13
Feb
2025
– பிப்ரவரி – 14
காதல் என்ற வார்த்தையை உதடுகள் உச்சரிக்கும் போது இதயத்தில் சாரல் அடிக்கும். கடவுளை விடப் புனிதமான வார்த்தை காதல். ஆனால் சாக்கடையைவிடக் கேவலமாக இந்தச் சமுதாயம் காதலுக்குள் இன்று காமத்தைப் புகுத்திவிட்டது. கல்யாணத்தில் முடியவில்லையென்றால் அது மாபெரும் துரோகம் என மார்தட்டி அலைகிறது. காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல, அது மனம் சார்ந்தது. உடலுக்கு நீங்கள் வைத்திருக்கும் கட்டுப்பாட்டைக் காதலுக்கு வைத்து காவல் காக்காதீர்கள். தூய மனம்தான் தூய காதலைத் தூக்கி நிறுத்தும்.
உடல் என்பது கோவில், காதல் அதில் சாமி, கோவில் இல்லாத இடத்திலும் சாமி புனிதமாக வாழும். அது கொண்டாடப்பட வேண்டும் காதலிப்பது கல்யாணத்திற்குதான் என்ற கட்டாயம்தான் இங்கு சமுதாயப் பிழை, காதல் உடல் கவர்ச்சியின் உற்சவம்தான் என்பது இங்குள்ள உளரல்கள். காதலின் உச்சம் காதல்தான்! காதலின் மிச்சம்தான் கல்யாணம்.!
சமுதாயத்திற்குக் காதல் என்பது பருவவயதில் வரக்கூடியது! அந்தக் காதல் பார்க்காமலும் நின்று விடக்கூடாது. பள்ளியறைக்கும் சென்று விடக்கூடாது என்று எழுதப்படாத சட்டங்களாக இன்று இளைஞர்கள் மனதில் புதைக்கப்பட்டிருக்கிறது இதனை இலக்கியங்களும், ஊடகங்களும் கொழுந்து விட்டு எரியவிட்டிருக்கிறது. இப்போது அதற்கு இளவல்கள் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நமது முதல் காதல் முதல் முத்தம் அடுத்தவர் மனைவியோடுதான். அந்த அடுத்தவர் நம்ம அப்பா, அவர் மனைவி நம் அம்மா, இது அங்கீகரிக்கப்பட்ட காதல். தூய்மையான காதல், துணைக்கு வருகிற காதல், அதன்பிறகு கடவுள் மீது, ஆசிரியர்கள் மீது, நட்பின் மீது, தோழிகள் மீது, படிப்பின் மீது, திறமையானவர்கள் மீது, இயற்கையின் மீது என்று நமது வயதிற்கேற்ப காதல் வாசல் வந்து நிற்கும். இத்தனையும் நம்மைக் காதலிக்கிறது. நாம் அதனைக் காதலிக்கிறோம் இது என்ன தவறு?
இங்கு காதல் என்பதே ஒத்த வயதுள்ள இருவர் உடலை விரும்புவது என்று! எப்போது இந்த சமுதாயம் எண்ணியதோ? அப்போதே இச்சமூகம் காதலை களங்கப்படுத்திவிட்டது. காதலின் மீது மண்ணை அள்ளிப்போட்டு விட்டது. காதல் என்பது சமத்துவம் மிக்கது, அது இறக்கைக்கட்டி பறக்க விடுமே தவிர, கயிறு கட்டி கட்டுப்படுத்தாது. கயிறு கட்டுவது கல்யாணத்தில் தான். காதலித்து கல்யாணம் செய்தால் தான் காதலின் வெற்றி என்று இந்தச் சமூகம் நம்புகிறது. காரணம் உண்மையான காதலை அறியாத இச்சமூகம் காமத்தைக் காதல் என்று ஊருக்குள் உலவ விட்டு இருக்கிறது. காமத்தை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதற்காகத்தானே கல்யாணம்.! ஒருவனுக்கு ஒருத்தி என்று உரைக்கதானே இந்தத் திருமணம்! ஏன் கல்யாணத்தில் முடிச்சு போடுகிறீர்கள்? காதலைப் போல் கல்யாணம் சுதந்திரமானதா? அடிமைத்தனம் இல்லாததா? சந்தேகமே இல்லாமல் இணையை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமென்றாலும் சுதந்திரமாய் பறக்க அனுமதிக்குமா? இல்லையே! எனவேதான் என்னைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான திருமணத்தில் காதல் இல்லை! உடல் சேர்க்கைக்கு உத்தரவு கொடுக்கிறார்கள்.
