ளது. யாரிடமும் அது எதையும் எதிர்பார்க்காதது. எதையும் தாங்கிக் கொள்ளக் கூடியது. நீங்கள் காட்டிய அன்பு இத்தகைய உண்மையான அன்பு என்றால்? நீங்கள் நிச்சயமாக, நீங்கள் அடைந்த தோல்வியோ அவமானத்திற்கோ பிறர்மீது பழி சுமத்த மாட்டீர்கள்.
சுற்றும் பூமி சுயநலம் மிக்கது, சுற்றி எங்கு பார்த்தாலும் நீர் சூழ்ந்து இருக்கிறது என்று நீங்கள் சொல்வீர்கள். நான் சொல்கிறேன் சுற்றி எங்கு பார்த்தாலும் சுயநலங்கள்தான் சூழ்ந்திருக்கின்றன. சுயநலக்காரர்களை எல்லாம் சொந்தங்கள் ஆக்கிவிட்டு என் நலத்தை மட்டும் நீங்கள் இதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி முடியும்? எதிர்பார்ப்பைக் குறையுங்கள் எதிரிகளிடமிருந்தல்ல, எவரிடமிருந்தும் ஏமாற்றம் வந்தாலும் தாங்கிக் கொள்ளுங்கள். தாங்கி விட்டால் தொலைவில் கூட உங்களுக்குத் துரோகம் தெரியாது! துரோகத்தால் நீங்கள் அடையும் வீழ்ச்சியைக் கூட பயிற்சியாய் எடுத்துக் கொள்வீர்கள். நாம் எடுக்க வேண்டிய முயற்சி இவர்கள் மூலம் வந்திருக்கிறது என்று அவர்களுக்கு நன்றி கூறுவீர்கள்.
அதிகமாக எதிர்பார்த்து அது கிடைக்காத போது அடுத்தவர்களைக் கண்டு அழுது புலம்பி வருகிறவர்களிடமெல்லாம் அவர்களைக் குறை சொல்வது தான் துரோகத்தின் எல்லையாக வைத்திருக்கிறீர்கள். அவர்கள் சரியானவர்கள்தான் நாம்தான் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம். அவர்கள் உங்களிடமிருந்து சிலவற்றைப் பெறுவதற்காக உங்களை நாடி வந்தார்கள். அதற்காகச் சில நாடகங்களை நடத்தினார்கள். நடிப்பில் உச்சம் தொட்டு உங்கள் உயிர் துடிப்பாக விளங்கினார்கள். தேவை நிறைவேறியதும் வேஷத்தை கலைத்து விட்டார்கள். வேசத்தை நம்பியது உங்கள் குற்றம் தானே!. வேஷத்தை கலைத்தார்களோ! அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையில் கலைந்ததோ! அவர்களது உண்மையான உருவம் வெளிப்பட்டது யார்தப்பு?
உடலால் போரிட்டு வீழ்வது வீரம் என்பார்கள். மனத்தால் ஏற்படும் தோல்வியை வெல்ல விவேகம் வேண்டும் என்பார்கள். உங்களுக்கு விவேகம் இல்லாமல் நீங்கள் விழுந்ததை தான் துரோகம் என்று தூற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
துரோகிகள் என்பவர்கள் துரோகிகள் அல்ல சந்தர்ப்பவாதிகள். அவர்களைச் சரியாகப் புரியாமல் அவர்கள் மேல் நீங்கள் வைத்த அன்பின் தோல்வி அது! அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காது எதிர்பார்க்கின்ற ஒன்றுதான் எப்போதும் துரோகத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும்.
அன்பு சுயநலமானது அது தம்மீது அன்பு செலுத்துகிறவர்களைக் கண்டவுடன் அவர்கள் தமக்கு உரியவர்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகிறது. இங்கு எல்லோருமே ஒரு வகையில் பழுத்த மரத்துப் பறவைகள்தான். செழிப்பில் இருந்தால் ஒட்டிக்கொள்வார்கள். தடுமாறினால் தடம் மாறுவார்கள். அவர்கள் தேவைக்காய் நம்மிடம் வந்தவர்கள் மட்டும்தான்! நமது தேவைக்கு அவர்களைத் தேடக்கூடாது.
துரோகிகள் என்பவர்கள் துரோகிகள் அல்ல அவர்களை நாம் நமது அன்பைக் கொண்டு அடிமையாக்க நினைத்தோம். அவர்கள் நம்மைப் பயன்படுத்திவிட்டு பறந்து விட்டார்கள். அது நமக்குத் துரோகம்! அவர்களுக்கு நாம் தூரப்போட வேண்டியவர்கள்!
துரோகிகள் சந்தர்ப்பவாதிகள்தான். அவர்களுக்குப் பிறரின் நம்பிக்கைதான் மூலதனம். பிறரின் ஏமாளித்தனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். நம்முடைய நம்பிக்கையைப் பயன்படுத்தி நாம் நம்புவது போல் பொருத்தமாகப் பொய் சொல்லி நல்லவர்கள் போல் நடிப்பார்கள். அடுத்தவர்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுவார்கள். நம்பிக்கை வைத்தவர்களை வஞ்சனைகளைச் செய்து வாழ்வை கெடுப்பார்கள். பாசம் என்பது அவர்களுக்குப் பகல்வேசம். வேசத்தை நம்பியது உங்கள் குற்றம். அவர்களுக்கு அது அன்றாட அலுவல், அதை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்களே தவிர அவர்களுக்கு எவ்விதக் குற்ற உணர்வும் இருக்காது. தக்க சமயம் பார்த்து நம்மைக் கழுத்தை அறுப்பார்கள். அதை நினைத்து நாம் சங்கடப்படக்கூடாது. கல்லைப் பார்த்து காலை வையுங்கள் முள்ளைப் பார்த்து முன்னேறுங்கள் ஏமாளிகளாய் மட்டும் இருந்துவிடாதீர்கள்.