நான் நினைக்கிறேன் கல்யாணம் என்ற சடங்குகளால் இங்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறமோ? எனப் பயப்படுகிறேன்! பெண் பார்க்க வரும்போது தலைகுனிந்து தேனீர் எடுத்து வருகிறவள் அதன்பிறகு எப்போது தலை நிமிர்கிறாள்?. கல்யாணத்தின் போது மூன்று முடிச்சுபோட்டு அதற்குக் காரணங்களை சொன்னவர்கள் இச்சமுதாயத்தில் அவள் சுதந்திரமாய் வாழ தடையாய் இருக்கிற கட்டுக்களை எப்போதாவது அவிழ்த்து விட்டார்களா?. பிறந்த வீட்டில் சுதந்திரமாய் முடிவெடுக்க முடியாத ஒரு பெண் திருமண வயது எட்டிய பிறகு தனக்குரிய முடிவைத் தானே எடுக்கப் புகுந்த வீடு அனுமதிக்கிறதா? வரதட்சணை கொடுத்தால் தான் வாழ்க்கை அமைய முடியும்! அமைக்க முடியும்! என்ற நிலைக்குப் பிறகும் திருமணம் தேவைதானா?
திருமணம் தேவையா? என்று கேட்டால் எனக்குத் தெரியாது அது சமுதாயத்தின் கட்டமைப்பு அதனை எனக்குச் சாடத் தெரியாது. ஆனால் புரிதல் அவசியம். இன்று திருமணம் என்ற பெயரில் எத்தனை ஆடம்பரங்கள்! எத்தனை செலவுகள்! இருக்கிறவன் இதற்காக தனது செல்வங்களை அழிப்பதனால் இல்லாதவன் எதுவும் இல்லாமல் அழிகிறான். குளத்துத் தண்ணீரை இருக்கிறவன் அள்ளி வறண்ட நிலத்தில் எரிந்து விட்டால் வருகிறவன் தாகம் தணிக்க என்ன செய்வான்? எவ்வளவு உணவு வீண், எரிபொருள் வீண், மின்சாரம் வீண் போக்குவரத்து நெரிசல், இரைச்சல்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
இன்று திருமணத்திற்கு வருகிறவர்கள் எல்லாம் என்றோ ஒருநாள் அவர்கள் அனுமதி இல்லாமல் கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்க வருகிறவர்கள். இன்றையக் காலகட்டத்தில் திருமணத்தில் பல குடிகாரர்களை உருவாக்குகிறோம். பல குடிமக்களைக் கடனில் தள்ளுகிறோம். ஊரெல்லாம் வந்து வாழ்த்திய மணமக்கள் சந்தோசமாக வாழ்ந்துள்ளார்களா? விவாகரத்து வழக்குகள் இப்போது அதிகமாகிக் கொண்டே இருக்கக்காரணம் என்ன? போதைப் பொருட்கள் அதிகரிப்பதும், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதும், அடுத்தவர் பொருள், மனைவியை அபகரிப்பதும், குடும்பச் சீர்கேடு காரணமாகத்தானே! எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்? அலப்பறைகள்? குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கும் நமக்கு ஏற்ற குடும்பமா? என பார்ப்பதற்கும்தான் பெண் பார்க்கும் படலம் நடந்தது. இப்போது அவர்கள் தனியாகத்தானே வாழப் போகிறார்கள்! அவர்கள் தானே முடிவெடுக்க வேண்டும் அங்கு நமக்கு என்ன வேலை? பெண் பார்க்கும் படலமாக…
குடும்பம் கோயில் என்று சமுதாயம் சொல்லும். நம் சந்ததிகள் சொல்லுதா? குடும்பத்தில் உள்ள பெண்கள் முழுமையாய் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா? இங்கு ஆண்களுக்கு கைகள் இருக்கிறது ஊற்றிக் குடிக்கிறார்கள். பெண்களுக்கு கைகள் இருந்தும் தடுக்க முடியவில்லை. தடுத்தால் மீண்டும் ஆண்களுக்கு அடிக்கக் கை இருக்கிறது என்று காண்பிப்பார்கள். இச்சமுகம் பெண்களை ஏன் கட்டிப்போடுகிறது?
எனவேதான் சொல்கிறேன் காதல் புனிதமானது. ஒரு கல்யாணத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல காதல்! திருமணம் அது இனப்பெருக்கத்திற்காகவும் இச்சையை தீர்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட அடையாளங்கள். இயற்கையை காதலியுங்கள், மழை, நதி, மேகம், பூக்கள் எல்லாம் அழகாகத் தெரியும். அது உங்களைக் கவிஞர் ஆக்கிவிடும் கலையைக் காதலியுங்கள் அது வாழ்க்கையை இரசனையாக்கும். பெற்றோர்களைக் காதலியுங்கள் வாழ்க்கை வசந்தமாகும். கடவுளைக் காதலியுங்கள் வாழ்க்கை ஒழுக்கமாகும். பெண்களைக் காதலிங்கள் கடவுளை நேரில் பார்க்க முடியும். நண்பர்களைக் காதலியுங்கள் வாழ்க்கை நினைத்தபடி நடக்கும்.
எல்லோரையும் பார்க்கிறோம் யாரையோ ஒரு சிலரைத் தானே விரும்புகிறோம். அந்த எல்லோரையும் பார்ப்பது தான் காதல். ஒரு சிலர் என்பது நம்முடைய ஈர்ப்பு. எல்லோரையும் எல்லாவற்றிற்காகவும் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நமக்கு எல்லாவற்றிற்கும் இந்த ஒருவர் போதும் என்று நமது மனசு சொன்னால் அது தெய்வீகக் காதலாகும்! தெய்வீகம் கூட இருக்கும் போது தனிப்பட்டத் தேவையே நமக்கு இருக்காது! அவர்கள் தான் நம்மவர்கள் அவரை உடம்பால் தேடாதீர்கள் மனசால் தேடுங்கள். அவர் மனதிற்கு மட்டுமே சொந்தக்காரர்.
ஆனால் நமது ஆழமான காதல் அம்மா மீது தான். அவர்களுக்கு முடியாதபோது அடுத்தவர்கள் மீது நமது இதயம் நாடும். அதே அம்மாவை இன்னொரு சாயலில் நாம் இனம் காணத் துடிப்பதும் ஒரு வகையான காதல் தான் நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் நட்பு மாறாது. அவர்கள் நினைவில் இருப்பார்கள் இவர்கள் துணையாய் இருப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு அப்பாவைத் தேடும் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவைத் தேடும். இந்தத் தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் தோல்வி வரும், மீண்டும் எழும். தொடர்ந்து பயணிக்கும். இது புனிதக் காதல் இதனைத் தடுக்காதீர்கள் திருமணம் என்ற பெயரில் தேவையில்லாத துணையைத் தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அங்கு காதல் இருக்காது கட்டுப்பாடு இருக்கும் உங்கள் மனசு சரி என்பதைச் செய்யுங்கள் மலையே தடுத்தாலும் நிற்காதீர்கள். உங்கள் காதல் நீங்கள் வணங்கும் கடவுளை விடப் புனிதமானது! ஆகவே காதல் செய்வீர்!.
“அன்பே… நீ
பார்க்கும்போது
குணமாகிறேன்
பாராதபோது…
பிணமாகிறேன்”