துரோகம் என்ற உடன் யூதாஸ், புருடஸ், எட்டப்பர் என்று பலரை இங்கு பட்டியலிடுவார்கள். இந்தத் துரோகத்திற்கு மன்னனும் தப்பவில்லை. ஆண்டவனும் தப்பவில்லை. எல்லோரும் மாட்டிக் கொண்டார்கள். ஆனால் இயேசு எதிர்பார்த்த ஒன்றுதானே! ஆகவே செய்வதை விரைவாகச் செய் என்று விடை கொடுத்துவிட்டார். ஆனால் எட்டப்ப நாயக்கருக்கு இழைத்ததுதான் மாபெரும் துரோகம் என்று எனக்குப்படுகிறது.
ஒருமுறை ஒட்டப்பிடாரம் பகுதியில் ஒரு பணிக்காகச் சென்ற போது எட்டப்ப நாயக்கருடைய பரம்பரையைச் சார்ந்தவர்களைச் சந்தித்தேன் அதை அவர்கள் சொல்லத் தயங்குகிறார்கள். காரணம் அவரைத் துரோகி என்று வரலாறு வசைபாடிவிட்டது. அதனால் அவரது வாரிசுகள் என்று சொல்ல வெட்கப்பட்டு இவர்கள் கூனிக்குறுகி நிற்கிறார்கள். ஆனால் ஆவணங்கள் என்ன சொல்கிறது? எட்டப்பர் நேர்மையாளர், நிரபராதி, தனக்கு துரோகம் செய்த கட்டபொம்மனுக்குத் தண்டனை வாங்கி கொடுத்தார். மக்கள் அளவைகளில் எண்ணும்போதுகூட 6, 7 என்று சொன்னவுடன் 8 என்று சொல்ல மாட்டார்கள். எட்டுக்குப் பதிலாக ராசா அடுத்து 9 என்று எண்ணுவார்களாம். அவ்வளவு மரியாதைக்கு உரியவர் எட்டப்பராசா என்று அப்பகுதி வரலாறு கூறுகிறது.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தவர் புலித்தேவன் தான். அவர் வரலாறு மறைக்கப்பட்டு கட்டபொம்மன் வரலாறு தூக்கி நிறுத்தப்படுகிறது. கட்டபொம்மனின் தளபதி தான்சாகிப் அருகில் உள்ள ஊர்களை எல்லாம் கொள்ளை அடிப்பதும், அதற்குக் கட்டபொம்மன் துணை போவதுமாக அவர் கதை சொல்கிறது. அப்போது ஆங்கிலேயர்களின் கவனம் திப்புசுல்தானை வெல்வதில் இருந்ததால் அச்சமயத்தில் கட்டபொம்மன் இங்கு கண்டவர்களிடமும் வரி வசூலித்ததாக ஆவணங்கள் பேசுகிறது. இதனை அதட்டிக் கேட்ட ஆங்கிலேயர்களிடம் கட்டபொம்மன் மன்னிப்பு கடிதம் எழுதியது இன்னும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒருவரை டி.ஆர். பந்தலு என்கிற தெலுங்கு இயக்குனரும், நடிப்பில் கொட்டி முழக்கிய சிவாஜி கணேசனும் இதற்கு ஆலோசனை வழங்கிய மா.பொ.சி அவர்களும் கட்டபொம்மன் கர்சிக்கும் சிங்கமாகக் காட்டிவிட்டார்கள் அது எனக்கு வருத்தம் இல்லை ஆனால் எட்டப்ப நாயக்கரை இழிவு படுத்தியதைத்தான் பொறுக்கமுடியவில்லை. புலித்தேவன் வரலாற்றைத் தொலைத்ததையும் ஏற்கமுடியவில்லை. இன்று பல ஆவணங்கள் ஊடகங்களில் காணக் கிடைக்கிறது பார்த்து தெளிவு பெறுங்கள்.
இனிமேல் யாரையும் துரோகி என்று சொல்லும் முன் பலமுறை யோசியுங்கள். உங்கள் சுயநலத்தை விட்டுவிட்டு யோசியுங்கள். எதிர்பாராத அன்பைக் கொடுத்துக்கொண்டு இருப்பதுதான் நம்வேலை. அன்பு செய்கிறவர்கள் கொடுக்கும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், சகித்துக் கொள்வதும் தான் அன்பு, மனஅமைதி வேண்டுமா? உங்களை வெறுப்பவர்களையும் அன்பு செய்யுங்கள் என்கிறது விவிலியம். இயேசு தன்னைக் காட்டி கொடுத்தவர்களையும் காந்தி தன்னைச் சுட்டவனையும், இத்தாலியில் போப் தன்னைச் சுட்டவனையும் மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள். இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் பணி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயப் பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தீயில் எரித்து கொன்றவனை அவரது மனைவி மன்னித்தார். சென்னையில் வகுப்பறையில் ஆசிரியரைக் குத்திய மாணவனை அவரது மகள் மன்னித்தது நீங்கள் அறிந்ததுதானே.
இவர்களுக்கெல்லாம் நேர்ந்தது போல் உங்கள் வாழ்க்கையில் இல்லை. பிறகு ஏன் அழுது புலம்புகிறீர்கள்? அவர்கள் துரோகிகளா இருந்துவிட்டு போகட்டும்! நாம் மன்னிக்கும் மனிதர்களாய் இருப்போமே! மன்னிக்கும் போது நாம் மகானாகிறோம்!
“நட்பில் சுயநலம்
இல்லையென்றால்
துரோகங்கள்
தலைவிரித்தாடாது”…